Tuesday, January 22, 2013

படித்ததில் பிடித்தது - ஸ்ரீரங்கத்து தேவதைகள்
இந்தத் தலைப்பின் முதல் பதிவு சற்று மங்களகரமாகவே இருக்கட்டுமே என்று தான் தேவதைகளுடன் துவங்குகிறேன்.ஸ்ரீரங்கத்து தேவதைகள் என் மதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது.இது கணையாழியில் வாரமொருமுறை என வெளிவந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்(இது செவிவழிச் செய்தி தான்).நீங்கள் இந்தப்  புத்தகத்தைப் படிக்காதவரானால்  தலைப்பைக் கண்டதும் ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஏனென்றால் இந்தப் புத்தகத்தின் பெயரை ஒவ்வொரு முறை நண்பர்களிடம் சொல்லும்போதும் ஒவ்வொரு விதமான பதிலைச் சொன்னார்கள். ஆனால் ஒருவர் கூட இது என்ன மாதிரியான புத்தகம் என்று சரியாகச் சொல்லவில்லை.தலைப்பில் தேவதைகள் இருப்பதால் தான் இத்தனை குழப்பம்.சிலர் இது ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அழகான பெண்களைப் பற்றிய புத்தகம் என்றார்கள்,சிலர் இது ஏதோ பக்திப் புத்தகம் என்றார்கள்.மேலும் சிலர் இது ஒரு விதமான 'பலானா' புத்தகமா என்று கூட கேட்டார்கள்.

சுஜாதா ஸ்ரீரங்கத்தில் படித்து வளர்ந்தவர்.அங்கு தன் வாழ்வில் நடந்த சில சுவையான சம்பவங்களை கற்பனை கலந்து ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்கிற தலைப்பில் எழுதினார்.இந்த புத்தகத்தில் 14 சிறுகதைகள் உள்ளன.ஒவ்வொன்றும் தன் வாழ்வில் நடந்த சம்பவம் போலத்தான் விவரித்துள்ளார்.கற்பனையும் கலந்தே எழுதியுள்ளதாகக்  குறிப்பிட்டுள்ளார். தன் வாழ்வில் தான் சந்தித்த சில மனிதர்களைத் தான் இந்தப் புத்தகத்தில் தேவதைகள் எனக் குறிப்பிடுகிறார் .

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கதை.அனைத்திலும் பொதுவான கதாபாத்திரம் ரங்கராஜன்(சுஜாதா அவர்களின் இயற்பெயர்).கதைகள் அனைத்தும் தான் விவரிப்பது போல எழுதி இருக்கிறார்.இது ஒரு குட்டி சுயசரிதை என்றே கூட சொல்லலாம்.ரங்கராஜனைத் தவிர மற்றொரு கதாபாத்திரமும் பெரும்பாலான கதைகளில் இடம்பெற்றுள்ளது.அது தான் ஆசிரியர் அவர்கள் தன் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் ரங்கு கடை.ரங்கன் இந்தக் கடைவைத்ததே தன் மனைவியின் தொல்லையிலிருந்து தப்பிக்கத்தானாம்.மேலோட்டமாக பார்த்தால் இந்தக் கதாபாத்திரத்திற்கு பெரும் முக்கியத்துவம் ஏதும் இருப்பதாகத் தெரியாது.ஆனால் இந்த புத்தகத்தைப் படிக்கும் பொழுது நானும் கூட ரங்கு கடையில் அரட்டை அடித்ததைப் போலவே உணர்ந்தேன்.

சுஜாதாவின் எழுத்துக்களில் எனக்கு மிகப்பிடித்த அம்சம் என்றால் யதார்த்தம். இந்தப் புத்தகத்திலேயே கூட ராவிரா(ஆர்.விஜயராகவன்), திண்ணா(திருநாராயணன்), வரதன்,கேவி,ரங்கு,கிருஷ்ணமூர்த்தி போன்ற கதாபாத்திரங்களை யதார்த்ததிற்குச் சிறந்த உதாரணமாகக் கூறலாம். இது போன்ற கதாபாத்திரங்களை நானே கூட சந்தித்ததுண்டு. ராவிரா என்பவர் கெமிஸ்ட்ரி வாத்தியார்.ரங்கு கடையில் பேசும் ஒரு 'intellectual'.மாபெரும் அறிவாளியான அவர், மனைவியின் துரோகத்தால் மரணமடைவது போல அந்தக் கதையின் முடிவு அமைந்திருக்கும்.வரதன் மத்திம வயதினன். வரதனிடம் சிறுவர்களுக்கும்,சிறுவர்களிடம் வரதனுக்கும் ஒரு கவர்ச்சி உண்டு என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.இப்படி சிலரை நானும் கூட திண்டிவனத்தில் இருந்த போது சந்தித்திருக்கிறேன்.இது போன்ற கதைகளில் கதாபாத்திரங்கள் வாசகர்களின் அருகிலேயே இருப்பது போல உணரவைப்பதே ஒரு கதாசிரியரின் மாபெரும் வெற்றி.

இதில் என்னை மிகவும் பாதித்தக் கதைகள் என்றால், ஏறக்குறைய ஜீனியஸ், பேப்பரில் பேர்,திண்ணா,ராவிரா,காதல் கடிதம்,மறு.இந்தப் புத்தகத்தின் அனைத்துக் கதைகளிலும் முடிவு அத்தனை சிறப்பாக இருக்கும். உதாரணத்திற்கு திண்ணா என்கிற கதை.திண்ணா சிறுவயதில்  பிரபந்தங்களைக் கற்று ராம கிருஷ்ணா மடத்தில் உபன்யாசமெல்லாம் செய்யும் அளவிற்கு வளர்ந்து விடுகிறான்.அவனை எதிர்கால சின்மயானந்தா என்கிற அளவிற்கு வர்ணிக்கிறார்.ஆனால் கதையின் முடிவில் திண்ணா ஒரு புரடக்ஷன மேனேஜராகிறான்."ஜீன்ஸ் அணிந்த பெண்ணுடன் அன்யோன்யமாக ஜோக் அடித்துக்கொண்டிருந்த திண்ணாவின் சாதனையை 'வீழ்ச்சி' என்று என்னால் சொல்ல முடியவில்லை" என முடித்திருப்பார்.

ஏறக்குறைய ஜீனியஸ் தலைப்பு முதற்கொண்டு அனைத்துமே அற்புதம். 'புல்ஸுட் மாப்பிள்ளை' துரைசாமி என்பவர் காற்றில் கடிகாரம் ஓடும் என்றார். சைக்கிள் சக்கரத்தில் ரேடியோ பாடும் என நம்பினார்.இந்த நம்பிக்கையில் ஊரைச் சுற்றி கடனும் வாங்கி நஷ்டமடைகிறார்.அவர் ஏமாற்று வித்தைக்காரர் அல்ல.ஆனால் அவருடைய கண்டுபிடிப்புகள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.விளைவு வீட்டை விற்று விட்டு வெளியூர் சென்று விடுகிறார்.அவர் கண்டுபிடிக்கும் பொருட்களை ஊரில் விற்பனை செய்யும் சேல்ஸ் எக்சிக்யுட்டிவாக அவரிடம் ஆசிரியர் பணியாற்றியதாகக்  குறிப்பிடுகிறார்.கதை நகைச்சுவையாகத் துவங்கினாலும் முடிவு சற்று உருக்கமானதாகவே உணர்கிறேன்.இறுதியில் வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம்  அள்ளிப் போட்டுக்கொண்டுச் செல்ல லால்குடி மாமா என்பவர் வருகிறார்.அப்போது டெல்லியிலிருந்து திரும்பிய ஆசிரியர் புல்ஸுட் துரைசாமியின் உடல்நிலை சரியில்லை என்பதை அறிகிறார். பிறகு பெட்டி போலக்  கீழே கிடந்த ஒரு பொருளை எடுத்துச்  சாவி கொடுத்துப் பார்க்கிறார்.அது அற்புதமாக டிங் டிங் என்று 'எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே' பாடியது.
"
'ஜீனியஸ் சார்' - என்றேன்

'அல்மோஸ்ட் எ ஜீனியஸ்' என்றார் லால்குடி மாமா.

வியப்புடன் மறுபடி சாவி கொடுக்க விரக் என்று அதனுள் இருந்த பாகங்கள் தெறித்து விழுந்தன." - இது தான் ஏறக்குறைய ஜீனியஸ்.

தஞ்சாவூர் அணியுடன் ஆடிய ஒரு கிரிக்கெட் மேட்ச் பற்றி விவரித்திருப்பார். கேவி தான் அந்தக் கதையின் ஹீரோ.93 ரன்கள் எடுத்து தஞ்சாவூர் அணியை வீழ்த்த முக்கியக் காரணமாக இருந்தவர்.சின்னப் பிள்ளைகளுடன் தோற்றதால் தஞ்சாவூர் அணியினர் மறு மேட்சுக்கு அழைத்தார்கள்.

"அந்த மறு மேட்ச் நடக்கவில்லை.எல்லோரும் அதன் பின் சிதறி விட்டோம். சிலர் மணந்து கொண்டோம்.சிலர் இறந்து விட்டோம்.இருபத்தைந்து வருடங்கள் கழித்து சமீபத்தில் ஸ்ரீரங்கம் போயிருந்த போது கேவியைப் பார்த்தேன்.என்னதான் நரைத்த தலையாக இருந்தாலும் கண்களில் பிரகாசம் போகவில்லை.'என்ன இன்னொரு மேட்ச் ஏற்பாடு பண்ணட்டுமா?' என்றான்". நம் வாழ்விலும் இது போன்ற சில கேவிக்களை சந்திக்கத்தான் செய்கிறோம்.இதைப் படிக்கையில் பள்ளி நாட்களில் ஆடிய கிரிக்கெட் மாட்சுகள் தான் என் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன.

ஆசிரியர் மற்றும் ரங்குவைத்  தவிரவும் இரண்டு கதாபாத்திரங்கள் பெரும்பாலான கதைகளில் இடம்பெற்றுள்ளன.ஒன்று அவரின் தங்கை வத்சலா,மற்றொன்று அவரின் பாட்டி.வத்சலாவை விடவும் பாட்டி மனதில் நின்று விடுகிறார்.ஆசிரியரை இத்தனை சிறப்பானவராக வளர்த்ததில் பெரும் பங்கு பாட்டிக்கு உண்டென்றால் மிகையாகாது.காதல் கடிதம் என்கிற கதையில் பாட்டியைப் பற்றி ஆசிரியர் குறிப்பிட்ட விதம் அவருக்கு என் மனதில் நீங்காத இடத்தை கொடுத்து விட்டது.கோபாலன் என்கிற ஆசிரியரின்  நண்பன் ஒருவன் மல்லிகா என்ற பெண்ணுக்கு எழுதிய காதல் கடிதத்தைத் தந்திரமாக ஆசிரியர் மூலமாகவே அவளுக்குக் கொடுத்து விடுகிறான்.

அந்தப் பெண் அதைப் படித்து விட்டு ஆசிரியர் தான் எழுதினார் என நினைத்து அவள் தந்தையிடம் சொல்லிவிடுகிறாள்.அந்தப் பெண்ணின் தந்தை ஆசிரியரைப் பற்றிப் புகார் சொல்ல அவரது வீட்டிற்கு வருகிறார். அப்போதுக் கடிதத்தை வாங்கிப் பார்க்கும் பாட்டி வத்சலாவிடம் கேட்டு இது அவர் கையெழுத்து இல்லையெனக் கூறி வந்தவரை அனுப்பிவிடுகிறார். இந்தப் புகாரை நம்பி எங்கே பாட்டி தம் படிப்பையே நிறுத்திவிடுவாளோ என்றுப் பயந்த ஆசிரியர் நிம்மதியடைகிறார்.

"பல வருஷங்கள் கழித்துப் பாட்டி பாபநாசத்தில் இறந்து போவதற்கு முன் பதினைந்து நாள் கோமாவில் படுத்திருந்தபோது இவளைவிட ஒரு நீதிபதி ஒரு மனோதத்துவக்காரி இருக்க முடியுமா என்று அவள் மேல் கண்ணீர் சிந்தினேன்"

அந்த மல்லிகா என்ன ஆனாள் என்றால்,கோபாலனைக் கல்யாணம் செய்து கொண்டு அதே வீட்டில் வசிக்கிறாள்.

இப்படி ஒவ்வொருக் கதையும் ஒவ்வொரு விதம்.இங்கு நானே சில கதைகளின் முடிவை எழுதிவிட்டேன்.நாமும் நம் வாழ்வில் பல தேவதைகளை சந்திக்கிறோம்.பல ரங்கு கடைகளில் அரட்டை அடிக்கிறோம்.சில மல்லிகாக்களிடம் மாட்டிக் கொள்கிறோம்.நம்மில் கூட சிலர் ஏறக்குறைய ஜீனியஸ் தான்.இந்தப் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்.உங்கள் வாழ்வில் இருக்கும் தேவதைகளை உணரவும் வாய்ப்புக்கள் உண்டு.

No comments: