Friday, May 24, 2013

படித்ததில் பிடித்தது - வானம் வசப்படும்



நீண்ட இடைவெளிக்குப்  பிறகு இந்தத் தலைப்பில் ஒரு பதிவிட நேரம் கிடைத்திருக்கிறது.தமிழில் வரலாற்றுப் புதினங்கள் என்றாலே, பொன்னியின் செல்வனும் சிவகாமியின் சபதமும் தான் நம் நினைவுக்கு வரும்.சற்று வாசிக்கும்பழக்கம் அதிகமுள்ளவர்களுக்கு உடையார்,பார்த்திபன் கனவு, நந்திபுரத்து நாயகி,வேங்கையின் மைந்தன்,காந்தளூர் வசந்தகுமாரன் கதை ஏன் சமீபத்திய காவல் கோட்டமும் கூட நினைவுக்கு வரும்.ஆனால் இந்த நாவலைப் பற்றி நம் தலைமுறையினர் அதிகம் பேசி கேட்டதில்லை. இது புதுச்சேரி வரலாற்றைக் கூறும் கதை.புதுச்சேரி எப்படி உருவானது எங்கிருந்து உருவானது போன்ற தகவல்களைத் தேட வேண்டாம்.இக்கதையின் நிகழ்காலம் 1740-50 என்று வைத்துக்கொள்ளுங்கள் என்று ஆசிரியர் முன்னுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறார்.யார் அந்த ஆசிரியர்?இங்கு குறிப்பிடப்படும் நாவல் எது? வானம் வசப்படும் - சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல் , ஆசிரியர் - திரு.பிரபஞ்சன்.

இந்த நாவலை ஏறத்தாழ இரண்டு மாதங்கள் படித்தேன்.656 பக்கங்கள் தான் என்றாலும் கூட நாவலின் சுவையும், நேரமின்மையும் ஒன்று சேர இந்த நாவலின் கடைசிப் பக்கத்தைப் படிக்க இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.முன்பே குறிப்பிட்டது போல இது புதுச்சேரியைப் பற்றிய கதை.துய்ப்ளெக்ஸ் என்கிற குவர்னர்(கவர்னர் - புத்தகத்தில் குவர்னர் என்றே குறிப்பிடுகிறார்கள்) மற்றும் அவருடைய துபாஷ் ஆனந்தரங்கப்பிள்ளை தான் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்.இந்த ஆனந்தரங்கப்பிள்ளை அவர்களின் தனிச்சிறப்பு என்னவென்றால் தம் கால அரசியல்,சமூக நிகழ்ச்சிகளை 'டயரியாக'ச் சுமார் 25 ஆண்டு காலத்துக்கு எழுதி வைத்துச் சென்றதே.இதை ஆசிரியரே முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.அந்த டயரிக் குறிப்புக்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது தான் இந்த 'வானம் வசப்படும்'.

மற்றொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் பெறுகிறது - அது தான் துய்ப்ளெக்ஸின் மனைவி ழான்(Jeanne).ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்துவதற்கு முன்பே நம் மொத்த நாட்டையும் பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர முயன்றவன் தான் இந்த துய்ப்ளெக்ஸ். தன்னுடைய இந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்று விட்டான். ஆனால் துய்ப்ளெக்ஸின் இந்த வெற்றிகளில் பெரும்பங்கு வகித்தவர் ஆனந்தரங்கப்பிள்ளை தான்.இப்படி குறிப்பிடுவதால் தேச பக்தர்கள் உடனடியாக பிள்ளை மீது வெறுப்பு கொள்ள வேண்டாம்.புதுச்சேரியை நிர்வகித்தக் குவர்னர்களுள் துய்ப்ளெக்சுடன் தான் ஆனந்தரங்கருக்கு நல்ல பழக்கம்.ஆகையால் குவர்னர் துய்ப்ளெக்ஸ் என்றாலும் கூட,ஆட்சிபுரிந்தவர் என்னவோ ஆனந்தரங்கர் என்னும் அளவுக்கு இருந்தது ஊருக்குள் அவருடைய  செல்வாக்கு.

வறுமையில் வாடிய பல தமிழ்ப்புலவர்களுக்கு ஏன் புலவர்களுக்கு என்றே கூறலாம்(ஏனெனில் ஒரு தெலுங்குக் கவிஞரைப்பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது),வள்ளல் போல வாரி வழங்கியவர். சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தது போல,ஆனந்தரங்கர், ராமகவிராயர்,கஸ்துரி ரங்கையன் என பலருக்கும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.ராமகவிராயர் பற்றிய நிகழ்ச்சியைப் படிக்கும்போது மனம் நெகிழ்ந்துத் தான் போனது.இல்லாமை நோயால் சுரம் வந்து படுத்துக் கிடக்கும் மனைவி,அடுத்த வேளைக்குச் சாப்பிட நல்ல சாப்பாடு இல்லை.ஆனந்தரங்கர் உதவுவார் என்கிற  எதிர்பார்ப்புடன் கிளம்புகிறார்.பிள்ளை வீட்டில் இல்லை என அறிந்ததும் அவரிருக்கும் பாக்குமண்டிக்கே உடனே புறப்படுகிறார்.சாப்பாட்டு நேரத்தில் வந்த விருந்தாளிக்கு போஜனம் பண்ணுவிக்காமல் அனுப்புவது மகாபாவமென பிள்ளை சொல்லுவார் என அவர் காரியஸ்தர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் பாக்குமண்டிக்குச் சென்று விடுகிறார்.அங்கு பிள்ளையைப் பற்றிக் கவிபாடி தான் வந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். அவருடைய நிலையறிந்த பிள்ளை அவர்கள் வேஷ்டி,சால்வைகள்,ஆயிரம் வராகன் காசு,மோதிரம் என அனைத்தும் கொடுத்து சகல மரியாதையுடன் அனுப்பி வைக்கிறார்.

இப்படிப் பல நிகழ்ச்சிகள்,சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.பானுகிரகி என்கிற நாட்டியக்காரி(தேவரடியாள்) கதாபாத்திரத்திற்கும் கணிசமான அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.ஒரு பக்கம் இலக்கியம்,நாட்டியம், ஓரளவு அரசியல் என்றே செல்கிற கதையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவது என்னவோ ழான் அவர்களின் கதாபாத்திரம் தான்.துய்ப்ளெக்ஸ் ஓரளவு நியாயவானகத்தான் இருக்கிறார்.சற்று பணத்துக்கு விலை போய்விடக்கூடிய மனிதர் தான் என்றாலும் கூட,அவர் மனைவியைக் காட்டிலும் எவ்வளவோ மேலானவர் என்றே சொல்ல வைக்கிறது ழான் அவர்களின் கதாபாத்திரம்.

குவர்னருக்கோ ரங்கப்பர்(ஆனந்தரங்கர்) என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் ழானுக்கோ ரங்கப்பர் மீது எப்போதும் வெறுப்பு.காரணம் ரங்கப்பர் ஒரு தமிழர்(இந்து).

ழான் பல இடங்களில் ரங்கப்பரையும் இந்துக்களையும் காபிரிகள் என்றே குறிப்பிடுகிறார். காபிரிகள் என்பது ஒரு விதமான இழிசொல்.அதனாலேயே அவள் ஆனந்தரங்கருக்கு முன்பு துபாஷாக இருந்த பெத்ரோ கனகராய முதலியாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாள்.பெத்ரோ கனகராய முதலியார் ஒரு கிறிஸ்துவர்.ஆனந்தரங்கருக்கு முன்பே துபாஷ் பதவி வகித்தவர்.அவர் இறந்த பிறகே பிள்ளை துபாஷாக்கப்பட்டார்.துபாஷ் என்பது கவர்னருக்கு அடுத்தபடியான பதவி.கனகராய முதலியார் கிறிஸ்துவர் ஆனாலும் கூட,அவர் பெயரிலுள்ள முதலியார் மறையவில்லை.மதமாற்றம் தீண்டாமையையே ஒழிப்பதில்லை என்னும்போது ஜாதியை எங்கே ஒழிக்கப் போகிறது.ரங்கப்பருக்கு எதிராகப் பல போலி புகார்களும் குவர்னரிடம் கொடுக்கிறாள்.நமது குவர்னருக்கு ஆயிரம் தான் ரங்கப்பர் மீது பிரியமிருந்தாலும் அவர் ஒரு பொண்டாட்டித் தாசன்.மனைவியின் பேச்சைக் கேட்டு பல முறை ரங்கப்பரிடம் கோபப்பட்டுள்ளார்,ஆனால் ரங்கப்பரோ மிகவும் சாமார்த்தியசாலி.மிகத்திறமையான சமாதனங்களைச் சொல்லி குவர்னருக்கு உண்மையைப் புரிய வைத்துவிடுவார்.

ழான் பற்றி ஒரு குறிப்பு - ழானுக்கு துப்ளெக்ஸ் இரண்டாம் கணவர் தான். அவள் ஏற்கனவே வேன்சான் என்பவனை மணந்து பதினொரு குழந்தைகள்  பெற்றவள்.வேன்சான் இறந்த பிறகு ழானை துப்ளெக்ஸ் மணக்கிறார். வேன்சான் இறப்பதற்கு முன்பிருந்தே இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள்.இறந்த பிறகு மணக்கிறார்கள்.இது பிரான்ஸ் நாட்டில் சாதாரணம்.

ழான் ஒரு மதவெறி பிடித்தவள்.அவளின் முக்கிய நோக்கம் புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலை இடித்துத் தள்ளுவதும் இயன்ற அளவு இந்துக்களைக் கிறிஸ்துவர்களாக மாற்றுவதும் தான்.ரங்கப்பர் குவர்னர் துறைக்கு மிக நெருக்கமாக இருப்பதால் அவளால் நினைத்த அளவிற்கு காய் நகர்த்த முடியவில்லை.

இந்த நாவலில் மிக முக்கியமான சில சம்பவங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். சம்பாக் கோவிலில்(Church) ஒரு தடுப்புச் சுவர் கட்டப்பட்டிருந்தது.சுவற்றுக்கு ஒரு புறம் தாழ்த்தப்பட்டவர்கள்,மறுபுறம் மற்ற சாதி கிறிஸ்துவர்கள் உட்கார்ந்து பூஜை கேட்க வேண்டும்.ஒரு முறை தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் சம்பாக் கோயிலின் பெரிய பாதிரியாரிடம் இது குறித்து புகார் சொல்கிறார்கள். 'எங்களை ஏன் தனிமைப்படுத்துகிரீர்கள்' என கேட்கிறார்கள்.இதையடுத்து பெரிய பாதிரியார் அந்தத் தடுப்புச் சுவரை இடித்து விடுகிறார்.மறுநாள் முதல் சாதி வேறுபாடின்றி அனைவரும் ஒருசேர அமர்ந்து பூஜை கேட்க வேண்டிவருகிறது..இதனால் மற்ற சாதி கிறிஸ்துவர்கள் கடுங்கோபம் அடைகிறார்கள். இதில் ஞானராசு முதலியார் என்பவருக்கும் பெரிய பாதிரியாருக்கும் நடக்கும் வாக்குவாதம்,மதம் மாறினாலும் சாதி மாறாது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

உதாரணத்திற்கு,

"எம்மைப் பறையர் உடன் உட்காரப் பண்ணிவிட்டீரே!எம்மைக் கேவலம் பண்ணிப் போட்டீரே, எம்மைப் பூமிக்குக் கீழே எம் மரியாதைகளைப் புதைத்துப் போட்டீரே.." - என்கிறான் முதலி.

பெரிய பாதிரியாரின் இந்தச் செய்கைக்குப் பின் மேல் சாதி கிறிஸ்துவர்கள் என சொல்லப்படுபவர்கள் தேவாலயத்திற்குள் நுழைய மறுக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சமமாகத் தாங்கள் நடத்தப்படுவதை கேவலமாக எண்ணுகிறார்கள்.

மற்றொரு சம்பவமும் குறிப்பிடப்பட்டுள்ளது.சம்பாக் கோயில் பாதிரியார் கடுதே என்பவன் அருகாமையிலிருக்கும் வேதபுரீஸ்வரர் கோயிலுக்குள் நரகலை போட்டு விடுகிறான்.இது குறித்து வேதபுரீஸ்வரர் கோயில் குருக்களும் மற்ற இந்துக்களும் குவர்னரிடம் புகார் செய்கிறார்கள். இதை விசாரிக்க குவர்னர் ஒரு படையை அனுப்புகிறார்.அந்தப் படையில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பராதி என்பவன்,கிறிஸ்துவ மத வெறியன், பாதிரியாருக்கு ஆதரவாக வழக்கை முடித்துவிடலாம் எனக் கூற,படையில் இருந்த முசே மேர் என்பவர் இதை ஏற்க மறுத்து,குவர்னர் நியாயமான விசாரணை மேற்கொள்ளவே தம்மை அனுப்பினார் எனக் கூறி பாதிரியாரின் குற்றத்தைக் குவர்னருக்கு விளக்குகிறார்.

மீண்டும் ஒரு முறை இதே கடுதே,ஒரு இந்துவின் மீது தவறான தகவல்களுடன் புகார் செய்கிறார்.குவர்னருக்கு பெத்திசியோம்(பெட்டிஷன்) எழுதுகிறார்.இதை விசாரித்தக் குவர்னர் துப்ளெக்ஸ், இந்தப் பாதிரி மீது கடுங்கோபம் கொள்கிறார்.இவரைப் பற்றி பிரான்ஸ் ராஜாவுக்கும்,மன்னர் நீடூழி வாழ்க(ஒவ்வொரு முறை பிரான்ஸ் மன்னரைப் பற்றி குறிப்பிடும்போதும் மன்னர் நீடூழி வாழ்க என்று அனைத்துக் கதாபாத்திரங்களும் சொல்கின்றன), இவருக்கு மேலே இருக்கப்பட்ட சாமியாருக்கும் புகார் எழுதப் போவதாகச் சொல்கிறார் துய்ப்ளெக்ஸ்.

துய்ப்ளெக்சைப் பொறுத்த வரை வியாபாரத்தையும் மதத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவே மாட்டார்.அவர் தெளிவான சிந்தனையுடவர்.முதலில் தாங்கள் இங்கே வந்தது வியாபாரத்திற்காகத் தானே தவிர மதம் மாற்றம் செய்ய அல்ல என்பதை வலியுறுத்துகிறார்.இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே மதச்சண்டை வந்தால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்திருந்தார் துய்ப்ளெக்ஸ்.ஆனால் அவரும் இந்துக்களை அஞ்ஞானிகள் என்றே கருதுகிறார்,அவர்களை ஞான மார்க்கத்துக்கு(கிறிஸ்துவ மதத்துக்கு) அழைத்து வர வேண்டும் என்பது அவர்களின் கடமை என்றும் கருதுகிறார்.இது கிறிஸ்துவ மிஷினரிகளுக்கே உண்டான மனோபாவம்.

இவர் இப்படி இருக்க,இவரின் மனைவி ழான் வந்து காரியத்தைக் கெடுக்கிறார். பாதிரிக்கு வக்காலத்து வாங்கி அவர் பக்கம் பேசத் தொடங்குகிறார்.ழான் எப்போது இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்தாளோ அப்போதே துய்ப்ளெக்ஸ் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகிறார். மனைவிக்கு எதிராக எதுவும் செய்யும் திராணி அவருக்கு இல்லை.ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல அவர் ஒரு பொண்டாட்டித் தாசன்.

இந்தக் கதையில் அனைவரின் வெறுப்பையும் சம்பாதிக்கும் கதாபாத்திரம் என்றால் அது ழான் தான்.துபாஷ் பதவி தருவதற்காக அன்னபூரண ஐயன் என்பவனிடம் லஞ்சம் பெற்றுக் கொள்வது,செல்வந்தர் வீடுகளுக்கு அடியாட்களை அனுப்பி அநியாயமாகப் பெரும் தொகை வசூலிக்கச் செய்வது , இந்துக்களையும் அவர்களது வழிபாட்டு முறையையும் கேலி பேசுவது, மதமாற்றம் செய்வது,ஆனந்தரங்கப்பிள்ளை மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்துவது என இவள் செய்யும் அனைத்துமே ஆத்திரமூட்டும் காரியங்கள் தான்.

அதிகாலையில் எழுந்திருக்கும் சேஷு பண்டிதன்,உடம்பில் பூணூல்  இல்லையே என்று பதறுகிறான்.பிறகு தான்,தான் ஞானாதிக்கப் பண்டிதனானது நினைவுக்கு வருகிறது.பணத்திற்கு ஆசைப்பட்டு மதம் மாறிய பண்டிதர் கிறிஸ்தவ மதத்தில் சந்தி(சந்தியாவந்தனம்) பண்ண வேண்டுமா என சந்தேகம் கேட்க,அதெல்லாம் இங்கே அவசியமில்லை என விளக்கம் தருகிறார் ஜீவப்பிரகாசமாக மாறிய சிவப்பிரகாச ஐயர்.இந்த மத மாற்றங்கள் ழான் முன்னிலையில் நடக்கின்றன.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைகிறது மற்றொரு சம்பவம்.

குவர்னர் சற்று அசந்த நேரம் பார்த்து அவரிடம் தந்திரமாகப் பேசி, மூளைச்சலவை செய்து, வேதபுரீஸ்வரர் கோயிலை இடிக்க உத்தரவு பிறப்பிக்க வைத்துவிடுகிறாள்.ஈவு இரக்கமின்றி இந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் வேதபுரீஸ்வரர் கோயில் இடிக்கப்படுகிறது. தமிழர்களின்(இந்துக்கள்) தலைவர் போல திகழ்ந்த ஆனந்தரங்கரிடம் இந்துக்கள் முறையிடுகிறார்கள்.

"நாட்டார்களிலே எல்லோரும் ஒரே குரலாய் எதிர்க்கிற போது,குவர்னர் துரை எப்படிக் கோயிலை இடிக்கிறது?" - என்றார் ஒருவர்.ஆனால் உண்மை என்னவெனில் இவர்கள் ஒரே குரலாய் சொல்லவில்லை.இவர்களில் சிலர் பணத்துக்கும் பதவிக்கும் விலைபோய்விட்டார்கள்.அன்னபூர்ண ஐயனுக்குத் துபாஷ் பதவி கொடுக்கும்பட்சத்தில் கோயிலை இடிக்கச் சம்மதம் என்று சிலர் தெரிவித்துவிடுகிரார்கள்.இந்துக்களின் இது போன்ற ஒற்றுமையின்மையே அயல்நாட்டு துஷ்ட சக்திகளுக்கு துணிச்சலைத் தருகிறது.இங்கு இந்துக்களுக்கு மத்தியிலிருக்கும் வேற்றுமைகளைப் பயன்படுத்தி இந்த அயல்நாட்டு சக்திகள் பல விஷயங்களை சாதித்து விட்டன.

இப்போதைய கூடங்குளம் போராட்டம் கூட கிறிஸ்தவ மிஷினரிகளின் தூண்டுதலின் பேரில் தான் நடக்கிறது என்கிற குற்றச்சாட்டு இல்லாமல் இல்லை.

வேதபுரீஸ்வரர் கோயிலை இடிக்கும்பொழுது அருகே இருக்கும் ஒரு மசூதியையும் இடித்துவிடுமாறு துய்ப்ளெக்ஸ் உத்தரவு பிறப்பிக்கிறார்.அப்போது துலுக்கர் படைத் தலைவன் அப்துல் ரகுமான் குவர்னரைச் சந்தித்து மசூதியை இடிக்கும் உத்தரவை திரும்பப்பெறாவிட்டால் அவர்களிடம் இருக்கும் கடைசித் துலுக்கன் உயிரோடு இருக்கும் வரைக்கும், மசூதியின் ஒரு செங்கல் விழுவதையும் அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறான்.அப்துல் ரகுமானின் மன உறுதியும் நெஞ்சுரமும் குவர்னர் துரையை அச்சமூட்டவே, உத்தரவைத் திரும்பப் பெறுகிறார்.

இந்துக்களிடையே நிலவும் ஒற்றுமையின்மையை இந்தக் காட்சிகள் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஒரு முறை குவர்னர் ஆனந்தரங்கரிடம் கேட்கிறார்,(இந்த உரையாடல் கோயில் இடிப்பின் போது நிகழ்ந்தது அல்ல)

"இந்தத் தேசத்தை மிகச் சுலபமாக வெற்றிகொண்டு விடலாம் என்று சொல்லும்"

அதற்கு ஆனந்தரங்கர் இவ்வாறு பதிலுரைக்கிறார்,

"இந்தத் தேசமென்ன பிரபுவே, ஒற்றுமையோ,இனத்தான் என்கிற பாசமோ, பழகியவன் என்கிற சிநேகிதாமோ இல்லாத மக்களை ஆயுதம் கொண்டல்ல, ஒற்றை விரலால் அடக்கி விடலாமே"

இது போல இந்த நாவலில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. ஆனந்தரங்கரும் அவருடைய நண்பர் நாகாபரணப் பண்டிதரும் நாட்டு நடப்பை அலசும் விதம் யதார்த்தம்.ஆனந்தரங்கரின் மகள் பாப்பாள் திருமணத்திற்குப் பின் இறந்து போவது நெஞ்சை உருக்குவதாகத் தான் இருந்தது.ழான் தன் மகளின் கள்ளக்காதலுக்கு உதவுவது சற்று நகைச்சுவையாக இருந்தாலும், அயல்நாட்டவர்கள் கலாச்சாரம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்துகிறது.

நாவலின் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் ராபர்ட் கிளைவ்.கிளைவ் பற்றி மிகச்சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.இந்தக் கிளைவ் என்பவனும் துய்ப்ளெக்ஸ் என்பவனும் நம் நாட்டை அடிமைப் படுத்த வந்த அய்யோக்கியர்கள் என்ற நினைப்பை சற்று ஓரம் கட்டிவிட்டு பார்த்தால், இவர்களின் கதாபாத்திரங்களை ரசிக்கலாம். துய்ப்ளெக்ஸ் கவர்னராக இருக்கலாம்,ஆனால் கதையில் கதாநாயகன்(ஹீரோ) அந்தஸ்து என்னவோ ஆனந்தரங்கருக்குத் தான்.25 ஆண்டுகால அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை டயரியில் எழுதி நம் வரலாற்றை நாம் அறியும் வண்ணம் செய்த ஆனந்தரங்கருக்கு ஹீரோ அந்தஸ்து கொடுக்கப்படத்தான் வேண்டும்.

'துரோகிகளே,துரோகிகளை விரும்பார்' போன்ற வசனங்களைக் கொண்ட இந்த நாவலுக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்ததில் எனக்கு ஒரு ஆச்சரியமும் இல்லை.அந்த காலத்துத் தமிழை நாவலில்  அப்படியே கொண்டுவந்திருக்கிறார் ஆசிரியர் பிரபஞ்சன். சாகித்ய அகாதமி கொடுக்கப்பட்டதற்கு அதுவும் ஒரு முக்கியக்காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இஸ்லாமியர்களைப் பிள்ளை, துலுக்கர்கள் என்றே குறிப்பிடுகிறார்.இந்த நாவலைப் பற்றி எழுதுவதால் அதில் குறிப்பிட்டுள்ளது போலவே சில சொற்களை நானும் பயன்படுத்தியிருக்கிறேன்.உதாரணத்திற்கு - குவர்னர்,துலுக்கர் போன்ற சொற்கள்.மற்றொரு குறிப்பு - நமது ஆனந்தரங்கரின் பெயரில் புதுச்சேரியில் ஒரு வீதி உள்ளது. ரங்கப்பிள்ளை தெரு - இது புதுச்சேரி நேரு வீதிக்கு அடுத்த வீதி.தேவனாம்பட்டினம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.கடலூர் கடற்கரையை(சில்வர் பீச்)த் தான் தேவனாம்பட்டினம் குறிக்கிறது.இப்போதும் கூட இந்தப் பெயர் உள்ளது . தனிப்பட்ட முறையில்,எனக்கு,புதுச்சேரியிலும் கடலூரிலும் வாழ்ந்த அனுபவம் உண்டு.ஆகையால் இந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்களை மிக எளிதாகக் கற்பனை செய்து பார்க்க முடிந்தது.

இந்தப் பதிவு சற்று நீளமானப் பதிவுத் தான்.656 பக்க நாவலைப் பற்றி எழுத வேண்டுமென்றால் சற்று நீளமாகத் தான் எழுத வேண்டியுள்ளது.அரை மணி நேரம் இந்தப் பதிவை படிப்பதற்காக ஒதுக்குங்கள்.முழுவதும் படித்தப் பிறகு வானம் வசப்படும் படிக்க வேண்டுமென்கிற ஆசை எழலாம்.ஒருவேளை அப்படி எழவில்லையென்றால் கூட, ஒரு சிறப்பான நாவலைப் பற்றியத் தகவல்கள் அறிந்து கொண்டோம் என்கிற திருப்தி ஏற்படலாம்.
 

Saturday, May 18, 2013

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி



தமிழக அரசின் இந்த அறிவிப்பு தான் இன்று சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் தம்மைத் தாமே தமிழ்ப் பாதுகாவலர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அரசு வெளியிட்ட அறிவிப்பு தான் என்ன?

"முன்னதாக, ஆங்கில வழிக் கல்வி தொடர்பாக, சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது அமைச்சர் வைகைச்செல்வன் வெளியிட்ட அறிவிப்பு இதுதான்:

'தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பயிலும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 1,6-ஆம் வகுப்புகளில் இரண்டு ஆங்கில வழிப் பிரிவுகள் வீதம் மொத்தம் 640 பிரிவுகள் தொடங்க அரசு அனுமதியளித்தது."[நன்றி விகடன் - http://kalvi.vikatan.com/index.php?aid=1576#cmt241]


இது நமக்கும் ஏற்புடையதாக இல்லை.தனியார் பள்ளிக்கூடங்களுக்கு நிகரான தரமான கல்வியை வழங்க வேண்டுமென்று அரசு நினைத்திருந்தால்,அதில் தவறேதும் இல்லை தான்.ஆனால் அதற்காக அரசு பின்பற்றும் வழிமுறைகள் தான் தவறு. முதலில் நாம் யோசிக்க வேண்டிய முக்கியமான விஷயம் - 'தனியார் பள்ளிகள் உண்மையில் தரமான கல்வி வழங்குகிறதா?' என்பது தான்.இன்று தனியார் பள்ளிகளின் ஒரே லட்சியம் - 'நூறு சதவிகிதம் தேர்ச்சி'.இந்த நூறு சதவிகித தேர்ச்சிக்காக இவர்கள் மாணவர்களை நடத்தும் விதம் பல நேரங்களில் கடும் ஆத்திரத்தையே ஏற்படுத்துகிறது.

தனியார் பள்ளிகள் மாணவர்களை இயந்திரத்தைப் போல மாற்றி விடுகிறார்கள்.ஒரு பத்தாம் வகுப்பு மாணவனின் ஒரு நாள் இப்படித் தான் அமைகிறது.காலை ஐந்து மணிக்கு தனியார் பயிற்சி வகுப்புகளுக்குப் புறப்படுகிறான்.5.30 முதல் 7 மணி வரை ஒரு பாடம்.8 மணிக்கு பள்ளியில் சிறப்பு பயிற்சி வகுப்பு.9.30 முதல் வழக்கமான வகுப்புகள்.இடையில் அரை மணி நேரம் உணவு இடைவேளை.இடைவேளை முடிந்த உடன் ஏதேனும் ஒரு பாடத்திற்கான தேர்வு இருக்கும்.அந்த தேர்வு ஒரு அரை மணி நேரம் வரை நடத்தப்படும்.பிறகு மதிய வகுப்புகள்.இவை முடிந்த பிறகு மீண்டும் மாலை பள்ளியில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள்.பிறகு மீண்டும் தனியார் பயிற்சி வகுப்புகள்.இரவு 10 மணிக்கு வீடு திரும்பும் மாணவன் மறு தின பரிட்சைக்காக தயார் செய்ய வேண்டியுள்ளது.இவ்வளவு செய்தும் ஒரு வேளை தன்னால் தேர்வில் முதல் மூன்று இடங்களுக்குள் வர முடியாமல் போனால் அனைவரும் அந்த மாணவனை வசைபாடி தீர்ப்பார்கள். இது தான் சிறந்த கல்வியைத் தருகிறோம் என விளம்பரங்களின் மூலம் மார்தட்டி கொள்ளும் தனியார் பள்ளிகளின் நிலை.


தனியார் பள்ளிகளின் நிலை இப்படியென்றால் அரசு பள்ளிகளின் நிலை அதற்கு நேர்மார்.பல பள்ளிகளில் பல பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லை. வசதியின்றி படிக்க வரும் ஏழை மாணவர்களை தங்கள் வீட்டு வேலைக்காரனைப் போல் நடத்தும் ஆசிரியர்களும் இல்லாமல் இல்லை. பெண் பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை தரும் பொறுக்கிகளும் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். ஆண்-பெண் என இருபாலர் பயிலும் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் கூட இருப்பதில்லை.கட்டடங்கள் வலிமையானதாக இருப்பதில்லை.திடீரெனெ தீப்பிடித்தால் தப்பிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.


இதனால் தான் மக்கள் தனியார் பள்ளிகளுக்குப் படை எடுக்கிறார்கள்.ஒரு தனியார் பள்ளியில் தன் மகனைச் சேர்த்தால் அவனுக்கு அறிவு வளர்கிறதோ இல்லையோ, பெயருக்குப் பின்னே ஒரு பட்டத்தையாவது போட்டுக்கொள்ளும் அளவிற்கு முன்னேறிவிடுவான் என்று பெற்றோர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையைக் கூட அரசு பள்ளிகள் ஏற்படுத்தத் தவறுவதால் தான் பெரும்பாலானவர்கள் அவைகளைத் தவிர்க்கிறார்கள். ஆக, தமிழக அரசு முதலில் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்குத் தரமான கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டும்.


ஒரு வேளை அடிப்படை வசதிகளை மேம்படுத்தி விட்டால் ஆங்கிலவழிக்கல்வியை அமல்படுத்தலாமா என்றால்,கூடாது என்பது தான் என் கருத்து.


ஆங்கிலவழிக்கல்வியையோ அல்லது ஆங்கிலத்தையோ எதிர்ப்பதற்காக இதை எழுதவில்லை.நான் படித்ததும் கூட ஆங்கிலவழிக்கல்வியில் தான். ஆனால் அன்று என் பள்ளியில் தமிழ் மொழிக்கு எந்த விதத்திலும் ஒரு மரியாதை குறைவு ஏற்பட்டுவிடவில்லை.அது அன்றைய நிலை.இன்று நிலைமை வேறு மாதிரி ஆகிவிட்டது.அன்று ஆங்கிலவழியில் கல்வி கற்று வளர்ந்தவர்கள் இன்று கேட்கும் கேள்வி - 'தமிழ் படிச்சி என்ன சாதிக்கப் போறேன்?தமிழ் படிச்சா பத்து பைசாக்கு பிரயஜோனம் இருக்கா?'.


இப்படிக் கேட்பவர்கள் ஒரு விஷயத்தை உணருவதில்லை.அவர்கள் இந்தக் கேள்வியை கேட்பதும் கூட தமிழில் தான் என்பதை.நம் சிந்தனைகள் யாவும் இயற்கையாகவே நம் தாய்மொழியில் தான் அமையும்.வேற்று மொழியில் சிந்தித்தால் அது அத்தனை சிறப்பாக அமையாது.இன்றைய ஆங்கில மோகத்தின் விளைவு என்னவென்றால் - 'ungalukkaaga seupar(super :D) song onnu vandhutte irukku paathu enjoy pannunga..this is prashant signing off from you.." - இது போன்ற அரைவேக்காட்டுத்தனமான ஒரு மொழி தான். தமிழும் சரியாகத் தெரியாது ஆங்கிலமும் சரியாகத் தெரியாது - இரண்டும் கலந்த ஒரு அரைவேக்காடு மொழி பேசும் ஒரு தலைமுறையாக நாம் உருவாகிவிட்டோம் என்பது தான் கசப்பான உண்மை. இந்த மொழி பரவ சன் மியூசிக் போன்ற தரம் தாழ்ந்த தனியார் தொலைக்காட்சிகள் ஒரு முக்கியக் காரணமே என்றாலும், அரசு பள்ளிகளிலும் கூட முழுக்க முழுக்க ஆங்கிலவழிக் கல்வி அமல்படுத்தப்படுதல் நம் அடுத்தத் தலைமுறையைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


நான் புதுச்சேரி பெடிட் செமினார்(Petit Seminaire) பள்ளியில் படிக்கும்போது அந்த பள்ளியின் முதல்வர் பாதிரியார் திரு.அந்தோணிசாமி அவர்கள் பேசிய இந்த வாக்கியம் என் மனதில் பதிந்து விட்டது.'தாய் மொழியில் கல்வி கற்பவர்கள் யாரும் தாழ்ந்து போக மாட்டார்கள்'.இதே கருத்தை என் தந்தையும் கூட பலமுறை கூறியிருக்கிறார்.இவர்களும் கூட தமிழ்வழிக்கல்வியில் படித்தவர்கள் தான்.உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரென மதிக்கப்படும் அய்யா அப்துல் கலாம் அவர்கள் கூட தமிழ் வழிக்கல்வியில் படித்தவர் தான்.இது போல பல பேரை உதாரணமாகக் காட்டலாம். தமிழில் படித்ததால் இவர்கள் எந்த விதத்தில் தாழ்ந்து விட்டார்கள்?


அப்துல் கலாம் அவர்கள் பேசும் இந்தக் காட்சியைப் பாருங்கள்.





தமிழில் படித்து தன் கடும் உழைப்பினால் முன்னேறிய இந்த மாமனிதருக்கு - ஒரு இந்தியருக்கு - ஒரு தமிழருக்கு - ஆங்கிலேயர்கள் மத்தியில் எத்தனை சிறப்பென்று.


இதோ மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் இந்த சொற்பொழிவைப் பாருங்கள்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் தொடர்புடையவர். சந்திரயான் திட்ட இயக்குனரும் இவரே.இவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள் :


"சந்திரயான் வெற்றிக்கு தாய்மொழிக் கல்வி தான் காரணம்.அக்குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் அதிகமானோர் தாய்மொழியில் படித்தவர்களே. எனவே இளைஞர்களிடையே தாய்மொழிப் பற்றும்,நாட்டுப்பற்றும் அவசியம் இருக்க வேண்டும்" - என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.




"தமிழே,
உன் உன்னதம் உணராமல் எழுதினேன்
 என் வரிக்கெல்லாம் வருமானம் வந்தது
உன் உன்னதம் உணர்ந்து எழுதினேன்
என் வருமானத்திற்கே வரி வந்தது"

 - இது கவிஞர் வாலி அவர்கள் சொன்னது.

இது போன்ற தமிழ் வாக்கியங்களையும் தமிழ்க் கவிதைகளையும் தமிழ்க் கதைகளையும் படிப்பதே ஒரு தனி சுகம் தான்.தமிழ் எழுத்துக்களிலேயே ஒரு வசீகரம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.இப்படிப்பட்ட தமிழில் கல்வி கற்பது ஒருவனுடைய அறிவை மேலும் கூர்மயாக்குமே தவிர குறைத்து விடாது.

ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.தமிழ் வழிக்கல்வியோ அல்லது ஆங்கிலவழிக் கல்வியோ,முன்னேற வேண்டும் என்கிற எண்ணமுடையவனை, சரியான வழிகாட்டிகளைக் கொண்டவனை, எந்த விதத்திலும் பாதிக்காது.மாறாக இது போல தமிழுக்கு அளித்து வரும் முக்கியத்துவம் குறைந்து கொண்டே போனால்,எதிர்காலத்தில் தமிழ் மொழி என்ற ஒன்று வரலாற்றில் மட்டுமே இருக்கும்,வழக்கில் இருக்காது.

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

இது பாரதியின் கவிதை.அவர் உலகெங்கும் உள்ள கலைச்செல்வங்களை கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்கிறார்.

ஆனால் நாமோ நம் தாய்மொழியை இகழ்ந்து அந்நியர்களின் மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கிறோம். தமிழர்களே தமிழைப் புறக்கணிக்கத் தொடங்கினால் தமிழ் மெல்லச் சாகத்தான் செய்யும்.ஆகையால் அரசு தமிழ்த்தாய்க்குச் சிலை வைத்து விளம்பரம் தேடிக்கொள்வதைவிட தமிழ் வழிக்கல்வியை ,முன்பு போல முழுவதுமாகத் தொடர்வதும் அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளைப் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுப்பதே தமிழ்த்தாய்க்கு மனநிறைவை ஏற்படுத்தும்.

தமிழின் இன்றைய நிலை : என் பதிவுகளைப் படிக்கும் பெரும்பாலானோர் (தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்), இந்தப் பதிவைக் கண்டதும் கூறப் போகும் காருத்து : "எதுக்குடா தமிழிலே எழுதி சாவடிக்கிற? தமிழ்ப் படிக்கறதெல்லாம் ரொம்ப கஷ்டம்.தயவு செஞ்சி இனிமே தமிழிலே எழுதாதே அப்படி எழுதினா எங்களைப் படிக்கச் சொல்லாதே".

கவிஞர் வாலி அவர்களின் கவிதையிலிருந்து இந்த இரு வரிகளை மட்டும் குறிப்பிட்டு இந்தப் பதிவை முடித்துக் கொள்கிறேன் :

"ஆங்கிலம் அளவிற்கு சோறு போடாது தமிழ்
என சொல்பவர் முகத்தில் உமிழ் "