Friday, December 30, 2011

மாஸ் மீடியா - 6

மாஸ் மீடியா -6
                                                            Start Camera Action


முந்தைய பாகங்களைப் படிக்க இங்கே செல்லவும்(click here)

 'திசய கனவு' படத்தில் விக்ரம சோழன் கதாபாத்திரத்தில் கம்பீரமாய் தோன்ற வேண்டுமென்பதற்காக கடும் உடற்பயிற்சி மேற்கொண்டான்.ஒரு சில காதல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டிருந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடித்துக்கொள்ளப்பட்டது.இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கவில்லை. இதற்கிடையில் தீபாவளிக்கு வெளிவரவிருந்த தனது மாஸ் படமான 'பன்னீர் செல்வன்' படத்தை தர்மராஜே வாங்கிவிட்டார். படம் திட்டமட்டபடி தீபாவளிக்கு வெளியாகவில்லை. "படத்துக்கு promotion போதாது சரண்..நம்ம பேனர்ல மார்க்கெட் பண்ணா சப்ப படம் கூட சுப்பர் ஹிட்டாகும்.. அதனால படத்த அடுத்த மாசம் ரிலீஸ் பண்ணிடலாம்..அதுக்குள்ள நல்லா மார்க்கெட் பண்ணிடலாம்...." - என்று கூறி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தார் தர்மராஜ். இதில் சரணுக்கு சற்றும் உடன்பாடில்லை தான்.ஆனாலும் வேறு வழியில்லை ஏனெனில்,நல்ல விலை என்றதும் அந்த படத்தின் தயாரிப்பாளர், தர்மராஜுக்கு விற்றுவிட்டார்.

விவேக்கை கடுமையாக திட்டியதை எண்ணி வருந்தினான்.ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்பொழுது நடந்த வாக்குவாதம்:

"பாஸ் இந்த படத்த ஒத்துக்காதிங்க..ஆக்ரீமென்ட்ட நான் முழுசா படிச்சிட்டேன்.."  - விவேக்

"அப்போ நான் படிக்கலன்னு சொல்லுறியா?" - சரண்

"பாஸ் argue பண்றதுக்கு இது நேரமில்லை..இந்த படம் முடிக்கிறவரைக்கும் வேற எந்த படமும் commit  ஆகக்கூடாதுன்னு போட்டிருக்கு..அது மட்டுமில்லை ஒரு வேளை வேற படம் ஒத்துக்கிட்டாலோ இல்லை இந்த படத்திலே நடிக்க மறுத்தாலோ படத்துக்காக ஆன மொத்த செலவும் வட்டியோட திருப்பி கொடுக்கனம்னு போட்டிருக்கு..இது நல்லதுக்கே இல்லை.."

"விவேக்,இந்த படத்தோட பட்ஜெட் அதிகம்..அதனால ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும்..இதையெல்லாம் சகிச்சிகிட்டா தான் அடுத்த leagueல enter  ஆக முடியும்" - சற்று கடுமையாகவே சொன்னான் சரண்.

"அதுக்கு சொல்லல பாஸ்..நீங்க நான் சொல்றத புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க.."  - என தொடர்ந்த விவேக்கை கோபமாக பார்த்த சரண்,

"எனக்கென்ன சினிமானா ஒண்ணுமே தெரியாதுன்னு முடிவு பண்ணிட்டியா விவேக்?You are a smart  PA.Agreed!!! பட் நீ என்கிட்டே வேலை பார்க்கிற அதை மறந்திடாதே..நீ இந்த 4  வருஷமாத்தான் எனக்கு PA.ஆனா அதுக்கெல்லாம் முன்னாடியே நான் சினிமாவிலே நிறைய பார்த்தவன்.இன்னைய தேதிக்கு சரண் படம்னா ஒரு மார்க்கெட் இருக்கு.. நீ எனக்கு புத்தி சொல்றத விட்டுட்டு உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு.." - படபடவென பேசி பின் அமைதியானான்..விவேக்கும் மறுத்து பேசவில்லை..கடும் புயல் மழைக்கு பின் நிலவும் அமைதியைப் போல், அந்த அறையில் ஒரு வித அமைதி நிலவியது.பிறகு சுதாரித்து கொண்ட விவேக்,

"Sorry  பாஸ்..இனிமேல் இப்படி நடக்காது" - என்று பணிவாகவே பதிலளித்து விட்டு நகர்ந்தான்.

இப்படி பேசியதற்காக பல முறை வருத்தப்பட்டான் சரண்.தற்சமயம் படப்பிடிப்பும் இல்லை,வெளியாக வேண்டிய தனது படமும் வெளியாகவில்லை.இவை எல்லாம் சரணுக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது.இது ஒருபுறமிருக்க தயாரிப்பாளர் தர்மராஜ் தனது தந்தைக்காக தேர்தல் பணிகளை கவனிப்பதிலேயே மும்முரமாக இருந்தார். சரணுக்கும் அரசியலில் சற்று ஆர்வம் உண்டென்றாலும் அதைப்பற்றி சிந்திக்க இது நேரமில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தான்.இப்படியே தனது தேதியை வீணடிக்க கூடாதென்று நினைத்தான், தர்மராஜிடம் படப்பிடிப்பை துரிதபடுத்தும்படி கேட்க வேண்டுமென்று முடிவெடுத்தான்.தர்மராஜை அழைக்க தனது கைப்பேசியை எடுத்தான்,ஆனால் அது உடனே ஒலிக்க தொடங்கிவிட்டது.அழைத்தது சாக்ஷாத் தர்மராஜே தான்.உடனே சரணை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.

உடனே புறப்பட்ட சரண்,தர்மராஜின் அலுவலகத்தை அடைந்தான்.

"சரண் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனம்" - ஒரு வித்தியாசமான தொனியில் பேசினார் தர்மராஜ். எதுவும் புரியாமல் விழித்தான் நமது ஹீரோ சரண்.

"நம்ம தொகுதியிலே இடைத்தேர்தல் வருது.இந்த முறை அப்பா இங்க MP  போஸ்ட்டுக்கு நிற்கிறாரு.."

"சரி,அதுக்கு?" - ஒன்று புரியாத சரண்

"Opposition candidate கொஞ்சம் ஸ்ட்ராங்கான ஆளு தான்.அதனால நீங்க ஒரு உதவி செய்யணம்"

"நான் என்ன உதவி செய்ய முடியும் தர்மராஜ் சார்?எனக்கும் அரசியலுக்கும் ஏழாம் பொருத்தம்" - தெளிவாகவே சொன்னான் சரண்.

"சரண்,அரசியல்ல ரொம்ப முக்கியமான விஷயம் கூட்டம் சேர்க்கிறது தான்..என்னதான் காசு கொடுத்தும், பிரியாணி வாங்கி கொடுத்தும் கூட்டம் சேர்த்தாலும்,அது எல்லா கட்சிக்காரனும் செய்யறது தான்.நாம எப்போவுமே கொஞ்சம் differentன்னு உங்களுக்கு தெரியுமே"

"அதுக்கு என்னை என்ன செய்ய சொல்றீங்க Mr.தர்மராஜ்?" - என்று கேட்டான் சரண்.சரணுக்கு தர்மராஜின் நோக்கம் ஓரளவுக்கு புரிய ஆரம்பித்தது.

"நீங்க மக்கள் கிட்ட கொஞ்சம் பாப்புலரான ஆளு..நம்ம கூட படம் வேற பண்றீங்க..உங்களுக்குன்னு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு..நீங்க மட்டும் அப்பாவுக்காக இங்க பிரச்சாரம் பண்ணா வரலாறு காணாத வோட்டு வித்தியாசத்துல அப்பா ஜெய்ச்சிடுவார்"

                                                     ***************************


தவி இயக்குனராக நன்றாக தேர்ச்சி பெற்றிருந்தான் ஸ்ரீதர்.ஊரிலிர்ந்து கிளம்பும்போது இயக்குனராகியே தீர வேண்டுமென்கிற லட்சியத்தில் தான் கிளம்பினான்.ஒரு திரைப்படத்தை இயக்குவது என்றால் ஏதோ மேடை நாடகத்தை இயக்குவது போலத்தான் என்றெண்ணி கிளம்பி வந்த ஸ்ரீதருக்கு, டைரக்ஷனில் எத்தனை இருக்கிறதென்பது உதவி இயக்குனராக பணிபுரியும்போது தான் புரிந்தது. இரவும் பகலும் ஓயாமல் உழைத்தாலும் சரி,கதாநாயகனின் காலணிக்கு பாலிஷ் போடுவதென்றாலும் சரி, கதாநாயகியின் நாயை கவனித்துக் கொள்வதென்றாலும் சரி சற்றும் கலக்கமடைந்துவிடவில்லை.இயக்குனராகியே தீரவேண்டுமென்கிற தனது லட்சியத்தை அடையும் நாள் நெருங்கிவிட்டதென்றே நினைத்தான்.

அப்போது இசையமைப்பாளருடன் சுகுந்தன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.படத்தின் முழுக்கதையையும் விவரித்துக் கொண்டிருந்தார்,நீண்ட நேரம் உரையாடிய பிறகு வந்தார், ஸ்ரீதருக்கு இது மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.

"ஸ்ரீதர் சொன்ன மாதிரி நூறு பொம்மை கழுதையை கொண்டு வந்துட்டியா?" - சுகுந்தன்

"எல்லாம் ரெடி சார்.நாளைக்கு ஷாட் எடுக்கறப்போ எல்லாத்தையும் வெளியில கொண்டு வந்துடலாம்." -  ஸ்ரீதர்

"Good good!!!சரி வா இப்போ கிளம்பலாம்..காலையில சீக்கிரம் வர வேண்டியிருக்கும்" - இருவரும் காரில் அமர்ந்தார்கள்.

"சார் எனக்கொன்னு மட்டும்  சுத்தமா புரியவே இல்லை" - ஸ்ரீதர்

"என்ன பா..என்ன புரியல?" - சுகுந்தன்

"மியுசிக் டைரக்டர் கிட்ட பாட்டு வர்ற situation மட்டும் explain  பண்ணா போதாதா?எதுக்கு மொத்த ஸ்க்ரிப்ட்டும் விளக்கணம்?" - ஸ்ரீதர்

"என்னப்பா இப்படி கேட்டுட்டே?நீ நினைக்கிற மாதிரி மியுசிக்னா சும்மா ஏதோ ரெண்டு டூயட்,ஒரு கில்மா பாட்டு,ஒரு டப்பாங்குத்து போட்டுட்டு போறதில்லை.. Music is lot more than தட்" - சுகுந்தன்

"என்ன சார்,2.30 மணி நேர சினிமாவிலே ஒரு அரைமணி நேரம் தான் பாட்டு..அதுக்கு இவ்வளவு importance அவசியமா?" - ஸ்ரீதர்

"ஸ்ரீதர்,இது ரொம்ப தப்பான ஒரு approach ..First  நீ சில விஷயத்த புரிஞ்சிக்கோ..ஒரு சூழ்நிலைக்கேற்ப பாட்டு போடறது ஒரு கலை..இந்த ஆர்டிஸ்ட்டுக்கு இந்த singer  பாடினா நல்லா இருக்குமென்கிற அளவுக்கு ஒரு இசையமைப்பாளர் யோசிக்கணம்.அதோட முக்கியம் சிச்சுவேஷனோட கரெக்டா பொருந்தனம். உதாரணத்துக்கு நீ வெள்ளி விழா படத்துல வர்ற "காதோடு தான் நான் பாடுவேன்"(click here to watch the song) பாட்ட எடுத்துக்கோ.. அந்த பாட்டு கேட்டிருக்கல்ல?"

"கேட்டிருக்கேன் சார்..நம்ம L R ஈசுவரி மேடம் பாடினது"

"Yes ..மியுசிக் டைரக்டர் யாருன்னு தெரியுமா?"

"என்ன சார் இது தெரியாதா..V Kumar தானே!!"

"கரெக்ட்..எங்க MSVன்னு சொல்லிடுவியோன்னு பயந்தேன்..அந்த பாட்டு எவ்வளவு melodiousஆ இருக்கும்.. அந்த பாட்டுக்கு,குமார் நினைச்சிருந்தா சுசீலா மேடமை பாட வைச்சிருக்கலாம்..ஆனா அவர் கொஞ்சம் வேகமான பாட்டெல்லாம் பாடுற ஈஸ்வரி மேடைமத் தான் select  பண்ணார்..அதான் ஒரு இசையமைப்பாளரோட sense of  observation..சுசீலா குரலோட ஈஸ்வரி மேடம் குரல் தான் அந்த பாட்டுக்கு பொருத்தமா இருக்கும்னு நான் சொல்றேன்..நீ என்ன சொல்ற?"

"இது வரைக்கும் நான் இப்படி யோசிச்சதில்லை..ஆனா L R ஈஸ்வரி மேடம் பாடினதோட நல்லா யாராலையும் அந்த பாட்ட பாடிட முடியாது"

"அந்த படத்தை டைரக்ட் பண்ண பாலச்சந்தர் சாருக்கு எப்போவுமே ஒரு நல்ல இசைஞானம் உண்டு"

"ஆமாம் சார்..அவரோட சிந்து பைரவி படத்திலே டிரைவரா வர்ற கவிதாலயா கிருஷ்ணன் கூட சங்கீத ஞானம் இருக்கிறவரா காட்டியிருப்பாரு.. அந்த scene(click here to watch the scene) பிரமாதமா இருக்கும் சார்..He is a real genius!!!..அதனால தான் MSV யோ இளையரஜவோ இல்ல மரகத மணியோ இல்ல நம்ம ரகுமானோ,யாரு மியுசிக் போட்டாலும் ஒரு class  இருக்கும்"

"Yes ..அப்படி பட்ட பாலச்சந்தர் சார் ஒரு மியுசிக் டைரக்டரோட முழுத்திறமையையும் பயன் படுத்துவார்..ஒரு பாடலாசிரியர் கிட்டயோ ஒரு மியுசிக் டைரக்டர் கிட்டயோ ஸ்க்ரிப்டை முழுசா விளக்குவாரு..அவர் மட்டுமில்லை இன்னும் சில டைரக்டர்சும் இப்படி செய்யறதுண்டு"

சுகுந்தன் பேசுவதை ஆர்வமாய் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீதர்,அப்படியா என்பது போல் பார்த்தான்.

"நீ பாட்டைப் பத்தி மட்டுமே பேசறியே BGM பத்தி உனக்கு கொஞ்சம் கூட யோசனையே வரலையா என்ன?பின்னணி இசை ஒரு படத்துக்கு எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சிக்கோ..இப்போ எல்லாம் நிறைய மியுசிக் டைரக்டர்ஸ் பாட்டுல வாய்ச(voice) cut பண்ணிட்டு டியூன பின்னாடி ஓட விடறதுக்கு பேரு தான் BGMன்னு நினைச்சிட்டிருக்காங்க.. ஒவ்வொரு மூட்கும் எத்த மாதிரி இருக்கணம் மியுசிக்..action scenes வர்றப்போ கொஞ்சம் பரபரப்பா இருக்கணம், emotional scenes வர்றப்போ மனச உருக வைக்கிற மாதிரி இருக்கணம்,detective மாதிரியோ இல்ல suspense சீன்லையோ,audience அமைதியா உணர்ற மாதிரி இருக்கணம் ஆனா அதே சமயம் ஒரு haunting BGM இருக்கணம்,சத்தம் அதிகமா இருக்க கூடாது,ஒரு sensual - love making situation பொறுத்த வரைக்கும்,ஒரு போதை ஏத்திற மாதிரி BGM இருக்கணம்..இந்த மாதிரி சீன்ல சிணுங்கல் சத்தத்துல அதிகமா கவனம் செலுதிட்டா,அழகா ரீச் ஆக வேண்டிய காமம்,ஆபாசமா மாறிடும்,அது சில நேரத்திலே அருவருப்பாவும் போயிடும்..  " என்று ஒரு குட்டி சொற்பொழிவே நடத்தி முடித்தார் சுகுந்தன்.

இத்தனை விஷயங்களையும் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீதருக்கு மெய்சிலிர்த்து போனது.சுகுந்தன் சொன்ன அத்தனை விஷயங்களையும் கற்பனை செய்து பார்த்தான்.சிறிது நேரம் பேச்சே வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. பிறகு சுய நினைவு வந்தவனாய் பேசத்தொடங்கினான்,

"சார்,ஆனா Background musicன்னு சொன்னதுமே இளையராஜா தான் சார் என் நினைப்புக்கு வர்றார்"

"அவர் தமிழ் சினிமாவுக்கு கிடைச்ச ஒரு பொக்கிஷம்!!!கடவுள் நமக்கு கொடுத்த ஒரு வரம்ன்னு கூட அவரைச் சொல்லலாம்..உனக்கு பின்னணி இசைன்னா அவர் ஞாபகத்துக்கு வர்றார்,நிறைய பேருக்கு இசைனாலே அவர் தான் ஞாபகத்துக்கு வருவார்,நான் உட்பட"

பிறகு இருவரும் அமைதியானார்கள்,மிதமான வேகத்தில் கார் நகர்ந்து கொண்டிருந்தது.


                                                     ***************************


னது சமீபத்திய படங்கள் பெரும் வெற்றி அடைந்ததால் மிகுந்த உற்சாகத்தில் இருந்தான் வாசு.இந்த உற்சாகமிகுதி  மெல்ல மெல்ல தலைக்கனமாக மாறியது. தயாரிப்பாளர் கண்ணப்பனின் அடுத்த படத்தில் வாசு தான் ஹீரோ. கண்ணப்பனும் வாசுவும் விரைவிலேயே நண்பர்களாகி விட்டார்கள். ஏனென்றால் இருவருக்கும் அத்தனை நல்ல பழக்கங்களும் உண்டு.இருவரும் தோட்டத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர்.

"வாசுன்னா வெற்றி வெற்றின்னா வாசு" - வாசு

"ஆமாம் தம்பி உங்க சமீபத்திய படமெல்லாம் சூப்பர் ஹிட்.சில்வர் ஸ்டார் வாசு தொட்டதெல்லாம் Gold ஆகிற நேரமிது" - கண்ணப்பன்

"இப்போ மட்டுமில்ல, இனிமே நான் தான் நிரந்தரமான டாப் ஹீரோ,எனக்கு ஈடு கொடுத்துட்டிருந்த ஒரே ஹீரோ சரண் தான்..இப்போ அவனும் field out...I am an incomparable Star..Silver Star" - வெறி பிடித்தவனை போல் கூச்சலிட்டான் வாசு.கண்ணப்பன் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. இப்படி பல சில்வர் ஸ்டார்களை பார்த்தவர் தான் இந்த கண்ணப்பன்.சில ஸ்டார்களுக்கு மது கூட ஊற்றி கொடுத்துத் தான் இன்றைக்கு தயாரிப்பாளர் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.

"Mr.கண்ணப்பன் நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்" - வாசு

"என்ன?" - கண்ணப்பன்

"நானே ஒரு படம் டைரக்ட் பண்ண போறேன்..தமிழ் சினிமால...ம்ஹும்ம் இந்திய சினிமா சரித்திரத்திலேயே இப்படி ஒரு படம் வந்ததில்லைன்னு சொல்ற அளவுக்கு இருக்கும் அந்த படம்"

"தம்பி உங்களுக்கு ஜாஸ்தி ஆயடிச்சுன்னு நினைக்கிறேன்..நான் கிளம்பறேன்..நாளைக்கி காலைல பார்க்கலாம்" - வாசு போதையில் உளறுகிறான் என்றெண்ணி கிளம்ப நினைத்தார் கண்ணப்பன்.

"கண்ணப்பன் சார்,என்ன மப்புல பேசறன்னு பார்க்கிறீங்களா?நான் எப்போவும் steady.. இன்னைக்கி நேத்து இல்லை நானும் ரொம்ப நாளாவே ஒரு படம் எடுக்கனம்னு யோசிச்சிட்டிருக்கேன்..எனக்கிருக்கிற டேலண்ட கரெக்டா யூஸ்  பண்ற அளவுக்கு எந்த டைரக்டருக்கும் சரக்கில்லை சார்"

"தம்பி நீங்க டைரக்ட் பண்ணியே தீரனமா?தெளிவாத்தான் பேசறிங்களா?" - கண்ணப்பன் சற்று தெளிவாகவே கேட்டார்

"Yes ofcourse!!!நீங்க தயாரிக்கப் போற படத்தை நான் தான் இயக்கப் போறேன்..அப்போ தான் இந்த வாசு தமிழ் சினிமாவுக்குக் கிடைச்ச ஒரு மாபெரும் கலைஞன்னு தெரியும்"

இதை சற்றும் எதிர்பாராத கண்ணப்பன் திக்குமுக்காடிப் போனார்..இவரை வைத்து படம் பண்ணும் எண்ணத்தையே மாற்றி கொள்வது தான் நல்லதோ என்று கூட சிந்திக்க தொடங்கி விட்டார்..ஆனால் படம் பூஜை கூட போடவில்லை..வெறுமனே இவரை வைத்து படம் தயாரிக்கிறோம் என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டதற்கே படத்தை பல கோடி கொடுத்து வாங்க விநியோகஸ்தர்கள்(distributors) நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு வந்தது இவர் நினைவுக்கு வந்தது..அப்போது அங்கே அமர்ந்திருந்த வாசுவின் காரியதரிசி நரேஷ்,

"வாசு சார் நீங்க டைரக்ட் பண்ணலாம்,ஆனா ரிஸ்க்கும் எடுக்க தேவை இல்லை..அதுக்கொரு ஐடியா இருக்கு.."



                                                                                                                                   (தொடரும்...)




Thursday, December 15, 2011

மாஸ் மீடியா - 5

மாஸ் மீடியா -5
யக்குனர் நீலகண்டனிடம் தொலைபேசியில் உரையாடிய பிறகு தயாரிப்பாளருடன் கூடி பேசி சம்பளம் முதலிய அனைத்து விஷயங்களையும் முடிவு செய்து விடுவதென்று தீர்மானித்தான் சரண்.பிறகு இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விடலாமென்றும் முடிவு செய்தான்.சென்னை கிண்டியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் இதை பற்றி விவாதிப்பென்று மூவரும் ஒப்புக்கொண்டார்கள்.அந்த வெள்ளிக்கிழமை மாலை இதை பற்றி விவாதிக்க மூவரும் ஆயத்தமானார்கள்.வெள்ளை நிற pant ஒரு வித நீல நிற casual shirt அணிந்து தயாரானான் சரண்.

உடன் விவேக்கும் தயாரானான்.முழு formal உடையில் பொருத்தமான பீ.ஏ என்று சொல்லும்படி இருந்தான்.பல யோசனைகள் சரணின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.ஏதோ கவனத்தில் படி இறங்கும்போது சற்று தடுமாறி விழுந்தான்.உடனே சமாளித்துக்கொண்டு எழுந்தான்.

"பாஸ் சகுனமே சரி இல்லை..இந்த படத்த அவசியம் பண்ணியே ஆகனமா?" - விவேக்

"இப்படி கால் வழுக்கறது கை வழுக்கரதெல்லாம் கெட்ட சகுனம்னு உங்களுக்கெல்லாம் யாருய்யா சொல்லித்தந்தாங்க?" - செயற்கையாக கேலி பேசினான் சரண்

"பாஸ் இந்த 'பகுத்தறிவுவாதம்' எல்லாம் உங்க படத்த விநாயகர் கோயில்ல வச்சி பூஜா போடறப்போ மறந்துடுவீங்களா?" - என்று விவேக் கேலி பேசியது, ஏற்கனவே குழப்பத்தில் இருந்த சரணுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

"கொஞ்ச நேரம் அமைதியா இரு டா இது என் career ல யே ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போற படம்.. wait and watch"

"ஊருக்குள்ள எவ்வளவோ நல்ல டைரக்டெருங்க இருக்காங்க..எவ்வளவோ நல்ல producers இருக்காங்க.. ஆனா இவர் ஏன் இந்த ஏழரைய மடியில கட்டிக்கிட்டு அலையராறோ தெரியல..இந்த நீலகண்டன் ஒரு நல்ல டைரக்டர் தான்..ஆனாலும் இவன் Story discussionன்னு சொல்லி ஹோட்டல்ல ரூம் போடவே நாலு கோடி ரூபா செலவு வைச்சவன்..இதுல வேற producer இருந்தாலாச்சு இவன் கொஞ்சம் பயந்துகிட்டு வேலை பார்ப்பான்.. இந்த தர்மராஜே ஒரு தருதல.. எவ்வளவு சொன்னாலும் இவர் கேட்க மாட்டேன்கிறாரே.. எல்லாம் விதி" - தனக்குள் தானே பேசிக்கொண்டிருந்தான் விவேக்.

காரில் செல்லும்போது புதிதாக வெளியாக இருக்கும் ஒரு படத்தின் பாடல்களை கேட்டுக்கொண்டே சென்றார்கள். இந்த பாடல்கள் சரணை பெரிதும் இம்ப்ரெஸ் செய்துவிட்டன

"இந்த படத்துல பாட்டெல்லாம் பிரமாதமா இருக்கு விவேக்.."

"சுமன்னு ஒரு புது பையன் compose பண்ணியிருக்கான் பாஸ்"

"நல்லா வருவான்னு தோணுது..இவனே கூட நம்ம படத்துக்கு மியூசிக் போட்டா தேவலாம்"

விவேக் பதிலேதும் பேசாமல் ஆமோதிப்பது போல் அடக்கமாக தலையாட்டினான்.

கார் பார்க்கிங்குக்கான இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு லிப்டுக்குள் ஏறினார்கள்.மூன்றாவது மாடிக்கு லிப்ட்டில் சொகுசாக வந்திறங்கினார்கள் சரணும் விவேக்கும்.ரூம் நம்பர் 324ல் தர்மராஜும் நீலகண்டனும் சரணின் வருகைக்காக காத்திருந்தனர்.

"சாரி சார்,வழியில கொஞ்சம் டிராபிக் அதான் late ஆய்டிச்சு..ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா?" - சரண்

"அதெல்லாம் பரவாயில்லை சரண்..நாங்க இப்போ தான் வந்தோம்.. ஒரு 10 நிமிஷமாச்சு..ஹீரோன்னாலே கொஞ்சம் லேட்டா வர்றது இண்டஸ்ட்ரீல சகஜம் தானே" - என்று நகைச்சுவையாக கூறினார் தயாரிப்பாளர் தர்மராஜ்.

"நீலு சார் ஒரே ஒரு வாட்டி பிரொடியுசெருக்கும் எனக்கும் மட்டும் கதைய சொல்லிடுங்க..மத்த விஷயத்தையும் இன்னைக்கே finalize பண்ணிடலாம்"

நீலகண்டன் சாதரணமான ஜீன்ஸ் மட்டும் டீ ஷர்ட் அணிந்திருந்தார். எப்போதும் அவர் ஒரு கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிவது வழக்கம்.இவர் ஒரு சில நல்ல படங்கள் எடுத்திருந்தாலும் இவரை ஒரு சைக்கோ என்றும் பலர் கூறுவதுண்டு.இவர் இயக்கிய படங்கள் பல விருதுகள் பெற்று விட்டன.ஆனால் அவற்றை தயாரித்தவர்கள் வீதிக்கு வந்து விட்டார்கள்.இவர் எப்போது pack up சொல்லுவார் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.அந்த இறைவன் மீதும் இவருக்கு நம்பிக்கை கிடையாது.இவர் படங்களின் லொகேஷனுக்கும் பாடல்கள்-காட்சிகளுக்கும் ஆகும் செலவு என்னவோ மிகக் குறைவு தான்.ஆனால் தன்னைத் தானே ஒரு perfectionist என்றெண்ணிக் கொண்டு இவர் செய்யும் அடாவடிகள் தான் படத்தின் பட்ஜெட்டை பல மடங்கு உயர்த்தி விடுகிறது.எடுத்தக் காட்சிகளையே மீண்டும் மீண்டும் re-shoot செய்வார்.இதனால் படச்சுருள்கள் ஏகத்துக்கும் வீணாகும்.இது போன்ற காரணங்களால் தான் இவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள் தெருவுக்கு வந்தார்கள்.
 
"இது ஒரு fantasy movie சார்..சரண் அதுல டபுள் ரோல் பண்றாரு..தொல்பொருள் ஆராய்ச்சியாளரா ஒரு ரோல் இன்னொரு ரோல்ல 12 ஆம் நூற்றாண்டுல வாழ்ந்த விக்ரம சோழனா நடிக்கிறாரு..இந்த ஆராய்ச்சியாளருக்கும் அந்த சோழ ராஜாவுக்கும் என்ன தொடர்பு..இவர் ஆராய்ச்சி எதை பத்தி,இவர் ஆராய்ச்சி ஜெயச்சதா தோற்றதான்னு கடைசியல ஒரு ட்விஸ்ட் வைச்சு சொல்லுவோம் சார்.." - என்று ஆரம்பித்து கதையை சுருக்கமாக சொல்லி முடித்தார் நீலகண்டன்.

அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார் தர்மராஜ்.சுமார் ஒரு 30 - 32  வயது மதிக்கத்தக்கவர் தான் இந்த தர்மராஜ். இவருடைய அப்பா கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர். அன்றைய அரசியல்வாதிகளுக்கு 'பல' விதத்திலும் உதவியாக இருந்து ஏகத்துக்கும் பணம் சம்பாதித்தவர்.சம்பாதித்த பணத்தை பாதுகாக்கவும் மேலும் மேலும் சொத்து சேர்க்கவும் அரசியலில் குதித்து வெற்றிகரமாக தொழில் நடத்தி வருபவர். அரசியல்வாதியின் மகனான தர்மராஜுக்கு படிப்பு ஏறவில்லை (அரசியல்வாதியின் மகனாயிற்றே), அப்பன் சொத்தை எப்படி செலவு செய்வதென்று தெரியாமல் தவித்த தர்மராஜுக்கு சினிமா வழி செய்தது.விளம்பரத்துக்கு விளம்பரமும் கிடைத்தாயிற்று வருமானத்திற்கு வருமானமும் கிடைத்து விட்டது.தர்மராஜுக்கு ரேஸ்,சூதாட்டம்,மது,மாது என அனைத்து பழக்கங்களும் உண்டு.இந்த தர்மராஜ் சொல்படி கேளாத பலருக்கு இவன் யமதர்மராஜாக மாறிய சம்பவங்களும் உண்டு.தர்மராஜ் சற்றே வில்லங்கமான தயாரிப்பாளர் தான்.

கதை முழுவதும் கேட்டு முடித்த பிறகு அவர் பேச தொடங்கினார்,

"நல்லா இருக்கு நீலு சார்..டைட்டில் என்ன வைச்சிருக்கீங்க?"

"அதிசய கனவு" - ஆர்வமாக சொன்னார் நீலகண்டன்.

"இது பகல் கனவாகாம இருந்தா சரி" - இவ்வாறு நினைத்துக் கொண்ட விவேக்,தனது கடமையை உணர்ந்து பேசத் தொடங்கினான்,

"சார்,அப்படியே இந்த சம்பள விஷயத்தையும் முடிவு பண்ணிடலாமே" - விவேக் சற்று பணிவாகவே சொன்னான்.

"பண்ணிட்டா போச்சு" - அலட்சியமாக பதிலளித்தார் தர்மராஜ்.

இந்த அலட்சியம் சரணுக்கு சற்று கோபத்தை உண்டாக்கினாலும்,விக்ரம சோழனாக நடிக்கும் வாய்ப்பை விட்டு விட கூடாதென்று சற்று அமைதி காத்தான்.

"சரண் இந்தாங்க 10  lakh க்கு செக் போட்டிருக்கேன்..மத்தத போக போக பேசிக்கலாம்" - என்று சற்று அதிகார தொனியிலேயே சொன்னார் தர்மராஜ்.

"சார் இவரோட மார்க்கெட் படி 3  கோடி வாங்கிறது வழக்கம்" - பணிவாக சொன்னாலும் உறுதியாகவே சொன்னான் விவேக்.

"இதோ பாருங்க வரிசையா உங்களுக்கொரு 3 -4  flop...அடுத்த படத்துக்கும் பெருசா எதிர்பார்ப்பு இருக்கிற மாதிரி தெரியல..இந்த நேரத்துல சம்பளத்த பேரம் பேசி வர்ற 'ராஜ' வாழ்க்கைய விட்டுடாதிங்க..அதாவது சோழ ராஜா ஆகர வாய்ப்பை சொன்னேன்.."

"சரிங்க இந்த பத்து லட்சம் அட்வான்சா இருக்கட்டும்..மத்தத அப்புறம் பாத்துக்கலாம்" - என்று தன ஆத்திரத்தை கட்டுப்படுத்தி கொண்டு,முகத்தில் எந்த ஒரு உணர்வும் காட்டாமல் ஒரு எந்திரத்தை போல் பேசிவிட்டு எழுந்தான் சரண்.

"இது புத்திசாலித்தனம்..சீக்கிரம் official press meet arrange பண்ணுங்க சரண்" - தர்மராஜ் கூறியதற்கு எந்த ஒரு பதிலும் தராமல் கம்பீரமாக அறையை விட்டு வெளியேறினார்கள் சரணும் விவேக்கும்


                                                     ***************************

ஸ்ரீதர் முதன்முதலாக ஒரு உதவி இயக்குனராக பணியாற்ற போவதை எண்ணி பேரானந்தம்  அடைந்தார் காதர் பாய். தனக்கு அடைக்கலம் கொடுத்து சினிமா என்றால் என்னவென்று ஓரளவேனும் புரிந்து கொள்ள உதவியவர் காதர் பாய் என்பதால் ஸ்ரீதர் மனதில் அவருக்கு என்றுமே ஒரு தனி மரியாதை உண்டு.அதிகாலையிலேயே காதர் பாயிடமிருந்து விடை பெற்று சென்றான் ஸ்ரீதர்.பிறகு அருகிலிருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டான். பிறகு வழக்கம் போல் நெற்றியில் விபூதி-குங்குமம் இட்டுக்கொண்டு புறப்பட்டான். சொன்ன நேரத்திற்கு முன்பாகவே ஷூட்டிங் ஸ்பாட்டைச் சென்றடைந்தான். பிறகு சுகுந்தன் மற்றும் மற்ற பல தொழில்நுட்ப கலைஞர்களும் வந்து சேர்ந்தார்கள்.படப்பிடிப்புக்கு அனைவரும் தயாராகிக்கொண்டிருந்தனர்..

"வாயா ஸ்ரீதர்..நீ சொன்ன நேரத்துக்கு முன்னாடியே வருவன்னு நான் எதிர்பார்த்தது வீண் போகலை" - என்றார் சுகுந்தன்.ஸ்ரீதர் அற்ப சந்தோஷங்களை எதிர்பார்த்தும் அரைகுறை திறமையை வைத்துக் கொண்டும் சினிமாவிற்கு வரவில்லை என்பதை சுகுந்தன் உணர்ந்திருந்தார். ஸ்ரீதர், சினிமாவில் தான் ஒரு சிறந்த இயக்குனராக வேண்டுமென்ற லட்சியத்தில் உறுதியாக இருப்பதையும், சுகுந்தனால் உணர முடிந்தது. சுகுந்தனின் கேள்விக்கு அடக்கமாக புன்னகையை பதிலாக தந்தான் ஸ்ரீதர்.

"என்னய்யா நெத்தியில விபூதி,குங்குமம் எல்லாம் வைச்சிருக்க" - என்று ஒரு வித ஏற்ற இறக்கமான தொனியில் கேட்டார் சுகுந்தன்.

"இல்ல சார் இது என் நம்பிக்கை.இந்த விபூதி குங்குமம் வைக்கிறப்போ நான் கடவுள மனசுல நினைச்சி தான் வைக்கிறேன்.இப்படி குங்குமம் விபூதி எல்லாம் வைக்கிறது மனசுக்கு ஒரு வித நிம்மதியா தருது,அது மட்டும் இல்ல தப்பான விஷயத்துல இருந்து என்ன காப்பாத்துதுன்னு ஒரு சின்ன நம்பிக்கை அதான்..." - பணிவாக சொன்னான் ஸ்ரீதர்.

இந்த பதில் சுகுந்தனை மேலும் impress  செய்தது என்று தான் சொல்ல வேண்டும்.

"ஏன் யா யோவ்,நீ இருக்கிறது தமிழ் சினிமால..இங்க கடவுள் இல்லைன்னு சொல்லுறவன் தான் அறிவாளி,அதி புத்திசாலி,அறிவுஜீவி etc etc  எல்லாம்.. நீ என்னடான்னா ஸ்கூல் பையன் மாதிரி பேசிகிட்டிருக்க.." - என்று நகைச்சுவையாக சொன்னார் சுகுந்தன்.

"கே.பாலச்சந்தர்,ராமநாராயணன் இவங்க எல்லாம் நாத்திகவாதிங்க இல்லையே சார்..இவங்க நூறு படம் டைரக்ட் பண்ணியிருக்காங்களே, அவங்கள inspirationஆ எடுத்துக்கிறேன்" - ஸ்ரீதர்.

"நல்லா புத்திசாலித்தனமாத்தான் பேசற..இதே மாதிரி நான் சொல்றப்போ sceneக்கு ஏற்ற மாதிரி வசனம் எழுதிரியான்னு பார்க்கிறேன்..சரி எல்லாம் செட் ஆயடிச்சுன்னு நினைக்கிறேன்.வா ஒருவாட்டி நாம போயி செக் பண்ணிடலாம்" - சொல்லிவிட்டு நடந்தார் சுகுந்தன். ஸ்ரீதரிடம் நகைச்சுவையாகத் தான் சுகுந்தன் நாத்திகம் பேசினாரே தவிர சுகுந்தனுக்கும் கடவுள், சாஸ்திரம், சம்பிரதாயம் ஆகியவற்றில் நம்பிக்கை உண்டு.

செட்(set) எல்லாம் சரியாக அமைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்தார் சுகுந்தன்.

"ஸ்ரீதர்,அந்த bag  எடு"

தனது பையிலிருந்து ஒரு மடி-கணினி(laptop) எடுத்தார்.அதில் தான் வரைந்து வைத்திருந்த படங்களுடன் செட்டையும் ஒப்பிட்டு பார்த்தார்.தனது ஷூட்டிங்கில் எப்படிப்பட்ட செட் அமைக்க வேண்டுமென்று முன்னரே வரைந்து வைத்துக் கொள்வது சுகுந்தனின் வழக்கம்.அதன் படியே செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடக்கும்.தமிழ் சினிமாவில் பதினைந்து படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளதால் சுகுந்தன் அத்தனை சுலபமாக கோபப்படவோ பதற்றப் படவோ மாட்டார்.அனைத்து விஷயங்களையும் நன்றாக சமாளிக்கக் கூடியவர்.

பிறகு ஒன்பது மணிக்கு வர வேண்டிய கதாநாயகி 10  மணிக்கும்,கதாநாயகன் 11  மணிக்கும் வந்து சேர்ந்தனர். இரண்டு மணி நேரம் வீணாகி விட்டதே என்று ஆத்திரப்பட்டான் ஸ்ரீதர்.அவனுடன் இருந்த மற்ற இரண்டு உதவி இயக்குனர்கள் சற்றும் அலட்டிக்கொள்ளவில்லை.இயக்குனர் சுகுந்தனோ கதாநாயகனிடமும்,கதாநாயகியிடமும் மிக சகஜமாக காட்சிகளை விளக்கிக் கொண்டிருந்தார்.

ஸ்ரீதருக்கு சற்று ஆச்சரியம்.."இந்த ஹீரோவா தாக்கி பத்திரிக்கைல மகா கேவலமா பேட்டி கொடுத்தாரு..அவரோட மாஸ் படத்த எல்லாம் கொச்ச படுத்தி திட்டினாரு..இப்போ அவர் கூடவே படம் பண்றாரு..சரி அரசியல் மாதிரி சினிமாலையும் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை போல" - இவ்வாறு நினைத்துக் கொண்டான் ஸ்ரீதர்.

"யோவ் ஸ்ரீதர் உனக்கு கில்லி,பம்பரம் இதெல்லாம் ஆட தெரியும் இல்ல?" - கேட்டார் சுகுந்தன்.

"தெரியும் சார்,அதுக்கென்ன இப்போ?"

"நம்ம ஹீரோயினுக்கு கொஞ்சம் ட்ரெயினிங் கொடு..ரொம்ப அலட்டிக்க வேண்டாம்,சும்மா ஒரு 2 -3  ஷாட் எடுக்கணம்..அந்த அளவுக்கு சொல்லிகொடுத்தா போதும்.."

இடை ஆட்டி ஸ்டைலாக நடந்து வந்த கதாநாயகிக்கு கற்றுக் கொடுக்க கிளம்பினான்.

"ப்ரதர் ஒழுங்கா சொல்லி கொடுங்க,கொஞ்சம் தப்பாச்சுனாலும் டைரக்டர் உங்கள காய்ச்சிடுவார்" - மற்றொரு அசிஸ்டன்ட் டைரக்டர் மிதமான குரலில் எச்சரிக்கை செய்தான்.

"இந்தாளு கிட்ட அசிஸ்டண்டா சேர்ந்தா தொழில் கத்துக்கலாம்னு பார்த்தா,காபி வாங்கிட்டு வர்றதுக்கும், ஹீரோவோட டிரெஸ்ஸ அட்ஜஸ்ட் பண்றதுக்கும் யூஸ் பண்றான் நம்மள.." - உதவி இயக்குனர்களில் ஒருவன் மற்றொருவனிடம் சொன்னான்.

"இதுல பாதி வசனம் நாம தான் எழுதறோம்,டைட்டில் கார்டுல மட்டும்,'கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்'ன்னு இவர் பேர போட்டுக்குவாரு..எடுக்கறது தமிழ் படம்,இதுல பாதி வசனத்த Englishல எழுத சொல்லி சாவடிக்கிறான்" - என்று அலுத்துக் கொண்டான் மற்றொருவன்.

"அது வரைக்கும் இந்த புது பையன் அதிர்ஷ்டசாலி..பம்பரம்,கில்லி எல்லாம் சொல்லித்தர்ற சாக்குல ஹீரோயின அங்க இங்க தொடலாம்..அந்த சான்ஸ் கூட நமக்கு இல்லாம போச்சே" - என்று சற்றே பெருமூச்சு விட்டான் முதலில் பேசியவன்.

ஸ்ரீதரோ இப்படி எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்கு கொடுத்த வேலையே செய்வதில் கவனமாக இருந்தான்.

"மேடம் இந்த ஷாட்ல நீங்க கிராமத்துல பண்ற குறும்புத்தனத்த ஷூட் பண்றாங்க..so முகத்துல கொஞ்சம் குறும்புத்தனம் காட்டுங்க..பம்பரத்த குறி பார்க்கிற மாதிரி சீரியஸா பார்க்கனம்..பம்பரத்த விட்டதும் 'ஹே'ன்னு குதிக்கணம்.." - இப்படி சற்று ஆர்வமாகவே சொல்லிக்கொடுத்தான் ஸ்ரீதர்.

ஸ்ரீதர் சொல்லிக்கொடுத்த படியே கதாநாயகி நடித்ததில் சுகுந்தனுக்கு ஏக மகிழ்ச்சி..முதல் டேக்கிலேயே ok செய்து விட்டார்கள்.

"Brilliant ஸ்ரீதர்..இப்படி தான் இருக்கணம்..பம்பரம்னா பம்பரம் விட்ரதோட சேர்த்து அந்த சீனோட முக்கியத்துவத்த சொல்லி கொடுக்கணம்..Well done!!!Keep it up!!!" என்று ஸ்ரீதரின் தோள்களை தட்டிக்கொடுத்து விட்டுச் சென்றார் சுகுந்தன்.

இப்படி இவர் தங்களை ஒரு நாள் கூட பாராட்டியதில்லையே என்று மற்ற இரண்டு உதவி இயக்குனர்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.. "அப்படி இந்த ஸ்ரீதரிடம் என்ன தான் இருக்கிறது?வந்த முதல் நாளே நல்ல பெயர் வாங்கி விட்டானே" - என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார்கள். பறவையின் கண்கள் மட்டுமே தெரிகிறதென்று சொன்ன அர்ஜுனனைப்போல்,பம்பரம் கற்றுத் தரும்போது,படத்தில் இந்த காட்சியை எப்படி சிறப்பாக அமைக்க முடியுமென்கிற சிந்தனை மட்டுமே ஸ்ரீதரின் மனத்தில் இருந்தது, கதாநாயகியின் கவர்ச்சியான உடையில் அவனுடைய கவனம் செல்லவில்லை. இப்படிப் பட்ட ஸ்ரீதர் பாராட்டப்படுவதும், முதல் நாளே நல்ல பெயரெடுப்பதும் சகஜம் தானே.



(தொடரும்)

Saturday, December 3, 2011

மாஸ் மீடியா - 4

  மாஸ் மீடியா - 4


விலையுயர்ந்த வெள்ளை நிற பைஜாமா ஜிப்பாவில் 'எளிமையாக' தயாரானான் சரண்.நெற்றியில் சற்று திருநீறும் இட்டுக்கொண்டு,பெரிய ஹீரோ போன்று பந்தாவாக தோன்றாமல் எளிமையாகவே காட்சியளித்தான். உடனே விவேக் உள்ளே நுழைந்தான்.


"பாஸ் ரிபோர்ட்டர்ஸ் எல்லாம் காத்திருக்காங்க..சீக்கிரம்"


"ஹ்ம்ம்" - ஆமோதித்தான் சரண்.


"பாஸ் பிறந்த நாளாச்சே அப்டி இமயமலை பக்கம் போயிட்டு வர கூடாதா,அங்க கொஞ்சம் நிம்மதி கிடைக்குமே" - நக்கலாக சொன்னான் விவேக்.


"உனக்கு வாய் ஜாஸ்தி ஆய்டிச்சு வர வர" - சற்று கடுமையாகவே கூறிவிட்டு ஹாலுக்குச் சென்றான் சரண்.பத்திரிக்கயாளர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். சரண் வந்ததும் மும்முரமாக புகைப்படமெடுக்கலானார்கள். சிறிதும் பதற்றப்படாமல், அவசரப்படாமல் அமைதியாக போஸ் கொடுத்தான் சரண். சரணைப் பற்றி திரையுலகில் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவினாலும் பக்குவமாக பேசுவதிலும் தெளிவாக சிந்தித்து முடிவெடுப்பதிலும் சரணுக்கு நிகர் சரண் தான் என்று சொல்லலாம். சரணுடன் அனைவரும் கை குலுக்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.பிறகு இருக்கைகளில் அமர்ந்து கேள்விகளை கேட்க தொடங்கினர்.


"இந்த Birthday என்ன சார் ஸ்பெஷல்"


"Its just another day" - சரண்.


"உங்களோட இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?"


"உழைப்பு,தன்னம்பிக்கை எல்லாத்துக்கும் மேல என்னோட ரசிகர்கள்" ,அடக்கமாக சொன்னான் சரண்.


"சமீப காலமா உங்களை ஆளுங்கட்சிக்கு நெருக்கமான பிரபல financier செல்வராஜோட அடிக்கடி பார்க்க முடியுதே"


"என்னோட அடுத்த படத்துக்கு finance பண்ண சொல்லி அவர் கிட்ட பேசிகிட்டிருக்கோம்.தொழில் ரீதியான நட்பு தான்"


"நேரடியாவே கேக்கறோம் நீங்க அரசியலுக்கு வருவீங்களா?"


""ஆமாம் நான் தப்பி தவறி ஏதாச்சு சொல்லனம் அந்த ஜாதி கட்சித் தலைவரு,படத்துல சிகரெட் புடிக்கிறான்,தண்ணி அடிக்கிறான்னு என் படம் ஓடற தியேட்டரை உடைக்கணம்,படப்பெட்டிய கொளுத்தனம்,என்ன வைச்சே ஒரு மாசம் நியூஸ் போடனம்..நல்ல எண்ணம் டா உங்களுக்கு"" - இவ்வாறு எண்ணிக் கொண்டான்,பிறகு பதிலளித்தான்.


"இல்லை"


"உங்களுக்கும் நடிகை தரணிக்கும் நடுவுல ஏதோ இதுன்னு கிசுகிசுக்கிராங்களே.." - சற்று விஷமத்தனமாகவே கேட்டார் ஜோல்னா பையுடன் அமர்ந்திருந்த அந்த பத்திரிக்கைக்காரர்.


"யார் கிசுகிசுக்கிராங்களோ அவங்க கிட்டயே கேக்கலாமே சார்.நான் இந்த கிசு கிசு எல்லாம் படிக்கிறதில்லை பாருங்க..Anyway Dharani is my best friend" - சற்று அடக்கமாகவும் கம்பீரமாகவும் பதிலளித்த சரண்,தொடர்ந்து,"ஆமாம் நீங்க எந்த பத்திரிகை?"


"மூன்றாவது கண் சார்"


"ஓ இந்த பூபால்னு ஒருத்தர்,மீசை பெருசா வச்சிருப்பாரே,அவர் நடத்துற பத்திரிக்கையா..ok ok அடுத்த கேள்வி" - என்று சற்று ஏற்ற இறக்கமாக அந்த நிருபரைப் பார்த்து கூறினான் சரண்.


"உங்க படமெல்லாம் ஏன் சார் ஒரே மாதிரி இருக்கு?வழக்கமான intro song, குத்துப் பாட்டு,ஆறு fight,பஞ்ச் டயலாக்குன்னு..ஏன் வேற எதுவும் ட்ரை பண்றதில்லை?"


"நீங்க கூட தான் எல்லா நடிகர்களையும் அரசியலுக்கு வருவீங்களா அரசியலுக்கு வருவீங்களான்னு ஒரே கேள்விய கேக்கறீங்க..நாங்க எதாச்சு கேட்டோமா" - முகத்தில் லேசான சிரிப்புடன் கூறினான் சரண்.


"இது மழுப்பலான பதில்"


"On a serious note,இப்போ இந்த மாதிரி படம் தான் மக்கள் என் கிட்ட எதிர்பார்க்கறாங்க..ஆனா கூடிய சீக்கிரமே ஒரு வித்தியாசமான படத்தோட அறிவிப்பு வெளிவரும்"


பத்திரிக்கயாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்..


"என்னய்யா இவ்வளவு அடக்கமா பதில் சொல்லிட்டான்..ஏதாச்சு திட்டுவான்,அதை வச்சு பரபரப்ப உண்டாக்கலாம்னு பார்த்தா இப்படி பண்ணிட்டானே.."


"அட விடுப்பா,இவனும் அந்த வாசு மாதிரி பிரஸ் மீட்லயே  காச் மூச்சுன்னு  கத்தாம விட்டானே..அதை நெனச்சி பெருமைப்படு"


"அப்படி கத்தினா நாங்க தான் வீடியோவ Youtubeல ரிலீஸ் பண்ணிடுவோம்ல" என்று கமெண்ட் அடித்து சிரித்தார் அந்த சினிமா கிசு கிசு எழுதும் நிருபர்.




"One final question sir. வரிசையா உங்களுக்கொரு 3-4 flops..உங்களோட அடுத்த படம் மறுபடி உங்களை டாப்புக்கு கொண்டு போகும்னு நம்புறீங்களா?"


"நம்பிக்கை தானே வாழ்க்கை"


"படம் இப்போ எந்த அளவில இருக்கு?"


"Post production work போயிட்டிருக்கு..தீபாவளி ரிலீஸ்"


"ஆல் தி பெஸ்ட் சார்" - என்று ஒரு நிருபர் வாழ்த்து தெரிவிக்க பத்திரிக்கையாளர் கூட்டம் கலைந்தது.


தன் அடுத்தப் படம் இழந்த தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் என நம்பிக்கையோடு பதில் கூறினாலும், சரணுக்கு  உள்ளுக்குள் பயமில்லாமல் இல்லை. இயக்குனர் நீலகண்டன் சொன்ன கதை சரணுக்கு மிகவும் பிடித்திருந்தது. அது ஒரு சரித்திரப் படம். பட்ஜெட் பல கோடி ருபாய் வரை போகும். இந்த படத்தில் நடித்து விட்டால் தமிழ் சினிமாவில்  தான் மிக உயர்ந்த இடத்தை பிடித்து விடலாம் என்பது சரணின் எண்ணம். ஆனால் இந்த படம் தோல்வியடைந்தால் சரணின் நிலை ஏறத்தாழ field out தான். தயாரிப்பாளர் தர்மராஜுக்கோ எந்த பிரச்சனையும் ஏற்பட போவதில்லை, காரணம் அவர் படமெடுப்பதே கருப்பு பணத்தில் தான். இயக்குனர் நீலகண்டனும் தொடர்ந்து 5 வெற்றிப் படங்களை கொடுத்தவர். அதனால் அவருக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. தொடர்ந்து தோல்விப் படங்கள் கொடுத்து வரும் சரணுக்குத் தான் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். தான்  இந்த கதையில் நடித்தே ஆக வேண்டுமென்று சரண் தீர்மானமாக இருந்தாலும், அவனுக்குள் ஏதோ ஒரு புரியாத குழப்பம் குடைந்து கொண்டு தான் இருந்தது. ஏதோ ஒரு விபரீதம் நேரப்போகிறது என்பது போன்ற உணர்வு சரணை பெரிதும் வேதனைப்படுத்தியது.அதனாலேயே இந்த படத்தை அறிவிக்கும் முடிவை பல முறை தள்ளிப்போட்டான்.


இனியும் தாமதிப்பதில் பயனில்லை.நமக்கு தேவை ஒரு மெகா ஹிட். இப்போது வெளிவரவிருக்கும் படம் ஒரு வேளை வியாபார ரீதியாக வெற்றி பெற்றாலும் கூட,அதனால் தனக்கு மிக அவசியமான Image make-over ஏற்பட வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தான். நீலகண்டனிடம் இன்று உறுதி படுத்திக் கொண்டு படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இந்த வாரத்திற்குள் வெளியிட முடிவு செய்தான். உடனடியாக நீலகண்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.


"ஹலோ!! நீலு சார்..."


                                                     ***************************


ஜோயித்தாவின் வரவிற்காக காத்திருந்தான் ஸ்ரீதர்.தன்னை எதற்கு அழைத்தாள் என்று இது வரை ஸ்ரீதருக்கு விளங்கவே இல்லை.நிச்சயம் ஏதோ நல்ல விஷயம் தான் என்று தோன்றியது.தன் கதை பிடிக்கவில்லை என்றால் முழு கதையும் கேட்டிருக்க மாட்டாள்.நிச்சயம் பிடித்துத் தான் இருக்கும்."ஆனால் பிடித்திருந்தால் மட்டுமென்ன? ஜோயித்தாவால் என்ன செய்து விட முடியும்? ஒரு கதாநாயகியை நம்பி படம் தயாரிக்கும் துணிச்சல் கோலிவுட்டில் எந்த தயாரிப்பாளருக்குமில்லை. அதுவும் கதாநாயகியை நம்பி அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் நிலைமை  இங்கு வந்து விடவில்லை.சே சே..என்ன இது அளவுக்கதிகமாக யோசிக்கிறோமோ.. இயக்குனர் வாய்ப்பு கிடைப்பதென்ன அத்தனை சுலபமா?பின் எதற்கு தான் நம்மை அழைத்தாளோ.." - என்று பல விதமான குழப்பங்கள் தோன்றியது. இப்படி குழப்பத்துடன் நின்றிருக்கையில் ஜோயித்தாவின் டிரைவர் உள்ளே வந்தான்.

"சார் நீங்க ரெடி தானே? மேடம் கார் ல வெயிட் பண்றாங்க..உங்கள உடனே வரச்சொன்னாங்க" 

டிரைவரை பின் தொடர்ந்தான் ஸ்ரீதர்.

ஜோயித்தா, காருக்குள் சிவப்பு நிறச் சேலையில் ஸ்டைலாக அமர்ந்திருந்தாள்.இவள் சாதாரண உடை அணிந்தாலே பார்ப்பவர்களுக்கு போதை ஏறும்.இதில் விலையுயர்ந்த இது போன்ற கவர்ச்சியான சேலை அணிந்திருந்தால் சொல்லவே வேண்டாம். ஜோயித்தாவை பல முறை மிக அருகில் பார்த்திருந்தாலும் இத்தனை அலங்காரத்துடன் இதற்கு முன்பு ஸ்ரீதர் பார்த்ததில்லை.இதனால் சற்று திகைத்துத் தான் போனான்.ஷூட்டிங் முடிந்து ஓய்வெடுக்க நேரமின்றி உடனே கிளம்பியதால் ஜோயித்தாவின் முகத்தில் ஒரு வித சோர்வு இருப்பதை உணர முடிந்தது, ஆனாலும் திரையுலகினருக்கு glamor மிக முக்கியம். பொதுவாகவே பெண்கள் தங்கள் கைப்பையில் ஒரு make-up kit வைத்திருப்பது வழக்கம்.சில பெண்கள் ஆட்டோ-பஸ்சுக்கு சில்லறை வைத்திருக்கிறார்களோ இல்லையோ முகத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ள அழகு சாதன பொருட்களை வைத்திருக்க தவறுவதில்லை. அப்படி இருக்க பிரபல கதாநாயகி,இளைஞர்களின் கனவுக்கன்னி ஜோயித்தா பற்றி சொல்லவா வேண்டும். முகத்திற்கு ஏதேதோ இடைவிடாது தடவி கொண்டே இருந்தாள்.

"மேடம் நாம எங்கே போறோம்..தயவு செஞ்சி சொல்லுங்களேன்..என் தலையே வெடிச்சிடும் போல இருக்கு"

"அதான் சொன்னனே ஹோட்டல் பார்க்னு"

"ஐயோ எதுக்கு போறோம்னு சொல்லிடுங்களேன் ப்ளீஸ்.."

"சொன்னா தான் டைரக்டர் சார் வருவீங்களோ..உன்ன அதை பத்தி யோசிக்க கூடாதுன்னு சொன்னேன்ல" - என்றாள் ஒரு குறும்பான புன்னகையுடன்.

"எதுக்குங்க என்ன கலாய்க்கிறீங்க..இப்படி எல்லாம் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா உங்க கிட்ட நான் கதையே சொல்லிருக்க மாட்டேன்" - என்று அலுத்துக் கொண்டான்.

"அவசரப்பட்டு என்ன திட்டிடாதே..நாம இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு..இறங்கு.." - என்றாள்.

இருவரும் இறங்கி நடந்தார்கள்.உள்ளே மாபெரும் விருந்து(பார்ட்டி) நடந்து கொண்டிருந்தது.ஸ்ரீதருக்கு ஜோயித்தாவின் நடையில் ஒரு மாற்றம் தெரிந்தது.அந்த மாற்றம் நடையில் மட்டுமல்ல அவளது நடவடிக்கைகளிலும் இருந்ததை உணர்ந்தான்.ஒரு முன்னணி கதாநாயகிக்கே உரிய கர்வம்,திமிர் என அனைத்தையும் கண்டான்.சரளமாக ஆங்கிலத்தில் பீட்டர் விடுவதையும் கவனித்தான்.பிறகு,

"ஸ்ரீதர் இப்போ உன்னை ஒருத்தர் கிட்ட introduce பண்ண போறேன். Try to impress him"

ஸ்ரீதருக்கு இப்போதும் கூட ஒன்றும் விளங்கவில்லை.மந்திரித்து விட்டவனைப் போல் ஜோயித்தாவின் பின்னாலேயே நடந்தான்.ஜோயித்தாவைக் கண்டதும்,

"ஹலோ ஜோயித்தா.." - என்று புன்னகையுடன் அன்பாக வரவேற்றார் பிரபல இயக்குனர் சுகுந்தன்.

"ஹாய்..அப்புறம் உங்களோட லேட்டஸ்ட் ப்ராஜெக்ட் எப்படி போயிட்டிருக்கு" - சாதாரணமாக கேட்டாள் ஜோயித்தா.

"ஹ்ம்ம் ஓடிகிட்டிருக்கு..கதைக்கி பொருத்தமா இருப்பான்னு நினைச்சி இந்தாள ஹீரோவா போட்டா அரசியல் பஞ்ச் டயலாக் வைக்கச் சொல்லி உயிரை வாங்குறான்..producer புலம்பியே தீர்க்கறான்..எப்படியோ படத்த ஓரளவுக்கு முடிச்சாச்சி..சரி ஏதோ முக்கியமான விஷயம் பேசனம்னு phone பண்ணியே..என்ன...?" - என்றார் சுகுந்தன்.

"ஒன்னும் இல்லை சுகுந்தன்..ஒரு சின்ன help.. இது ஸ்ரீதர்..துணை நடிகரா இருக்கான்..எனக்கொரு நல்ல friendன்னு கூட சொல்லலாம்.." - என்று சொல்லி சற்று நிறுத்தினாள்.

"துணை நடிகர் உனக்கு frienda? ஆச்சரியமா இருக்கு...பேர் என்ன?" - என்றார் ஸ்ரீதரை நோக்கி.

"ஸ்ரீதர் சார்" - என்றான்.ஸ்ரீதருக்கு இப்போது தான் ஜோயித்தா தன்னை அழைத்து வந்ததன் காரணம் லேசாக புரிய ஆரம்பித்தது.

"சுகுந்தன் - இவன் வெறும் துணை நடிகனாவே இருந்துட கூடாது. இவன் என் கிட்ட ஒரு கதைய narrate பண்ணான். முதல்ல நான் தமாஷா தான் கேட்க ஆரம்பிச்சேன்..ஆனா இவன் சொல்ல சொல்ல எனக்கொரு தனி interest create ஆய்டிச்சு.In fact இவன் டைரக்ஷன்ல ஒரு படம் பண்ணா நல்லா இருக்கின்ற அளவுக்கு போயிட்டேன்"  - ஜோயித்தா இடைவிடாது பேசிய போது குறுக்கிட்ட சுகுந்தன்,

"அப்போ பண்ண வேண்டியது தானே" - என்றான் 

"நான் என்ன மாஸ் ஹீரோவா? புதுமுக டைரக்டருக்கு சான்சும் கொடுத்து ஒரு காரும் வாங்கி கொடுத்து சீன் போட"

"சரி சரி..நீ மாஸ் ஹீரோ பத்தி எல்லாம் பேசாதே..ஏதோ ஷூட்டிங்குக்கு ஆட்டோல வர்றனே அப்போ அவர் கார் வாங்கி கொடுத்தாரு..இப்போ ஏன் அதெல்லாம்..நான் என்ன செய்யனம்னு எதிர்பார்க்கிற நீ?"

"இவனுக்கு திறமை இருக்கு..ஆனா அதை மட்டும் வச்சி சினிமா எடுக்க முடியாது..ஒரு படம் டைரக்ட் பண்றதுன்னா எவ்வளவு கஷ்டம்னு உனக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை..இவன் முதல்ல சினிமானா என்னன்னு புரிஞ்சிக்கணம்.." - என நிறுத்தினாள் ஜோயித்தா

"அதுக்கு?" - கேள்வி கேட்டார் சுகுந்தன்.

"அதுக்கு..அதுக்கு இவன் உன் கிட்ட Assistant டைரக்டரா இருந்தா கரெக்டா இருக்கும்னு feel பண்றேன்.." - என்று தயங்கி தயங்கி சொன்னாள்

"ஓ recommendation வேறயா  ..என் கிட்ட அ சிஸ்டண்ட்டா சேர்ரதுன்னா நான் கொஞ்சம் qualifications எதிர்பார்ப்பனே..இவர டெஸ்ட் பண்ணி தான் சேர்த்துகலாமா வேண்டாமான்னு முடிவெடுப்பேன்"

"இது என்ன 100% ரிசல்ட் காட்டிறதுக்காக நல்லா படிக்கறவன மட்டுமே சேர்க்கற school,tuition மாதிரி இருக்கே" 

"அப்படி இல்லை ஜோயித்தா..இங்க நிறைய directors  அவங்களோட உதவி இயக்குனர்களை தெரு நாய் மாதிரி நடத்துவாங்க..ஆனா நான் அப்படி இல்லை..என் கிட்ட ஒருத்தன் உதவி இயக்குனரா இருக்கான்னா அவன் உண்மைலேயே எதுக்காச்சு உதவனம்..அதுக்கு கொஞ்ச நஞ்சமாச்சு விஷயம் தெரிஞ்சிருக்கணம்..அப்போ தான் எனக்கு உபயோகமா இருக்கும்..அதுக்கு மேல தொழில் கத்துக்கிட்டு ஜெயிக்கிறது அவன் சாமார்த்தியம்.. அதனால நான் எதிர்பார்க்கிற சில விஷயங்கள் இவர் கிட்ட இருந்தா மட்டும் தான் என்னால சேர்த்துக்க முடியும்"

"சரி அந்த டெஸ்ட் எப்போ வைக்கலாம்னு இருக்க?அதுக்கு எங்க வர வேண்டி இருக்கும்..?"

"நீ ரொம்ப யோசிக்கிற..ஸ்ரீதர் நான் கேட்கற கேள்விக்கு நேர்மையா உண்மையை மட்டும் சொல்லுங்க.."

"கண்டிப்பா சார்" - என்றான் சற்று உற்சாகத்துடன்.உள்ளுக்குள் ஒரு பயமும் இருந்தது..ஏனெனில் மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு என்பது கனவில் கூட கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.ஆகையால் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற படபடப்பு அவனுக்கு இருக்கத்தான் செய்தது.

"புஸ்தகம் படிக்கற பழக்கம் உண்டா?"

"நிறையவே படிப்பேன் சார்"

"என்ன மாதிரி புஸ்தகமெல்லாம் படிச்சிருக்க"

"நிறைய சார்.. Ken Follett, Jeffrey Archer,Irving Wallace,James Herriot,Leo Tolstoy, Sidney Sheldon, John Grisham,J K Rowling,Mario Puzo, Dan Brown, Chetan Bhagat, even Amish..." - என்று சொல்லிக்கொண்டே போன ஸ்ரீதரை நிறுத்தி சற்றே ஆச்சரியத்துடன் கேட்டார் சுகுந்தன்,

"அவ்வளவு தானா?"
"இல்லை சார் இன்னும் இருக்கு தமிழ்ல கல்கி,சுஜாதா,பாலகுமாரன்,ராஜேஷ் குமார்,அனுராதா ரமணன்,ரமணி சந்திரன்..."
"போதும் பா..இவங்க எழுதின எல்லாத்தையும் படிச்சிருக்கியா என்ன?"

"முடிஞ்ச அளவுக்கு படிச்சிருக்கேன் சார்"

"சொந்த ஊரு எது?"

"தென் சாரம் சார்,விழுப்புரம் பக்கம் ஒரு கிராமம்"

"ஏன்யா கிராமத்துல இருந்துகிட்டே எப்படியா இவ்வளவு படிச்ச?"

"எங்கப்பா தாசில்தாரா இருந்தவரு..அவர் நிறைய படிப்பாருங்க..அவர் கிட்ட இருந்து கத்துகிட்டது தான்..இவங்களோட கதையெல்லாம் படிச்சி தான் சினிமால சாதிக்கனம்னு ஒரு ஆர்வம் வந்ததுன்னே சொல்லலாம்"

"English படமெல்லாம் பார்ப்பீங்களா?"

"நிறையவே சார்..Benhur,Omar Mukhtar,Pursuit of Happiness,Dark Knight,A beautiful mind, Inception.."

"ok ok போதும்..உங்களுக்கு இந்த நல்ல நாள்,நட்சத்திரம் இதெல்லாம் பார்க்கிற பழக்கம் உண்டா?"

"எதுக்கு சார்?"

"இல்லை நீங்க அசிஸ்டன்ட்டா join பண்ணா நல்ல நாள் பார்த்து தான் சேருவீங்களான்னு கேட்க வந்தேன்"

"சார் உங்க கிட்ட அசிஸ்டன்ட்டா join பண்ற நாள் தான் சார் எனக்கு நல்ல நாள்,நீங்க எப்போ சொல்றீங்களோ அப்போவே சேர்ந்துடுவேன்"

"Alright.. நாளைக்கி VGPல shooting இருக்கு..அங்க வந்துடுங்க..நாளைல இருந்து நீங்க என்னோட அசிஸ்டன்ட்..பரவாயில்லை ஜோயித்தா,கரெக்டான ஆளை தான் introduce பண்ணிருக்கீங்க.. இப்போ happyயா?"

"Definitely..Thanks a lot!!!.."

"மேடம் lifeல என்னைக்கும்  உங்களை மறக்க மாட்டேன்.." - என்று சற்று உணர்ச்சி வசப்பட்டான் ஸ்ரீதர்.

"ஹலோ..இதெல்லாம் ஒரு படம் ஹிட் கொடுத்தப்புறம் சொல்றீங்களான்னு பார்க்கிறேன்..All the best ஸ்ரீதர்.. நீங்க பெரியாளா வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"

தான் காண்பது கனவா இல்லை நிஜம் தானா என்று இன்னும் கூட ஸ்ரீதருக்கு ஒரு சந்தேகம் இருந்து கொண்டு தான் இருந்தது. ஸ்ரீதருக்குக் கடவுள் பக்தி அதிகம்.இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில் தனக்கு உதவி கொண்டு தானிருப்பான் என்று தீர்க்கமாக நம்புபவன். இன்று அந்த இறைவன் இந்த அழகிய பெண் ரூபத்தில் உதவி இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டான்.இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உறுதி கொண்டான் ஸ்ரீதர்.
(தொடரும்)