Saturday, December 3, 2011

மாஸ் மீடியா - 4

  மாஸ் மீடியா - 4


விலையுயர்ந்த வெள்ளை நிற பைஜாமா ஜிப்பாவில் 'எளிமையாக' தயாரானான் சரண்.நெற்றியில் சற்று திருநீறும் இட்டுக்கொண்டு,பெரிய ஹீரோ போன்று பந்தாவாக தோன்றாமல் எளிமையாகவே காட்சியளித்தான். உடனே விவேக் உள்ளே நுழைந்தான்.


"பாஸ் ரிபோர்ட்டர்ஸ் எல்லாம் காத்திருக்காங்க..சீக்கிரம்"


"ஹ்ம்ம்" - ஆமோதித்தான் சரண்.


"பாஸ் பிறந்த நாளாச்சே அப்டி இமயமலை பக்கம் போயிட்டு வர கூடாதா,அங்க கொஞ்சம் நிம்மதி கிடைக்குமே" - நக்கலாக சொன்னான் விவேக்.


"உனக்கு வாய் ஜாஸ்தி ஆய்டிச்சு வர வர" - சற்று கடுமையாகவே கூறிவிட்டு ஹாலுக்குச் சென்றான் சரண்.பத்திரிக்கயாளர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். சரண் வந்ததும் மும்முரமாக புகைப்படமெடுக்கலானார்கள். சிறிதும் பதற்றப்படாமல், அவசரப்படாமல் அமைதியாக போஸ் கொடுத்தான் சரண். சரணைப் பற்றி திரையுலகில் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவினாலும் பக்குவமாக பேசுவதிலும் தெளிவாக சிந்தித்து முடிவெடுப்பதிலும் சரணுக்கு நிகர் சரண் தான் என்று சொல்லலாம். சரணுடன் அனைவரும் கை குலுக்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.பிறகு இருக்கைகளில் அமர்ந்து கேள்விகளை கேட்க தொடங்கினர்.


"இந்த Birthday என்ன சார் ஸ்பெஷல்"


"Its just another day" - சரண்.


"உங்களோட இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?"


"உழைப்பு,தன்னம்பிக்கை எல்லாத்துக்கும் மேல என்னோட ரசிகர்கள்" ,அடக்கமாக சொன்னான் சரண்.


"சமீப காலமா உங்களை ஆளுங்கட்சிக்கு நெருக்கமான பிரபல financier செல்வராஜோட அடிக்கடி பார்க்க முடியுதே"


"என்னோட அடுத்த படத்துக்கு finance பண்ண சொல்லி அவர் கிட்ட பேசிகிட்டிருக்கோம்.தொழில் ரீதியான நட்பு தான்"


"நேரடியாவே கேக்கறோம் நீங்க அரசியலுக்கு வருவீங்களா?"


""ஆமாம் நான் தப்பி தவறி ஏதாச்சு சொல்லனம் அந்த ஜாதி கட்சித் தலைவரு,படத்துல சிகரெட் புடிக்கிறான்,தண்ணி அடிக்கிறான்னு என் படம் ஓடற தியேட்டரை உடைக்கணம்,படப்பெட்டிய கொளுத்தனம்,என்ன வைச்சே ஒரு மாசம் நியூஸ் போடனம்..நல்ல எண்ணம் டா உங்களுக்கு"" - இவ்வாறு எண்ணிக் கொண்டான்,பிறகு பதிலளித்தான்.


"இல்லை"


"உங்களுக்கும் நடிகை தரணிக்கும் நடுவுல ஏதோ இதுன்னு கிசுகிசுக்கிராங்களே.." - சற்று விஷமத்தனமாகவே கேட்டார் ஜோல்னா பையுடன் அமர்ந்திருந்த அந்த பத்திரிக்கைக்காரர்.


"யார் கிசுகிசுக்கிராங்களோ அவங்க கிட்டயே கேக்கலாமே சார்.நான் இந்த கிசு கிசு எல்லாம் படிக்கிறதில்லை பாருங்க..Anyway Dharani is my best friend" - சற்று அடக்கமாகவும் கம்பீரமாகவும் பதிலளித்த சரண்,தொடர்ந்து,"ஆமாம் நீங்க எந்த பத்திரிகை?"


"மூன்றாவது கண் சார்"


"ஓ இந்த பூபால்னு ஒருத்தர்,மீசை பெருசா வச்சிருப்பாரே,அவர் நடத்துற பத்திரிக்கையா..ok ok அடுத்த கேள்வி" - என்று சற்று ஏற்ற இறக்கமாக அந்த நிருபரைப் பார்த்து கூறினான் சரண்.


"உங்க படமெல்லாம் ஏன் சார் ஒரே மாதிரி இருக்கு?வழக்கமான intro song, குத்துப் பாட்டு,ஆறு fight,பஞ்ச் டயலாக்குன்னு..ஏன் வேற எதுவும் ட்ரை பண்றதில்லை?"


"நீங்க கூட தான் எல்லா நடிகர்களையும் அரசியலுக்கு வருவீங்களா அரசியலுக்கு வருவீங்களான்னு ஒரே கேள்விய கேக்கறீங்க..நாங்க எதாச்சு கேட்டோமா" - முகத்தில் லேசான சிரிப்புடன் கூறினான் சரண்.


"இது மழுப்பலான பதில்"


"On a serious note,இப்போ இந்த மாதிரி படம் தான் மக்கள் என் கிட்ட எதிர்பார்க்கறாங்க..ஆனா கூடிய சீக்கிரமே ஒரு வித்தியாசமான படத்தோட அறிவிப்பு வெளிவரும்"


பத்திரிக்கயாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்..


"என்னய்யா இவ்வளவு அடக்கமா பதில் சொல்லிட்டான்..ஏதாச்சு திட்டுவான்,அதை வச்சு பரபரப்ப உண்டாக்கலாம்னு பார்த்தா இப்படி பண்ணிட்டானே.."


"அட விடுப்பா,இவனும் அந்த வாசு மாதிரி பிரஸ் மீட்லயே  காச் மூச்சுன்னு  கத்தாம விட்டானே..அதை நெனச்சி பெருமைப்படு"


"அப்படி கத்தினா நாங்க தான் வீடியோவ Youtubeல ரிலீஸ் பண்ணிடுவோம்ல" என்று கமெண்ட் அடித்து சிரித்தார் அந்த சினிமா கிசு கிசு எழுதும் நிருபர்.




"One final question sir. வரிசையா உங்களுக்கொரு 3-4 flops..உங்களோட அடுத்த படம் மறுபடி உங்களை டாப்புக்கு கொண்டு போகும்னு நம்புறீங்களா?"


"நம்பிக்கை தானே வாழ்க்கை"


"படம் இப்போ எந்த அளவில இருக்கு?"


"Post production work போயிட்டிருக்கு..தீபாவளி ரிலீஸ்"


"ஆல் தி பெஸ்ட் சார்" - என்று ஒரு நிருபர் வாழ்த்து தெரிவிக்க பத்திரிக்கையாளர் கூட்டம் கலைந்தது.


தன் அடுத்தப் படம் இழந்த தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் என நம்பிக்கையோடு பதில் கூறினாலும், சரணுக்கு  உள்ளுக்குள் பயமில்லாமல் இல்லை. இயக்குனர் நீலகண்டன் சொன்ன கதை சரணுக்கு மிகவும் பிடித்திருந்தது. அது ஒரு சரித்திரப் படம். பட்ஜெட் பல கோடி ருபாய் வரை போகும். இந்த படத்தில் நடித்து விட்டால் தமிழ் சினிமாவில்  தான் மிக உயர்ந்த இடத்தை பிடித்து விடலாம் என்பது சரணின் எண்ணம். ஆனால் இந்த படம் தோல்வியடைந்தால் சரணின் நிலை ஏறத்தாழ field out தான். தயாரிப்பாளர் தர்மராஜுக்கோ எந்த பிரச்சனையும் ஏற்பட போவதில்லை, காரணம் அவர் படமெடுப்பதே கருப்பு பணத்தில் தான். இயக்குனர் நீலகண்டனும் தொடர்ந்து 5 வெற்றிப் படங்களை கொடுத்தவர். அதனால் அவருக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. தொடர்ந்து தோல்விப் படங்கள் கொடுத்து வரும் சரணுக்குத் தான் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். தான்  இந்த கதையில் நடித்தே ஆக வேண்டுமென்று சரண் தீர்மானமாக இருந்தாலும், அவனுக்குள் ஏதோ ஒரு புரியாத குழப்பம் குடைந்து கொண்டு தான் இருந்தது. ஏதோ ஒரு விபரீதம் நேரப்போகிறது என்பது போன்ற உணர்வு சரணை பெரிதும் வேதனைப்படுத்தியது.அதனாலேயே இந்த படத்தை அறிவிக்கும் முடிவை பல முறை தள்ளிப்போட்டான்.


இனியும் தாமதிப்பதில் பயனில்லை.நமக்கு தேவை ஒரு மெகா ஹிட். இப்போது வெளிவரவிருக்கும் படம் ஒரு வேளை வியாபார ரீதியாக வெற்றி பெற்றாலும் கூட,அதனால் தனக்கு மிக அவசியமான Image make-over ஏற்பட வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தான். நீலகண்டனிடம் இன்று உறுதி படுத்திக் கொண்டு படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இந்த வாரத்திற்குள் வெளியிட முடிவு செய்தான். உடனடியாக நீலகண்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.


"ஹலோ!! நீலு சார்..."


                                                     ***************************


ஜோயித்தாவின் வரவிற்காக காத்திருந்தான் ஸ்ரீதர்.தன்னை எதற்கு அழைத்தாள் என்று இது வரை ஸ்ரீதருக்கு விளங்கவே இல்லை.நிச்சயம் ஏதோ நல்ல விஷயம் தான் என்று தோன்றியது.தன் கதை பிடிக்கவில்லை என்றால் முழு கதையும் கேட்டிருக்க மாட்டாள்.நிச்சயம் பிடித்துத் தான் இருக்கும்."ஆனால் பிடித்திருந்தால் மட்டுமென்ன? ஜோயித்தாவால் என்ன செய்து விட முடியும்? ஒரு கதாநாயகியை நம்பி படம் தயாரிக்கும் துணிச்சல் கோலிவுட்டில் எந்த தயாரிப்பாளருக்குமில்லை. அதுவும் கதாநாயகியை நம்பி அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் நிலைமை  இங்கு வந்து விடவில்லை.சே சே..என்ன இது அளவுக்கதிகமாக யோசிக்கிறோமோ.. இயக்குனர் வாய்ப்பு கிடைப்பதென்ன அத்தனை சுலபமா?பின் எதற்கு தான் நம்மை அழைத்தாளோ.." - என்று பல விதமான குழப்பங்கள் தோன்றியது. இப்படி குழப்பத்துடன் நின்றிருக்கையில் ஜோயித்தாவின் டிரைவர் உள்ளே வந்தான்.

"சார் நீங்க ரெடி தானே? மேடம் கார் ல வெயிட் பண்றாங்க..உங்கள உடனே வரச்சொன்னாங்க" 

டிரைவரை பின் தொடர்ந்தான் ஸ்ரீதர்.

ஜோயித்தா, காருக்குள் சிவப்பு நிறச் சேலையில் ஸ்டைலாக அமர்ந்திருந்தாள்.இவள் சாதாரண உடை அணிந்தாலே பார்ப்பவர்களுக்கு போதை ஏறும்.இதில் விலையுயர்ந்த இது போன்ற கவர்ச்சியான சேலை அணிந்திருந்தால் சொல்லவே வேண்டாம். ஜோயித்தாவை பல முறை மிக அருகில் பார்த்திருந்தாலும் இத்தனை அலங்காரத்துடன் இதற்கு முன்பு ஸ்ரீதர் பார்த்ததில்லை.இதனால் சற்று திகைத்துத் தான் போனான்.ஷூட்டிங் முடிந்து ஓய்வெடுக்க நேரமின்றி உடனே கிளம்பியதால் ஜோயித்தாவின் முகத்தில் ஒரு வித சோர்வு இருப்பதை உணர முடிந்தது, ஆனாலும் திரையுலகினருக்கு glamor மிக முக்கியம். பொதுவாகவே பெண்கள் தங்கள் கைப்பையில் ஒரு make-up kit வைத்திருப்பது வழக்கம்.சில பெண்கள் ஆட்டோ-பஸ்சுக்கு சில்லறை வைத்திருக்கிறார்களோ இல்லையோ முகத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ள அழகு சாதன பொருட்களை வைத்திருக்க தவறுவதில்லை. அப்படி இருக்க பிரபல கதாநாயகி,இளைஞர்களின் கனவுக்கன்னி ஜோயித்தா பற்றி சொல்லவா வேண்டும். முகத்திற்கு ஏதேதோ இடைவிடாது தடவி கொண்டே இருந்தாள்.

"மேடம் நாம எங்கே போறோம்..தயவு செஞ்சி சொல்லுங்களேன்..என் தலையே வெடிச்சிடும் போல இருக்கு"

"அதான் சொன்னனே ஹோட்டல் பார்க்னு"

"ஐயோ எதுக்கு போறோம்னு சொல்லிடுங்களேன் ப்ளீஸ்.."

"சொன்னா தான் டைரக்டர் சார் வருவீங்களோ..உன்ன அதை பத்தி யோசிக்க கூடாதுன்னு சொன்னேன்ல" - என்றாள் ஒரு குறும்பான புன்னகையுடன்.

"எதுக்குங்க என்ன கலாய்க்கிறீங்க..இப்படி எல்லாம் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா உங்க கிட்ட நான் கதையே சொல்லிருக்க மாட்டேன்" - என்று அலுத்துக் கொண்டான்.

"அவசரப்பட்டு என்ன திட்டிடாதே..நாம இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு..இறங்கு.." - என்றாள்.

இருவரும் இறங்கி நடந்தார்கள்.உள்ளே மாபெரும் விருந்து(பார்ட்டி) நடந்து கொண்டிருந்தது.ஸ்ரீதருக்கு ஜோயித்தாவின் நடையில் ஒரு மாற்றம் தெரிந்தது.அந்த மாற்றம் நடையில் மட்டுமல்ல அவளது நடவடிக்கைகளிலும் இருந்ததை உணர்ந்தான்.ஒரு முன்னணி கதாநாயகிக்கே உரிய கர்வம்,திமிர் என அனைத்தையும் கண்டான்.சரளமாக ஆங்கிலத்தில் பீட்டர் விடுவதையும் கவனித்தான்.பிறகு,

"ஸ்ரீதர் இப்போ உன்னை ஒருத்தர் கிட்ட introduce பண்ண போறேன். Try to impress him"

ஸ்ரீதருக்கு இப்போதும் கூட ஒன்றும் விளங்கவில்லை.மந்திரித்து விட்டவனைப் போல் ஜோயித்தாவின் பின்னாலேயே நடந்தான்.ஜோயித்தாவைக் கண்டதும்,

"ஹலோ ஜோயித்தா.." - என்று புன்னகையுடன் அன்பாக வரவேற்றார் பிரபல இயக்குனர் சுகுந்தன்.

"ஹாய்..அப்புறம் உங்களோட லேட்டஸ்ட் ப்ராஜெக்ட் எப்படி போயிட்டிருக்கு" - சாதாரணமாக கேட்டாள் ஜோயித்தா.

"ஹ்ம்ம் ஓடிகிட்டிருக்கு..கதைக்கி பொருத்தமா இருப்பான்னு நினைச்சி இந்தாள ஹீரோவா போட்டா அரசியல் பஞ்ச் டயலாக் வைக்கச் சொல்லி உயிரை வாங்குறான்..producer புலம்பியே தீர்க்கறான்..எப்படியோ படத்த ஓரளவுக்கு முடிச்சாச்சி..சரி ஏதோ முக்கியமான விஷயம் பேசனம்னு phone பண்ணியே..என்ன...?" - என்றார் சுகுந்தன்.

"ஒன்னும் இல்லை சுகுந்தன்..ஒரு சின்ன help.. இது ஸ்ரீதர்..துணை நடிகரா இருக்கான்..எனக்கொரு நல்ல friendன்னு கூட சொல்லலாம்.." - என்று சொல்லி சற்று நிறுத்தினாள்.

"துணை நடிகர் உனக்கு frienda? ஆச்சரியமா இருக்கு...பேர் என்ன?" - என்றார் ஸ்ரீதரை நோக்கி.

"ஸ்ரீதர் சார்" - என்றான்.ஸ்ரீதருக்கு இப்போது தான் ஜோயித்தா தன்னை அழைத்து வந்ததன் காரணம் லேசாக புரிய ஆரம்பித்தது.

"சுகுந்தன் - இவன் வெறும் துணை நடிகனாவே இருந்துட கூடாது. இவன் என் கிட்ட ஒரு கதைய narrate பண்ணான். முதல்ல நான் தமாஷா தான் கேட்க ஆரம்பிச்சேன்..ஆனா இவன் சொல்ல சொல்ல எனக்கொரு தனி interest create ஆய்டிச்சு.In fact இவன் டைரக்ஷன்ல ஒரு படம் பண்ணா நல்லா இருக்கின்ற அளவுக்கு போயிட்டேன்"  - ஜோயித்தா இடைவிடாது பேசிய போது குறுக்கிட்ட சுகுந்தன்,

"அப்போ பண்ண வேண்டியது தானே" - என்றான் 

"நான் என்ன மாஸ் ஹீரோவா? புதுமுக டைரக்டருக்கு சான்சும் கொடுத்து ஒரு காரும் வாங்கி கொடுத்து சீன் போட"

"சரி சரி..நீ மாஸ் ஹீரோ பத்தி எல்லாம் பேசாதே..ஏதோ ஷூட்டிங்குக்கு ஆட்டோல வர்றனே அப்போ அவர் கார் வாங்கி கொடுத்தாரு..இப்போ ஏன் அதெல்லாம்..நான் என்ன செய்யனம்னு எதிர்பார்க்கிற நீ?"

"இவனுக்கு திறமை இருக்கு..ஆனா அதை மட்டும் வச்சி சினிமா எடுக்க முடியாது..ஒரு படம் டைரக்ட் பண்றதுன்னா எவ்வளவு கஷ்டம்னு உனக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை..இவன் முதல்ல சினிமானா என்னன்னு புரிஞ்சிக்கணம்.." - என நிறுத்தினாள் ஜோயித்தா

"அதுக்கு?" - கேள்வி கேட்டார் சுகுந்தன்.

"அதுக்கு..அதுக்கு இவன் உன் கிட்ட Assistant டைரக்டரா இருந்தா கரெக்டா இருக்கும்னு feel பண்றேன்.." - என்று தயங்கி தயங்கி சொன்னாள்

"ஓ recommendation வேறயா  ..என் கிட்ட அ சிஸ்டண்ட்டா சேர்ரதுன்னா நான் கொஞ்சம் qualifications எதிர்பார்ப்பனே..இவர டெஸ்ட் பண்ணி தான் சேர்த்துகலாமா வேண்டாமான்னு முடிவெடுப்பேன்"

"இது என்ன 100% ரிசல்ட் காட்டிறதுக்காக நல்லா படிக்கறவன மட்டுமே சேர்க்கற school,tuition மாதிரி இருக்கே" 

"அப்படி இல்லை ஜோயித்தா..இங்க நிறைய directors  அவங்களோட உதவி இயக்குனர்களை தெரு நாய் மாதிரி நடத்துவாங்க..ஆனா நான் அப்படி இல்லை..என் கிட்ட ஒருத்தன் உதவி இயக்குனரா இருக்கான்னா அவன் உண்மைலேயே எதுக்காச்சு உதவனம்..அதுக்கு கொஞ்ச நஞ்சமாச்சு விஷயம் தெரிஞ்சிருக்கணம்..அப்போ தான் எனக்கு உபயோகமா இருக்கும்..அதுக்கு மேல தொழில் கத்துக்கிட்டு ஜெயிக்கிறது அவன் சாமார்த்தியம்.. அதனால நான் எதிர்பார்க்கிற சில விஷயங்கள் இவர் கிட்ட இருந்தா மட்டும் தான் என்னால சேர்த்துக்க முடியும்"

"சரி அந்த டெஸ்ட் எப்போ வைக்கலாம்னு இருக்க?அதுக்கு எங்க வர வேண்டி இருக்கும்..?"

"நீ ரொம்ப யோசிக்கிற..ஸ்ரீதர் நான் கேட்கற கேள்விக்கு நேர்மையா உண்மையை மட்டும் சொல்லுங்க.."

"கண்டிப்பா சார்" - என்றான் சற்று உற்சாகத்துடன்.உள்ளுக்குள் ஒரு பயமும் இருந்தது..ஏனெனில் மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு என்பது கனவில் கூட கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.ஆகையால் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற படபடப்பு அவனுக்கு இருக்கத்தான் செய்தது.

"புஸ்தகம் படிக்கற பழக்கம் உண்டா?"

"நிறையவே படிப்பேன் சார்"

"என்ன மாதிரி புஸ்தகமெல்லாம் படிச்சிருக்க"

"நிறைய சார்.. Ken Follett, Jeffrey Archer,Irving Wallace,James Herriot,Leo Tolstoy, Sidney Sheldon, John Grisham,J K Rowling,Mario Puzo, Dan Brown, Chetan Bhagat, even Amish..." - என்று சொல்லிக்கொண்டே போன ஸ்ரீதரை நிறுத்தி சற்றே ஆச்சரியத்துடன் கேட்டார் சுகுந்தன்,

"அவ்வளவு தானா?"
"இல்லை சார் இன்னும் இருக்கு தமிழ்ல கல்கி,சுஜாதா,பாலகுமாரன்,ராஜேஷ் குமார்,அனுராதா ரமணன்,ரமணி சந்திரன்..."
"போதும் பா..இவங்க எழுதின எல்லாத்தையும் படிச்சிருக்கியா என்ன?"

"முடிஞ்ச அளவுக்கு படிச்சிருக்கேன் சார்"

"சொந்த ஊரு எது?"

"தென் சாரம் சார்,விழுப்புரம் பக்கம் ஒரு கிராமம்"

"ஏன்யா கிராமத்துல இருந்துகிட்டே எப்படியா இவ்வளவு படிச்ச?"

"எங்கப்பா தாசில்தாரா இருந்தவரு..அவர் நிறைய படிப்பாருங்க..அவர் கிட்ட இருந்து கத்துகிட்டது தான்..இவங்களோட கதையெல்லாம் படிச்சி தான் சினிமால சாதிக்கனம்னு ஒரு ஆர்வம் வந்ததுன்னே சொல்லலாம்"

"English படமெல்லாம் பார்ப்பீங்களா?"

"நிறையவே சார்..Benhur,Omar Mukhtar,Pursuit of Happiness,Dark Knight,A beautiful mind, Inception.."

"ok ok போதும்..உங்களுக்கு இந்த நல்ல நாள்,நட்சத்திரம் இதெல்லாம் பார்க்கிற பழக்கம் உண்டா?"

"எதுக்கு சார்?"

"இல்லை நீங்க அசிஸ்டன்ட்டா join பண்ணா நல்ல நாள் பார்த்து தான் சேருவீங்களான்னு கேட்க வந்தேன்"

"சார் உங்க கிட்ட அசிஸ்டன்ட்டா join பண்ற நாள் தான் சார் எனக்கு நல்ல நாள்,நீங்க எப்போ சொல்றீங்களோ அப்போவே சேர்ந்துடுவேன்"

"Alright.. நாளைக்கி VGPல shooting இருக்கு..அங்க வந்துடுங்க..நாளைல இருந்து நீங்க என்னோட அசிஸ்டன்ட்..பரவாயில்லை ஜோயித்தா,கரெக்டான ஆளை தான் introduce பண்ணிருக்கீங்க.. இப்போ happyயா?"

"Definitely..Thanks a lot!!!.."

"மேடம் lifeல என்னைக்கும்  உங்களை மறக்க மாட்டேன்.." - என்று சற்று உணர்ச்சி வசப்பட்டான் ஸ்ரீதர்.

"ஹலோ..இதெல்லாம் ஒரு படம் ஹிட் கொடுத்தப்புறம் சொல்றீங்களான்னு பார்க்கிறேன்..All the best ஸ்ரீதர்.. நீங்க பெரியாளா வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"

தான் காண்பது கனவா இல்லை நிஜம் தானா என்று இன்னும் கூட ஸ்ரீதருக்கு ஒரு சந்தேகம் இருந்து கொண்டு தான் இருந்தது. ஸ்ரீதருக்குக் கடவுள் பக்தி அதிகம்.இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில் தனக்கு உதவி கொண்டு தானிருப்பான் என்று தீர்க்கமாக நம்புபவன். இன்று அந்த இறைவன் இந்த அழகிய பெண் ரூபத்தில் உதவி இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டான்.இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உறுதி கொண்டான் ஸ்ரீதர்.
(தொடரும்)
 


 

No comments: