Wednesday, November 23, 2011

மாஸ் மீடியா - 3

மாஸ் மீடியா - 3
Start Camera Action


முதலாம் பாகத்தைப் படிக்க இங்கே செல்லவும் (click here)


இரண்டாம் பாகத்துக்கு இங்கே செல்லவும்(click here)


னக்கே உரிய பாணியில் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தான் வாசு. ஆளை மயக்கும் வாசம் வீசும் சென்ட் அடித்துக் கொண்டான்.பார்ட்டி வேர் டிரஸ்சஸ் என்று சொல்லப்படும் உடைகளை அணிந்திருந்தான்.பெண்களின் அலங்காரத்துக்குத் தான் வெகு நேரம் பிடிக்கும் என்றில்லை,பெண்களை எப்படியாவது மயக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்களுக்கும் வெகு நேரம் பிடிக்கும்.வரிசையாக விதவிதமான கார்கள் வந்து நின்றன.சில முக்கியப் பிரமுகர்கள் வந்திறங்கினார்கள்.ஒரு சில பத்திரிக்கையாளர்களும் காணப்பட்டனர்.எத்தனை பேர் வந்தாலும் அவன் ஆவலுடன் எதிர்ப்பார்த்தது என்னவோ ஜோயித்தவைத் தான்.அவன் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

கருப்பு நிற BMW காரில் பந்தாவாக வந்திறங்கினாள் ஜோயித்தா.கருப்பு நிற புடவை அணிந்து,அதற்கு பொருத்தமான கருப்பு நிற ப்ளௌஸ் அணிந்து ஒரு அழகிய சிற்பம் போல் நடந்தாள்.தங்கம் போன்ற அவளது நிறத்துக்கு இந்த கருப்பு நிற ஆடை கச்சிதமாகப் பொருந்தியது.பெண்கள் அதிகமாக ஆடை அணிந்தாலும் கூட அழகாகத் தான் தெரிவார்கள் என்று போதையில் தத்துவம் கூறினான் கூட்டத்தில் நின்ற எவனோ ஒருவன். கவர்ச்சியான உடை அணிவதற்கும் ஆபாசமாக உடை அணிவதற்கும் நிறையவே வேறுபாடு உள்ளது.ஜோயித்தாவை கண்டு பெரும்பாலானோர் ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தார்கள்.அவள் பின்னால் மாலதியும் நடந்தாள்.மாலதியும் அழகு தான்.சூரியன் உதித்ததும் மற்ற நட்சத்திரங்கள் மறைந்து விடுவதைப் போல, ஜோயித்தாவின் அழகு மற்ற அனைவரின் அழகையும் மறைத்து விட்டது.ஜோயித்தா மலர்ந்த முகத்துடன் மாலதியிடம் மெலிதான குரலில் பேசிக்கொண்டே நடந்தாள்:

"மாலு அந்த லூசு இப்போ நான் அவன் பக்கம் திரும்பினதும் தலை முடிய சரி பண்ற மாதிரி சீன் போடுவான் பாரேன்" - என்று வாசுவைப் பற்றி சொல்லிக்கொண்டே நடந்தாள், முகத்தில் புன்னகையுடன் மற்றவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கொண்டே.

"அட ஆமாம்" - என்றாள் மாலதி வாசுவை பார்த்தபடி 

" Idiot,அவன பாக்காத டீ.என்ன பாரு அந்த மானம் கெட்டவன எவ்ளோ திட்டினாலும் முகத்துல ஒரு smile maintain பண்றேன்ல,அதே மாதிரி நீயும் maintain பண்ணு" - என்றாள் அவளுடைய வசீகரப் புன்னகை மாறாமல்.

"ஓகே,ஆனா அவன் இப்போ இருக்கிற கண்டிஷன்ல இதை எல்லாம் கவனிக்க மாட்டன்.சரக்கே அடிக்க ஆரம்பிக்கல அதுக்குள்ள fullஆ போதை ஏறிப் போச்சு..உன்ன பாத்ததுக்கே" - என்று சொல்லி கிண்டலாகச் சிரித்தாள் மாலதி.

சிரித்துக் கொண்டே நடந்தாள் ஜோயித்தா.நேரே சென்று வாசுவுடன் கைகுலுக்கினாள்.இதற்காகவே காத்திருந்தவனைப் போல ஆர்வமாக அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டான் வாசு.சற்று சிரமத்துடன் கையை விடுவித்துக் கொண்டாள் ஜோயித்தா.

"கங்க்ராட்ஸ் மிஸ்டர் வாசு.ஹாட்ரிக் ஹிட்ஸ் குடுத்திருக்கீங்க..இப்போ இருக்கிற கண்டிஷன்ல ஹாட்ரிக் ஹிட்ஸ் குடுக்கறது ரொம்ப பெரிய விஷயம்"

"Yeah, you know what we have put in a lot of hardwork. Especially அந்த ஓடற ட்ரெயின்ல இருந்து jump பண்ற scene சீன் இருக்கே பயங்கர ரிஸ்க்" ௦-என்று அளந்து கொண்டே போனான் வாசு.

"டூப் போட்டு நடிச்சிட்டுப் பேச்ச பாரு" - என முனுமுனுத்தாள் ஜோயித்தா.

"என்ன சொன்னீங்க"

"இல்ல உங்க ஹர்ட்வொர்க்க நினைச்சாலே ஆச்சரியமா இருக்குனு சொன்னேன்"

"Oh is it?Ok come,lets have drinks!!- என சொல்லிக்கொண்டே மது அருந்தத் தொடங்கினான் வாசு.

"ஹ்ம்ம் குடிங்க ஜோயித்தா" - என அவளையும் வற்புறுத்தினான் 

"நோ தேங்க்ஸ். இன்னைக்கி நவராத்திரி,சோ நான் ட்ரிங்க்ஸ் சாப்பிட விரும்பலை"

அவளின் இந்த பதிலைப் பொருட்படுத்தாமல் குடிக்கத் தொடங்கினான் வாசு.

"You look simply mindblowing.You are hot Joyithaa.Very hot" - என்று வழியத் தொடங்கினான்.

"ஒ இஸ் இட்" என கூறி பொய்யாக சிரித்தாள் ஜோயித்தா.

"Come lets go for a walk" - என அவள் தோள் மீது கை போட்டான் வாசு.

செல்போனில் பேசுவதைப் போல் பாசாங்கு செய்து கொண்டே ஜோயித்தா அவனிடமிருந்து விலகி நடந்தாள்.

"பேசிகிட்டிருக்கன்ல எங்க போற" என கையைப் பிடித்து இழுத்தான் வாசு.

ஓங்கி ஒரு அரை அறைந்தாள்."பொறுக்கி நாயே நீயெல்லாம் ஒரு டாப் ஹீரோ வேற industryல.என்னமோ நீதான் நடிச்சி கிழிக்கற அளவுக்கு industryல உன்னைப் பத்திப் பேசிக்கிறாங்க.ஆனா பார்க்கற பொண்ணெல்லாம் உனக்கு வேணும். தூ இப்டி வாழறதுக்கு.." - இப்படி ஒரு காட்சி அவள் மனதில் ஒரு சில வினாடிகளில் ஓடி முடிந்தது. "Come on darling" - என்று வாசு அனைத்துக் கொள்ள முயற்சித்தப் பொழுது,திடீரென முழிப்பு வந்ததைப் போல் தன்னை உடனடியாக விடுவித்துக் கொண்டு,

"சாரி வாசு,இப்போ தான் போன் வந்தது,ஜானிக்கு உடம்பு சரி இல்லையாம்.நான் உடனே போகனம்" - என்று வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

"Hey ஜோயித்தா ஜானி யாரு" 

"என் வீட்டு நாயி" - என சற்று கடுமையாக கூறிவிட்டு நடந்தாள் ஜோயித்தா.

காரில் கோபமாக அமர்ந்திருந்த ஜோயித்தாவிடம் பேச்சுக் கொடுத்தாள் மாலதி.

"ஒரு வழியா தப்பிச்சிட்ட போல. ரிலாக்ஸ் டியர்.இந்தா இதைக் குடி,உன் கோபமெல்லாம் சீக்கிரமே போய்டும்"

"ஹ்ம்ம்" - ஸ்டைலாக க்ளாசில் ஊற்றி மதுவருந்தத் தொடங்கினாள்

"ஏன் ட்ரிங்க்ஸ் சாப்பிடமாட்டேன்னு சொன்ன அவன் கிட்ட?"

"குடிக்காம இருக்கிறப்பவே இப்படி நடந்துக்கிறானே,ஒரு வேளை குடிச்சிருந்தன்னு வச்சிக்கோ,நாளைக்கு காலைல அவன் பெட்ரூம்ல இருந்து கிளம்பி வர்ற நிலைமையே வந்திருக்கும். Bloody Womanizer :x"

"ஆனா இண்டஸ்ட்ரீல இவன மாதிரி நிறைய வாசு இருக்காங்க" - என்றாள் மாலதி.

"அதுக்காக இவன் செய்யறது சரின்னு சொல்றியா? இல்லை இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் என்ன போக சொல்றியா?"  - என்று பொங்கினாள் ஜோயித்தா.

"அப்படி சொல்லல.. அங்க நிறைய பத்திரிக்கைக்காரங்க,மீடியா ஆளுங்கல்லாம் இருந்தாங்களே அவங்க முன்னாடி கூச்சல் போட்டிருக்கலாம்ல"

"வெறும் நாலு பேருக்குத் தெரிஞ்ச விஷயத்த நாடே தெரிஞ்சிக்கணம்.என்னையும் அந்த வாசுவையும் வச்சி மீடியால ஒரு ரெண்டு மூணு வாரம் கவர் ஸ்டோரி ஒடனம்.இதானே உன் எண்ணம்?"

"அதுவும் ஒரு வித பப்ளிசிட்டி தான ஜோயித்தா" என்றாள் மாலதி, சற்றே குறும்புடன்.

"இதுவும் ஒரு பொழப்பு..நீ என் பொறுமய ரொம்ப சோதிக்கிற மாலு..Stop it please"


"ஆல்ரைட் டியர்,ரிலாக்ஸ் ரிலாக்ஸ்".


                                                     ***************************

றத்தாழ ஒரு வருடமாகி விட்டது ஸ்ரீதர் சென்னைக்கு வந்து.பல விதமான மனிதர்களையும் பார்த்து விட்டான்.தன்னைப் போல் இயக்குனராகும் கனவுடன் வந்த பலர் சிங்கிள் டீக்கே அவஸ்தைப் படுகிறார்கள், இசையமைப்பாளர் கனவுடன் வந்தவன் ரோட்டோரப் பாடகனாகத் திரிகிறான்,இவர்களை மணிரத்தினத்திடமும் ஏ.ஆர்.ரகுமானிடமும் அழைத்துச் செல்கிறேன் பேர்வழி என்று ஏமாற்றி பிழைப்பவன் பெனஸ் காரிலும் ஏ.சி அறையிலும் ஆனந்தமாக வாழ்வைக் களிக்கிறான்..ஆனால் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டம் என்ற நிலையில் வாழ்ந்தவர்கள் சிலர்  தங்கள் அபார திறமையினாலும்,விடா முயற்சியினாலும்,இறைவன் அருளாலும் மாபெரும் இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் ஆன வரலாற்றையும் தெரிந்து கொண்டிருந்தான் ஸ்ரீதர்." 'நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்' என்ற எண்ணம் கொண்டவன் உயர்ந்த நிலைக்குச் செல்கிறான்,தடைகற்களை வெற்றிக்கான படிக்கற்களாக மாற்றத் தெரியாமல் மனதால் தளர்ந்து போபவனே தோற்றுப் போகிறான்" - என்று உறுதியாக நம்பினான் ஸ்ரீதர்.

பல முக்கியப் புள்ளிகளின் அறிமுகம் அவனுக்குக் கிடைத்திருந்தாலும்,ஜோயித்தாவின் அறிமுகம் தான் முக்கியத்துவம் வாய்ந்தது.ஜோயித்தா,மற்றவர்களைப் போல் துணை நடிகர்களை கேவலமாக நடத்த மாட்டாள். ஸ்ரீதரின் கள்ளம் கபடமற்றப் பேச்சு அவளுக்கு ரொம்பவே பிடித்து விட்டது.ஸ்ரீதருக்கும் ஜோயித்தாவுக்கும் இடையில் ஒரு உன்னதமான நட்பு உருவாகி இருந்தது.லொகேஷனில் இருவரும் சந்தித்துக் கொள்ளும்போதெல்லாம் நகைச்சுவையாகப் பேசுவது வழக்கம்.அப்படித்தான் அன்றும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"ஸ்ரீதர்,அந்த பைக்குள்ள என்ன வச்சிருக்க? உன்ன பாக்கறப்போ எல்லாம் கேட்கனம்னு நினைப்பேன்,ஆனா மறந்துடுவன்.எப்பவுமே இந்தப் பையும் கையுமா அலையிறியே என்ன விஷயம்" - சற்று ஆர்வத்துடனே கேட்டாள் ஜோயித்தா.

"என்னோட எதிர்காலமுங்க" - என்றான் முகத்தில் ஒருவித மலர்ச்சியுடன்.

"எதிர்காலத்த பைக்குள்ளயே அடிச்சி வச்சிருந்தா எப்படி?அது என்ன மாதிரியான எதிர்காலம்ன்னு என்கிட்டே சொல்லலாமா சார்" - என்றாள் சற்றே செல்லமாக.

"உங்க கிட்ட சொல்லாமலா.தமிழ் சினிமால பெரிய டைரக்டர் ஆகர ஆசைல கிராமத்துல இருந்து கிளம்பி வந்தேன். நான் எழுதி வச்சிருக்கிற கதை இதெல்லாம்.எல்லாம் என்னோட ஸ்கிரிப்ட்"

"டைரக்டர் ஆக வந்தீங்களா?நீங்களா? நீங்க சொந்தமா ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதி இருக்கீங்களா?" - என்று அவள் ஆச்சர்யமாகக் கேட்டது ஸ்ரீதருக்கு வியப்பைத் தரவில்லை."அப்புறம் ஏன் துணை நடிகனானீங்க?"

"வேற வழி இல்லாமத் தான்.நம்பி வந்தவன் டாட்டா காட்டிட்டான்.காதர் பாய் மட்டுமில்லைன்னா தெரு தெருவா நாய் மாதிரி அலைஞ்சிட்டு ஊரு போயி சேர்ந்திருப்பன்.ஏதோ அவர் புண்ணியத்துல இன்னக்கி இந்த நிலைமைலாச்சு இருக்கேன்"

"அப்போ அவர் தான் உங்களைக் கெடுக்கறதா?" - என்றாள் சற்று கிண்டலாக.

"என் கெட்ட நேரம் பார்த்திங்களா,என்னால அட்லீஸ்ட் ஒரு அசிஸ்டன்ட் டைரக்டரா கூட ஆக முடியல.என் கதைய கேட்டுட்டு நல்ல இல்லைன்னு சொன்னாக் கூட பரவாயில்லை.அதை கேட்கவே ஆளில்லைன்னு நினைக்கர்ப்போத் தான் ஒரு சின்ன வருத்தம்.."

"எங்க எதாச்சு ஒரு கதைய சொல்லுங்களேன் பார்ப்போம்.For time being நான் free தான்.வருங்கால இயக்குனர் என்ன கதை வச்சிருக்காருன்னுத் தான் பார்ப்போமே"

திடீரென ஸ்ரீதருக்குள் ஒரு புதுவித உற்சாகம் பிறந்தது,"நிறைய கதை இருக்கு,எதை சொல்றது மேடம்",என்று பக்குவமாகக் கேட்டான்.

"வித்தியாசமா எதாச்சு ஹீரோயின் oriented subject இருந்த சொல்லுங்களேன்.நானே உங்களை டைரக்டர் ஆக்கிடறேன்" - என்ற அவளது குரலிலிருந்த கிண்டலை உணர்ந்தாலும்,கோடம்பாக்கத்தில் தன கதையை கேட்க விரும்பிய ஒரே ஜீவன் ஜோயித்தா தான் என்பதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டான்.

"இருக்குங்க.Infact ஏன் கிட்ட இருக்கிறதுலேயே அது தான் பெஸ்ட்.இது ஒரு Musical Thriller"

"Interesting Genre" - என்றாள் உண்மையாகவே ஆர்வத்துடன்.

"ஆமாம் மேடம்.மியூசிக் தான் படத்துல மெயின்.கதை மியுசிக்க சுத்தி தான் நடக்கும். இது தான் ஒபெநிங் சீன்.ஒரு பெரிய கூட்டம்,ரொம்ப பெரிய கூட்டம்,ஆடிடோரியம்ல கை தட்டி ஒரே என்ஜாய் பண்றாங்க.யாரையோ எதிர்பார்த்து மொத்தக் கூட்டமும் ஆரவாரம் செய்யுது.அப்போ தான் camera stageக்கு move ஆகுது.ஹீல்ஸ் போட்டிருக்கிற கால்ல இருந்து cameraவ மேல கொண்டு போகறோம்.நீல கலர் சுடிதார்ல ஒரு தேவதை ஒரு மயக்கற வசீகரமான குரல்ல 'நான் பூமிக்கு வந்த வானவில்'னு பாடறாங்க..அந்த தேவதை..."

"நான் தானே?கதையோட சேர்த்து கவிதையும் எழுதுவிங்களோ?" 

"Sometimes"

அவன் கதை சொன்னதைக் கேட்டு உண்மையில் ஜோயித்தா மயங்கித் தான் போனாள்.கதை சற்று வித்தியாசமானக் கதை.அதை ஸ்ரீதர் சொன்ன விதம் உண்மையில் அவளுக்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது.ஒரு நிமிடம் இவனையே இயக்குனராக்கி இந்த கதையில் நடித்து விடலாமா என்று கூட யோசித்தாள்.அத்தனை தூரம் அவன் கதையாலும் கதை சொல்லும் திறனாலும் ஈர்க்கப் பட்டிருந்தாள் ஜோயித்தா.

"ஹ்ம்ம் ஓகே ஸ்ரீதர் கதை பரவாயில்லை.Not bad.. "

"அவ்வளவு தானா" என்றான் சிறிய ஏமாற்றத்துடன்.

மீண்டும் ஒரு வசீகரப் புன்னகையுடன் ஜோயித்தா,"ஸ்ரீதர், ஈவினிங் நீ ஹோட்டல் பார்க் வந்துடு. அங்க மீட் பண்ணலாம்"

"எதுக்குங்க..அங்க எல்லாம் நான் எப்படி..உள்ள விடுவாங்களா என்ன?"

"ஹ்ம்ம்..சாயங்காலம் ஷூட்டிங் முடிச்சிட்டு போறப்போ நானே உன்னை பிக்அப் பண்ணிக்கிறேன்.. ஏன் எதுக்குன்னு யோசிக்காதே..அது suspense.." - என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

                                                                                                                              (தொடரும்)

No comments: