Monday, January 23, 2012

மாஸ் மீடியா - 7

மாஸ் மீடியா -7
                                                            Start Camera Action


முந்தைய பாகங்களைப் படிக்க இங்கே செல்லவும்(click here)


உதவி இயக்குனராக பணியாற்றி கொண்டே ஸ்ரீதர் தனக்கு தெரிந்த திரையுலக பிரமூகர்கள் மூலம் தனியாக படம் இயக்க வாய்ப்பு கேட்டு கொண்டுத் தானிருந்தான்.ஒரு படம் இயக்க கதை மட்டுமே போதுமென நினைத்து கோடம்பாக்கத்துக்கு வந்த ஸ்ரீதருக்கு, தன் எண்ணம் தவறு என்று விளங்கவே சில வருடங்கள் தேவைப்பட்டது. ஒரு திரைப்படம் வெற்றி பெற நல்ல கதை மட்டுமே போதாது,தரமான இசை,கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர்கள், சிறப்பான ஒளிப்பதிவு,சாமார்த்தியமான மார்க்கெட்டிங் என பல விஷயங்களும் எத்தனை அவசியம் என்பதை உணர்ந்தான் ஸ்ரீதர்.நேரடியாக உதவி இயக்குனராகாமல் பல வித இன்னல்களுக்கும் ஆளாகி, கோடம்பாக்கத்தில் இருக்க ஏதோ ஒரு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு,ஹீரோ,ஹீரோயின்,இயக்குனர், ப்ரொடக்ஷன் மேனேஜர் என அனைத்து தரப்பினருக்கும் டீ-காபி கொண்டுவருவது,ஆப்பிள் ஜூஸ் கொண்டுவருவது, கார் துடைப்பது போன்ற பல எடுபிடி வேலைகளும் செய்த பிறகு தான் இன்று உதவி இயக்குனராகி இருக்கிறான். இப்படி பல தரப்பினருடனும் பழகியதால் ஒவ்வொரு தொழிலாளியின் கஷ்டத்தையும் உணர்ந்திருந்தான்.

ஒரு ஸ்டன்ட் மாஸ்டர் வயதான ஹீரோவுக்கு ஒரு விதமான சண்டைக்காட்சிகள் அமைக்க வேண்டும், நடுத்தர வயதுள்ள ஹீரோக்களுக்கு ஒரு விதமாகவும் மிக இளம் வயதினராக இருப்பவர்களுக்கு ஒரு விதமாகவும் அமைக்க வேண்டும்.இதில் சில ஹீரோக்கள் தங்கள் 'ரசிகர்களை' திருப்தி படுத்த அந்தரத்தில் பறந்து கொண்டே வில்லன்களை அடிப்பது போன்ற காட்சிகளும் வேண்டுமென்று demand செய்வதுண்டு.ஒரு சில நடிகர்கள் அபாயகரமான சண்டைக் காட்சிகளிலும் கூட doupe இல்லாமல் தாங்களே நடிக்கவும் செய்வார்கள்.அப்படி doupe இல்லாமல் இந்த நடிகர் நடித்து விட்டார் என்று அதையே கூட ஒரு விளம்பரப் பொருளாக்கி அதை வைத்தும் publicity தேடும் கதைகளும் கோடம்பாக்கத்தில் இல்லாமல் இல்லை.ஒரு சில நடிகர்கள் 40 மாடி கட்டிடத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சிகளில் risk  இல்லாமல் doupe போட்டு நடித்து விட்டு, "'doupe' போடாமல் நானே நடித்தேன் என்று சுய தம்பட்டம் அடித்து கொள்ளும் நகைச்சுவைகளும் இல்லாமல் இல்லை.

ஆங்கிலப்படங்களை அப்படியே தமிழில் உல்டா செய்யும் இயக்குனர்களும் இல்லாமல் இல்லை.அந்த படங்களில் வரும் வசனங்களைக் கூட அப்படியே தமிழில் மொழி மாற்றம் செய்து படமெடுத்து விட்டு தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு உயர்த்தி விட்டதாக மார்தட்டி கொள்வதும் ஒரு வித  fashion இப்போது. ஒரு முறை தன் குருநாதர் சுகுந்தனே சில காட்சிகளை ஒரு கொரிய படத்திலிருந்து அப்படியே உல்டா செய்து தனது படத்தில் வைத்திருந்ததை கண்ட ஸ்ரீதருக்கு ஒரு வித disappointment. அப்போது இப்படித்தான் சுகுந்தன் பதிலளித்தார்,

"ஸ்ரீதர், 'The secret to creativity is knowing how to hide your sources.' - இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது. இதெல்லாம் ஒன்னும் தப்பில்லை.. இங்க யாருடைய கதையும் 100% உண்மையான கதை இல்லை."

"அதெப்படி?" - ஸ்ரீதர்

" There will be an inspiration behind every imagination. அந்த inspiration எதுவா வேணும்னாலும் இருக்கலாம்.ஒருத்தர் வாழ்க்கைல நடந்த சம்பவமோ,இல்லை நாம படிச்ச புஸ்தகமோ இல்லை நாம பார்க்கிற ஏதோ ஒரு விஷயமோ..இப்படி எதுவா வேணும்னாலும் இருக்கலாம்..ஒத்துக்குறியா ஸ்ரீதர்?"


ஸ்ரீதர், ஆமோதிப்பது போல் தலையசைத்தான்.

"அதே தான் இதுவும்.So எல்லாமே ஒரு வித inspiration தானே ஸ்ரீதர்" - இப்படி பேசி ஸ்ரீதரின் வாயை அடைத்து விட்டார் சுகுந்தன்.

இத்தனை விஷயங்களை பார்த்ததாலோ என்னவோ சினிமாவைப் பற்றி முழுவதும் புரிந்து கொண்டு விட்டதாக எண்ணினான் ஸ்ரீதர்.அவனுடைய வாய்ப்பு வேட்டை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் ஒரு எதிர்பாராத செய்தி அவனுக்காக காத்திருந்தது.

ஸ்ரீதரின் Cellphone ஒலித்தது.அறிமுகமில்லாத நபரிடமிருந்து அழைப்பு.ஒரு வேளை Kotak Mahindra வங்கியின் சேமிப்பு திட்டத்தை பற்றி பேச, வரும் வழக்கமான இம்சையோ என நினைத்து அழைப்பை துண்டிக்க நினைத்தான்.ஆனால் அப்படிச் செய்யாமல் அழைப்பை ஏற்று பேசினான்.

பேசி முடித்த சில நிமிடங்கள் ஸ்ரீதர் ஆகாயத்தில் பறப்பதை போலவே உணர்ந்தான்.இது நிஜம் தானா? இல்லை இன்னும் உறக்கத்தில் தான் இருக்கிறோமா என கூட தன்னை கிள்ளி சோதித்து கொண்டான்.பெற்ற இன்ப அதிர்ச்சியால் சிறிது நேரம் செய்வதறியாமல் தவித்த ஸ்ரீதர் பிறகு சுதாரித்து கொண்டு சுகுந்தன் வீட்டில் இருக்கிறாரா என தெரிந்துகொண்டு,உடனே அவர் வீட்டுக்கு புறப்பட்டான்.

"என்னய்யா ஸ்ரீதர் இப்படி திடீர்ன்னு வந்து நிக்கிற? என்ன சமாச்சாரம்?" - சுகுந்தன்

"சார் ஒரு முக்கியமான விஷயம்.ரொம்ப சந்தோஷமான விஷயம் சார்.கண்ணப்பன் சார் எனக்கு phone பண்ணார்.."

"சீக்கிரம் சொல்லுப்பா என்ன விஷயம்..நல்ல விஷயம்னு வேற சொல்ற..கேட்கிறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கேன்"

"நான் எழுதி வைச்சிருந்த ஒரு கதைய கொஞ்ச நாளைக்கு முன்னாடி கண்ணப்பன் சார் கிட்டே narrate பண்ணியிருந்தேன்...அது விஷயமாத்தான் phone பண்ணாரு"

என்ன பேசியிருப்பார்கள் என ஒருவாறு ஊகித்துவிட்டார் சுகுந்தன்.ஆனாலும் ஸ்ரீதர் பேசி முடிக்கும் வரை அமைதி காத்தார்..ஸ்ரீதர் தொடர்ந்தான்..

"அவர் அடுத்து தயாரிக்கிற படத்துக்கு என்னையே டைரக்டரா போடறதா முடிவு பண்ணிட்டாங்களாம் சார்.. இத்தனைக்கும் என்ன recommend பண்ணது 'Silver Star' வாசு தானாம்..கூடிய சீக்கிரம் ஷூட்டிங் ஆரம்பிக்க போறாங்களாம்..என்னை நாளைக்கு அவரோட officeல வந்து பார்க்க சொல்லியிருக்காரு.."

"தனியா படம் டைரக்ட் பண்ண போறியா?" - சுகுந்தன் உண்மைலேயே அதிர்ச்சி அடைந்துத் தான் போனார்.

"ஆமாம் சார்..திடீர்னு இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சதும் எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை..எனக்கு சினிமாவிலே நுழையறதுக்கு pass வாங்கிக்கொடுத்தவரு நான் பெருசா மதிக்கிற காதர் பாய்..ஆனா சினிமான்னா என்னன்னு கத்து கொடுத்த குரு நீங்க தான் சார்..அதான் உங்க கிட்டே ஆசீர்வாதம் வாங்கிட்டு போலாம்னு வந்தேன்"

"உனக்கு சினிமா பத்தி என்ன தெரியும்?ஒரு படம் தனியா டைரக்ட் பண்றதுக்கு தேவையான அனுபவம் உனக்கு  இல்லை..நீ இன்னும் நிறைய கத்துக்கணம்..அதுவும் கண்ணப்பன் தயாரிக்கிற படத்துலயா டைரக்டரா அறிமுகமாகுற?இது நல்லதுக்கே இல்லை" - இப்படித் தான் சொல்ல நினைத்தார் சுகுந்தன். ஆனால் தான் இதைச் சொன்னால் ஸ்ரீதர்,கிடைத்த வாய்ப்பை தான் கெடுப்பதாகவும்,ஸ்ரீதரின் முன்னேற்றத்தை தடுப்பதாகவும் தான் எண்ணிக்கொள்வான்.அதனால்,

"ரொம்ப சந்தோஷம் தம்பி.நீ நிச்சயம் பெரியாளா வருவா..உனக்கு என்னோட ஆசீர்வாதம் எப்போவும் உண்டு..வாழ்த்துக்கள்"

ஸ்ரீதர்,சுகுந்தனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.தட்டி கொடுத்து எழுப்பினார் சுகுந்தன்.விடை பெற்று சென்ற ஸ்ரீதர் வாசலை அடைந்த போது,திடீரென சுகுந்தன்,

"ஸ்ரீதர்,இந்த படத்துக்கு உன்னை யாரு recommend பண்ணதா சொன்னே?"

"'சில்வர் ஸ்டார்' வாசு சார்..இந்த படத்துக்கு ஹீரோவும் அவர் தான்"

                                                     ***************************

குடித்து விட்டு படுக்கையறையில் விரக்தியாக விழுந்து கிடந்தான் சரண்.இப்போது அவனிடம் மிச்சமிருப்பது இந்த வீடும் தன்னுடைய காரும் மாட்டும் தான்.அரசியல் ஒரு மனிதனின் வாழ்க்கையை பல விதத்தில் திசை திருப்பும் வல்லமை கொண்டது.அதுவும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரென்றால் கேட்கவே வேண்டாம்.அரசியலுக்கு வந்தாலும் குற்றம் வராவிட்டாலும் குற்றம்.அரசியல்வாதி ஆதரித்தாலும் சரி, எதிர்த்தாலும் சரி,ஒரு வித ஆபத்து நம்மை நெருங்குகிறது என்றே பொருள்.கடும் புயல் ஏராளமான நாச காரியங்களை செய்த பிறகு நிலவும் ஒரு வித அசவுகரியமான நிலை தான் இங்கும் நிலவுகிறது.தர்மராஜ் தனது தந்தைக்காக பிரச்சாரத்திற்காக அழைத்த போது அதை மறுத்து விட்டான் சரண்.ஆனால் தர்மராஜோ விடாமல் வற்புறுத்த தொடர்ந்து சரண் மறுக்க,வாக்குவாதம் எல்லை மீறி சென்று விட்டது.இருவருக்கும் இடையில் நடந்த இந்த சொற்போரால் கடும் பாதிப்புக்கு உள்ளானதென்னவோ சரண் தான்.

தன்னுடைய 'பன்னீர் செல்வன்' படம் தர்மராஜ் தரப்பால் கிடப்பில் போடப்பட்டது.சோழ ராஜாவாக தான் நடிக்க இருந்த 'அதிசய கனவு' படமும் பகல் கனவாகிவிட்டது.படம் தற்காலிகமாக தான் நிறுத்தப்பட்டுள்ளது என்று பரவலாக பேசி கொண்டாலும்,இனி அந்த படம் தொடர்வதற்கு எந்த ஒரு சாத்தியக்கூறும் இல்லை.தர்மராஜோ அரசியல்வாதி,தனது புத்தியை காட்டி விட்டான்.

அது மட்டுமில்லை ஒரு வேளை வேற படம் ஒத்துக்கிட்டாலோ இல்லை இந்த படத்திலே நடிக்க மறுத்தாலோ படத்துக்காக ஆன மொத்த செலவும் வட்டியோட திருப்பி கொடுக்கனம்


இப்படி எழுதியிருந்த ஒப்பந்தத்தில் சரண் கையெழுத்து இட்டதால் அவனிடமிருந்து பல கோடி ருபாய் பிடுங்கி விட்டது தர்மராஜ் தரப்பு.மேற்கொண்டு சரனை வைத்து எந்த ஒரு தயாரிப்பாளரும் படமெடுக்க முன்வராத அளவிற்கு தர்மராஜ் தரப்பு வேலை பார்த்து விட்டது.தற்செயலாக சரணின் மற்ற சில வியாபாரங்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்தன.தன்னுடைய சொத்துக்கள் பலவற்றை விற்றுத் தான் அவற்றிற்கு ஈடு கட்ட வேண்டியிருந்தது.சுருக்கமாகச் சொன்னால் இன்று சரண் ஒரு 'மாடி வீட்டு ஏழை'.


இது போதாதென்று சரணுக்கு பிரபாவதி என்ற நடிகையுடன் இருந்த தொடர்பையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டான் தர்மராஜ்.அந்த பிரபாவதியை தனது பக்கம் சேர்த்து கொள்ள சில லட்சங்கள் செலவழித்த தர்மராஜ், அவளை வைத்தே சரணுக்கு இருந்த மதிப்பை முழுவதுமாக சீர்குலைத்தான் .இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் சில படங்களை, 'மூன்றாவது கண்' பத்திரிக்கையின் மூலம் வெளியிட செய்தான் தர்மராஜ்.இது போன்ற படங்களை வெளியிடுவதையே தொழிலாக கொண்ட அந்த பத்திரிகை,இந்த புகைப்படங்களை வைத்து இவர்களுக்குள் இருந்த உறவை எத்தனை ஆபாசாமாக சித்தரிக்க முடியுமோ அத்தனை ஆபாசாமாக சித்தரித்து ஒரு சில கட்டுரைகளை வெளியிட்டது.இது சரண் தான் செய்தான் எனவும்,தான் மிகவும் நம்பிய சரண் தன்னை ஏமாற்றி விட்டான் எனவும் பத்திரிக்கைகளில் கண்ணீர் மல்க பேட்டியளித்தாள் பிரபாவதி.இந்த பேட்டிக்கு பின்னணியில் இருந்ததும் தர்மராஜ் தான்.


பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இழந்து,மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தையும் இழந்து,அடுத்து எந்த பட வாய்ப்புகளுமின்றி ஒரு ஜடம் போலத்தான் இருந்தான் சரண்.வெந்த புண்ணில் வேல் பாய்ந்ததைப் போல,பிரபாவதியுடன் தனக்கிருந்த தொடர்பு வெளிப்பட்டதால், மீதமிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய் விட்டது. இன்று சரண் ஒரு தனிமரம்.அவனுக்கு இப்போது இரண்டே இரண்டு நண்பர்கள் தான்.ஒன்று மது மற்றொன்று விவேக், ஆனால் இவர்கள் இருவரில் சரண் தனக்கு மிக ஆறுதலாக கருதுவது மதுவைத்தான்.உண்மையில் சரணுக்கு நன்மை செய்வதென்னவோ விவேக் ஒருவன் தான்.அனைத்தையும் சரண் இழந்து விட்டபோதிலும் இன்று சரணிடம் இருப்பது தன் வீடு ஒன்று தான்.அதை காப்பாற்றிய புண்ணியம் விவேக்கைத் தான் சேரும்.இப்போதும் கூட தன்னால் இயன்ற வரை சரணுக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.நாய்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் நன்றி உணர்வு உண்டென்று விவேக்கைப் பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

"பாஸ் பாஸ்..எழுந்திறீங்க..இங்க பார்த்தீங்களா?இந்த நியுச?" - அரக்க பறக்க ஓடி வந்தான் விவேக்.சற்றும் அலட்டி கொள்ளாமல் எழுந்தான் சரண்.'தண்ணீரில் மிதப்பது' என்று கூறுவார்களே,அது சரணுக்குத்தான் பொருந்தும்.முழு மப்பில் எழுந்து உட்காந்தான்.

"என்னடா நியுசு..ஏன் இப்படி பறக்கிற,நிம்மதியா தூங்கக்கூட விடாதிங்க.." - ஏதோ எரிச்சலுடன் பேசினான் சரண்.

"பாஸ் உங்க அதிசய கனவு படத்த drop பண்ணிட்டாங்க.." - என தொடங்கிய விவேக்கை இடைமறித்து

"அது தான் எப்போவோ தெரியுமே..என்னவோ புது விஷயம் மாதிரி பேசற..இத சொல்லவா என் தூக்கத்தை கெடுத்த.."

"இல்லை பாஸ்..முழுசா கேளுங்க..உங்க படத்தை drop பண்ணிட்டு இப்போ திரும்ப தர்மராஜ் கம்பனிக்கு நீலகண்டன் ஒரு படம் டைரக்ட் பண்றாராம்.."

"அவன் எக்கேடு கேட்டு நாசமா போகட்டும்..இப்போ அதுக்கென்ன"

"அதுல அந்த தர்மராஜே ஹீரோவா நடிக்கிறானாம்..என்ன அநியாயம் பாஸ் இது"

"பரதேசி நாய்..அவன் மூஞ்ச பாரேன் விவேக்..எப்படி இருக்குன்னு" - ஆத்திரமும் விரக்தியும் கலந்த ஒரு சிரிப்புடன் சரண் தொடர்ந்தான்,

"எரிஞ்சிட்டிருக்கிற பொணத்தை(பிணத்தை), எழுப்பி அதுக்கு powder அடிச்சு விட்டா எப்படி தெரியுமா இருக்கும், இல்லை எப்படி இருக்கும் தெரியுமா? இதோ பேப்பர்ல சிரிசிகிட்டே pose கொடுத்திருக்கான் பாரு இந்த எச்சக்கலை பையன் இவன மாறித்தான் இருக்கும்..ஏன்டா இவனுங்க எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே பட மாட்டானுங்கள டா..கையில காசு,ஆட்சி, அதிகாரம் எல்லாம் இருக்குன்னு கண்ட கழிசாட பசங்களும் ஹீரோ ஆயிடறாங்க.."

"பாஸ் ரிலாக்ஸ்.." - சரனை சமாதானப்படுத்த முயன்றான் விவேக்,பலனில்லை..மீண்டும் மது அருந்திவிட்டு தொடர்ந்தான் சரண்,

"இந்த புறம்போக்கு நாயிக்கு நடிப்புன்னா என்னன்னு தெரியுமா விவேக்?இவனையும் வைச்சு படமெடுக்க ஒத்துகிட்டானே அவன சொல்லனம்..இல்லை பாவம் அவன் என்ன செய்வான்..இந்த கம்மனாட்டி பைய மிரட்டியிருப்பான்..ஒரே வார்த்தைல சொல்லட்டுமா? இந்த தர்மராஜ் ஒரு 'genuine bastard'..தா..." - வெறுப்பின் உச்சத்துக்கே போன சரணை,விவேக் இடைமறித்து,

"பாஸ் cool down பாஸ்..நீங்க தர்மராஜை இப்படி திட்டுவீங்கன்ற காரணத்துக்காக இதை நான் உங்க கிட்ட சொல்லலை..நீங்க நடந்ததையே நினைச்சி இப்படி வீட்டுக்குள்ளயே கிடந்தீங்கன்னா அதனால உங்களுக்கு ஒரு நல்லதும் நடக்க போறதில்லை"

"இல்லைன்னா மட்டும்..அட போயா"

"பாஸ் நீங்க கொஞ்சமாச்சு வெளி உலகத்தை பார்க்கணம்னு சொல்றேன்..உங்களுக்கு அட்வைஸ் பண்றதுக்கு எந்த தகுதியும் இல்லாதவன் தான் நான்..ஒத்துக்கிறேன்...ஆனா உங்க நண்பனா சொல்றேன்,தயவு செய்து நாலு இடத்துக்கு போயிட்டு வாங்க..எவ்வளவு பிஸி schedule இருந்தாலும் கூட நீங்க இளையராஜாவோட திருவாசகம் சிம்போனிய கேட்காம ஒரு நாள் கூட  இருந்ததில்லை..திரும்பவும் இதிலே எல்லாம் கவனம் செலுத்தனம்.. இது என்னோட request" - அடக்கமாக பேசி முடித்தான் விவேக்..

மீண்டும் மது அருந்தத் தொடங்கினான் சரண்.


(தொடரும்...)



No comments: