Monday, February 6, 2012

மாஸ் மீடியா -9

மாஸ் மீடியா -9
 ரு வழியாக சில காட்சிகளை டைரெக்ட் செய்து விட்டான் ஸ்ரீதர்.வாழ்நாளில் தானும் ஒரு இயக்குனராகியே தீர வேண்டுமென்கிற வெறியுடன் கிராமாத்திளிருந்து கிளம்பி வந்த ஸ்ரீதருக்கு 'Start Camera Action' என்ற மந்திரச் சொல்லை உரிமையுடன் உச்சரிக்க இத்தனை வருடங்கள் தேவைப்பட்டன.சினிமாவை உயிருக்கும் மேலாக நேசித்த ஸ்ரீதர்,மாஸ் மசாலா திரைப்படங்களை அறவே வெறுத்தான்.ஸ்ரீதரை பொறுத்த வரை கதை தான் ஹீரோ.கதைக்கேற்ற நடிகர்கள் தான் ஸ்ரீதருக்கு தேவை,நடிகர்களுக்கேற்ற கதை என்பது ஸ்ரீதருக்கு சற்றும் ஒத்து வராத விஷயம்,மேலும் அத்தகைய படங்களை ஸ்ரீதர் அறவே வெறுத்தான்.மாஸ் ஹீரோ என்பவன் ஸ்ரீதரின் பார்வையில் ஒரு விஷச்செடி.மாஸ் சினிமா என்பது மாசுபட்ட சினிமா.இவற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டுமென நீண்ட காலமாக ஸ்ரீதர் மனதில் நினைத்திருந்தான்.!!!...ஆனால்.... இவை அனைத்தும் ஸ்ரீதர் கோடம்பாக்கத்து வாசலை மிதிக்கும் முன்பு இருந்த கருத்துக்கள்.இப்போதும் ஸ்ரீதரின் கருத்துக்கள் முழுவதுமாக மாறிவிடவில்லை.ஆனால் 'ஹி தாஸ் லீர்ன்ட் டு மேக் சோமே கம்ப்ரோமிசெஸ்'.

ஆனால் ஒரு விஷயம்.இத்தனை வருடங்கள் கோடம்பாக்கத்தில் கூடாரம் அடித்ததில் பல விஷயங்களை கற்றுக்கொண்டாலும்,ஸ்ரீதரின் உள்மனது  ஒரு உண்மையை மட்டும் ஏற்றுகொள்ள மறுத்தது. 'சினிமா என்பது ஒரு சந்தை.அங்கு செத்த பிணம் கூட ஒரு வியாபரப்பொருள் தான்.இந்த சந்தையில் விலை போகாத உயிருள்ள மனிதன் கூட ஒரு பிணம் தான்'.ஒரு Directorial success கொடுக்க வேண்டுமென்பது தான் ஸ்ரீதரின் லட்சியம்.ஆனால் அமைந்ததோ ஒரு மாஸ் ஹீரோவுடனான படம்.புகழின் உச்சியிலிருக்கும் வாசுவை வைத்து படமெடுப்பதால் ஸ்ரீதருக்கு நல்ல அறிமுகம் கிடைக்குமென்பது மட்டுமே ஸ்ரீதரின் ஒரே நம்பிக்கை.படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்று விட்டால் தனது அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில் சிரமமிருக்காது என்பதையும் கணக்கில் கொண்டு தான் இந்த வாசு போன்ற லூசு ஹீரோக்களின் கோமாளித்தனத்தை சகித்து கொண்டிருந்தான்.

"என்ன டைரக்டர் எப்படி நம்ம performance!!" - தெனாவெட்டாக கேட்டான் வாசு.

"சார் இன்னும் நீங்க நல்லா emotion காட்டியிருக்கணம் சார்.Please மறுபடி ஒரே ஒரு டேக் போலாம் சார்" - பணிவாக கேட்டான் ஸ்ரீதர்.

"என்னது ரீடேக்கா?இல்ல எனக்கே ரீடேக்கானு கேட்டேன்..நடிப்பு என் ரத்தத்திலேயே ஊறின விஷயம்..எங்க பரம்பரையே சினிமா பரம்பரை தான்..நேத்து வந்த சின்ன பைய நீ,எனக்கு நடிப்பு சொல்லி தர்றியா?" - என வெறி பிடித்தவனை போல் கத்தி விட்டு சென்றான் வாசு.

இந்த வாசு ஒரு சைக்கோ மாதிரி என பலரும் சொன்ன பொது ஸ்ரீதர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..ஆனால் அவர்கள் அப்படி பேசுவதன் காரணம் இன்று தான் விளங்கியது. இவனை வைத்து படமெடுத்து முடிப்பதே மிகப் பெரிய சாதனையாக இருக்கும் போலிருக்கிறது என நினைத்து கொண்டான் ஸ்ரீதர்.அன்றைய படப்பிடிப்பு முடிந்து அனைவரும் அவரவர் அறையில் தங்கிவிட்டார்கள் .ஸ்ரீதருக்கு சற்று பதற்றமிருந்தாலும் அடுத்த நாள் எடுக்க வேண்டிய முக்கியமான காட்சிகளுக்கான வசனங்களை,தனது அறையில் இருந்தபடியே சரி பார்த்து கொண்டிருந்தான்.

அப்போது திடீரென யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.ஆனாலும் ஏனோ அதற்கு முக்கியத்துவமளிக்காத ஸ்ரீதர், தொடர்ந்து வசனங்களை படித்து கொண்டிருந்தான்.சப்தம் மீண்டும் கேட்டது.திடீரென சுயநினைவு திரும்பியவனை போல எழுந்தான்.பிறகு கதவை திறந்த ஸ்ரீதர் அதிர்ந்து போனான்.சிவப்பு நிற சேலையில் செதுக்கிய அழகிய சிற்பம் போல நின்றாள் லலிதா.சிறிது நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர்.லலிதா பார்த்த பார்வையில் பல அர்த்தங்கள் ஒளிந்திருந்தன.தன பார்வையினாலேயே ஸ்ரீதர் மீது மோகனாஸ்திறத்தைத்  தூவினாள். ஆனால் அவளது பார்வையில் சற்று அப்பாவித்தனமும் ஏதோ ஒரு சோகமும் ஒளிந்திருந்தது.

"ஸ்ரீதர் சார், நான் உள்ளே வரலாமா?" - லலிதா

"வாங்க.." - யாரிவள்,ஏன் வந்தாள் என பல குழப்பங்களுடன் அவளை உள்ளே அனுமதித்தான்.

"சொல்லுங்க..நீங்க யாரு?என்ன விஷயம்?என்னை தேடி வந்திருக்கீங்க..ஒரே குழப்பமா இருக்கு..சொல்லுங்க" - ஸ்ரீதர்.

"என் பேரு லலிதா..எங்கப்பா உங்கள பார்த்துட்டு வரச் சொன்னாரு"

"யார் உங்கப்பா?"

"தனசேகர் சார்.."

"யாரு இந்த Character ரோல்ல எல்லாம் பின்னி பெடாலேடுப்பாரே அந்த actor தனசேகர் சார் பொண்ணா நீங்க?"

லலிதா ஆமோதிப்பது போல் தலையசைத்தாள்.ஸ்ரீதர் தொடர்ந்தான்,

"எல்லாம் சரிங்க இந்நேரத்திலே என்னை பார்க்க வர வேண்டிய அவசியம் என்ன?அவ்வளவு தல போற காரியமா? காலையிலே வந்து பார்த்திருக்கலாமே?"

"இல்லை சார்,எனக்கு உங்க படத்திலே நடிக்க சான்ஸ் கிடைக்கும்னு தான் உங்கள பார்க்க சொன்னாங்க"

"என் படத்திலே சான்ஸா?" சற்று ஆத்திரப்பட்டாலும்,"சரி அடுத்த படத்திலே பார்க்கலாம்..இந்த படத்திலே எல்லா கேரக்டர்சும் finalize பண்ணியாச்சு.. இப்போ நீங்க first கிளம்புங்க"

அவன் சொன்னதும் லலிதா எழுந்தாள்.கதவை நோக்கி நடந்தாள்.அதற்கு பின் அவள் செய்தது தான் ஸ்ரீதருக்கு கடும் கோபத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்கியது.

"ஹலோ,இப்போ எதுக்கு கதவை தாழ்ப்பாள் போடறீங்க?" - ஆத்திரத்தில் பொங்கிய ஸ்ரீதரின் அருகில் வந்தாள் லலிதா.ஸ்ரீதரின் தலையை கோதி விட்டுக்கொண்டே,

"என்ன ஸ்ரீதர்,இப்படி ஒரு பொண்ணு கூட தனியா இருக்கிற சந்தர்ப்பம் கிடைச்சா அதை use பண்றதை விட்டுட்டு கேள்வி கேக்குரிங்களே.."

லலிதாவின் scent வாசனையும் அவள் அணிந்திருந்த சிவப்பு நிற புடவையும் ஸ்ரீதருக்கு போதை ஏற்றியது..ஸ்ரீதர் சற்று தடுமாற,இது தான் சந்தர்ப்பம் என எண்ணிய லலிதா,"என்னை நீங்க எப்படி வேணுன்ம்னாலும் use பண்ணிக்கலாம் ஸ்ரீதர்" - என சொல்லிக்கொண்டே ஸ்ரீதரின் மேல் விழுந்தாள்.உடலின் ஈர்ப்பை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான் ஸ்ரீதர். அவளை இறுக்கமாக அணைக்க ஸ்ரீதரின் கைகள் துடித்தன.ஆனாலும் அவன் உள் மனத்தில் ஏதோ ஒன்று தடுத்தது.அந்த சில நிமிடங்கள்,ஸ்ரீதரின் உடலுக்கும் மனதுக்கும் ஒரு பெரும் போராட்டமே நடக்க,இறுதியில் மனம் உடலை வென்றது.ஸ்ரீதர் சுதாரித்து கொண்டான்.ரத்தம் கொதித்தது.லலிதாவை பிடித்து தள்ளினான்.அவன் கண்கள் சிவந்தன, ஆத்திரத்தில் லலிதாவை ஓங்கி ஒரு அறை அறைந்தான்.லலிதா நிலை தடுமாறி விழுந்தாள்.

"கேவலமா இல்லை?சீ நீ அந்த மாதிரி பொண்ணா!!உங்கப்பன் தான் நல்ல சொத்து சேர்த்து வைச்சிருக்கானே அப்புறமும் ஏன் இந்த மானம் கெட்ட பொழப்பு?" - பொறிந்து தள்ளினான் ஸ்ரீதர்.

"அவரால தான் சார் எனக்கிந்த நிலைமையே..அவரால தான்..எல்லாம் என் தலை எழுத்து" - என தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் லலிதா.

"எங்கப்பாவுக்கு நான் ஒரு top heroine ஆகனம்னு ஆசை சார்..அப்போ தான் பல விதத்திலேயும் காசு பார்க்க முடியும்.. நிறைய காரியத்த சாதிச்சிக்க முடியுங்கிறது அவரோட எண்ணம்..அதுக்கு தான் சார் இப்படி எல்லாம் என்ன நடந்துக்க சொல்லுறாரு..டைரக்டரோட ஸ்டோரி டிஸ்கஷன்னு தனியா உள்ளே அனுப்பி..." - என கதறி கதறி அழுதாள் லலிதா..

"இப்படி சில டைர்கடர்ஸ் கூட நடந்துகிட்ட அப்புறமும் கூட ஏதோ ஒரு காரணத்தினாலே வாய்ப்பு வராமலே போய்டிச்சு.." - ஒப்பாரி வைப்பது போல அழுத லலிதாவை சமாதானப்படுத்துவதா அல்லது இவளை இந்த அறையிலிருந்து விரட்டியடிப்பதா என குழப்பமடைந்த ஸ்ரீதர்,லலிதாவின் தோள்களை தொட்டு எழுப்பினான்,

"இதோ பாரும்மா,முதல்ல அழறத நிறுத்து..நமக்குன்னு ஒரு நேர்மை இருக்கணம்,அதை எப்பவும் யாருக்காகவும் விட்டு குடுக்க கூடாது.. இப்படி குறுக்கு வழியிலே ஜெயக்கனம்னு நினைக்காதே..இந்த மாதிரி நடந்துகிட்டா தான் உனக்கு சான்ஸ் கிடைக்கும்னா அது உன் அழிவுக்கு அறிகுறின்னு அர்த்தம்.இப்படி சான்ஸ் வாங்கி ஒரு வேளை நீ பெரிய ஹீரோயின் ஆனாலும் கூட,பணம் சம்பாதிக்கலாமே தவிர,நிம்மதியே இருக்காது..போ..வீட்டுக்கு போ..நான் சொன்னதை நல்லா யோசி..உன்னோட திறமைய வச்சி நேர்மையான வழியிலே முன்னேற பாரு.." - என நீண்ட உபதேசம் செய்தான் ஸ்ரீதர்.

"சார் அப்போ இந்த படத்திலே எனக்கு சான்ஸ்?"

"No Chance!!!" - திட்டவட்டமாக கூறினான் ஸ்ரீதர்..

                                                       ***************************


 ஒரு வழியாக லலிதாவை அறையை விட்டு அனுப்பிய பின் உறங்கினான் ஸ்ரீதர்.திடீரென ஏதோ ஒரு பயங்கரமான காட்சியை கண்ட ஸ்ரீதர் பெரும் கூச்சலிட்டான்.திடுக்கிட்டு எழுந்தான்.பிறகு தான் ஏதோ ஒரு கெட்ட கனவு கண்டதை உணர்ந்தான்.அதிகாலை 5.30 மணி இருக்கும்.முகம் கழுவிய பிறகு,மீண்டும் இரவு நடந்த அனைத்தும் அவன் மனத்திரையில் ஓடியது.அந்த அதிர்ச்சியிலிருந்து ஸ்ரீதர் இன்னும் மீளவில்லை.தன்னிடம் ஒரு பெண் அப்படி நடந்து கொண்டது அதுவே முதல் முறை.உடனே குளித்து விட்டு தயாரானான்.அப்போது அவனது cell phone ஒலித்தது. வாசுவிடம் இருந்து தான் அழைப்பு.

"ஸ்ரீதர்,உடனே என்னோட ரூமுக்கு வாங்க..உங்க கிட்ட கொஞ்சம் பேசணம்" - என வேகமாக பேசிவிட்டு அழைப்பை  துண்டித்தான்.

எதுவும் புரியாமல் ஸ்ரீதர் உடனே புறப்பட்டான்.

"வாங்க டைரக்டர் சார்.." - கிண்டலாக அழைத்தான் வாசு.அருகில் தனசேகரனும் இருந்தார்.வழுக்கை தலை,முழுவதுமாக சவரம் செய்யப்பட முகம்.இவர்கள் அழைத்ததன் காரணத்தை ஸ்ரீதர் ஊகிக்க,வாசு தொடர்ந்தான்,

"என்ன சார்,நம்ம படத்திலே நான் அனுப்பின பொண்ணுக்கு சான்ஸ் இல்லைன்னு சொல்லிட்டீங்களாமே.."

"எல்லா கேரக்டர்சும் finalize பண்ணியாச்சு..உங்களுக்காகவே நிறையவே compromise பண்ணியாச்சு..இப்போ நீங்க கேக்கிறத கண்டிப்பா செய்ய முடியாது"

"என்ன என்ன என்ன சொன்னே?முடியாதா?bloody asshole.."

வாசுவின் இந்த பேச்சு ஸ்ரீதருக்கு கடும் எரிச்சலை தந்தது..

"தம்பி இந்த படத்துக்கு நீ பேருக்குத்தான் டைரக்டர்..இங்க நான் சொல்றது தான் கதை,நான் சொல்றவ தான் ஆர்டிஸ்ட்டு..இஷ்டம் இருந்தா டைரக்ட் பண்ணு..கஷ்டம்னா கிளம்பு காத்து வரட்டும்.."

ஸ்ரீதர் ஆத்திரத்தில் முறைக்க,வாசு தொடர்ந்தான்,

"ஏன் யா ஸ்ரீதர் அந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல்,அவள போயி வேண்டான்னு சொல்லிட்டியே..நீ அதுக்கு சரி பட்டு வர மாட்ட" - என கீழ்த்தரமாக ஸ்ரீதரை வாசு கேலி செய்ய,கோபத்தின் உச்சத்துக்கே போன ஸ்ரீதர்,

"அட தூ..நீ எல்லாம் ஒரு டாப் ஹீரோ..அசிங்கமா இல்லை?எப்டி எப்டி நீ சொல்றது தான் கதையா..முடியாது யா..நீ சொல்ற ஒன்னும் ஒரு ம... மண்ணாங்கட்டியும் இங்க நடக்காது..என் கதையிலே ஒரு சின்ன change கூட கிடையாது.. உன்னால ஆனதை பாரு."

தனசேகரின் பக்கம் திரும்பியவன்,

"ஏன் யா நீ எல்லாம் நல்ல குடும்பத்திலே பொறந்தவனாய்யா?தூ..தூ.. நீ அந்த பொண்ணுக்கு அப்பனா இல்ல மாமாவா? இந்த மானம்கெட்ட பொழப்புக்கு நாண்டுகிட்டு சாகலாம்.." - ஆத்திரத்தை கொட்டி தீர்த்தான் ஸ்ரீதர். போதையில் இருந்த தனசேகர்,ஏதோ கெட்ட வார்த்தை சொன்னான்..ஆனால் அவன் சொல்வது அவனுக்கே புரியவில்லை..அப்படி ஒரு போதை.. பிறகு அமைதியாக வாசு பேசினான்,

"என்ன ராஜா சொன்னே?கதைய நான் சொல்ற படி மாத்த மாட்ட..ஹ்ம்ம்..ஆனதை பாருன்னு சொல்றே..சரி தம்பி.. நான் முடிவு பண்ணிட்டேன்..இந்த படம்,'இனி வாழ்வில் வசந்தம்' என்கிற இந்த படத்தை,சில்வர் ஸ்டார் - தி ஓனே அண்ட் ஒன்லி - great வாசு,டைரக்ட் செய்வார்..கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம் பி தி கிரேட் வாசு..."

"என்னது?" - ஸ்ரீதர்

"ஒரு தடவ சொன்னா புரியாதா த மரமண்டை டைரக்டர்..உனக்கு இனிமே இங்க வேல இல்லேன்னு சொன்னேன்.. இடத்தை காலி செய்றியா ராஜா"

"நீ வெறும் ஹீரோ தான்..எனக்கு அட்வான்ஸ் குடுத்தது கண்ணப்பன் சார்,அவர் சொல்லட்டும் நான் போறேன்"  - சொல்லி முடிப்பதற்குள் கண்ணப்பனிடமிருந்து அழைப்பு வந்தது..பேசி முடித்த பின் ஸ்ரீதர் வாசுவை பார்க்க,

"என்ன கண்ணா,அட்வான்ஸ் குடுத்த தெய்வம் போக சொல்லிடிச்சா..உன்ன எனக்கு தெரியுமடா..சொன்னா சொன்னதுக்கு ஒத்து வர மாட்டேன்னு நல்லா தெரியும்..அதுக்கு தான் முதல்லையே கண்ணப்பன் கிட்டே பேசிட்டேன்..என்ன சொன்ன என்ன சொன்னே..நான் வெறும் ஹீரோவா..டேய் மடப்பயலே இந்த படத்தோட business என்னை நம்பித்தானே தவிர,உன்ன மாதிரி கத்துக்குட்டி டைரக்டர நம்பி இல்லே.."

"இவ்வளவு கேவலமான பொழப்பா டா சினிமா எடுக்கிறது?" - ஸ்ரீதர்

"போங்க டைரக்டர் சார்..ஒரு படம் பாதியிலே ஒரு டைரக்டர தூக்கிட்டா அவன் திரும்ப சினிமா எடுக்கிறது அவ்வளவு சுலபமில்ல..உன்னை வச்சி எவனாச்சு படமெடுத்தா டைரக்ட் பண்ணு.. All the best Mr.ஸ்ரீதர் சார்.. டாட்டா bye bye" - என கேலி பேசி ஸ்ரீதரை துரத்தி விட்டார்கள்.


                                                       ***************************


தொடர்  உடற்பயிற்சியினால் உடலை நன்றாக குறைத்திருந்தான் சரண். தொப்பை முழுவதுமாக கரைந்து விட்டது. தொடர் உடற்பயிற்சி,கட்டுப்பாடான உணவு,குடி பழக்கத்தை அறவே விட்டொழித்து புத்துணர்ச்சியுடன் காணப்பட்டான் சரண்.மன உறுதியுடன் அனைத்தையும் தூக்கி எறிந்த சரணை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.தினமும் அரை மணி நேரம் தியானம் செய்து வந்தான்.சரணின் கண்களில் மீண்டும் அந்த spark தெரிந்தது.

"பாஸ் நீங்க வர சொன்னதா யாரோ ஒரு ஆள் வந்திருக்காரே..என்ன விஷயம்" - விவேக்

"அவரை உடனே வர சொல்லு விவேக்..நம்ம அடுத்த project பத்தி பேச தான்.." - கம்பீரமான குரலில் சொன்னான் சரண்.

"பாஸ் அடுத்த project? You mean new movie? யாரு பாஸ் producer?"

"அதை பத்தி பேச தான் அவரை வர சொல்லி இருக்கேன்..அவருக்கு industryல நிறைய பேரை தெரியும்..வாழ்க்கைல நிறையவே இழந்திருக்காறு..என்னை மாதிரி"

"Oh..பாஸ் டைரக்டர் யாருன்னு ஏதாச்சு mindல வச்சிருக்கீங்களா? என்னோட guess சரின்னா நீங்க உங்க friend ராம் மோகனா தான் இருக்கணம்..Am I right?"

"கண்டிப்பா ராம் மோகன் தான் first clap அடிக்க போறார்.." - இதை கேட்டதும் விவேக் சற்று பெருமித பட்டு கொண்டான், தனது 'presence of mind'ஐ எண்ணி..அதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சிறு புன்னகையை உதிர்த்தான்

"உடனே உன்ன நினைச்சி நீயே பெருமை பட்டுக்காதே..டைரகடர் ராம் மோகன் இல்லை.." - இதற்குள் சரண் வரச் சொல்லியிருந்த அந்த நபர் உள்ளே வந்தார்..

"வாங்க சார்,உட்காருங்க" - மரியாதையுடன் சரண் உட்கார வைத்தான்..பிறகு, "சார்,நான் ஏற்கனவே பேசின மாதிரி இப்போ என்னை வச்சி படமெடுக்கிற தைரியம் தீனதயாள் சாருக்கு மட்டும் தான் இருக்கு"

ஆம் என்பது போல் அவர் ஆமோதிக்க.,"ஆனா பணம் தான் சார் பிரச்சினை"

"கவலை படாதிங்க தம்பி..எனக்காக உதவி செய்ய ஒரு சில distributors இருக்காங்க..இன்னைக்கி தேதிக்கு உங்க படத்தை சில கோடி ரூபாய்க்கு என்னால வியாபாரம் செய்ய முடியும் தம்பி"

"ஆனா சார் அந்த தர்மராஜா பகைச்சிகிட்டு எப்படி படத்தை வாங்குவாங்க?" - சந்தேகத்துடன் கேட்டான் விவேக்,

"புரியுது தம்பி..இவர் நடிச்ச அத்தை மகள் ஆனந்தி படம் இன்னைய தேதிக்கு கூட நல்லா ஓடுது..So இவருக்குன்னு மக்கள் கிட்டே ஒரு எதிர்பார்ப்பு இருக்க தான் செய்யுது.."

"புரியல" - விவேக்

"சில distributors இருக்காங்க..ஏற்கனவே நஷ்டமடைஞ்சவங்க,income taxக்கு கணக்கு காட்ட படத்தை distribute பண்றவங்க,முக்கியமான விஷயம்,இதுல ஒரு distributor கொஞ்சம் கெத்தான ஆளு..தர்மராஜுக்கு state levelல பவருன்னா இவருக்கு central levelல..அவர கொஞ்சம் பேசி convince பண்ணனம்..சரண் நீங்க பேசினா கண்டிப்பா ஒத்துக்குவாரு..உங்க கிட்ட அந்த திறமை இருக்கு.."

வழக்கம் போல் சரணின் படம் அறிவித்த தேதியிலேயே நல்ல விலைக்கு வியாபாரமாகும் நிலைமை இல்லை இப்போது..ஆனால் இப்போதும் கூட சரணுக்கென ஒரு மார்க்கெட் உண்டு..அந்த வரம்பிற்குள் படத்தை வியாபாரம் செய்ய திறமையான ஒரு ஆள் தேவை..பம்பரம் போல் சுழன்ற விவேக் தன்னுடைய அனுபவத்தை எல்லாம் வைத்து தீனதயாள் என்னும் தயாரிப்பாளரிடம் சம்மதம் வாங்கினான்..ஆனால் finance விஷயத்தில் மட்டும் கடும் நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது..இத்தனை நாட்கள் ஓய்விலிருந்த சரண்,கோலிவுட்டின் முக்கிய நிகழ்வுகளை தெரிந்து கொள்ள தவறவில்லை..அதன் விளைவாகத்தான் இவரை உதவிக்கு அழைத்தான் சரண்..

"இந்த வாரத்துக்குள்ள எல்லாத்தையும் முடிவு பண்ணிடலாம் சார்..தமிழ்ப்புத்தாண்டன்னைக்கி படத்தை announce பண்ணிடலாம்..Complete cast and crew.." - நம்பிக்கையுடன் சரண் சொல்ல,விவேக்கிற்கு அத்தனை மகிழ்ச்சி..

"டைரக்டர் யாருன்னு முடிவு பண்ணிட்டீங்களா தம்பி?"

"Yes..அது suspense..கூடிய சீக்கிரம் தெரிஞ்சிக்குவீங்க"

"நல்லது தம்பி..நான் கிளம்பறேன்.." - அவர் விடை பெற்று சென்றதும் விவேக்,

"பாஸ் ராம் மோகன ஏன் வேண்டாம்னு சொல்றீங்க?"

"விவேக்,இப்போ அவர் field out..அதானே நிஜம்?நாமளும் field out..உண்டா இல்லையா ? "

"ஆனா அவர் உங்க friend ஆச்சே?"

"தொழில் வேற நட்பு வேற..அவர் நல்ல படமெடுத்து flop ஆயிருந்தா பிரச்சினை இல்லை..His recent movies were just craps..நான் அவரோட படங்களை பார்த்துட்டு தான் பேசறேன்"

"Full formல இருக்கீங்க பாஸ் நீங்க"

"நீயே சொல்லு..சுத்தமா touch விட்டு போன டைரக்டர வச்சி படமெடுத்தா அவருக்கும் நஷ்டம்,நமக்கும் கஷ்டம்.. அதோட இந்த படம் எடுக்கிறதே ஒரு மிகப்பெரிய சாதனை..இதிலே படம் படுத்துடுச்சுன்னா பழைய படி ஊருக்கு போயி சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட வேண்டியது தான்..உனக்கென்ன நான் இல்லைன்னா இன்னொரு ஹீரோ கிட்ட வேலைக்கு சேர்ந்துடுவ.."

"பாஸ் போதும்..நான் அப்படி பட்டவனா"

"சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டா..ஏன் கோபப்படுற..இன்னைக்கி நான் நல்லா இருக்கேன்னா அதுக்கு முக்கிய காரணமே நீ தானே.."

"சரி யாரு தான் அந்த டைரக்டர்?"


                                                       ***************************


முக்கியமான வேலையாக ஒரு நபரைச் சந்திக்க காதர் பாய் சென்னை எல்லியாட்ஸ் கடற்கரையில் காத்திருந்தார். காலையில் அவர் Walking வரும் நேரமது.அவரும் காதர் பாயை இந்த நேரத்தில் சந்திக்க சம்மதித்திருந்தார்.காதரின் cellphone ஒலித்தது.காதரின் முகத்தில் சிறு ஏமாற்றம் தெரிந்தது..அந்த முக்கிய புள்ளி தான் அழைத்தது..அவருக்கு உடல் நிலை சரி இல்லை என்றும்,இன்று அவர் Walking வர இயலாது என்றும் தெரிவித்தார்..ஒரு ஆறுதல்,மறு நாள் மாலை சென்னை நாரத கான சபாவிற்கு வர சொல்லிவிட்டார்.அங்கே ஒரு நாடகம் பார்க்க இருப்பதாகவும் அப்போது இவருடைய விஷயத்தையும் விவாதிக்கலாம் என கூறிவிட்டார்.காதர் பாய் கண்ணெதிரே கண்ட காட்சி அவருக்கு மிகுந்த ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தருவதாக இருந்தது.சாதாரண கட்டம் போட்ட சட்டையுடன் ஒரு நடுத்தர வயதினன் எதையோ பறிகொடுத்தவன் போல கடலை உற்று பார்த்து கொண்டிருந்தான்.திடீரென ஆகாசத்தை பார்த்தவாறு படுத்து விட்டான்.இது காதர் பாய்க்கு நன்கு பரிச்சயமான முகம் தான்.

"ஸ்ரீதர்,ஷூட்டிங் போகாம இங்க என்னப்பா பண்ற?" - காதர் பாய் கேட்டதும்,நிமிர்ந்து பார்த்தான் ஸ்ரீதர். இந்த நேரத்தில் அவன் இவரை இங்கே எதிர்பார்க்கவில்லை தான்.ஆனால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.சாதாரணமாக எழுந்தான்..

"எல்லாம் போச்சு..எல்லாம் நாசமா போச்சு பாய்.." - அமைதியான குரலில் நடந்தவற்றை சொன்னான் ஸ்ரீதர். காதர் பாய் மிகுந்த வேதனை அடைந்தார்..பிறகு ஸ்ரீதர் தொடர்ந்தான்,

"அன்னைக்கே அந்த சுகுந்தன் ஏத்த இரக்கமா கேட்டார்...'ஹீரோ யாரு,வாசுவான்னு'..அப்போ எதுவும் புரியல..இப்போ புரிஞ்சிகிட்டும் புண்ணியம் இல்லை" - பாய் ஏதோ சொல்ல வாயெடுக்க,ஸ்ரீதர் தொடர்ந்து பேசினான்,

"பாய் ஒரு அப்பன் அவன் பொண்ண அனுப்புறான் பாய்..சான்சுக்காக..தூ தூ..என்ன பொழப்பு பாய் இதெல்லாம்.."

"காதர் பாய்,சினிமான்னா ஏதோ படமெடுத்து சம்பாதிக்கிற தொழில்னு நினைச்சேன்..ஆனா இப்படி படுத்து சம்பாதிக்கிற தொழிலா இருக்கும்னு சத்தியமா நினைக்கல பாய்.."

"தம்பி கடவுள் உன்னை ரொம்பவே சோதிச்சிட்டாறு..நீ மனச தளரவிடாதே" - சமாதனம் சொல்ல பாய் தொடங்க, ஸ்ரீதர்,

"கடவுள்..ஹாஹாஹா..போங்க பாய்..நீங்களும் உங்க கடவுளும்.. "தமிழ் சினிமாவில் டாபர் மாமாக்களும் ப்ரோக்கர்களும் தான் வாழ முடியும்" - இப்படி அந்த சாகித்ய அகாடமி விருது வாங்கின எழுத்தாளர் எழுதினப்போ நான் நம்பலை பாய்..ஆனா இப்போ நம்புறன் பாய்.."

"ஸ்ரீதர்,தப்பு மட்டுமே பண்ண சினிமாவுக்கு வந்தவன் எவனும் வாழ்ந்ததா சரித்திரமே இல்லை..நீ நல்லவன்..லட்சியவாதி..நிச்சயம் அல்லா உனக்கொரு வழி காட்டுவாருப்பா"

ஸ்ரீதர் விரக்தியாக சிரித்தான்..பாய் தொடர்ந்தார்,

"தம்பி ரொம்ப நாளைக்கப்புறம் எனக்கு சினிமாவிலே நல்ல காலம் பொறந்திருக்கு..இப்போ ஒரு படத்திலே நான் ஒரு production manager மாதிரி,அதே சமயம் படத்த தயாரிக்கிரதிலே நானும் ஒரு பார்ட்னெர்(partner).. இந்த படம் மட்டும் ஜெய்ச்சிட்டா,என்னோட 25 வருஷ கஷ்டத்துக்கும் பலன் கிடைச்ச மாதிரின்னு வச்சிக்கோயேன்"

"உங்களுக்கு சுக்கிர திசை ஆரம்பிச்சிடிச்சு,எனக்கு bad time start ஆய்டிச்சி"

"நீ நினைச்சது நடக்கலைன்னா கடவுள் உனக்கு இதோட நல்லதா ஏதோ செய்ய போறாருன்னு அர்த்தம்" - பாய் சொல்லி முடிக்க, ஸ்ரீதரின் cellphone சிணுங்கியது..

"இந்த phone call கூட உன்னோட வாழ்க்கையவே மாத்தலாம்"

ஸ்ரீதர் முகத்தில் ஏதோ ஒரு விச்சித்திரமான மாறுதலை கவனித்தார் காதர், பயங்கரமாக ஸ்ரீதர் ஏதோ யோசித்தான்.. பிறகு சற்று உற்சாகத்துடன் புன்னகைத்தான்,புன்னகையுடனே,

"பாய் நீங்க ஒரு படத்திலே work பண்றதா சொன்னீங்களே, யாரோட படம் பாய் அது?"

".....phoneல யாரு?"

இரண்டுக்கும் பதில் சரண்.

                                                       *************************** 


"பாஸ் நம்ம படத்துக்கு அந்த ஸ்ரீதரையா  டைரக்டரா போட போறீங்க?" - விவேக்

"உன் கண் முன்னாடி தான அவனுக்கு phone பண்ணினேன்?" - சரண்

"பாஸ் யாராவது established டைரக்டர் கூட பண்லாமே?"

"விவேக், நான் அவனை பத்தி நல்லா விசாரிச்சிட்டேன்..அவன் தான் correct.. வாசு தன்னோட வேலைய இவன் கிட்ட காட்டிட்டான்..ஆனா இவன் சில 'compromise'க்கு எல்லாம் ஒத்துக்கலை.. அது மட்டும் இல்லை,இவன் கதை சொல்ற விதம்,இவனோட approachன்னு பல விஷயத்தையும் நான் கேள்விபட்டேன்.. இவன் சுகுந்தன் சார் கூட இவன் work பண்றப்போ நானே இவனை note பண்ணியிருக்கேன்"

"இது ஏதோ ரிஸ்க்னு தோணுது"

"அவன் கிட்ட ஒரு spark இருக்கு.."(தொடரும்..)

No comments: