Thursday, January 28, 2016

பெரிதாக்கப்படும் பழ.கருப்பையா விவகாரம்



நாம் எதிர்பார்த்ததைப் போலவே பழ.கருப்பையா நீக்கம் தான் இன்றைய தலைப்புச் செய்தி. பழ.கருப்பையா பல்வேறு பேட்டிக்களில் கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தும் விதமாகவே பேசியுள்ளார். அவர் குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கள் தான் என்ன? கட்சித் தலைமை இவர் கருத்தைக் கேட்கவில்லை. தொண்டர்கள் அடிமைகள் போல செயல்படுகின்றனர், பத்து நிமிடத்திற்கு ஒரு முறை மேசையை தட்டுகிறார்கள். இது அவர் 2011இல் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட போதே தெரிந்திருக்க வேண்டுமே? அதிமுக தொன்றர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள் இதற்கு முந்தைய அதிமுக ஆட்சியிலும் இதே போலத்தானே செயல்பட்டார்கள்?அப்போதும் கூட அவர்கள் மேசையைத் தட்டிக்கொண்டு தானே இருந்தார்கள்? அம்மா புகழ் பாடிக்கொண்டு தானே இருந்தார்கள்? இவர் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போதும் அப்படித் தானே இருந்தது அவர்கள் செயல்பாடு?

ஒரு சிலர் திரு கருப்பையாவைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஏதோ நான்கு ஆண்டுகள் அவர் பதவியை அனுபவித்து விட்டு, 'இப்போது' கட்சியை விமர்சனம் செய்வதாகக் கூறுகிறார்கள். இது தவறு. அவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே கட்சியையும் சரி மேலோட்டமாக அரசியலையும் சரி விமர்சித்துக் கொண்டே தான் வந்துள்ளார். ஆக இது ஏதோ திடீரென அவர் எடுத்த நிலைப்பாடு என்பது போல அவரை விமர்சிப்பது சரியில்லை. அவர் கடந்த ஆண்டும் கூட சில தினமணியில் சில விரும்பத்தாகாத கட்டுரைகள்(அதாவது, பொதுவாக திக/திமுகவினர் தான் அது போன்ற கட்டுரைகள் எழுதுவார்கள்) எழுதினார். அப்போதே அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்த்தேன். அவர் நீக்கப்பட வேண்டும் என்றும் கூட நானே கருத்து தெரிவித்தேன்.

ஆனால் தமிழக முதல்வரோ, எஸ்.வீ.சேகர் போன்றவர்களை எப்படி பதவிகாலம் முடியும் தருவாயில் நீக்கினாரோ அது போலவே கருப்பையாவையும் நீக்கி இருக்கிறார். இந்த பழ.கருப்பையா, எஸ்.வீ.சேகர் போன்றவர்கள் எல்லாம் ஒரே ரகம் தான். இவர்கள் போகாத கட்சியில்லை. இந்த கருப்பையா ஸ்தாபன காங்கிரஸ் தொடங்கி அதிமுக வரை சில-பல கட்சிகளைப் பார்த்தவர் தான்.

இவர் முன்வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு, கவுன்சிலர்கள் பணம் வாங்குகிறார்கள்,அமைச்சர்கள் அதிகார வர்க்கத்துடன் சேர்ந்து கொண்டு நாட்டையே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான். திரு கருப்பையாவின் இந்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது. ஊழலைத் தடுக்க வேண்டியது ஆளும் கட்சியின் கடமை என்பதில் சந்தேகமில்லை. ஏன் அவர்கள் ஆட்சியில் ஊழல் இல்லையா? போன்ற கேள்விகள் ஊழலை நியாயப்படுத்தும் செயலாகத் தான் அமையுமே தவிர நியாயமான விமர்சனத்திற்கானப் பதிலாகாது.

இவ்வளவு துணிவாக பேசும் பழ.கருப்பையாவிடம் சில நியாயமான கேள்விகளை முன்வைத்துத் தான் ஆக வேண்டும். இன்று கட்சி தன்னை சரியாக நடத்தவில்லை என்றும் ஒரு எம்.எல்.ஏவாகத் தான் தோற்றுவிட்டதாகவும் கூறும் திரு கருப்பையா துறைமுகம் தொகுதியில் போட்டியிட எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்? தன்னைவிட மூத்தத் தலைவர்கள் பலர் கட்சியில் இருந்தும், தனக்கு முன்னரே கட்சியில் சேர்ந்து உழைத்து வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பலர் இருந்தும் இவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது ஏன்? அன்று இந்தக் கேள்வியை இவர் கேட்கவில்லையே?

அமைச்சர் பணம் கேட்கிறார்,அதிகாரியுடன் சேர்ந்து கொண்டு அராஜகம் செய்கிறார்,கவுன்சிலர் பணம் கேட்கிறார் என்று குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் திரு கருப்பையா, ஏன் இந்த விவரங்களைக் கட்சி தலைமையின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை? சாதாரண தொண்டன் எழுதிய கடிதத்திற்கும் கூட அதிமுக தலைமையிடமிருந்து பதில் வருகிறது,கொடுக்கப்படும் புகாரின்மேல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. திரு.கருப்பையா அவ்வாறு ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டாரா? 3 லட்சம் கேட்கும் கவுன்சிலர் மீது ஒரு வழக்கு தொடுத்திருக்கலாமே? ட்ராபிக் ராமசாமி கூட வழக்கு தொடுக்கும்போது இவ்வளவு தைரியமாகப் பேசும் கருப்பையா அதைச் செய்யாமல் விட்டதேனோ?

ஏதோ அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முதல் முக்கியஸ்தர் பழ.கருப்பையா தான் போன்றதொரு மாயை உருவாக்கப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு, ' மோடி அவர்களுடன் முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நல்ல நட்பு உண்டு, ஆகையால் அவர் பாஜகவை ஆதரிக்கும் வாய்ப்புக்களே அதிகம்' என்று மலைச்சாமி I.A.S பேட்டி கொடுத்தார். கொடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இவரோ பல பேட்டிக்களில் கட்சியை மனம் போன போக்கில் கேலி செய்திருக்கிறார்.

இப்படி தினம்தோறும் பல கட்சிகளிலிருந்தும் பலர் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக என்பதால் அறிவிப்போடு அனைத்தும் முடிந்தது. திமுகவிலிருந்து குஷ்பூவை எவ்வாறு வெளியேறச் செய்தார்கள் என்பதை எளிதில் மறந்து விட முடியுமா? கொலைப்பழி சுமத்தித் தானே வைகோவை வெளியேறச் செய்தார்கள்?ஆகையால் பழ.கருப்பையா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது ஏதோ ஒரு அதிசயமான நிகழ்வு என்பது போல சித்தரிக்கப்படுவது பரபரப்புக்கு உதவலாமே தவிர உருப்படியாக எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்தாது.

இவரின் எதிர்பார்ப்புத் தான் என்ன? கட்சியைப் பற்றி இவர் எப்படிப் பேசினாலும், தலைமை அதனை சகித்துக் கொண்டு போக வேண்டும் என்பது தானா? அப்படிப்பட்ட ஒரு கட்சியும் இந்த நாட்டில் இருக்கிறது. ஆம்,அது பாஜக தான். அங்கே தான் யார் வேண்டுமானாலும் மனம் போன போக்கில் எதை வேண்டுமானாலும் பேசலாம். சத்ருகன் சின்ஹா முதல் அத்வானி வரை கட்சியையும், ஆட்சியையும், பிரதமரையும் இஷ்டம் போல் விமர்சிக்கலாம். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாயாது என்று நம்பிக்கையோடு தொடர்ந்து செயல்படலாம்.காங்கிரஸ் கட்சிக் கூட நாட்டுக்கெதிராக கருத்துக் கூறுபவர்களையும் ஹிந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களையும் தான் சகித்துக் கொள்ளுமே தவிர,கட்சித் தலைமையை விமர்சிப்பவர்களை அல்ல. ஆக இவரின் எதிர்பார்ப்புக்கேற்ற கட்சி பாஜக தான்.

ஆனால் திரு.கருப்பையா அங்கே செல்ல மாட்டார்.பாஜக என்றாலே ஒதுக்கி வைக்கத்தான் மதவாதத் தீட்டு ஒன்று இருக்கிறதே, போதாதா என்ன? இப்போது இந்த ஜனநாயகவாதி புதிதாகக் கையிலெடுத்திருப்பது மார்க்சிய சித்தாந்தங்களை. இன்று தந்தி தொலைக்காட்சியில் அருமையாகக் கூறினார், அதாவது நாட்டை ஆளுவது மோடி அல்ல என்றும் அடானி தான் என்றும் குறிப்பிட்டார். அப்படிக் குறிப்பிட்டதோடு நில்லாமல், இருப்பவனிடம் பிடுங்கினால் தான் என்ன தவறு என்று முத்து உதிர்த்திருக்கிறார்.

இவரின் பேச்சுக்களைக் கவனித்ததில், இவர் திமுக பக்கம் சாய்வதற்குத் தான் வாய்ப்புக்கள் அதிகம் என்று தோன்றுகிறது.திமுக பேச்சாளர் கண்ணதாசன் பழ.கருப்பையாவுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தார்.. இதே பழ.கருப்பையா 6 ஆண்டுகளுக்கு முன்பு 'தமிழ்த் தாய் வரமாட்டாள்' என்ற தலைப்பில் துக்ளக் மற்றும் தினமணியில் கட்டுரை எழுதினார். அந்த கட்டுரையில்  'ஈழத்தில் தமிழர்களை கொன்று குவித்து, கோவையில் என்ன கொண்டாட்டம் வேண்டி இருக்கிறது' என்று எழுதினார். மேலும் ஜெயா தொலைகாட்சியில் கலைஞரை கடுமையாக விமர்சித்தார். அப்போது ரவுடிகளால் தாக்கப்பட்டார். இந்த ரவுடிகளை ஏவி விட்டது திமுக தலைவர் கருணாநிதி தான் என்று பகிரங்கமாகக் கூறினார். அதற்கு, திமுக இன்று வரை மறுப்பு கூட தெரிவிக்கவில்லை. இன்று அந்த திமுகவினர் கட்சி நடத்துவதைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் பேசுகிறார்கள்.


இது ஏதோ பழ.கருப்பையா மீது வெறுப்பைக் கொட்டித் தீர்ப்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை என்று யாரும் நினைக்க வேண்டாம். எனக்கு அரசியல் கட்டுரைகள் எழுத ஆர்வம் ஏற்பட பழ.கருப்பையா அவர்களின் கட்டுரைகள் தான் காரணம். அதனை இங்கேயே நான் சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்திருந்தேன். இன்றளவும் கூட, பழ.கருப்பையா மீது வைத்திருக்கும் மதிப்பில் துளி கூட குறையவில்லை. ஆனால் அவர் திமுகவில் இணைந்தால் அவருக்கு மரியாதை கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.







No comments: