Tuesday, January 22, 2013

படித்ததில் பிடித்தது
நன்றி : விகடன் தினமும் பல செய்திகள் நம் கண்ணில் படுகின்றன.நம்மையே அறியாமல் நாம் பல செய்திகளைப்  படித்து விடுவதுண்டு.சிலருக்கு படிப்பதில் பேரார்வம. புத்தகங்களை வாங்கி மலைபோல குவித்து, இரவு பகல் பாராமல் அவற்றைப்  படிப்பதிலேயே முழுக் கவனம் செலுத்துவார்கள்.இவர்கள் ஒரு ரகம்  என்றால்,புத்தகங்களைக் கண்டாலே சில மைல் தூரம் ஓட்டம் பிடிப்பவர்கள் மற்றொரு ரகம்.ஆனால் இந்த இரண்டு பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் செய்திகளை அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளுக்குள் இருக்கத் தான் செய்யும்.புத்தகங்களைக் கண்டால் ஓட்டம் பிடிப்பவர்கள் கூறும் பொதுவான ஒரு காரணம்,'பொறுமையின்மை'.ஒரு நூறு பக்க நாவல் படிக்க வேண்டுமென்றால் குறைந்தது ஒரு மணி நேரமாவது செலவிட வேண்டும்.அப்படியே கடும் முயற்சியால் புத்தகத்தைக் கையில் எடுத்து விட்டாலும்,நமது கவனத்தைச் சிதைப்பதற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட facebook,ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்து விடுகின்றன .

ப்ளாக்(blog) போன்ற சமூக தளங்களைவிடவும் facebookகை உபயோகிப்பவர்களே அதிகம். இதற்கு முக்கிய காரணம், ட்விட்டெரிலொ, facebookகிலோ கருத்துக்கள் சுருக்கமாக பதியப்படுவதே. பல நல்ல தகவல்கள் facebook மூலமாக நம்மை வந்தடைகின்றன.ஆனால் சில தினங்களில் அவை மறைந்து போகின்றன.ப்ளாக்கில்(blog) அப்படி இல்லை. இங்குப்  பதிவுகளைத்  தலைப்புவாரியாகப்  பிரித்து  வைக்கும் வசதி உண்டு. ஆகவே நாம் எப்போதாவது படிக்கும் நல்ல செய்திகளை,சுவையான தகவல்களை  படித்ததுடன் மறந்து விடாமல்,மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் உபயோகமாக இருக்குமெனத் தோன்றியது. உடனே இந்தப் பதிவை எழுதுகிறேன்.

புத்தகங்களிலோ,செய்தித்தாள்களிலோ,அல்லது இணையதளத்திலோ படித்த செய்திகள், தகவல்களைப் பற்றிய  அடியேனின் கருத்துக்களை இந்தப் பகுதியில் பதிவு செய்வதே, என் நோக்கம்.படித்த கதைகளையோ, கட்டுரைகளையோ அல்லது செய்தியையோ அப்படியே பதிவு செய்வதில் எனக்கு ஆர்வமில்லை.படித்தத் தகவலைப் பற்றியக் கருத்துக்களைப் பதிவு செய்தலென்பது,"Copy+Paste"  செய்வதைக் காட்டிலும் சுவையானதாக இருக்குமென்பது என் நம்பிக்கை.

இங்கு பதிந்து விடுவதால் மட்டும் அனைவரும் படித்துவிடுவார்களா என்ன என்ற கேள்வி இந்தப் பதிவை படிக்கும் ஒன்றிரண்டு வாசகர்கள் மனதில் எழுவது புரிந்துகொள்ளக்கூடியதே.மேலும் இந்தப் பகுதியினை தொடர்ந்து புதுப்பிக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துத் தான் பார்க்க வேண்டும். இருப்பினும் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் கூறுவதைப் போல, 'விடா முயற்சி விஸ்வரூப வெற்றி' என்ற நினைப்புடன் இந்தப் பதிவைத் துவங்குகிறேன்.

இந்தப் பகுதியில் வெளியாகும் அத்தனைப் பதிவுகளும் முறையாக ஆங்கிலத்திலும் வெளியிடப்படும்.நமது இந்த தளத்தை பார்வையிடுவது என்னவோ வெகு 'சிலரே'.அதில் பலருக்குத் தமிழ்ப் படிப்பதில் சிரமம். தமிழரல்லாத நண்பர்கள் படித்து பயன்பெற இந்த ஆங்கிலப்பகுதி உதவும்.தமிழைத் தாய்மொழியாகக்கொண்டு தமிழ்ப் படிப்பதே கேவலமென நினைக்கும் துரோகிகளுக்கும் அது உதவுமென்பது சற்று வருந்தத்தக்க விஷயம் தான்.

No comments: