Friday, August 28, 2015

படேல் போராட்டமும் பெரியார் தொடர்பும் - வீரமணியின் வாக்குமூலம்


குஜராத்தில் இட ஒதுக்கீடுக் கோரி படேல் சமூகத்தினர் நடத்தும் போராட்டத்தை நாடே கவலையோடு பார்க்கும் நிலையில், ஒரு சில அமைப்புகள் மட்டும் இந்த வன்முறைச் சம்பவங்களை, பெரும் எழுச்சி என புகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய அமைப்புகள் - 1)சிவசேனை 2)திராவிடர் கழகம்(திக).இந்த இரண்டு அமைப்புகளுமே காலம் காலமாக வெறுப்பு மற்றும் வன்முறை அரசியல் நடத்தும் அமைப்புகளே.நேற்று விடுதலையில் திக தலைவர் வீரமணி 'காந்தியார் மாநிலத்திற்கு பெரியார் சென்றுவிட்டார் அடிமை ஜாதிகள் இனி விடமாட்டார்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். இவர் கட்டுரையில் இருந்து நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் பெரியார் மற்றும் அவருடைய சித்தாந்தங்கள் எங்கு சென்றாலும் அங்கு அமைதி சீர்குலையும்,வன்முறை வெடிக்கும்,மக்கள் நிம்மதி இழப்பார்கள் என்பது தான்.இவர் யாரை அடிமை ஜாதி என குறிப்பிடுகிறார் என்று புரியவில்லை.இந்த போராட்டத்தை நடத்தும் படேல் சமூகத்தினர் பொருளாதார ரீதியாக மிகவும் முன்னேறிய சமூகம். இந்த சமூகம் வர்த்தகத் துறையில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கும் ஒரு சமூகமே.இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் என்னவென்றால்,இந்தப்  போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் 22 வயது ஹர்டிக் படேலின் நிபந்தனைகள் தான்.

அவரின் நிபந்தனை படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் சேர்க்க வேண்டும் என்பது அல்ல. அவர் கோருவது இதுவே : 'ஒன்று எங்கள் பிரிவினரையும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும், எங்களுக்கும் இதர பிற்படுத்தப்பட்டவர் பிரிவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், இல்லையென்றால் இட ஒதுக்கீடு முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்'.

  மேலும், தன்னுடைய படேல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 80-90% மதிப்பெண் வாங்கியும் தகுந்த வேலை கிடைப்பதில்லை எனவும்,அதன் காரணமாக தாங்களே சொந்தமாக தொழில் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.ஒருவேளை இவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்திருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும் என்று கூறி இட ஒதுக்கீடு கேட்கிறார். அதோடு அவர் மேலும் ஒரு கருத்தை முன்வைக்கிறார்.அதாவது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீடு பெறுவதோடு நில்லாமல்,பொது பிரிவிலும் போட்டியிடுகிறார்கள் என்றும் இதன் காரணமாக ஒன்று இட ஒதுக்கீடு முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் அல்லது அவருடைய சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு போராடி வருகிறார்.இதோ அவர் பேட்டி : http://www.thehindu.com/news/national/get-rid-of-reservation-or-make-everyone-its-slave-says-hardik-patel/article7587411.ece .

வீரமணி கூறியிருப்பதில் உண்மை இல்லாமல் போய்விடவில்லை. இந்த திராவிடர் கழகம் என்றுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான இயக்கமாகவே இருந்து வருகிறது.தீண்டாமையை எதிர்த்து அன்று பிராமண சமூகத்திலிருந்தே பலர் போராடி இருக்கிறார்கள் - உதாரணமாக ராஜாஜி, வைத்தியநாத ஐயர் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இவர்களே, தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்து ஆலயப் பிரவேச போராட்டம் நடத்தியவர்கள். இதன் பொருள் பிராமணர்கள் நல்லவர்கள் என்பதல்ல.தீண்டாமையை விதைத்தவர்கள் என்று சொல்லப்படும் பிராமணர்களிலும் கூட சிலர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடி இருக்கிறார்கள்.  ஆனால் இந்த திராவிடர் கழகம் இது போல ஒரு போராட்டமும் நடத்தியதில்லை. பெரியார் மற்றும் திகவின் நோக்கம் பிராமண ஒழிப்பு மட்டுமே என்று வாதிடுபவர்கள் உண்டு.ஆனால் உண்மை என்னவென்றால் இவர்கள் நோக்கம் பிராமண ஒழிப்பு மட்டும் அல்ல தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற விடாமல் செய்வதும் தான். அதன் காரணமாகவே ஹர்டிக் படேலின் போராட்டத்தை, பெரியார் வழி போராட்டம் என்று மார்தட்டிக் கொள்கிறார்களோ என்னவோ.

பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பேசிய கருத்துக்கள் முன்பொரு முறை முரசொலியிலேயே கேலிச்சித்திரங்களாக வெளியிடப்பட்டன. பகுத்தறிவு பேசும் இந்த இயக்கங்கள் சுலபமாக பிராமணர்களை தரக்குறைவாக பேசி தங்களின் சாதி எதிர்ப்பைப் பதிவு செய்து விடுகிறார்கள். ஆனால் மற்ற சமூகங்கள் தவறு செய்யும் நேரத்திலும் கூட 'இதற்கு காரணம் வர்ணாஸ்ரம தர்மம் தான்' என தங்கள் மேதாவிலாசத்தைக் காட்டுவார்கள் இந்த பகுத்தறிவு பகலவர்கள்.பிராமணர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள் என்பதால் அவர்களை இந்த இயக்கங்கள் சுலபமாக தாக்கி விட முடிகிறது.

இந்த ஹர்டிக் படேல் உண்மையில் இட ஒதுக்கீடு கோரி போராடுகிறாரா அல்லது இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் போராடுகிறாரா என்ற கேள்வி எழாமல் இல்லை.இட ஒதுக்கீட்டால் படேல் சமூகத்தினர் எந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதாக இவர் கூறுகிறாரோ அதே பிரச்சனைகளை பொது பிரிவில் இருக்கும் மற்ற சமூகங்களும் எதிர்கொள்கின்றனவே? பொதுப்பிரிவு என்பது ஏதோ பிராமணர்களுக்கான பிரிவு என்பது போன்ற தோற்றத்தை  இந்த திராவிட இயக்கங்களின் அடிவருடிகளாக செயல்படும் சில ஊடகங்கள் ஏற்படுத்திவிட்டன. பொதுப்பிரிவில் பிராமணர்கள் மட்டுமல்லாது நாயுடு,ரெட்டியார்(சில பிரிவினர்),மார்வாடி,ஜெயின் போன்ற சமூகங்களும் அடங்கும். இந்த அதிமேதாவி வீரமணி ஹர்டிக் படேலை ஆதரிக்கும்பட்சத்தில், அவர் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு எதிராகவும் போராட முன்வருவாரா? அதாவது, இட ஒதுக்கீட்டால் பிராமணர் உட்பட பொதுப்பிரிவில் உள்ள பல சமூகங்கள் பாதிக்கப்படுகின்றன என்ற கூற்றை அவர் ஏற்கிறாரா?இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராடுவாரா? அல்லது திராவிடர் கழகம் என்கிற அமைப்பு,ஒரு சில லாபங்களுக்காக, இடைநிலை சாதிகள் என சொல்லப்படும் சில சமூகங்களுக்காக மட்டும் போராடி, தாழ்த்தப்பட்டவர்களின் வளர்ச்சியைத் தொடர்ந்து தடுக்கும் ஒரு சுயநலவாத இயக்கம் என்பதை பகிரங்கமாக அறிவிப்பாரா? இதைத் தெளிவு படுத்த வேண்டியது திரு.வீரமணியின் கடமை.

ஹர்டிக் படேல் என்கிற ஒரு தனி நபரின் பின்னால் 18 லட்சம் பேர் திரண்டனர் என்பது வேதனைக்குரிய விஷயம்.குஜராத் மாநில அரசு மென்மையான போக்கைக் கடைபிடிக்காமல்,வன்முறையைத் தூண்டிவிட்ட இந்த ஹர்டிக் படேல் என்கிற இளைஞரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். உளவுத்துறை மேலும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு இது போன்ற போராட்டங்கள் குறித்தத் தகவல்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். அந்தத் தகவல்களை அலட்சியம் செய்யாமல் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.இட ஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது என்று குஜராத் அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.