Thursday, December 15, 2011

மாஸ் மீடியா - 5

மாஸ் மீடியா -5
யக்குனர் நீலகண்டனிடம் தொலைபேசியில் உரையாடிய பிறகு தயாரிப்பாளருடன் கூடி பேசி சம்பளம் முதலிய அனைத்து விஷயங்களையும் முடிவு செய்து விடுவதென்று தீர்மானித்தான் சரண்.பிறகு இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விடலாமென்றும் முடிவு செய்தான்.சென்னை கிண்டியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் இதை பற்றி விவாதிப்பென்று மூவரும் ஒப்புக்கொண்டார்கள்.அந்த வெள்ளிக்கிழமை மாலை இதை பற்றி விவாதிக்க மூவரும் ஆயத்தமானார்கள்.வெள்ளை நிற pant ஒரு வித நீல நிற casual shirt அணிந்து தயாரானான் சரண்.

உடன் விவேக்கும் தயாரானான்.முழு formal உடையில் பொருத்தமான பீ.ஏ என்று சொல்லும்படி இருந்தான்.பல யோசனைகள் சரணின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.ஏதோ கவனத்தில் படி இறங்கும்போது சற்று தடுமாறி விழுந்தான்.உடனே சமாளித்துக்கொண்டு எழுந்தான்.

"பாஸ் சகுனமே சரி இல்லை..இந்த படத்த அவசியம் பண்ணியே ஆகனமா?" - விவேக்

"இப்படி கால் வழுக்கறது கை வழுக்கரதெல்லாம் கெட்ட சகுனம்னு உங்களுக்கெல்லாம் யாருய்யா சொல்லித்தந்தாங்க?" - செயற்கையாக கேலி பேசினான் சரண்

"பாஸ் இந்த 'பகுத்தறிவுவாதம்' எல்லாம் உங்க படத்த விநாயகர் கோயில்ல வச்சி பூஜா போடறப்போ மறந்துடுவீங்களா?" - என்று விவேக் கேலி பேசியது, ஏற்கனவே குழப்பத்தில் இருந்த சரணுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

"கொஞ்ச நேரம் அமைதியா இரு டா இது என் career ல யே ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போற படம்.. wait and watch"

"ஊருக்குள்ள எவ்வளவோ நல்ல டைரக்டெருங்க இருக்காங்க..எவ்வளவோ நல்ல producers இருக்காங்க.. ஆனா இவர் ஏன் இந்த ஏழரைய மடியில கட்டிக்கிட்டு அலையராறோ தெரியல..இந்த நீலகண்டன் ஒரு நல்ல டைரக்டர் தான்..ஆனாலும் இவன் Story discussionன்னு சொல்லி ஹோட்டல்ல ரூம் போடவே நாலு கோடி ரூபா செலவு வைச்சவன்..இதுல வேற producer இருந்தாலாச்சு இவன் கொஞ்சம் பயந்துகிட்டு வேலை பார்ப்பான்.. இந்த தர்மராஜே ஒரு தருதல.. எவ்வளவு சொன்னாலும் இவர் கேட்க மாட்டேன்கிறாரே.. எல்லாம் விதி" - தனக்குள் தானே பேசிக்கொண்டிருந்தான் விவேக்.

காரில் செல்லும்போது புதிதாக வெளியாக இருக்கும் ஒரு படத்தின் பாடல்களை கேட்டுக்கொண்டே சென்றார்கள். இந்த பாடல்கள் சரணை பெரிதும் இம்ப்ரெஸ் செய்துவிட்டன

"இந்த படத்துல பாட்டெல்லாம் பிரமாதமா இருக்கு விவேக்.."

"சுமன்னு ஒரு புது பையன் compose பண்ணியிருக்கான் பாஸ்"

"நல்லா வருவான்னு தோணுது..இவனே கூட நம்ம படத்துக்கு மியூசிக் போட்டா தேவலாம்"

விவேக் பதிலேதும் பேசாமல் ஆமோதிப்பது போல் அடக்கமாக தலையாட்டினான்.

கார் பார்க்கிங்குக்கான இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு லிப்டுக்குள் ஏறினார்கள்.மூன்றாவது மாடிக்கு லிப்ட்டில் சொகுசாக வந்திறங்கினார்கள் சரணும் விவேக்கும்.ரூம் நம்பர் 324ல் தர்மராஜும் நீலகண்டனும் சரணின் வருகைக்காக காத்திருந்தனர்.

"சாரி சார்,வழியில கொஞ்சம் டிராபிக் அதான் late ஆய்டிச்சு..ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா?" - சரண்

"அதெல்லாம் பரவாயில்லை சரண்..நாங்க இப்போ தான் வந்தோம்.. ஒரு 10 நிமிஷமாச்சு..ஹீரோன்னாலே கொஞ்சம் லேட்டா வர்றது இண்டஸ்ட்ரீல சகஜம் தானே" - என்று நகைச்சுவையாக கூறினார் தயாரிப்பாளர் தர்மராஜ்.

"நீலு சார் ஒரே ஒரு வாட்டி பிரொடியுசெருக்கும் எனக்கும் மட்டும் கதைய சொல்லிடுங்க..மத்த விஷயத்தையும் இன்னைக்கே finalize பண்ணிடலாம்"

நீலகண்டன் சாதரணமான ஜீன்ஸ் மட்டும் டீ ஷர்ட் அணிந்திருந்தார். எப்போதும் அவர் ஒரு கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிவது வழக்கம்.இவர் ஒரு சில நல்ல படங்கள் எடுத்திருந்தாலும் இவரை ஒரு சைக்கோ என்றும் பலர் கூறுவதுண்டு.இவர் இயக்கிய படங்கள் பல விருதுகள் பெற்று விட்டன.ஆனால் அவற்றை தயாரித்தவர்கள் வீதிக்கு வந்து விட்டார்கள்.இவர் எப்போது pack up சொல்லுவார் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.அந்த இறைவன் மீதும் இவருக்கு நம்பிக்கை கிடையாது.இவர் படங்களின் லொகேஷனுக்கும் பாடல்கள்-காட்சிகளுக்கும் ஆகும் செலவு என்னவோ மிகக் குறைவு தான்.ஆனால் தன்னைத் தானே ஒரு perfectionist என்றெண்ணிக் கொண்டு இவர் செய்யும் அடாவடிகள் தான் படத்தின் பட்ஜெட்டை பல மடங்கு உயர்த்தி விடுகிறது.எடுத்தக் காட்சிகளையே மீண்டும் மீண்டும் re-shoot செய்வார்.இதனால் படச்சுருள்கள் ஏகத்துக்கும் வீணாகும்.இது போன்ற காரணங்களால் தான் இவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள் தெருவுக்கு வந்தார்கள்.
 
"இது ஒரு fantasy movie சார்..சரண் அதுல டபுள் ரோல் பண்றாரு..தொல்பொருள் ஆராய்ச்சியாளரா ஒரு ரோல் இன்னொரு ரோல்ல 12 ஆம் நூற்றாண்டுல வாழ்ந்த விக்ரம சோழனா நடிக்கிறாரு..இந்த ஆராய்ச்சியாளருக்கும் அந்த சோழ ராஜாவுக்கும் என்ன தொடர்பு..இவர் ஆராய்ச்சி எதை பத்தி,இவர் ஆராய்ச்சி ஜெயச்சதா தோற்றதான்னு கடைசியல ஒரு ட்விஸ்ட் வைச்சு சொல்லுவோம் சார்.." - என்று ஆரம்பித்து கதையை சுருக்கமாக சொல்லி முடித்தார் நீலகண்டன்.

அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார் தர்மராஜ்.சுமார் ஒரு 30 - 32  வயது மதிக்கத்தக்கவர் தான் இந்த தர்மராஜ். இவருடைய அப்பா கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர். அன்றைய அரசியல்வாதிகளுக்கு 'பல' விதத்திலும் உதவியாக இருந்து ஏகத்துக்கும் பணம் சம்பாதித்தவர்.சம்பாதித்த பணத்தை பாதுகாக்கவும் மேலும் மேலும் சொத்து சேர்க்கவும் அரசியலில் குதித்து வெற்றிகரமாக தொழில் நடத்தி வருபவர். அரசியல்வாதியின் மகனான தர்மராஜுக்கு படிப்பு ஏறவில்லை (அரசியல்வாதியின் மகனாயிற்றே), அப்பன் சொத்தை எப்படி செலவு செய்வதென்று தெரியாமல் தவித்த தர்மராஜுக்கு சினிமா வழி செய்தது.விளம்பரத்துக்கு விளம்பரமும் கிடைத்தாயிற்று வருமானத்திற்கு வருமானமும் கிடைத்து விட்டது.தர்மராஜுக்கு ரேஸ்,சூதாட்டம்,மது,மாது என அனைத்து பழக்கங்களும் உண்டு.இந்த தர்மராஜ் சொல்படி கேளாத பலருக்கு இவன் யமதர்மராஜாக மாறிய சம்பவங்களும் உண்டு.தர்மராஜ் சற்றே வில்லங்கமான தயாரிப்பாளர் தான்.

கதை முழுவதும் கேட்டு முடித்த பிறகு அவர் பேச தொடங்கினார்,

"நல்லா இருக்கு நீலு சார்..டைட்டில் என்ன வைச்சிருக்கீங்க?"

"அதிசய கனவு" - ஆர்வமாக சொன்னார் நீலகண்டன்.

"இது பகல் கனவாகாம இருந்தா சரி" - இவ்வாறு நினைத்துக் கொண்ட விவேக்,தனது கடமையை உணர்ந்து பேசத் தொடங்கினான்,

"சார்,அப்படியே இந்த சம்பள விஷயத்தையும் முடிவு பண்ணிடலாமே" - விவேக் சற்று பணிவாகவே சொன்னான்.

"பண்ணிட்டா போச்சு" - அலட்சியமாக பதிலளித்தார் தர்மராஜ்.

இந்த அலட்சியம் சரணுக்கு சற்று கோபத்தை உண்டாக்கினாலும்,விக்ரம சோழனாக நடிக்கும் வாய்ப்பை விட்டு விட கூடாதென்று சற்று அமைதி காத்தான்.

"சரண் இந்தாங்க 10  lakh க்கு செக் போட்டிருக்கேன்..மத்தத போக போக பேசிக்கலாம்" - என்று சற்று அதிகார தொனியிலேயே சொன்னார் தர்மராஜ்.

"சார் இவரோட மார்க்கெட் படி 3  கோடி வாங்கிறது வழக்கம்" - பணிவாக சொன்னாலும் உறுதியாகவே சொன்னான் விவேக்.

"இதோ பாருங்க வரிசையா உங்களுக்கொரு 3 -4  flop...அடுத்த படத்துக்கும் பெருசா எதிர்பார்ப்பு இருக்கிற மாதிரி தெரியல..இந்த நேரத்துல சம்பளத்த பேரம் பேசி வர்ற 'ராஜ' வாழ்க்கைய விட்டுடாதிங்க..அதாவது சோழ ராஜா ஆகர வாய்ப்பை சொன்னேன்.."

"சரிங்க இந்த பத்து லட்சம் அட்வான்சா இருக்கட்டும்..மத்தத அப்புறம் பாத்துக்கலாம்" - என்று தன ஆத்திரத்தை கட்டுப்படுத்தி கொண்டு,முகத்தில் எந்த ஒரு உணர்வும் காட்டாமல் ஒரு எந்திரத்தை போல் பேசிவிட்டு எழுந்தான் சரண்.

"இது புத்திசாலித்தனம்..சீக்கிரம் official press meet arrange பண்ணுங்க சரண்" - தர்மராஜ் கூறியதற்கு எந்த ஒரு பதிலும் தராமல் கம்பீரமாக அறையை விட்டு வெளியேறினார்கள் சரணும் விவேக்கும்


                                                     ***************************

ஸ்ரீதர் முதன்முதலாக ஒரு உதவி இயக்குனராக பணியாற்ற போவதை எண்ணி பேரானந்தம்  அடைந்தார் காதர் பாய். தனக்கு அடைக்கலம் கொடுத்து சினிமா என்றால் என்னவென்று ஓரளவேனும் புரிந்து கொள்ள உதவியவர் காதர் பாய் என்பதால் ஸ்ரீதர் மனதில் அவருக்கு என்றுமே ஒரு தனி மரியாதை உண்டு.அதிகாலையிலேயே காதர் பாயிடமிருந்து விடை பெற்று சென்றான் ஸ்ரீதர்.பிறகு அருகிலிருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டான். பிறகு வழக்கம் போல் நெற்றியில் விபூதி-குங்குமம் இட்டுக்கொண்டு புறப்பட்டான். சொன்ன நேரத்திற்கு முன்பாகவே ஷூட்டிங் ஸ்பாட்டைச் சென்றடைந்தான். பிறகு சுகுந்தன் மற்றும் மற்ற பல தொழில்நுட்ப கலைஞர்களும் வந்து சேர்ந்தார்கள்.படப்பிடிப்புக்கு அனைவரும் தயாராகிக்கொண்டிருந்தனர்..

"வாயா ஸ்ரீதர்..நீ சொன்ன நேரத்துக்கு முன்னாடியே வருவன்னு நான் எதிர்பார்த்தது வீண் போகலை" - என்றார் சுகுந்தன்.ஸ்ரீதர் அற்ப சந்தோஷங்களை எதிர்பார்த்தும் அரைகுறை திறமையை வைத்துக் கொண்டும் சினிமாவிற்கு வரவில்லை என்பதை சுகுந்தன் உணர்ந்திருந்தார். ஸ்ரீதர், சினிமாவில் தான் ஒரு சிறந்த இயக்குனராக வேண்டுமென்ற லட்சியத்தில் உறுதியாக இருப்பதையும், சுகுந்தனால் உணர முடிந்தது. சுகுந்தனின் கேள்விக்கு அடக்கமாக புன்னகையை பதிலாக தந்தான் ஸ்ரீதர்.

"என்னய்யா நெத்தியில விபூதி,குங்குமம் எல்லாம் வைச்சிருக்க" - என்று ஒரு வித ஏற்ற இறக்கமான தொனியில் கேட்டார் சுகுந்தன்.

"இல்ல சார் இது என் நம்பிக்கை.இந்த விபூதி குங்குமம் வைக்கிறப்போ நான் கடவுள மனசுல நினைச்சி தான் வைக்கிறேன்.இப்படி குங்குமம் விபூதி எல்லாம் வைக்கிறது மனசுக்கு ஒரு வித நிம்மதியா தருது,அது மட்டும் இல்ல தப்பான விஷயத்துல இருந்து என்ன காப்பாத்துதுன்னு ஒரு சின்ன நம்பிக்கை அதான்..." - பணிவாக சொன்னான் ஸ்ரீதர்.

இந்த பதில் சுகுந்தனை மேலும் impress  செய்தது என்று தான் சொல்ல வேண்டும்.

"ஏன் யா யோவ்,நீ இருக்கிறது தமிழ் சினிமால..இங்க கடவுள் இல்லைன்னு சொல்லுறவன் தான் அறிவாளி,அதி புத்திசாலி,அறிவுஜீவி etc etc  எல்லாம்.. நீ என்னடான்னா ஸ்கூல் பையன் மாதிரி பேசிகிட்டிருக்க.." - என்று நகைச்சுவையாக சொன்னார் சுகுந்தன்.

"கே.பாலச்சந்தர்,ராமநாராயணன் இவங்க எல்லாம் நாத்திகவாதிங்க இல்லையே சார்..இவங்க நூறு படம் டைரக்ட் பண்ணியிருக்காங்களே, அவங்கள inspirationஆ எடுத்துக்கிறேன்" - ஸ்ரீதர்.

"நல்லா புத்திசாலித்தனமாத்தான் பேசற..இதே மாதிரி நான் சொல்றப்போ sceneக்கு ஏற்ற மாதிரி வசனம் எழுதிரியான்னு பார்க்கிறேன்..சரி எல்லாம் செட் ஆயடிச்சுன்னு நினைக்கிறேன்.வா ஒருவாட்டி நாம போயி செக் பண்ணிடலாம்" - சொல்லிவிட்டு நடந்தார் சுகுந்தன். ஸ்ரீதரிடம் நகைச்சுவையாகத் தான் சுகுந்தன் நாத்திகம் பேசினாரே தவிர சுகுந்தனுக்கும் கடவுள், சாஸ்திரம், சம்பிரதாயம் ஆகியவற்றில் நம்பிக்கை உண்டு.

செட்(set) எல்லாம் சரியாக அமைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்தார் சுகுந்தன்.

"ஸ்ரீதர்,அந்த bag  எடு"

தனது பையிலிருந்து ஒரு மடி-கணினி(laptop) எடுத்தார்.அதில் தான் வரைந்து வைத்திருந்த படங்களுடன் செட்டையும் ஒப்பிட்டு பார்த்தார்.தனது ஷூட்டிங்கில் எப்படிப்பட்ட செட் அமைக்க வேண்டுமென்று முன்னரே வரைந்து வைத்துக் கொள்வது சுகுந்தனின் வழக்கம்.அதன் படியே செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடக்கும்.தமிழ் சினிமாவில் பதினைந்து படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளதால் சுகுந்தன் அத்தனை சுலபமாக கோபப்படவோ பதற்றப் படவோ மாட்டார்.அனைத்து விஷயங்களையும் நன்றாக சமாளிக்கக் கூடியவர்.

பிறகு ஒன்பது மணிக்கு வர வேண்டிய கதாநாயகி 10  மணிக்கும்,கதாநாயகன் 11  மணிக்கும் வந்து சேர்ந்தனர். இரண்டு மணி நேரம் வீணாகி விட்டதே என்று ஆத்திரப்பட்டான் ஸ்ரீதர்.அவனுடன் இருந்த மற்ற இரண்டு உதவி இயக்குனர்கள் சற்றும் அலட்டிக்கொள்ளவில்லை.இயக்குனர் சுகுந்தனோ கதாநாயகனிடமும்,கதாநாயகியிடமும் மிக சகஜமாக காட்சிகளை விளக்கிக் கொண்டிருந்தார்.

ஸ்ரீதருக்கு சற்று ஆச்சரியம்.."இந்த ஹீரோவா தாக்கி பத்திரிக்கைல மகா கேவலமா பேட்டி கொடுத்தாரு..அவரோட மாஸ் படத்த எல்லாம் கொச்ச படுத்தி திட்டினாரு..இப்போ அவர் கூடவே படம் பண்றாரு..சரி அரசியல் மாதிரி சினிமாலையும் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை போல" - இவ்வாறு நினைத்துக் கொண்டான் ஸ்ரீதர்.

"யோவ் ஸ்ரீதர் உனக்கு கில்லி,பம்பரம் இதெல்லாம் ஆட தெரியும் இல்ல?" - கேட்டார் சுகுந்தன்.

"தெரியும் சார்,அதுக்கென்ன இப்போ?"

"நம்ம ஹீரோயினுக்கு கொஞ்சம் ட்ரெயினிங் கொடு..ரொம்ப அலட்டிக்க வேண்டாம்,சும்மா ஒரு 2 -3  ஷாட் எடுக்கணம்..அந்த அளவுக்கு சொல்லிகொடுத்தா போதும்.."

இடை ஆட்டி ஸ்டைலாக நடந்து வந்த கதாநாயகிக்கு கற்றுக் கொடுக்க கிளம்பினான்.

"ப்ரதர் ஒழுங்கா சொல்லி கொடுங்க,கொஞ்சம் தப்பாச்சுனாலும் டைரக்டர் உங்கள காய்ச்சிடுவார்" - மற்றொரு அசிஸ்டன்ட் டைரக்டர் மிதமான குரலில் எச்சரிக்கை செய்தான்.

"இந்தாளு கிட்ட அசிஸ்டண்டா சேர்ந்தா தொழில் கத்துக்கலாம்னு பார்த்தா,காபி வாங்கிட்டு வர்றதுக்கும், ஹீரோவோட டிரெஸ்ஸ அட்ஜஸ்ட் பண்றதுக்கும் யூஸ் பண்றான் நம்மள.." - உதவி இயக்குனர்களில் ஒருவன் மற்றொருவனிடம் சொன்னான்.

"இதுல பாதி வசனம் நாம தான் எழுதறோம்,டைட்டில் கார்டுல மட்டும்,'கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்'ன்னு இவர் பேர போட்டுக்குவாரு..எடுக்கறது தமிழ் படம்,இதுல பாதி வசனத்த Englishல எழுத சொல்லி சாவடிக்கிறான்" - என்று அலுத்துக் கொண்டான் மற்றொருவன்.

"அது வரைக்கும் இந்த புது பையன் அதிர்ஷ்டசாலி..பம்பரம்,கில்லி எல்லாம் சொல்லித்தர்ற சாக்குல ஹீரோயின அங்க இங்க தொடலாம்..அந்த சான்ஸ் கூட நமக்கு இல்லாம போச்சே" - என்று சற்றே பெருமூச்சு விட்டான் முதலில் பேசியவன்.

ஸ்ரீதரோ இப்படி எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்கு கொடுத்த வேலையே செய்வதில் கவனமாக இருந்தான்.

"மேடம் இந்த ஷாட்ல நீங்க கிராமத்துல பண்ற குறும்புத்தனத்த ஷூட் பண்றாங்க..so முகத்துல கொஞ்சம் குறும்புத்தனம் காட்டுங்க..பம்பரத்த குறி பார்க்கிற மாதிரி சீரியஸா பார்க்கனம்..பம்பரத்த விட்டதும் 'ஹே'ன்னு குதிக்கணம்.." - இப்படி சற்று ஆர்வமாகவே சொல்லிக்கொடுத்தான் ஸ்ரீதர்.

ஸ்ரீதர் சொல்லிக்கொடுத்த படியே கதாநாயகி நடித்ததில் சுகுந்தனுக்கு ஏக மகிழ்ச்சி..முதல் டேக்கிலேயே ok செய்து விட்டார்கள்.

"Brilliant ஸ்ரீதர்..இப்படி தான் இருக்கணம்..பம்பரம்னா பம்பரம் விட்ரதோட சேர்த்து அந்த சீனோட முக்கியத்துவத்த சொல்லி கொடுக்கணம்..Well done!!!Keep it up!!!" என்று ஸ்ரீதரின் தோள்களை தட்டிக்கொடுத்து விட்டுச் சென்றார் சுகுந்தன்.

இப்படி இவர் தங்களை ஒரு நாள் கூட பாராட்டியதில்லையே என்று மற்ற இரண்டு உதவி இயக்குனர்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.. "அப்படி இந்த ஸ்ரீதரிடம் என்ன தான் இருக்கிறது?வந்த முதல் நாளே நல்ல பெயர் வாங்கி விட்டானே" - என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார்கள். பறவையின் கண்கள் மட்டுமே தெரிகிறதென்று சொன்ன அர்ஜுனனைப்போல்,பம்பரம் கற்றுத் தரும்போது,படத்தில் இந்த காட்சியை எப்படி சிறப்பாக அமைக்க முடியுமென்கிற சிந்தனை மட்டுமே ஸ்ரீதரின் மனத்தில் இருந்தது, கதாநாயகியின் கவர்ச்சியான உடையில் அவனுடைய கவனம் செல்லவில்லை. இப்படிப் பட்ட ஸ்ரீதர் பாராட்டப்படுவதும், முதல் நாளே நல்ல பெயரெடுப்பதும் சகஜம் தானே.



(தொடரும்)

1 comment:

FR33KiLL said...

Sridhar oru Shankar da... Irundhaalum ne kamal ah kalaaichurka kudadhu....