Showing posts with label Mass Media - Story. Show all posts
Showing posts with label Mass Media - Story. Show all posts

Sunday, February 12, 2012

மாஸ் மீடியா -10

மாஸ் மீடியா -10


த்தனை ஆண்டுகள் கோடம்பாக்கத்தில் நாயாய் உழைத்தவர் காதர்.அவருக்கு சில பெரும் புள்ளிகளின் நட்பும் உண்டு. தான் இயக்குனராக வேண்டுமென்று தான் சினிமாவுக்குள் நுழைந்தார் காதர்.ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல படம் இயக்க வாய்ப்பு வந்தும்,சில சமரசங்களுக்கு ஒப்புக்கொள்ள மறுத்ததால் அந்த வாய்ப்பும் நழுவியது.இறைவன் சந்தர்ப்பத்தை தவற விடுபவனை லேசில் மன்னித்து விடுவதில்லை.அப்படி ஒரு சந்தர்ப்பத்தை தவற விட்டதை எண்ணி பல ஆண்டுகள் காதர் வருந்தியதுண்டு. ஆனால் தனது முயற்சிகளை அவர் கை விட்டுவிடவில்லை.ஏதோ ஒரு வேலை பார்த்து ஏறத்தாழ இருபது ஆண்டுகள் சினிமாவிலேயே கழித்து விட்டார். அவருக்கு குடும்பம் உறவு என யாருமில்லை.

இத்தனை வருட அனுபவத்தில் சில முக்கிய புள்ளிகளின் நட்பு கிடைத்தது. ஆனால் இது நாள் வரை தன்னுடைய அனுபவத்தையும் அறிவாற்றலையும் வெளிப்படுத்த வேலையும் வரவில்லை வேளையும் அமையவில்லை. இப்போது எல்லாம் கூடி வர, அதுவும் தன் மகன் போல பாவிக்கும் ஸ்ரீதர் தான் இயக்குனர் என்றதும் காதர் பாயின் உற்சாகத்துக்கு அளவே இல்லாமல் போனது. காற்று போல சுழன்று படத்தை ஒரு வழியாக 'Minimum guarantee' முறையில் வியாபாரம் செய்து முடித்தார். அந்த பணத்தை வைத்து தான் படத்தையே துவங்கினார்கள். இம்முறை ஆடம்பரமான பூஜை எல்லாம் இல்லை. ஸ்ரீதர் தான் நம்பும் ஆஞ்சநேயரையும் காதர் பாய் அல்லாவையும் வணங்க சரண் இவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைதி காத்தான்.சரணும் மனதளவில் கடவுளை நம்பாமல் இல்லை. விவேக் சென்டிமென்ட்டாக ஒரு தேங்காய் உடைக்க, படத்தை துவங்கி விட்டனர்.இது தான் படத்தின் தலைப்பு 'சில நிஜங்கள்'

ஸ்ரீதர் சொன்ன outline மிகவும் பிடித்து போகவே உடனே படத்தை அறிவித்து விட்டார்கள்.பூஜையும் முடிந்தது.முழு ஸ்க்ரிப்ட்டையும் ஸ்ரீதர் முடித்து விடவே அதை சரணுக்கு narrate செய்தான்.

"Beautiful Sreedhar...கதை ரொம்ப பிடிச்சிருக்கு..ஆனா சில விஷயங்களை மட்டும் மாத்தனம்.."

"என்னங்க மாத்தனம்?ஹீரோயின் கூட கிஸ்ஸிங் சீன் வெக்கணம்..இல்ல பெட் ரூம் சீன் வெக்கணமா?குத்துப்பாட்டு,பறக்கிற fighttu, அரசியல் பஞ்ச் டயலாக் வேணுமா?" - மாஸ் ஹீரோக்களின் மீதிருந்த ஆத்திரத்தை கொட்டி தீர்த்தான்.

"யோவ் என்னய்யா நினைச்சிட்டுருக்க? மரியாதையா பேசு" - விவேக்

"வேற என்னய்யா கேக்க போறீங்க..மாஸ் ஹீரோ லட்சணம் தான் தெரியுமே..உங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்றன் தெரிஞ்சிக்கோங்க,ஒரு டைரக்டர் இல்லைன்னா ஒரு ஹீரோ இல்லை.."

"நீ ஒரு படம் கூட எடுத்து கிழிக்கலை அதுக்குள்ள இவ்வளவு திமிரா..ஆகாது ராஜா..சரண் industryல பத்து வருஷமா இருக்காரு..ஏன் அவர் சொன்னதை கேட்டா என்ன குறைஞ்சா போவ?உனக்கு டைரக்டர் சான்ஸ் எங்க சரண் போட்ட.." - என துவங்கிய விவேக்கை எரித்து விடுவது போல சரண் பார்க்க விவேக் நிறுத்தி விட்டான்.பின்னர் சரண் பேசினான்,

"விவேக்,This is your limit..ஸ்ரீதர் நான் ஒன்னும் உன்னை மாஸ் elements add பண்ண சொல்லலை..உன்னோட ஸ்க்ரிப்ட்ல வர்ற flash back சீன எல்லாம் கொஞ்சம் அன்ரியாலிஸ்ட்டிக்கா(unrealistic)  இருக்கு அதை மாத்தனம்..அது மட்டுமில்லாம சில சின்ன சின்ன விஷயத்தை மட்டும் எல்லா கிளாஸ் ஆடியன்ஸையும் ரீச் பண்ற மாதிரி மாத்தனம்.."

இப்போது ஸ்ரீதர் சற்று அமைதியானான்..சரண் பேசுவதை உன்னிப்பாக கேட்க தொடங்கினான்..

"நான் சொல்றத முழுசா கேட்க கூட மாட்டேன்னா எப்படி ஸ்ரீதர்..இவ்வளவு ஈகோ(Ego) ஆகாது சார்..இதை சொன்னதுக்கு தப்பா எடுத்துக்காதீங்க.. " - சரண் பேச பேச விவேக்கும் ஸ்ரீதரும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கினர், சரண் தொடர்ந்தான்,

"When you tell people that you have made a picture, they do not ask, 'Is it a good picture?' They ask, 'How many days?' - இதை நான் சொல்லலை Gottfried Reinhardன்னு ஒருத்தர் சொல்லி இருக்காரு"

"பாஸ் இதையெல்லாம் எங்க புடிச்சீங்க..ச படிச்சீங்க? அவ்வளவு இங்கிலீஷ் புக் படிச்சிட்டிங்களா என்ன ?"- விவேக்

"இல்லைப்பா இதை சுஜாதா சார் தன்னோட 'கனவுத் தொழிற்சாலை' என்கிற நாவல்ல quote பண்ணி இருப்பாரு.. எனக்கு தெரிஞ்சதெல்லாம் சுஜாதாவும் பாலகுமாரனும் கல்கியும் தானே.."

"ஆமாம் சார் நானும் கனவுத் தொழிற்சாலை படிச்சிருக்கேன்..சுஜாதா sir is a legend" - சுஜாதாவின் பெயரை கேட்டதும் துடிப்புடன் பதில் சொன்னான் ஸ்ரீதர்

"யாரோ சொன்ன மாதிரி 'சிலர் இருந்தும் இறந்தவர்களாகி விடுகிறார்கள்,சிலர் இறந்தும் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்' என்கிற இந்த வாசகம் சுஜாதா சாருக்கு ரொம்பவே பொருந்தும்..He is immortal" - சரண், பிறகு தொடர்ந்தான்,

"நான் கண்ட மாஸ் சினிமாவும் நடிச்சி தான் டாப்ல இருந்து கீழ விழுந்தேன்.. அதே தப்பை நான் மறுபடி செய்ய விரும்பல..அதனால end product டைரக்டர் ஸ்ரீதருக்கு சொந்தமானதாத் தான் இருக்கும்.. Dont Worry.."

பதிலேதும் பேசாமல் சரி என்பது போல் தலையசைத்தான் ஸ்ரீதர்.பிறகு சரண்,

"ஆமாம் இதிலே ரெண்டு ஹீரோயின் இருக்காங்களே..ராணின்னு ஒரு பொண்ணை ok பண்ணதா சொன்னீங்க.. ஆனா அந்த இன்னொரு ஹீரோயின்?"

"ஒரு new face introduce பண்ணலாம்னு இருக்கேன் சார்.." - Sreedhar

"இல்லைப்பா இதுக்கு புதுமுகம் போட்டா செட் ஆகாது..கொஞ்சம் established artiste இருந்தா தான் எடுபடும்.. ஏன்னா இந்த ரோல் நிறைய demand பண்ணுது..நடைல இருந்து ஆரம்பிச்சு கண் அசைவு,சிரிப்புன்னு எல்லாமே இதிலே ரொம்ப உன்னிப்பா கவனிப்பாங்க ஆடியன்ஸ்..நீ ஒரு புது ஆர்டிஸ்ட்ட வச்சி பண்றது ரொம்ப கஷ்டம்.."

"சார் எனக்கொரு ஐடியா.."

"என்ன?"

"ஜோயித்தா மேடம் கரெக்டா இருப்பாங்கல்ல சார் இதுக்கு?"

"Excellent!!! ஆனா அவங்க இதிலே நடிப்பாங்களா?ஏன்னா இது கொஞ்சம் தெய்வீகமா பார்க்கப்பட வேண்டிய கேரக்டர் ஆச்சே..அவங்களோ இப்போ பப்ளீயான(bubbly) characters நிறைய பண்றாங்க..She is in the peak of her career.. இந்த நிலைமையிலே நடிக்கறதும் ரிஸ்க் தான்.."

"அவங்களை சம்மதிக்க வைக்கிறது ஏன் பொறுப்பு சார்.."

"Best of luck...அப்புறம் ஸ்ரீதர்,படத்தோட டைட்டில் சாங்(Song) மட்டும் நம்ம 'experienced youngster' சுக்ரீவன் சார் கிட்ட வாங்கிடு..புது டைரக்டர்சுக்கு அவர் பாட்டெழுதினா படம் சூப்பர் ஹிட்டாகும்னு ஒரு நம்பிக்கை" 

                                                       ***************************   
 வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து,துரோகிகளையும் தோல்விகளையுமே சந்தித்த ஒரு மனிதன் ஏறக்குறைய ஒரு பைத்தியக்காரன் போல திரிகிறான்.சில மாதங்களாக சவரம் செய்யாத தாடி,கலைந்திருந்த பறவை கூடு போல தலை முடி,கிழிந்த பனியன்,பல நாட்களாக துவைக்கப்படாத அழுக்கு வேஷ்டி இந்த தோற்றத்தில் அலைகிறான். இவனது இந்த நிலைக்கு நாடங்களில் நாட்டியமாடும் பெண்ணொருத்தி தான் காரணம் என்கிற விபரம் தெரிய வர, இவனது பூர்விகமும் இவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அறிந்து கொண்ட மானசா உணர்வுபூர்வமாக உதவுகிறாள். அவன் மீது காதலும் வந்து விடுகிறது.கடும் போராட்டத்திற்கு பிறகு அவனை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறாள். தன்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்தவள் விபத்தில் இறந்து போக அவன் கதறி அழுகிறான்.உரக்க கூச்சலிட்டு அழுது கொண்டே இருக்க,சுற்றி இருந்தவர்களும் அழ ஆரம்பித்து விட்டார்கள்.அவனது துயரம் அனைவரையும் பாதித்து விட்டது.

படத்தின் டைரக்டர் ஸ்ரீதரையும் தான்.'கட்' கூட சொல்லாமல் சரணின் நடிப்பை மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தான். பிறகு திடீரென சுய நினைவு வந்தவனாய் - 'டேக் ஓகே' என்றான்.

"What an amazing performance!!!!He is such a great actor!!!!நான் இவர் கிட்ட அப்படி பேசி இருக்க கூடாது.. 'இறைவன் காரணமில்லாமல் யாரையும் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்வதில்லை' - வாலி சார் அடிக்கடி சொல்லுவார்..இது எவ்வளவு உண்மை.அப்போ அப்படி நடந்துகிட்டதுக்கு நிச்சயம் இன்னிக்காச்சு மன்னிப்பு கேட்டே தீரணம்..I am sorry Mr.Saran..!!!" - தனக்கு தானே சொல்லி கொண்டான்.இப்போது அவன் மனதில் சரண் உயர்ந்த இடத்தை பிடித்து விட்டான்.

எடிட்டிங்,டப்பிங் என எல்லாம் முடிந்தது.இனி படப்பிடிப்புக்கோ பாடல் ஒலிப்பதிவிற்கோ அவசியம் இல்லை.முழு படத்தையும் அவர்கள் பார்த்து முடித்தார்கள்.படத்தின் producer தீனதயாள்,காதர் பாய்,ஸ்ரீதர்,சரண்,விவேக்,ராணி, ஜோயித்தா,விவேக் என அனைவரும் பார்த்து முடித்தனர்.அனைவருக்கும் பரம திருப்தி.

"பாஸ் கலக்கிட்டீங்க..நிச்சயம் இதுக்கு national award கிடைக்கும்..படம் தாறுமாறு ஹிட்டாகும்"

"ஆமாம் Mr.Saran..உங்க கூட work பண்ணினது it was a great experience..இவ்வளவு satisfactory movie இது வரைக்கும் நான் பண்ணதில்லை.." - முழு மனதுடன் சொன்னாள் ஜோயித்தா.

"ஆமாம் பாஸ்,இந்த படத்திலே ஹைலைட்டே நீங்களும் ஜோயித்தா மேடமும் வர்ற half an-hour தான்..உங்க ரெண்டு பேருக்கும் அவார்டு கிடைக்க போறது உறுதி" - விவேக்

"எல்லா கிரெடிட்டும் உங்க சிஷ்யன் ஸ்ரீதருக்கு தான்..என்ன டைரக்டர் சார்,ரைட்டா" - என ஸ்ரீதரை பார்த்து கண்ணடித்தான் சரண்.

"சார் இதை நான் இப்போ சொல்லியே ஆகனம்..நான் எழுதின ஸ்க்ரிப்ட்டுக்கு உங்க நடிப்பு உயிர் கொடுத்திருக்குன்னு தான் சொல்லனம்..டைரக்டர் ஹீரோவை உருவாக்கலாம்னு சொல்றது எந்தளவு உண்மையோ அதே அளவு ஒரு ஹீரோ சில நல்ல டைரக்டர்களையும் உருவாக்கலாம்னு புரிஞ்சிகிட்டேன்.."

"சினிமா ஒரு டீம் வொர்க் தம்பி..இது வெறும் ஹீரோ-டைரக்டர் விஷயம் இல்லை" - காதர் பாய்

"கண்டிப்பா பாய்..ஒத்துக்கிறேன்..ராத்திரி பகல்னு பாக்காம வேலை பார்த்த லைட்மேன், சவுண்ட் எஞ்சிநீர்ஸ், ஆர்ட் டைரக்டர்,ஆசிஸ்டன்ட் டைரக்டர்ஸ்,எக்ஸ்ட்ரா ஆர்டிஸ்ட்ஸ்,டான்ஸ் மாஸ்டர்,ஸ்டன்ட் ஆளுங்கன்னு இது ஒவ்வொரு தொழிலாளியோட உழைப்பு..இது நிச்சயம் ஜெயக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு பாய்.."

இந்த படத்தில் நாட்டியக்காரியாக நடிக்க கடும் உடற்பயிற்சியின் மூலமும் கட்டுப்பாடான உணவு பழக்கங்களின் மூலமும் நன்றாக உடல் இளைத்திருந்தாள் ராணி.சபையில் அத்தனை பேர்களுக்கு மத்தியில் பேச அவளுக்கு சற்று பயம்.ஆனாலும் ஆர்வமாக கேட்டாள்,

"படம் எப்போ சார் ரிலீஸ் பண்ண போறீங்க?" - பவ்யமாக கேட்டாள்.அவளது பேச்சிலும் நல்ல மாறுதல் தெரிந்தது.

"ஆமாம் தம்பி இதை பத்தி நானே உங்க கிட்ட கேக்கலாம்னு இருந்தேன்..எப்போ ரிலீஸ் பண்ணலாம்னு சொல்லுங்க.." - காதர் சரணை பார்த்து கேட்டார்.

"ரம்ஜான் ரிலீஸ்"

"பாஸ் அன்னைக்கி தான் அந்த தர்மராஜ் நடிச்ச படம் ரிலீஸ் ஆகுது..நமக்கு தியேட்டர் கிடைக்காது"

"கிடைக்கிற ஸ்க்ரீன்ல ரிலீஸ் பண்ணலாம்..யார் ஹீரோன்னு ரம்ஜான் அன்னைக்கு தெரிஞ்சிடும்" - சரண்

"இந்த ரிஸ்க் அவசியம் தானா?" - ஜோயித்தா

"சில நேரத்திலே சில ரிஸ்க் எடுத்தா தான் நம்ம சக்தி என்னன்னு உலகத்துக்கு புரியும்..ஸ்ரீதர் இந்த படம் அடி வாங்கினா இரண்டு பேரோட career காலி..ஒன்னு என்னது,இன்னொன்னு உன்னுடையது..நீ என்ன சொல்ற?" - சரண்

"ரம்ஜான் ரிலீஸ் தான் சார் கரெக்ட்..என் படம் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு"

"அப்புறம் என்ன பாய்..எவ்வளவு ஸ்க்ரீன்ல முடியுதோ அவ்வளவு ஸ்க்ரீன்ல ரிலீஸ் பண்ண try பண்ணுங்க..குறிப்பா ரெண்டு ஸ்க்ரீன் இருக்கிற தியேட்டர்ஸ் எது எதுல அந்த தர்மராஜ் படம் ரிலீஸ் ஆகுதோ,அதுல எல்லாத்திலேயும் ஒரு ஸ்க்ரீன்ல நம்ம படம் ரிலீஸ் ஆகனம்..சின்ன ஸ்க்ரீனா இருந்த கூட பரவாயில்லே"

"தம்பி எனக்கு புரியல..ஏன் இப்படி?"

"பாய் சும்மா அரசியல் செல்வாக்கும் காசு பணமும் இருந்தா மட்டும் போதாது..படத்திலே கண்ட கபோதியும் ஹீரோவா நடிச்சா ஜனங்க ஏத்துக்குவாங்களா என்ன?என் படத்துக்குன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கு பாய்.. நீங்க வேணும்னா பாருங்க முதல் வாரத்துக்கப்புறம் நம்ம படம் மட்டும் தான் ஓடும்,அவன் படம் படுத்துடும்..அப்போ நமக்கு அதிக ஸ்க்ரீன் கிடைக்கும்"

விவேக் ஏதோ சொல்ல முற்பட,சரண் குறுக்கிட்டு,

"இது தான் என்னோட முடிவு..பாய் அல்லா மேல பார்த்த போட்டுட்டு ரிலீஸ் வேலைய கவனிங்க..நாம நிச்சயம் ஜெயப்போம்"



                                                        *************************** 

சினிமாவை பற்றி சரண் எந்த அளவு அறிந்து வைத்திருந்தான் என்பது ஸ்ரீதருக்கு வியப்பை அளிக்கவில்லை. ஏனெனில் அனைத்தையும் இழந்த பிறகும் கூட தெளிவாக,சுயமாக சிந்தித்து சரண் எடுத்த முடிவுகளை அவன் அறிந்திருந்தது தான்.அப்படிப்பட்ட முடிவுகளில் முக்கியமான முடிவு தன்னை இயக்குனராக தேர்வு செய்ததும், தன இஷ்டப்படியே படம் இயக்கவிட்டதும் தான்.சரணின் ஆரூடம் பலித்து விட்டது.தர்மராஜ் ஹீரோவாக நடித்த படம் படு தோல்வியை தழுவியது.அரசியல் ரீதியாக எவ்வளவு தான் அழுத்தம் கொடுத்தாலும் அந்த படம் தாக்கு பிடிக்கவில்லை. இது தர்மராஜுக்கும் நீலகண்டனுக்கும் தொழில் ரீதியாக சரண் கொடுத்த பலத்த அடி என்றே கோடம்பாக்கத்தில் அனைவரும் பேசிக்கொண்டனர். சரண் நடித்த 'சில நிஜங்கள்' மக்கள் மத்தியில் சரண் படங்களுக்கிருந்த வரவேற்பை வெளிச்சம் போட்டு காட்டியது.அதே சமயம் அறிமுக இயக்குனரான ஸ்ரீதரின் திறமையை கண்டு வியக்காதவர்கள் இல்லையெனலாம்.

"தம்பி நம்ம அடுத்த படத்தை நீங்க தான் டைரக்ட் பண்ணனம்.இந்தாங்க முதல்ல அட்வான்ச புடிங்க.." - பிரபல தயாரிப்பாளர் முருகேசன் பணம் கொடுத்துவிட்டு சென்றார்.

நடந்தவற்றை சில நிமிடங்கள் மனத்திரையில் ஓட விட்டு பார்த்தான் ஸ்ரீதர்.

நீங்க வெளியில இருந்துப் பார்க்கிற சினிமா வேற ஆனா இங்க நடக்கறது வேற..டைரக்டர் ஆகனன்ற தப்பான ஆசைய இப்போவே விட்டுடு..அதெல்லாம் ரொம்ப கஷ்டம் தம்பி -  இது தான் முதல் முதலில் கோடம்பாக்கம் வந்த பொது கேட்ட வாக்கியம்.

இன்று அட்வான்ஸ் கொடுத்து, தான் தான் படமியக்க வேண்டுமென்று தயாரிப்பாளர்கள் தேடி வருகிறார்கள்.'நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்..இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்' - என்ற வரிகள் தன மனத்தில் ஓட 'Vaali sir you are great' - என்ற வார்த்தைகளை அவன் உதடுகள் உச்சரித்தது.


                                                        *************************** 

நீண்ட நாட்களுக்கு பின் மது அருந்தினான் சரண்.இம்முறை தன அளவை தாண்டுவதில்லை என்ற முடிவோடு தான் மது அருந்த தொடங்கினான்.விவேக்கும் அருகிலமர்ந்து குடிக்க,

"பாஸ் நீங்க மறுபடி ஜெய்ச்சிட்டீங்க..இனிமே நீங்க தான் டாப்" - விவேக்

"விவேக்,தோக்கரப்போ தைரியமும்,ஜெயக்கிரப்போ பயமும் வரணம்..ஆணவம் மட்டும் தலைக்கேரிட கூடாது" - சரண்

"No more philosophies Boss..let's enjoy the drink' என சொல்லி குடித்தான் விவேக்,பிறகு தொடர்ந்தான்,

"பாஸ் விஷயத்த கேள்வி பட்டீங்களா? வாசு டைரக்ட் பண்ணி நடிச்ச படம் bundle ஆய்டிச்சாம்..செம்ம நஷ்டமாம்.. Producer கண்ணப்பன் மறுபடி வடபழனில இட்லி கடை வச்சு பொழக்கிற அளவுக்கு ஆயிடிச்சாம்.."

"அந்த அளவுக்கா நஷ்டம்?"

"அட அதை விடுங்க பாஸ்..லேட்டஸ்ட் இது தான்..இப்போ வாசுவை வச்சு நீலகண்டன் படமெடுக்க போறாராம்.. கதை என்னன்னா,அரசியல் நெருக்கடிகளால ஒரு சினிமா ஹீரோவை ஒழிச்சி கட்டிடரங்க,ஆனா அந்த ஹீரோ திரும்ப எப்படி ஜெயக்கிரான்னு தான் கதையாம்.."

"நானும் கேள்விபட்டேன்"

"இதுல என்ன beautyன்னா அந்த படத்தை வாசு சொந்தமா produce பண்றாராம்..so மத்த producers கை கழுவிட்டாங்கன்னு அர்த்தம்..இதுவும்  கண்டிப்பா ஓடாது பாஸ்..வாசு இனி field out தான் ..உங்களுக்கு opposition இனிமே யாருமே இல்லை"

"வாசுவை பத்தி உனக்கு சரியா தெரியாது.பொம்பள விஷயத்திலே அப்படி இப்படி இருந்தாலும் அவன் அளவுக்கு சினிமாவ பத்தி தெரிஞ்ச ஹீரோக்கள் ரொம்ப கம்மி..அவன் சொந்த பேனர்ல படம் பண்றான்னா it must be something special!!!!" - என சொல்லி கடைசி 'round' அடித்து முடித்தான் சரண்.



                                                        ***************************  


ரண்டு ஆண்டுகள் சென்று விட்டன.இந்த படத்தின் வெற்றி ஸ்ரீதருக்கு புதிய ஏற்றத்தை கொடுத்தது. சரணுக்கு, இழந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது. ரணிக்கோ சினிமாவில் ஒரு நடிகை என்ற அந்தஸ்த்தை கொடுத்தது.இந்த படத்தில், முக்கிய வேடத்தில் நடித்த ஜோயித்தாவுக்குத் தான் எதிர்பாராததை கொடுத்து விட்டது.அவளுக்கு 'சில நிஜங்கள்' பல நிஜங்களை புரிய வைத்து விட்டது.

இப்போது ஸ்ரீதர் பிரபல இயக்குனராகிவிட்டான்.பிரபல ஹீரோக்களை வைத்தும் ஹிட் கொடுத்துவிட்டான்,அறிமுக நடிகர்களை வைத்தும் வெற்றிப் படங்களை கொடுத்துவிட்டான்.ஆனால் ஜோயித்தாவுக்கோ 'சில நிஜங்கள்' தான் கடைசிப் படம்.அந்த படத்தில் அவள் நடித்த கதாபாத்திரமே அவளுக்கு எதிரியாகி விட்டது.அந்த படத்தை முடிக்கும் வரை மற்ற படங்களை ஒப்புக்கொள்ள வேண்டாமென ஸ்ரீதர் கேட்டுகொண்டான்.அது வரை glamour ரோல்களில் நடித்து வந்த ஜோயித்தாவுக்கு, இப்படி ஒரு 'தெய்வீகமான' கதாபாத்திரத்தில் நடித்த பிறகு சாதாரண கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை.'சில நிஜங்கள்' படத்தில் அவர் நடித்ததை பார்த்ததாலோ என்னவோ, சாதாரண டூயட் பாடும் கவர்ச்சியான ஹீரோயின் வேடத்துக்கு இவர் முகம் எந்த இயக்குனரின் நினைவுக்கும் வரவில்லை.அவார்ட் படங்களும் அமையவில்லை என்பது தான் ஜோயித்தாவின் துரதிர்ஷ்டம்.பட வாய்ப்புகளின்றி கடும் விரக்தி அடைந்தாள் ஜோயித்தா..

"இப்படி அடுத்து என்ன செய்றதுன்னே புரியாம இருந்தா எப்படி?" - ஜோயித்தாவின் PA மாலு பேச்சு கொடுத்தாள்

"என்னை என்ன தான் மாலு செய்ய சொல்ற?"

"அந்த ஸ்ரீதருக்கு தான் ஒரு வாட்டி கால் பண்ணி கேட்டா என்ன?நீ இல்லைன்னா அவன் இவ்வளவு பெரிய ஆள் ஆயருக்க முடியும்னு நினைக்கிறியா?"

"அதை நான் செஞ்சிருக்க மாட்டேன்னு நீ நினைக்கிறியா? ஸ்ரீதர் கிட்ட அவரோட அடுத்த படத்திலே எனக்கு சான்ஸ் கொடுக்கு சொல்லி கேட்டேன்.. 'இந்த ரோல் உங்களுக்கு செட் ஆகாது ஜோயித்தா..உங்க நிலைமை புரியுது,but உங்களுக்கேத்த ரோல் வந்தா நிச்சயம் கூப்பிடறேன்'ன்னு சொல்லிட்டார்..அதுக்கப்புறம் ஸ்ரீதரும் என்னை கூப்பிடல என்னாலையும் அவரை contact பண்ண முடியல..இனிமே எனக்கு சினிமா சரிபட்டு வரும்னு தோனல"

"அப்புறம்?வேற என்ன செய்யறதா உத்தேசம்?"

"TV serialல நடிக்க try பண்ணிகிட்டிருக்கேன்..அது சம்மந்தமா நாளைக்கு evening ஒருத்தரை மீட் பண்ணனம்.. அதுக்குள்ள சீரியல்ல சம்பளம் எல்லாம் என்ன rangeல வாங்கறாங்க?அங்க வேலை எப்படின்னு சில details எல்லாம் collect பண்ணிடு"

வளர்ந்து வரும் எந்த நடிகையும் ஜோயித்தா 'சில நிஜங்கள்' படத்தில் நடித்தது போன்ற வேடத்தில் நடிக்க மறுப்பது ஏன் என்பது இப்போது தான் ஜோயித்தாவுக்கு புரிந்தது.சினிமாவை பொறுத்த வரை, நட்பு,உதவி இது எல்லாம் தன்னை பற்றிய சிந்தனைக்கு பிறகு தான் இருக்க வேண்டும்.தொழில் வேறு,நட்பு வேறு என்பதை ஸ்ரீதர் உணர்த்தி விட்டான். ஸ்ரீதருக்காக மற்ற படங்களில் கமிட் ஆகாமல் விட்டது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்பதை நினைத்து பல முறை வேதனைபட்டிருக்கிறாள்.'சில நிஜங்கள்' அவளுக்கு பல நிஜங்களை உணர்த்தி விட்டது.


(முற்றும்...)

பி.கு. : முடிவுரைக்கு இங்கே செல்லவும் 


 

Monday, February 6, 2012

மாஸ் மீடியா -9

மாஸ் மீடியா -9
 ரு வழியாக சில காட்சிகளை டைரெக்ட் செய்து விட்டான் ஸ்ரீதர்.வாழ்நாளில் தானும் ஒரு இயக்குனராகியே தீர வேண்டுமென்கிற வெறியுடன் கிராமாத்திளிருந்து கிளம்பி வந்த ஸ்ரீதருக்கு 'Start Camera Action' என்ற மந்திரச் சொல்லை உரிமையுடன் உச்சரிக்க இத்தனை வருடங்கள் தேவைப்பட்டன.சினிமாவை உயிருக்கும் மேலாக நேசித்த ஸ்ரீதர்,மாஸ் மசாலா திரைப்படங்களை அறவே வெறுத்தான்.ஸ்ரீதரை பொறுத்த வரை கதை தான் ஹீரோ.கதைக்கேற்ற நடிகர்கள் தான் ஸ்ரீதருக்கு தேவை,நடிகர்களுக்கேற்ற கதை என்பது ஸ்ரீதருக்கு சற்றும் ஒத்து வராத விஷயம்,மேலும் அத்தகைய படங்களை ஸ்ரீதர் அறவே வெறுத்தான்.மாஸ் ஹீரோ என்பவன் ஸ்ரீதரின் பார்வையில் ஒரு விஷச்செடி.மாஸ் சினிமா என்பது மாசுபட்ட சினிமா.இவற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டுமென நீண்ட காலமாக ஸ்ரீதர் மனதில் நினைத்திருந்தான்.!!!...ஆனால்.... இவை அனைத்தும் ஸ்ரீதர் கோடம்பாக்கத்து வாசலை மிதிக்கும் முன்பு இருந்த கருத்துக்கள்.இப்போதும் ஸ்ரீதரின் கருத்துக்கள் முழுவதுமாக மாறிவிடவில்லை.ஆனால் 'ஹி தாஸ் லீர்ன்ட் டு மேக் சோமே கம்ப்ரோமிசெஸ்'.

ஆனால் ஒரு விஷயம்.இத்தனை வருடங்கள் கோடம்பாக்கத்தில் கூடாரம் அடித்ததில் பல விஷயங்களை கற்றுக்கொண்டாலும்,ஸ்ரீதரின் உள்மனது  ஒரு உண்மையை மட்டும் ஏற்றுகொள்ள மறுத்தது. 'சினிமா என்பது ஒரு சந்தை.அங்கு செத்த பிணம் கூட ஒரு வியாபரப்பொருள் தான்.இந்த சந்தையில் விலை போகாத உயிருள்ள மனிதன் கூட ஒரு பிணம் தான்'.ஒரு Directorial success கொடுக்க வேண்டுமென்பது தான் ஸ்ரீதரின் லட்சியம்.ஆனால் அமைந்ததோ ஒரு மாஸ் ஹீரோவுடனான படம்.புகழின் உச்சியிலிருக்கும் வாசுவை வைத்து படமெடுப்பதால் ஸ்ரீதருக்கு நல்ல அறிமுகம் கிடைக்குமென்பது மட்டுமே ஸ்ரீதரின் ஒரே நம்பிக்கை.படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்று விட்டால் தனது அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில் சிரமமிருக்காது என்பதையும் கணக்கில் கொண்டு தான் இந்த வாசு போன்ற லூசு ஹீரோக்களின் கோமாளித்தனத்தை சகித்து கொண்டிருந்தான்.

"என்ன டைரக்டர் எப்படி நம்ம performance!!" - தெனாவெட்டாக கேட்டான் வாசு.

"சார் இன்னும் நீங்க நல்லா emotion காட்டியிருக்கணம் சார்.Please மறுபடி ஒரே ஒரு டேக் போலாம் சார்" - பணிவாக கேட்டான் ஸ்ரீதர்.

"என்னது ரீடேக்கா?இல்ல எனக்கே ரீடேக்கானு கேட்டேன்..நடிப்பு என் ரத்தத்திலேயே ஊறின விஷயம்..எங்க பரம்பரையே சினிமா பரம்பரை தான்..நேத்து வந்த சின்ன பைய நீ,எனக்கு நடிப்பு சொல்லி தர்றியா?" - என வெறி பிடித்தவனை போல் கத்தி விட்டு சென்றான் வாசு.

இந்த வாசு ஒரு சைக்கோ மாதிரி என பலரும் சொன்ன பொது ஸ்ரீதர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..ஆனால் அவர்கள் அப்படி பேசுவதன் காரணம் இன்று தான் விளங்கியது. இவனை வைத்து படமெடுத்து முடிப்பதே மிகப் பெரிய சாதனையாக இருக்கும் போலிருக்கிறது என நினைத்து கொண்டான் ஸ்ரீதர்.அன்றைய படப்பிடிப்பு முடிந்து அனைவரும் அவரவர் அறையில் தங்கிவிட்டார்கள் .ஸ்ரீதருக்கு சற்று பதற்றமிருந்தாலும் அடுத்த நாள் எடுக்க வேண்டிய முக்கியமான காட்சிகளுக்கான வசனங்களை,தனது அறையில் இருந்தபடியே சரி பார்த்து கொண்டிருந்தான்.

அப்போது திடீரென யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.ஆனாலும் ஏனோ அதற்கு முக்கியத்துவமளிக்காத ஸ்ரீதர், தொடர்ந்து வசனங்களை படித்து கொண்டிருந்தான்.சப்தம் மீண்டும் கேட்டது.திடீரென சுயநினைவு திரும்பியவனை போல எழுந்தான்.பிறகு கதவை திறந்த ஸ்ரீதர் அதிர்ந்து போனான்.சிவப்பு நிற சேலையில் செதுக்கிய அழகிய சிற்பம் போல நின்றாள் லலிதா.சிறிது நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர்.லலிதா பார்த்த பார்வையில் பல அர்த்தங்கள் ஒளிந்திருந்தன.தன பார்வையினாலேயே ஸ்ரீதர் மீது மோகனாஸ்திறத்தைத்  தூவினாள். ஆனால் அவளது பார்வையில் சற்று அப்பாவித்தனமும் ஏதோ ஒரு சோகமும் ஒளிந்திருந்தது.

"ஸ்ரீதர் சார், நான் உள்ளே வரலாமா?" - லலிதா

"வாங்க.." - யாரிவள்,ஏன் வந்தாள் என பல குழப்பங்களுடன் அவளை உள்ளே அனுமதித்தான்.

"சொல்லுங்க..நீங்க யாரு?என்ன விஷயம்?என்னை தேடி வந்திருக்கீங்க..ஒரே குழப்பமா இருக்கு..சொல்லுங்க" - ஸ்ரீதர்.

"என் பேரு லலிதா..எங்கப்பா உங்கள பார்த்துட்டு வரச் சொன்னாரு"

"யார் உங்கப்பா?"

"தனசேகர் சார்.."

"யாரு இந்த Character ரோல்ல எல்லாம் பின்னி பெடாலேடுப்பாரே அந்த actor தனசேகர் சார் பொண்ணா நீங்க?"

லலிதா ஆமோதிப்பது போல் தலையசைத்தாள்.ஸ்ரீதர் தொடர்ந்தான்,

"எல்லாம் சரிங்க இந்நேரத்திலே என்னை பார்க்க வர வேண்டிய அவசியம் என்ன?அவ்வளவு தல போற காரியமா? காலையிலே வந்து பார்த்திருக்கலாமே?"

"இல்லை சார்,எனக்கு உங்க படத்திலே நடிக்க சான்ஸ் கிடைக்கும்னு தான் உங்கள பார்க்க சொன்னாங்க"

"என் படத்திலே சான்ஸா?" சற்று ஆத்திரப்பட்டாலும்,"சரி அடுத்த படத்திலே பார்க்கலாம்..இந்த படத்திலே எல்லா கேரக்டர்சும் finalize பண்ணியாச்சு.. இப்போ நீங்க first கிளம்புங்க"

அவன் சொன்னதும் லலிதா எழுந்தாள்.கதவை நோக்கி நடந்தாள்.அதற்கு பின் அவள் செய்தது தான் ஸ்ரீதருக்கு கடும் கோபத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்கியது.

"ஹலோ,இப்போ எதுக்கு கதவை தாழ்ப்பாள் போடறீங்க?" - ஆத்திரத்தில் பொங்கிய ஸ்ரீதரின் அருகில் வந்தாள் லலிதா.ஸ்ரீதரின் தலையை கோதி விட்டுக்கொண்டே,

"என்ன ஸ்ரீதர்,இப்படி ஒரு பொண்ணு கூட தனியா இருக்கிற சந்தர்ப்பம் கிடைச்சா அதை use பண்றதை விட்டுட்டு கேள்வி கேக்குரிங்களே.."

லலிதாவின் scent வாசனையும் அவள் அணிந்திருந்த சிவப்பு நிற புடவையும் ஸ்ரீதருக்கு போதை ஏற்றியது..ஸ்ரீதர் சற்று தடுமாற,இது தான் சந்தர்ப்பம் என எண்ணிய லலிதா,



"என்னை நீங்க எப்படி வேணுன்ம்னாலும் use பண்ணிக்கலாம் ஸ்ரீதர்" - என சொல்லிக்கொண்டே ஸ்ரீதரின் மேல் விழுந்தாள்.உடலின் ஈர்ப்பை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான் ஸ்ரீதர். அவளை இறுக்கமாக அணைக்க ஸ்ரீதரின் கைகள் துடித்தன.ஆனாலும் அவன் உள் மனத்தில் ஏதோ ஒன்று தடுத்தது.அந்த சில நிமிடங்கள்,ஸ்ரீதரின் உடலுக்கும் மனதுக்கும் ஒரு பெரும் போராட்டமே நடக்க,இறுதியில் மனம் உடலை வென்றது.ஸ்ரீதர் சுதாரித்து கொண்டான்.ரத்தம் கொதித்தது.லலிதாவை பிடித்து தள்ளினான்.அவன் கண்கள் சிவந்தன, ஆத்திரத்தில் லலிதாவை ஓங்கி ஒரு அறை அறைந்தான்.லலிதா நிலை தடுமாறி விழுந்தாள்.

"கேவலமா இல்லை?சீ நீ அந்த மாதிரி பொண்ணா!!உங்கப்பன் தான் நல்ல சொத்து சேர்த்து வைச்சிருக்கானே அப்புறமும் ஏன் இந்த மானம் கெட்ட பொழப்பு?" - பொறிந்து தள்ளினான் ஸ்ரீதர்.

"அவரால தான் சார் எனக்கிந்த நிலைமையே..அவரால தான்..எல்லாம் என் தலை எழுத்து" - என தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் லலிதா.

"எங்கப்பாவுக்கு நான் ஒரு top heroine ஆகனம்னு ஆசை சார்..அப்போ தான் பல விதத்திலேயும் காசு பார்க்க முடியும்.. நிறைய காரியத்த சாதிச்சிக்க முடியுங்கிறது அவரோட எண்ணம்..அதுக்கு தான் சார் இப்படி எல்லாம் என்ன நடந்துக்க சொல்லுறாரு..டைரக்டரோட ஸ்டோரி டிஸ்கஷன்னு தனியா உள்ளே அனுப்பி..." - என கதறி கதறி அழுதாள் லலிதா..

"இப்படி சில டைர்கடர்ஸ் கூட நடந்துகிட்ட அப்புறமும் கூட ஏதோ ஒரு காரணத்தினாலே வாய்ப்பு வராமலே போய்டிச்சு.." - ஒப்பாரி வைப்பது போல அழுத லலிதாவை சமாதானப்படுத்துவதா அல்லது இவளை இந்த அறையிலிருந்து விரட்டியடிப்பதா என குழப்பமடைந்த ஸ்ரீதர்,லலிதாவின் தோள்களை தொட்டு எழுப்பினான்,

"இதோ பாரும்மா,முதல்ல அழறத நிறுத்து..நமக்குன்னு ஒரு நேர்மை இருக்கணம்,அதை எப்பவும் யாருக்காகவும் விட்டு குடுக்க கூடாது.. இப்படி குறுக்கு வழியிலே ஜெயக்கனம்னு நினைக்காதே..இந்த மாதிரி நடந்துகிட்டா தான் உனக்கு சான்ஸ் கிடைக்கும்னா அது உன் அழிவுக்கு அறிகுறின்னு அர்த்தம்.இப்படி சான்ஸ் வாங்கி ஒரு வேளை நீ பெரிய ஹீரோயின் ஆனாலும் கூட,பணம் சம்பாதிக்கலாமே தவிர,நிம்மதியே இருக்காது..போ..வீட்டுக்கு போ..நான் சொன்னதை நல்லா யோசி..உன்னோட திறமைய வச்சி நேர்மையான வழியிலே முன்னேற பாரு.." - என நீண்ட உபதேசம் செய்தான் ஸ்ரீதர்.

"சார் அப்போ இந்த படத்திலே எனக்கு சான்ஸ்?"

"No Chance!!!" - திட்டவட்டமாக கூறினான் ஸ்ரீதர்..

                                                       ***************************


 ஒரு வழியாக லலிதாவை அறையை விட்டு அனுப்பிய பின் உறங்கினான் ஸ்ரீதர்.திடீரென ஏதோ ஒரு பயங்கரமான காட்சியை கண்ட ஸ்ரீதர் பெரும் கூச்சலிட்டான்.திடுக்கிட்டு எழுந்தான்.பிறகு தான் ஏதோ ஒரு கெட்ட கனவு கண்டதை உணர்ந்தான்.அதிகாலை 5.30 மணி இருக்கும்.முகம் கழுவிய பிறகு,மீண்டும் இரவு நடந்த அனைத்தும் அவன் மனத்திரையில் ஓடியது.அந்த அதிர்ச்சியிலிருந்து ஸ்ரீதர் இன்னும் மீளவில்லை.தன்னிடம் ஒரு பெண் அப்படி நடந்து கொண்டது அதுவே முதல் முறை.உடனே குளித்து விட்டு தயாரானான்.அப்போது அவனது cell phone ஒலித்தது. வாசுவிடம் இருந்து தான் அழைப்பு.

"ஸ்ரீதர்,உடனே என்னோட ரூமுக்கு வாங்க..உங்க கிட்ட கொஞ்சம் பேசணம்" - என வேகமாக பேசிவிட்டு அழைப்பை  துண்டித்தான்.

எதுவும் புரியாமல் ஸ்ரீதர் உடனே புறப்பட்டான்.

"வாங்க டைரக்டர் சார்.." - கிண்டலாக அழைத்தான் வாசு.அருகில் தனசேகரனும் இருந்தார்.வழுக்கை தலை,முழுவதுமாக சவரம் செய்யப்பட முகம்.இவர்கள் அழைத்ததன் காரணத்தை ஸ்ரீதர் ஊகிக்க,வாசு தொடர்ந்தான்,

"என்ன சார்,நம்ம படத்திலே நான் அனுப்பின பொண்ணுக்கு சான்ஸ் இல்லைன்னு சொல்லிட்டீங்களாமே.."

"எல்லா கேரக்டர்சும் finalize பண்ணியாச்சு..உங்களுக்காகவே நிறையவே compromise பண்ணியாச்சு..இப்போ நீங்க கேக்கிறத கண்டிப்பா செய்ய முடியாது"

"என்ன என்ன என்ன சொன்னே?முடியாதா?bloody asshole.."

வாசுவின் இந்த பேச்சு ஸ்ரீதருக்கு கடும் எரிச்சலை தந்தது..

"தம்பி இந்த படத்துக்கு நீ பேருக்குத்தான் டைரக்டர்..இங்க நான் சொல்றது தான் கதை,நான் சொல்றவ தான் ஆர்டிஸ்ட்டு..இஷ்டம் இருந்தா டைரக்ட் பண்ணு..கஷ்டம்னா கிளம்பு காத்து வரட்டும்.."

ஸ்ரீதர் ஆத்திரத்தில் முறைக்க,வாசு தொடர்ந்தான்,

"ஏன் யா ஸ்ரீதர் அந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல்,அவள போயி வேண்டான்னு சொல்லிட்டியே..நீ அதுக்கு சரி பட்டு வர மாட்ட" - என கீழ்த்தரமாக ஸ்ரீதரை வாசு கேலி செய்ய,கோபத்தின் உச்சத்துக்கே போன ஸ்ரீதர்,

"அட தூ..நீ எல்லாம் ஒரு டாப் ஹீரோ..அசிங்கமா இல்லை?எப்டி எப்டி நீ சொல்றது தான் கதையா..முடியாது யா..நீ சொல்ற ஒன்னும் ஒரு ம... மண்ணாங்கட்டியும் இங்க நடக்காது..என் கதையிலே ஒரு சின்ன change கூட கிடையாது.. உன்னால ஆனதை பாரு."

தனசேகரின் பக்கம் திரும்பியவன்,

"ஏன் யா நீ எல்லாம் நல்ல குடும்பத்திலே பொறந்தவனாய்யா?தூ..தூ.. நீ அந்த பொண்ணுக்கு அப்பனா இல்ல மாமாவா? இந்த மானம்கெட்ட பொழப்புக்கு நாண்டுகிட்டு சாகலாம்.." - ஆத்திரத்தை கொட்டி தீர்த்தான் ஸ்ரீதர். போதையில் இருந்த தனசேகர்,ஏதோ கெட்ட வார்த்தை சொன்னான்..ஆனால் அவன் சொல்வது அவனுக்கே புரியவில்லை..அப்படி ஒரு போதை.. பிறகு அமைதியாக வாசு பேசினான்,

"என்ன ராஜா சொன்னே?கதைய நான் சொல்ற படி மாத்த மாட்ட..ஹ்ம்ம்..ஆனதை பாருன்னு சொல்றே..சரி தம்பி.. நான் முடிவு பண்ணிட்டேன்..இந்த படம்,'இனி வாழ்வில் வசந்தம்' என்கிற இந்த படத்தை,சில்வர் ஸ்டார் - தி ஓனே அண்ட் ஒன்லி - great வாசு,டைரக்ட் செய்வார்..கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம் பி தி கிரேட் வாசு..."

"என்னது?" - ஸ்ரீதர்

"ஒரு தடவ சொன்னா புரியாதா த மரமண்டை டைரக்டர்..உனக்கு இனிமே இங்க வேல இல்லேன்னு சொன்னேன்.. இடத்தை காலி செய்றியா ராஜா"

"நீ வெறும் ஹீரோ தான்..எனக்கு அட்வான்ஸ் குடுத்தது கண்ணப்பன் சார்,அவர் சொல்லட்டும் நான் போறேன்"  - சொல்லி முடிப்பதற்குள் கண்ணப்பனிடமிருந்து அழைப்பு வந்தது..பேசி முடித்த பின் ஸ்ரீதர் வாசுவை பார்க்க,

"என்ன கண்ணா,அட்வான்ஸ் குடுத்த தெய்வம் போக சொல்லிடிச்சா..உன்ன எனக்கு தெரியுமடா..சொன்னா சொன்னதுக்கு ஒத்து வர மாட்டேன்னு நல்லா தெரியும்..அதுக்கு தான் முதல்லையே கண்ணப்பன் கிட்டே பேசிட்டேன்..என்ன சொன்ன என்ன சொன்னே..நான் வெறும் ஹீரோவா..டேய் மடப்பயலே இந்த படத்தோட business என்னை நம்பித்தானே தவிர,உன்ன மாதிரி கத்துக்குட்டி டைரக்டர நம்பி இல்லே.."

"இவ்வளவு கேவலமான பொழப்பா டா சினிமா எடுக்கிறது?" - ஸ்ரீதர்

"போங்க டைரக்டர் சார்..ஒரு படம் பாதியிலே ஒரு டைரக்டர தூக்கிட்டா அவன் திரும்ப சினிமா எடுக்கிறது அவ்வளவு சுலபமில்ல..உன்னை வச்சி எவனாச்சு படமெடுத்தா டைரக்ட் பண்ணு.. All the best Mr.ஸ்ரீதர் சார்.. டாட்டா bye bye" - என கேலி பேசி ஸ்ரீதரை துரத்தி விட்டார்கள்.


                                                       ***************************


தொடர்  உடற்பயிற்சியினால் உடலை நன்றாக குறைத்திருந்தான் சரண். தொப்பை முழுவதுமாக கரைந்து விட்டது. தொடர் உடற்பயிற்சி,கட்டுப்பாடான உணவு,குடி பழக்கத்தை அறவே விட்டொழித்து புத்துணர்ச்சியுடன் காணப்பட்டான் சரண்.மன உறுதியுடன் அனைத்தையும் தூக்கி எறிந்த சரணை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.தினமும் அரை மணி நேரம் தியானம் செய்து வந்தான்.சரணின் கண்களில் மீண்டும் அந்த spark தெரிந்தது.

"பாஸ் நீங்க வர சொன்னதா யாரோ ஒரு ஆள் வந்திருக்காரே..என்ன விஷயம்" - விவேக்

"அவரை உடனே வர சொல்லு விவேக்..நம்ம அடுத்த project பத்தி பேச தான்.." - கம்பீரமான குரலில் சொன்னான் சரண்.

"பாஸ் அடுத்த project? You mean new movie? யாரு பாஸ் producer?"

"அதை பத்தி பேச தான் அவரை வர சொல்லி இருக்கேன்..அவருக்கு industryல நிறைய பேரை தெரியும்..வாழ்க்கைல நிறையவே இழந்திருக்காறு..என்னை மாதிரி"

"Oh..பாஸ் டைரக்டர் யாருன்னு ஏதாச்சு mindல வச்சிருக்கீங்களா? என்னோட guess சரின்னா நீங்க உங்க friend ராம் மோகனா தான் இருக்கணம்..Am I right?"

"கண்டிப்பா ராம் மோகன் தான் first clap அடிக்க போறார்.." - இதை கேட்டதும் விவேக் சற்று பெருமித பட்டு கொண்டான், தனது 'presence of mind'ஐ எண்ணி..அதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சிறு புன்னகையை உதிர்த்தான்

"உடனே உன்ன நினைச்சி நீயே பெருமை பட்டுக்காதே..டைரகடர் ராம் மோகன் இல்லை.." - இதற்குள் சரண் வரச் சொல்லியிருந்த அந்த நபர் உள்ளே வந்தார்..

"வாங்க சார்,உட்காருங்க" - மரியாதையுடன் சரண் உட்கார வைத்தான்..பிறகு, "சார்,நான் ஏற்கனவே பேசின மாதிரி இப்போ என்னை வச்சி படமெடுக்கிற தைரியம் தீனதயாள் சாருக்கு மட்டும் தான் இருக்கு"

ஆம் என்பது போல் அவர் ஆமோதிக்க.,"ஆனா பணம் தான் சார் பிரச்சினை"

"கவலை படாதிங்க தம்பி..எனக்காக உதவி செய்ய ஒரு சில distributors இருக்காங்க..இன்னைக்கி தேதிக்கு உங்க படத்தை சில கோடி ரூபாய்க்கு என்னால வியாபாரம் செய்ய முடியும் தம்பி"

"ஆனா சார் அந்த தர்மராஜா பகைச்சிகிட்டு எப்படி படத்தை வாங்குவாங்க?" - சந்தேகத்துடன் கேட்டான் விவேக்,

"புரியுது தம்பி..இவர் நடிச்ச அத்தை மகள் ஆனந்தி படம் இன்னைய தேதிக்கு கூட நல்லா ஓடுது..So இவருக்குன்னு மக்கள் கிட்டே ஒரு எதிர்பார்ப்பு இருக்க தான் செய்யுது.."

"புரியல" - விவேக்

"சில distributors இருக்காங்க..ஏற்கனவே நஷ்டமடைஞ்சவங்க,income taxக்கு கணக்கு காட்ட படத்தை distribute பண்றவங்க,முக்கியமான விஷயம்,இதுல ஒரு distributor கொஞ்சம் கெத்தான ஆளு..தர்மராஜுக்கு state levelல பவருன்னா இவருக்கு central levelல..அவர கொஞ்சம் பேசி convince பண்ணனம்..சரண் நீங்க பேசினா கண்டிப்பா ஒத்துக்குவாரு..உங்க கிட்ட அந்த திறமை இருக்கு.."

வழக்கம் போல் சரணின் படம் அறிவித்த தேதியிலேயே நல்ல விலைக்கு வியாபாரமாகும் நிலைமை இல்லை இப்போது..ஆனால் இப்போதும் கூட சரணுக்கென ஒரு மார்க்கெட் உண்டு..அந்த வரம்பிற்குள் படத்தை வியாபாரம் செய்ய திறமையான ஒரு ஆள் தேவை..பம்பரம் போல் சுழன்ற விவேக் தன்னுடைய அனுபவத்தை எல்லாம் வைத்து தீனதயாள் என்னும் தயாரிப்பாளரிடம் சம்மதம் வாங்கினான்..ஆனால் finance விஷயத்தில் மட்டும் கடும் நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது..இத்தனை நாட்கள் ஓய்விலிருந்த சரண்,கோலிவுட்டின் முக்கிய நிகழ்வுகளை தெரிந்து கொள்ள தவறவில்லை..அதன் விளைவாகத்தான் இவரை உதவிக்கு அழைத்தான் சரண்..

"இந்த வாரத்துக்குள்ள எல்லாத்தையும் முடிவு பண்ணிடலாம் சார்..தமிழ்ப்புத்தாண்டன்னைக்கி படத்தை announce பண்ணிடலாம்..Complete cast and crew.." - நம்பிக்கையுடன் சரண் சொல்ல,விவேக்கிற்கு அத்தனை மகிழ்ச்சி..

"டைரக்டர் யாருன்னு முடிவு பண்ணிட்டீங்களா தம்பி?"

"Yes..அது suspense..கூடிய சீக்கிரம் தெரிஞ்சிக்குவீங்க"

"நல்லது தம்பி..நான் கிளம்பறேன்.." - அவர் விடை பெற்று சென்றதும் விவேக்,

"பாஸ் ராம் மோகன ஏன் வேண்டாம்னு சொல்றீங்க?"

"விவேக்,இப்போ அவர் field out..அதானே நிஜம்?நாமளும் field out..உண்டா இல்லையா ? "

"ஆனா அவர் உங்க friend ஆச்சே?"

"தொழில் வேற நட்பு வேற..அவர் நல்ல படமெடுத்து flop ஆயிருந்தா பிரச்சினை இல்லை..His recent movies were just craps..நான் அவரோட படங்களை பார்த்துட்டு தான் பேசறேன்"

"Full formல இருக்கீங்க பாஸ் நீங்க"

"நீயே சொல்லு..சுத்தமா touch விட்டு போன டைரக்டர வச்சி படமெடுத்தா அவருக்கும் நஷ்டம்,நமக்கும் கஷ்டம்.. அதோட இந்த படம் எடுக்கிறதே ஒரு மிகப்பெரிய சாதனை..இதிலே படம் படுத்துடுச்சுன்னா பழைய படி ஊருக்கு போயி சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட வேண்டியது தான்..உனக்கென்ன நான் இல்லைன்னா இன்னொரு ஹீரோ கிட்ட வேலைக்கு சேர்ந்துடுவ.."

"பாஸ் போதும்..நான் அப்படி பட்டவனா"

"சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டா..ஏன் கோபப்படுற..இன்னைக்கி நான் நல்லா இருக்கேன்னா அதுக்கு முக்கிய காரணமே நீ தானே.."

"சரி யாரு தான் அந்த டைரக்டர்?"


                                                       ***************************


முக்கியமான வேலையாக ஒரு நபரைச் சந்திக்க காதர் பாய் சென்னை எல்லியாட்ஸ் கடற்கரையில் காத்திருந்தார். காலையில் அவர் Walking வரும் நேரமது.அவரும் காதர் பாயை இந்த நேரத்தில் சந்திக்க சம்மதித்திருந்தார்.காதரின் cellphone ஒலித்தது.காதரின் முகத்தில் சிறு ஏமாற்றம் தெரிந்தது..அந்த முக்கிய புள்ளி தான் அழைத்தது..அவருக்கு உடல் நிலை சரி இல்லை என்றும்,இன்று அவர் Walking வர இயலாது என்றும் தெரிவித்தார்..ஒரு ஆறுதல்,மறு நாள் மாலை சென்னை நாரத கான சபாவிற்கு வர சொல்லிவிட்டார்.அங்கே ஒரு நாடகம் பார்க்க இருப்பதாகவும் அப்போது இவருடைய விஷயத்தையும் விவாதிக்கலாம் என கூறிவிட்டார்.காதர் பாய் கண்ணெதிரே கண்ட காட்சி அவருக்கு மிகுந்த ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தருவதாக இருந்தது.சாதாரண கட்டம் போட்ட சட்டையுடன் ஒரு நடுத்தர வயதினன் எதையோ பறிகொடுத்தவன் போல கடலை உற்று பார்த்து கொண்டிருந்தான்.திடீரென ஆகாசத்தை பார்த்தவாறு படுத்து விட்டான்.இது காதர் பாய்க்கு நன்கு பரிச்சயமான முகம் தான்.

"ஸ்ரீதர்,ஷூட்டிங் போகாம இங்க என்னப்பா பண்ற?" - காதர் பாய் கேட்டதும்,நிமிர்ந்து பார்த்தான் ஸ்ரீதர். இந்த நேரத்தில் அவன் இவரை இங்கே எதிர்பார்க்கவில்லை தான்.ஆனால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.சாதாரணமாக எழுந்தான்..

"எல்லாம் போச்சு..எல்லாம் நாசமா போச்சு பாய்.." - அமைதியான குரலில் நடந்தவற்றை சொன்னான் ஸ்ரீதர். காதர் பாய் மிகுந்த வேதனை அடைந்தார்..பிறகு ஸ்ரீதர் தொடர்ந்தான்,

"அன்னைக்கே அந்த சுகுந்தன் ஏத்த இரக்கமா கேட்டார்...'ஹீரோ யாரு,வாசுவான்னு'..அப்போ எதுவும் புரியல..இப்போ புரிஞ்சிகிட்டும் புண்ணியம் இல்லை" - பாய் ஏதோ சொல்ல வாயெடுக்க,ஸ்ரீதர் தொடர்ந்து பேசினான்,

"பாய் ஒரு அப்பன் அவன் பொண்ண அனுப்புறான் பாய்..சான்சுக்காக..தூ தூ..என்ன பொழப்பு பாய் இதெல்லாம்.."

"காதர் பாய்,சினிமான்னா ஏதோ படமெடுத்து சம்பாதிக்கிற தொழில்னு நினைச்சேன்..ஆனா இப்படி படுத்து சம்பாதிக்கிற தொழிலா இருக்கும்னு சத்தியமா நினைக்கல பாய்.."

"தம்பி கடவுள் உன்னை ரொம்பவே சோதிச்சிட்டாறு..நீ மனச தளரவிடாதே" - சமாதனம் சொல்ல பாய் தொடங்க, ஸ்ரீதர்,

"கடவுள்..ஹாஹாஹா..போங்க பாய்..நீங்களும் உங்க கடவுளும்.. "தமிழ் சினிமாவில் டாபர் மாமாக்களும் ப்ரோக்கர்களும் தான் வாழ முடியும்" - இப்படி அந்த சாகித்ய அகாடமி விருது வாங்கின எழுத்தாளர் எழுதினப்போ நான் நம்பலை பாய்..ஆனா இப்போ நம்புறன் பாய்.."

"ஸ்ரீதர்,தப்பு மட்டுமே பண்ண சினிமாவுக்கு வந்தவன் எவனும் வாழ்ந்ததா சரித்திரமே இல்லை..நீ நல்லவன்..லட்சியவாதி..நிச்சயம் அல்லா உனக்கொரு வழி காட்டுவாருப்பா"

ஸ்ரீதர் விரக்தியாக சிரித்தான்..பாய் தொடர்ந்தார்,

"தம்பி ரொம்ப நாளைக்கப்புறம் எனக்கு சினிமாவிலே நல்ல காலம் பொறந்திருக்கு..இப்போ ஒரு படத்திலே நான் ஒரு production manager மாதிரி,அதே சமயம் படத்த தயாரிக்கிரதிலே நானும் ஒரு பார்ட்னெர்(partner).. இந்த படம் மட்டும் ஜெய்ச்சிட்டா,என்னோட 25 வருஷ கஷ்டத்துக்கும் பலன் கிடைச்ச மாதிரின்னு வச்சிக்கோயேன்"

"உங்களுக்கு சுக்கிர திசை ஆரம்பிச்சிடிச்சு,எனக்கு bad time start ஆய்டிச்சி"

"நீ நினைச்சது நடக்கலைன்னா கடவுள் உனக்கு இதோட நல்லதா ஏதோ செய்ய போறாருன்னு அர்த்தம்" - பாய் சொல்லி முடிக்க, ஸ்ரீதரின் cellphone சிணுங்கியது..

"இந்த phone call கூட உன்னோட வாழ்க்கையவே மாத்தலாம்"

ஸ்ரீதர் முகத்தில் ஏதோ ஒரு விச்சித்திரமான மாறுதலை கவனித்தார் காதர், பயங்கரமாக ஸ்ரீதர் ஏதோ யோசித்தான்.. பிறகு சற்று உற்சாகத்துடன் புன்னகைத்தான்,புன்னகையுடனே,

"பாய் நீங்க ஒரு படத்திலே work பண்றதா சொன்னீங்களே, யாரோட படம் பாய் அது?"

".....phoneல யாரு?"

இரண்டுக்கும் பதில் சரண்.

                                                       *************************** 


"பாஸ் நம்ம படத்துக்கு அந்த ஸ்ரீதரையா  டைரக்டரா போட போறீங்க?" - விவேக்

"உன் கண் முன்னாடி தான அவனுக்கு phone பண்ணினேன்?" - சரண்

"பாஸ் யாராவது established டைரக்டர் கூட பண்லாமே?"

"விவேக், நான் அவனை பத்தி நல்லா விசாரிச்சிட்டேன்..அவன் தான் correct.. வாசு தன்னோட வேலைய இவன் கிட்ட காட்டிட்டான்..ஆனா இவன் சில 'compromise'க்கு எல்லாம் ஒத்துக்கலை.. அது மட்டும் இல்லை,இவன் கதை சொல்ற விதம்,இவனோட approachன்னு பல விஷயத்தையும் நான் கேள்விபட்டேன்.. இவன் சுகுந்தன் சார் கூட இவன் work பண்றப்போ நானே இவனை note பண்ணியிருக்கேன்"

"இது ஏதோ ரிஸ்க்னு தோணுது"

"அவன் கிட்ட ஒரு spark இருக்கு.."



(தொடரும்..)

Sunday, January 29, 2012

மாஸ் மீடியா - 8


மாஸ் மீடியா -8
Start Camera Action


முந்தைய பாகங்களைப் படிக்க இங்கே செல்லவும்(click here)


ரணுக்கு மதுவிலேயே சில மாதங்கள் கடந்தன.ஏறத்தாழ ஒரு மன நோயாளி போல் ஆகிவிட்டான் என்றால் மிகையல்ல.தொடர்ந்து குடிப்பதும் சாப்பிடுவதும் உறங்குவதுமாய் காலங்கழித்ததால் சரண் மிகவும் குண்டாகி விட்டான்.கண்கள் சிவந்திருந்தது.முகத்தில் பல நாட்களாக சவரம் செய்யாத தாடி.தொப்பையும் தொந்தியும் தாடியுமாக பரிதாமகவே காணப்பட்டான் சரண்.வெறுப்பின் உச்சத்துக்கே போனான்.மீண்டும் மது அருந்த பாட்டிலை எடுத்தான்.வாய் வரை பாட்டிலை கொண்டு சென்றவன் வெறி பிடித்தவனை போல் பாட்டிலை தூக்கி வீசினான். சுவற்றில் பட்டு அது சுக்குநூறாகி போனது.என்ன நினைத்தானோ என்னவோ திடீரென வீட்டை விட்டு வெளியேறினான்.தாடி முகத்தை மறைத்திருந்ததாலும் பழைய அழுக்கான உடுப்புகளை உடுத்தி இருந்ததாலும் சரணை மக்கள் எவரும் அடையாளம் காணவில்லை.

பைத்தியக்காரன் போல சென்னை முழுக்க சுற்றினான்.சென்னை அரசு பேருந்தில் ஏறினான்.50 ருபாய் டிக்கெட் வாங்கியவன் அன்று முழுவதும் பல பேருந்துகளில் ஏறினான்.சென்னையின் பல பகுதிகளை சுற்றி சுற்றி வந்தான். தர்மராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய பட போஸ்டர்கள் பல ஒட்டப்பட்டிருந்தன.ஆத்திரத்தில் சிலவற்றை கிழித்தெறிந்தான்.சுற்றி சுற்றி வந்த சரணுக்கு இதுவும் கண்ணில் பட்டது.தி நகர் அருகே உள்ள ஸ்ரீனிவாசா திரயரங்கரத்தின் வாசலில் நின்றிருந்தான்.அங்கே தான் நடித்த 'அத்தை மகள் ஆனந்தி' படம் re-release செய்யப்பட்டிருந்தது. சரண் மனதில் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்ச்சி ஏற்பட்டது.திரையரங்கினுள் சென்றான்.டிக்கெட் வாங்கிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தவனுக்கு பெரும் அதிர்ச்சி.வாயடைத்து நின்றான். அவ்வளவு கூட்டம்.அரங்கம் நிறைந்திருந்தது.

"யோவ் உக்காருய்யா படம் மறைக்குது" - என பின்னாலிருந்து குரல் வர சரண் அமர்ந்தான்.சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த படம் சரணின் கேரீயரிலேயே மிக பிரம்மாண்டமான வெற்றிப் படம்.சரணின் நடிப்புக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.இந்த படத்தின் மாபெரும் வெற்றி சரணுக்கு பட்டி தொட்டி எங்கும் ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகரித்தது.A,B,C என அனைத்து சென்டர்களிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இது.இன்றளவும் இந்த படத்திற்கு ஒரு மரியாதை இருப்பதை இந்த கூட்டத்தை பார்த்த சரண் உணர்ந்தான். நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு சுய நினைவு திரும்பியவனை போல் சிந்திக்க தொடங்கினான்.படத்தை பார்ப்பதில் தனது கவனம் இப்போது செல்லவில்லை.தான் நடித்த இந்த படத்தை தானே நூறு முறை பார்த்திருப்பான் சரண்.அவன் கவனம் முழுவதும் வேறு விஷயத்தில் இருந்தது.எந்தெந்த வசனங்கள்.காட்சிகள்,பாடல்கள் கைதட்டல்கள் பெறுகின்றன? எந்த காட்சியில் பார்வையாளர்கள் அரங்கை விட்டு வெளியே செல்கிறார்கள்?என்ன விதமான 'கமெண்ட்' அடிக்கிறார்கள் என ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்க தொடங்கினான்.

படம் முடிந்து,அரங்கிலிருந்து வெளியே செல்பவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என காது கொடுத்து கேட்க தொடங்கினான்.

"ஏன்னா படம் டா..இது re-releaseன்னு நம்பவே முடியல இல்ல?"

"ஆமாம் டா எப்பா..ஏன்னா கூட்டம்..இவ்வளவு திறமைய வச்சிக்கிட்டு இந்தாளு எங்க டா போனான்..படமே இல்ல.."

"இந்த மாதிரி படம் நடிக்க சொன்னா மாஸ் மண்ணாங்கட்டின்னு போயி கடுபெதிட்டான் யா.."

"ஆனா ஒன்னு மட்டும் சொல்றன்,இந்த சரண்,மாஸ் படம் அது இதுன்னு போகாம இந்த மாதிரி படம் நடிச்சான்னு மட்டும் வை,அவன் தாண்டா டாப்பு.."

"திரும்ப வருவார் டா எங்க ஹீரோ..கெத்து காட்ட தான் போறாரு நீயும் பாக்க தான் போற"

இது போன்ற கருத்து தான் பலரிடமும் நிலவியது.இவற்றை கேட்க கேட்க சரண் உணர்ச்சிவசபட்டான்.தன்னை அறியாமலேயே கண் கலங்கி விட்டான்.

"இவன் திரும்ப வந்துட்டாலும்..போடா..பிரபாவதி ரூபாவதின்னு  எவ கூட என்ன பண்ணிட்டிருக்கானோ.. அவன் டைம் எல்லாம் முடிஞ்சி போச்சு"

இப்படி சிலர் ஏளனம் பேசவும் தவறவில்லை.இவை அனைத்தையும் கவனித்து விட்டு சரண் மீண்டும் பேருந்தில் ஏறினான்.மெரினா கடற்கரையில் தனியே நடக்க தொடங்கினான்.அன்று மக்கள் நடமாட்டம் அதிகமில்லை. திடீரென மணலில் அமர்ந்து கடலையே உற்று நோக்க தொடங்கினான். அலைகளையே கவனமாக பார்த்து கொண்டிருந்தான். அவன் பார்வையில் ஏதோ ஒரு அர்த்தம் இருந்தது.ஏதோ ஒரு 'pattern'ஐ கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான். அலைகள் உயர எழும்பின பின்னர் விழுந்தன.மீண்டும் உயர எழும்பின மீண்டும் விழுந்தன.மீண்டும் எழுந்தன மீண்டும் விழுந்தன..

சரண் எழுந்தான்.தன்னை தானே ஒரு முறை நோட்டம் விட்டு கொண்டான்.வீட்டைச் சென்றடைந்த பின் நிம்மதியாக உறங்கினான்.

மறு நாள் காலை வழக்கம் போல சரணை எழுப்ப வந்த விவேக் அதிர்ச்சி அடைந்தான்.படுக்கையில் சரணை காணவில்லை.அலமாரியில் இருந்த மது பாட்டில்கள் மொத்தமும் மாயமாய் மறைந்திருந்ததை கண்டு வியப்படைந்தான்.நேற்று ஆத்திரத்தில் சரண்,  மது பாட்டில்களை உடைத்தது நினைவிற்கு வர விவேக்கிற்கு உள்ளூர ஒரு பயம் பற்றி கொண்டது.ஒரு வேளை சரண் ஏதேனும் விபரீதமான முடிவை மேற்கொண்டு விட்டானோ என. ஆனால் விவேக்கிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

முகத்தை முழுச் சவரம் செய்திருந்த சரண் வந்து சேர்ந்தான்.ஜிம்மிற்கு சென்று கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளான் என்பதை விவேக் உணர்ந்தான்.இது உண்மையில் விவேக்கிற்கு அதிர்ச்சி தான். ஆனால் இன்ப அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.

"பாஸ் You are just awesome today..Full shave, இவ்வளவு காலையில exercise,பாட்டில் எதுவும் காணோம்.. பார்க்கிறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு" - விவேக்

"விவேக் இது தான் என்னோட பிளான்..இன்னும் ஒரு மாசத்துல இந்த தொப்பைய முழுசா குறைக்கணம். உடம்புக்கு full fitness கொண்டு வரணம்.அப்புறம் ஆரம்பிக்கலாம் நம்மளோட செகண்ட் இன்னிங்க்ச"

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி தெளிவாக பேசிய சரணை கண்டதில் ஏக மகிழ்ச்சி அடைந்தான் விவேக். 'நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது' என குடுகுடுப்பைக்காரன் பேசும் வசனம் தொலைகாட்சியில் தற்செயலாக ஒளிபரப்பாக,விவேக்,பக்குவமாக புன்னகைத்து விட்டு நகர்ந்தான்.


                                                       ***************************



ண்ணப்பன் தயாரிக்கும் படத்தை இயக்க போவது ஸ்ரீதர் தான் என்பது உறுதியாகி விட்டது.படத்திற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டாகி விட்டது.படத்திற்கு பிரம்மாண்டமான பூஜையும் போடப்பட்டு விட்டது. தான் இன்று ஒரு இயக்குனராக பெரிதும் உதவிய காதர் பாய்,நடிகை ஜோயித்தா மற்றும் ஸ்ரீதரின் குருநாதர் சுகுந்தன் என அனைவரும் பூஜையில் கலந்துகொண்டனர்.இந்த ஜோயித்தாவை பார்த்த வாசுவிற்கு வேதாளம் மீண்டும் முருங்க மரம் ஏறிய கதையாக மனதிற்குள் ஆபாச எண்ணங்கள் ஓட தொடங்கின."பேசாம படத்துக்கு இவளை ஹீரோயனா select பண்ண்யிருக்கலாம்..ஆயிரம் சொல்லு செம்ம கட்டை டா இவ..சரி பரவாயில்லை இப்போ select பண்ணியிருக்கிற ஹீரோயினும் அதுக்கு பொருத்தமாத் தான் இருப்பா" - மனதிற்குள் நினைத்து கொண்ட வாசு ஜோயித்தாவை பார்த்து பெருமூச்சு விட்டான்.ஜோயித்தாவோ வாசுவை கண்டுகொள்ளாமல் ஸ்ரீதருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்பினாள்.

படத்தின் கதை கண்ணப்பனுக்கு பிடித்து விட்டது. வாசுவுக்கும் இந்த கதையை விளக்கி விட்டான் ஸ்ரீதர்.ஆனால் வாசுவோ ஸ்ரீதர் சொன்ன கதையையோ அல்லது கதையை சொன்ன ஸ்ரீதரை வெகுவாக ரசிக்கவில்லை.இதை ஸ்ரீதரும் கவனிக்கத் தவறவில்லை.இவற்றை விட ஸ்ரீதருக்கு எரிச்சலூட்டிய விஷயம் என்னவென்றால் தான் சொன்ன கதையை கேட்டு அந்த கதையில் வாசு சொன்ன மாற்றங்கள் தான். கதைக்கு சற்றும் சம்மந்தமே இல்லாமல் கதாநாயகியுடன் முத்த காட்சிகள்,படுக்கையறை காட்சிகள்,கதாநாயகியுடன் ஒரு மிக நெருக்கமான மசாலா பாடல் என அனைத்தையும் சேர்க்க வேண்டுமென வற்புறுத்தியது ஸ்ரீதருக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது.தான் சொல்லும் பெண்ணைத்தான் கதாநாயகியாக்க வேண்டுமென திட்டவட்டமாக கூறி விட்டான் வாசு.கண்ணப்பனும் அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை.இவர்கள் இருவரின் 'எதிர்பார்ப்புகளை' அனைத்து விதத்திலும் 'பூர்த்தி' செய்திருந்த அந்த கதாநாயகியை மாற்ற வேண்டுமென ஸ்ரீதர் சொன்னால் உடனடியாக மாற்றி விடுவார்கள்.கதாநாயகியை அல்ல,படத்தின் டைரக்டரை. மிகுந்த ஆர்வத்துடன் கதை சொல்ல வந்த ஸ்ரீதர் ஏமாற்றத்துடன் தான் திரும்பி வந்தான்.

சுவாரஸ்யமாக ஏதோ புத்தகங்களை புரட்டி கொண்டிருந்த காதர் பாயிடம் நடந்தவற்றை எல்லாம் மிகுந்த வேதனையோடு சொல்லி முடித்தான் ஸ்ரீதர்.

"தம்பி இவ்வளவு நாள் சந்திச்சது சோதனை இல்லை..இது தான் ஆரம்பம்..இன்னும் நீ நிறைய பார்க்க வேண்டி இருக்கும்"

"பாய்,இந்த ஹீரோ கம்மினாட்டி தன்னோட ஆசையை எல்லாம் தீர்த்துக்கனம்னு என் கதையை கண்ணா பின்னான்னு மாத்த சொல்றான் பாய்..இவன் சொல்றபடி செஞ்சா என் கதை 10% தான் இருக்கும், பாக்கி 90% கதை அந்த வாசுவோட கதையா தான் இருக்கும்.."

"நீ ஒன்னும் prove பண்ண டைரக்டர் இல்லையேப்பா.."

"அதுக்காக?"

"அதுக்காக நீ சில compromises பண்ண வேண்டி இருக்கும்..என்னை பத்தி உனக்கு தெரியாத ஒரு விஷயத்தை சொல்றன் கேளு..உன்னை மாதிரி தான் நானும் இங்க வந்தேன்..டைரக்டராகனோம்,சாதிக்கனம்னு தான் கிளம்பி வந்தேன்..இப்படி ஒரு ஹீரோ கேட்டதுக்கு ஒத்துழைக்க மாட்டேன்னு சொன்னதோட விளைவு தான் இன்னைக்கு வெறும் துணை நடிகர்கள் ஏஜண்டாவே இருக்கேன்..வாய்ப்பு வர்றப்போ பயன்படுத்திக்கோ"

"ஆனா பாய் அந்தாளு சொல்றதெல்லாம் எப்படி...?" - என இழுத்த ஸ்ரீதருக்கு அறிவுரை சொல்ல தொடங்கினார் காதர்.

"அவன் சொல்றதெல்லாம் சேர்த்தா என்ன?உன் கதை வெறும் 10% தான் வருதுன்னு சொன்னியே..அதுல கவனம் செலுத்து..பெரிய ஹீரோ படம்..நல்ல பப்ளிசிட்டி இருக்கும்..ஒரு ஹிட் கொடுத்துட்டா போதும்..நாளைக்கி நீ தான் டாப்..இல்லைன்னு அடம் பிடிச்சா நேத்து எப்படி ஒரு காதரோ இன்னைக்கி அப்படி ஒரு ஸ்ரீதர்னு கதை முடிஞ்சிடும்" - என காதர் பாய் சொன்ன அறிவுரையை கேட்ட ஸ்ரீதர்,ஓரளவு convince ஆனான்.


                                                       ***************************


 ன் படத்தில் ஒரு விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நடிகை தேடிக்கொண்டிருந்தான் ஸ்ரீதர்.ஸ்ரீதரின் எதிர்பார்ப்பு என்னவென்றால் வெறும் சிவந்த தோல் பெண்ணாக இருந்தால் போதாது.சற்று குண்டாக, அதே சமயம் சற்று அழகாகவும் வயது குறைவாகவும் இருக்க வேண்டும்.முக்கியமாக இதுவரை படங்களில் அறியப்படாத  நடிகையாக இருக்க வேண்டும் ஏனெனில் ஸ்ரீதரின் கதையில் இந்த கதாபாத்திரத்துக்கு ஒரு தனி முக்கியத்துவமுண்டு. நடிக்க சான்ஸ் கேட்டு விண்ணப்பம் அனுப்பியிருந்த ஒரு சில பெண்களின் ஸ்டில்ஸை(stills) பார்த்தான்.தன் எதிர்பார்ப்புக்கேற்ற பெண் கிடைக்கவில்லை. ப்ரொடக்ஷன் மேனேஜர் உதவியுடன் சான்ஸ் கேட்டு காத்திருக்கும் பெண்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்றான் ஸ்ரீதர்.

அங்கே சிவப்பு நிற சேலையை அறையும் குறையுமாக உடுத்தி இருந்த ஒரு பெண்ணை கண்டான்.சென்னை தமிழின் பொன்னான வார்த்தைகளில் அர்ச்சனை செய்து கொண்டிருந்தால் அந்த பெண்.

"அய்யே கசுமாலம் எப்டி பொது பாத்தியா..பையில மொத்தமா பத்து ரூவா இல்ல,இது மொகறைக்கெல்லாம் பொம்பள சுகம் கேக்குது..ஈத்தர நாயிங்க கண்டவன் காசுல குச்சிட்டு எவ கிடைப்பான்னு கொயுத்து போயி அலையறானுங்க.. துத்தேறி நாரப்பய மொவன்..."

"இந்த பொண்ண நடிக்க வைச்சா வசனம் எழுதிற வேலை கூட மிச்சம் போலே" - என எண்ணிய ஸ்ரீதர் மனதில் ஏதோ ஒரு குழப்பம் தோன்றியது.அந்த பெண்ணை அருகில் நெருங்க நெருங்க ஸ்ரீதருக்கு குழப்பம் அதிகமானது..முந்தானை விலகி முழங்கால் தெரியுமளவு புடவையை தூக்கி கட்டியிருந்த அந்த பெண் தலைவிரி கோலமாக நின்றதை கண்டு ஸ்ரீதர் திகைத்து போய் நின்றான்.

"அட..யார்பா நீ...அப்டி பாக்குற..சட்ட பேண்டு கூலிங் க்ளாசு எல்லாம் போட்டுகினு ஷோக்கா கீறியே..ஈரோவா நடிக்க போறியா" - என கேட்ட அந்த பெண் பாக்கு போட்டு துப்பினாள்.

"நீ..நீங்க?" - என இழுத்தான் ஸ்ரீதர்

"அட இன்னாயா வேணும்..சொல்லி தோழா அத்த வுட்டு இப்டி இஸ்துனுக்கீறியே"

"உன்னை நான் பார்த்திருக்கன்..'அத்தை மகள் ஆனந்தி' பட ஷூட்டிங் ஸ்பாட்ல பார்த்திருக்கேன்..நீ நீ  நடிக்க சான்ஸ் கேட்டு வந்த ராணி தானே?"

இதை கேட்ட அந்த பெண் சற்று நிலைகுலைந்து போனாள்.பிறகு பதிலளிக்க தொடங்கினாள்.

"அது அப்போ நைனா..இப்போ நான் ராத்திரில மட்டும் தான் ராணி.."

"நீ எப்படி இப்படி ஆனே ராணி?உன்னோட ஆல்பத்தை நீ அன்னைக்கு தவற விட்டுட்டு போய்ட்ட..உன்னோட அந்த அப்பாவித்தனமான முகமும் முழியும் இன்னும் கண்ணிலேயே இருக்கு எனக்கு..நான் துணை நடிகனா இருந்தப்போ உன்னை பத்தி ஒரு ரெண்டு மூணு தடவை விசாரிச்சிருக்கேன்..but கண்டுபிடிக்க முடியல..ஏன் இப்படி ஆய்ட்ட?" - திடீரென ராணியை இந்த கோலத்தில் கண்ட ஸ்ரீதர் ஏதோ ஒரு குழப்பத்திலேயே கேள்வி கேட்டான்.

இந்த நான்கு வருடங்களில் தன்னிடம் இந்த கேள்வியை ஒருவர் கூட கேட்டதில்லை.ஸ்ரீதர் உண்மையான அக்கறையுடன்  இப்படி கேட்கவே தன்னையறியாமல் கண் கலங்கி விட்டாள் ராணி.நடந்ததெல்லாம் ஒரு சில நிமிடங்கள் ராணியின் மனத்திரையில் ஓடின.சினிமா ஆசையில் அப்பாவின் பேச்சை மீறி யாரோ ஒரு மாமா பையலின் பேச்சை கேட்டு வீட்டை விட்டு வெளியேறிய அன்று பிடித்தது இந்த தரித்திரம். ஸ்க்ரீன் டெஸ்ட் என்கிற பெயரில் அன்று கண்ணப்பன் செய்த அட்டூழியங்கள் ராணியின் நினைவிற்கு வந்தன.

"அதாவது குட்டி..உன் பேரென்ன சொன்ன,அஆன் ராணி..நீ அழகா இருக்க ஆனா நீ ஹீரோயின் ஆகனமுன்னா இன்னும் நிறைய கத்துக்கணம்"  - என கூறி இடையில் கை வைத்த அன்றே கண்ணப்பன் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை கொடுத்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்குமா? "நீ என்னை கவனிச்சிகிட்டன்னு வை உன்னை நான் கவனிச்சுக்குவன்" - என தன்னையும் அணைத்து விளக்கையும் அணைத்த அன்றே தன் வாழ்க்கையும் இருட்டாகிவிட்டதை எண்ணிய போது இப்போதும் கூட ராணியின் உள்ளம் பதறியது.இவை அனைத்தையும் ஸ்ரீதரிடம் சொல்லி முடித்தாள்.

"இவ்வளவு ஆனதுக்கப்புறமும் அவன் உனக்கு சான்ஸ் தரலையா?நீ போய் பாத்தியா அந்தாளை?"

"பாக்காம என்ன..போனதுக்குத்தான் அந்த கெழவன்,'நீ செஞ்ச வேலைக்கி நேத்திக்கே உனக்கு சம்பளம் குடுத்துட்டனே இன்னும் என்னன்னு' நக்கலா பேசி அனுப்சிட்டான்..

"போலீஸ்ல  complain பண்ண வேண்டியது தானே?"

"போலீசா..அட இன்னாபா நீ இம்மாம் பெர்சா வளந்துக்கிற..கொயந்தயாட்டும் பேசறியே..இங்க முக்காவாசி போலீஸ்காரனுங்க நம்ம customer தான்"

இதை கேட்ட ஸ்ரீதருக்கு ஆத்திரம் பொங்கியது..அதை கவனித்த ராணி,

"நீ எதுக்குய்யா டென்ஷன் ஆயினுக்கீர..எல்லாம் விதி..ஒழுங்கா அப்பா பேச்ச கேட்டு காலேஜ்ல படிச்சிருந்தா இந்நேரம் B.Ed படிச்சிருப்பேன்..இப்போ என் பொயப்பு இப்படி ஆய்போச்சி.."

"நீ ஏன் திரும்ப வீட்டுக்கு போல?"

"போவாம என்ன..அதுக்குள்ள எவனோ ஒரு ஊடுகொளுத்தி 'உன் பொண்ணு அந்த மாமா பைய சலீமோட ஓடி போயிட்டா'ன்னு எங்கப்பனாண்ட வத்தி வச்சிட்டான்..அந்தாளு ஒரே பேச்சா சொல்லிட்டான்,சினிமா படத்துல வர்ற மாதிரி.. "உன்ன நாங்க தல முழுகி ஒரு வாரம் ஆச்சு"ன்னு சொல்லிட்டான்..எங்க சித்தி மூதேவி ஒன்னு போதுமே,
"இந்த வீட்ல இன்னொரு படிக்கிற பொண்ணு இருக்கா.. அவ வாழ்க்கையையும் கெடுத்திராதே..இனிமே இந்த வீட்டு பக்கம் வந்துடாதே"ன்னு ஒரே போடா போட்டாளே பாக்கலாம்.."

"சரி ஒரு தபா நடந்துர்ச்சு,இனிமே என்ன நடந்தாலும் சரி,எவனாச்சு புடிச்சு எப்டியாச்சு ஹீரோயினி ஆய்டலாம்னு பார்த்தேன்..ஏன் ஆட்டமெல்லாம் பலிக்காம போச்சு..அதுக்கெல்லாம் ராசி வேணும்யா..அழகா இருந்தா மட்டும் பத்தாது.." - என சற்று உணர்ச்சி வசப்பட்டு கலங்கிய ராணி,திடீரென சுதாரித்து கொண்டு பேசலானாள்,

"என்ன பெத்தவன் கூட இம்புட்டு அக்கறையா பேசினதில்ல..நீ ஒருத்தன் தான் பேசியிருக்க..ஆமா நீ யாரு,இன்னா matteru எங்க வந்துக்கீற?"

"இல்லை என் படத்திலே ஒரு characterல  நடிக்க ஒரு பொண்ணு வேணும்..இங்க சான்ஸ் கேட்டு வர்ற பொண்ணுங்க தங்கியிருக்கிறதா ப்ரொடக்ஷன் மேனேஜர் சொன்னார்..அதான் வந்தேன்.."

"ஹ்ம்ம்..நீயாச்சு நடிக்க வைய்யா..ஸ்க்ரீன் டெஸ்ட் எடுக்கிறேன்னு இன்னொரு பொண்ணு வாழ்க்கைய நாசமாக்கிராத.."

"ராணி இப்போவும் படத்திலே நடிக்கிற ஆசையிருக்கா உனக்கு?"

வெறியோடு தேடிய போது கிடைக்காத சந்தர்ப்பம்,வாழ்க்கையே திசை மாறி போன பின் கிடைத்தென்ன பயன் என நினைத்து கொண்டால் ராணி.ஆனாலும் நடிகையாகி விடடால் ஒரு சில வசதிகள் உண்டென்பதை உணர்ந்திராமல் இல்லை ராணி.அவள் உல் மனத்திலும் நடிகையாக வேண்டுமென்ற ஆசையும் அடியோடு அழிந்து விடவில்லை..

"இன்னாய்யா டமாஸ் பண்றியா"

"இல்லை நிச்சயம் உனக்கு என் படத்திலே நான் வாய்ப்பு தர்றேன்..ஆனா.."

"ஆனா இன்னாய்யா?"

"ஆனா 2 கண்டிஷன்..உனக்கு என்னோட அடுத்த படத்திலே தான் வாய்ப்பு தருவேன்..அதுக்குள்ள நீ இந்த தொழிலை நிறுத்தனம்"

"அப்போ சோத்துக்கு நா இன்னா செய்றதாம்..சோகா சொல்றியே தொயில நிறுத்துன்னு"

"ஏன் ஊருலகத்திலே வேற பொழப்பே இல்லையா என்ன?நீ இதுக்கு சம்மதிச்சா என்னோட அடுத்த படத்திலே உனக்கு நிச்சயம் ஒரு part உண்டு"

"சரி வாத்தியாரே..try பண்றேன்..இதெல்லாம் அம்மாம் சீக்கிரம் உட முடியாது..ஆனா கஷ்ட பட்டா சாதிச்சிடலாம்னு வச்சிக்கோ..ஒரு கேள்வி.."

"என்ன?"

"இந்த படத்திலே ஏன்னா வேசத்துக்குயா ஆள் தேடினிக்கீற?"

"Prostitute"

தேடி வந்த கதாபாத்திரம் கூட விலை மாது கதாபாத்திரமாகத் தான் வந்ததை எண்ணி சற்றே நொந்து கொண்டாலும், அவளுக்கு ஸ்ரீதரின் வார்த்தை நம்பிக்கயூட்டும்படியாக இருந்தது.

(தொடரும்...)  

Monday, January 23, 2012

மாஸ் மீடியா - 7

மாஸ் மீடியா -7
                                                            Start Camera Action


முந்தைய பாகங்களைப் படிக்க இங்கே செல்லவும்(click here)


உதவி இயக்குனராக பணியாற்றி கொண்டே ஸ்ரீதர் தனக்கு தெரிந்த திரையுலக பிரமூகர்கள் மூலம் தனியாக படம் இயக்க வாய்ப்பு கேட்டு கொண்டுத் தானிருந்தான்.ஒரு படம் இயக்க கதை மட்டுமே போதுமென நினைத்து கோடம்பாக்கத்துக்கு வந்த ஸ்ரீதருக்கு, தன் எண்ணம் தவறு என்று விளங்கவே சில வருடங்கள் தேவைப்பட்டது. ஒரு திரைப்படம் வெற்றி பெற நல்ல கதை மட்டுமே போதாது,தரமான இசை,கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர்கள், சிறப்பான ஒளிப்பதிவு,சாமார்த்தியமான மார்க்கெட்டிங் என பல விஷயங்களும் எத்தனை அவசியம் என்பதை உணர்ந்தான் ஸ்ரீதர்.நேரடியாக உதவி இயக்குனராகாமல் பல வித இன்னல்களுக்கும் ஆளாகி, கோடம்பாக்கத்தில் இருக்க ஏதோ ஒரு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு,ஹீரோ,ஹீரோயின்,இயக்குனர், ப்ரொடக்ஷன் மேனேஜர் என அனைத்து தரப்பினருக்கும் டீ-காபி கொண்டுவருவது,ஆப்பிள் ஜூஸ் கொண்டுவருவது, கார் துடைப்பது போன்ற பல எடுபிடி வேலைகளும் செய்த பிறகு தான் இன்று உதவி இயக்குனராகி இருக்கிறான். இப்படி பல தரப்பினருடனும் பழகியதால் ஒவ்வொரு தொழிலாளியின் கஷ்டத்தையும் உணர்ந்திருந்தான்.

ஒரு ஸ்டன்ட் மாஸ்டர் வயதான ஹீரோவுக்கு ஒரு விதமான சண்டைக்காட்சிகள் அமைக்க வேண்டும், நடுத்தர வயதுள்ள ஹீரோக்களுக்கு ஒரு விதமாகவும் மிக இளம் வயதினராக இருப்பவர்களுக்கு ஒரு விதமாகவும் அமைக்க வேண்டும்.இதில் சில ஹீரோக்கள் தங்கள் 'ரசிகர்களை' திருப்தி படுத்த அந்தரத்தில் பறந்து கொண்டே வில்லன்களை அடிப்பது போன்ற காட்சிகளும் வேண்டுமென்று demand செய்வதுண்டு.ஒரு சில நடிகர்கள் அபாயகரமான சண்டைக் காட்சிகளிலும் கூட doupe இல்லாமல் தாங்களே நடிக்கவும் செய்வார்கள்.அப்படி doupe இல்லாமல் இந்த நடிகர் நடித்து விட்டார் என்று அதையே கூட ஒரு விளம்பரப் பொருளாக்கி அதை வைத்தும் publicity தேடும் கதைகளும் கோடம்பாக்கத்தில் இல்லாமல் இல்லை.ஒரு சில நடிகர்கள் 40 மாடி கட்டிடத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சிகளில் risk  இல்லாமல் doupe போட்டு நடித்து விட்டு, "'doupe' போடாமல் நானே நடித்தேன் என்று சுய தம்பட்டம் அடித்து கொள்ளும் நகைச்சுவைகளும் இல்லாமல் இல்லை.

ஆங்கிலப்படங்களை அப்படியே தமிழில் உல்டா செய்யும் இயக்குனர்களும் இல்லாமல் இல்லை.அந்த படங்களில் வரும் வசனங்களைக் கூட அப்படியே தமிழில் மொழி மாற்றம் செய்து படமெடுத்து விட்டு தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு உயர்த்தி விட்டதாக மார்தட்டி கொள்வதும் ஒரு வித  fashion இப்போது. ஒரு முறை தன் குருநாதர் சுகுந்தனே சில காட்சிகளை ஒரு கொரிய படத்திலிருந்து அப்படியே உல்டா செய்து தனது படத்தில் வைத்திருந்ததை கண்ட ஸ்ரீதருக்கு ஒரு வித disappointment. அப்போது இப்படித்தான் சுகுந்தன் பதிலளித்தார்,

"ஸ்ரீதர், 'The secret to creativity is knowing how to hide your sources.' - இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது. இதெல்லாம் ஒன்னும் தப்பில்லை.. இங்க யாருடைய கதையும் 100% உண்மையான கதை இல்லை."

"அதெப்படி?" - ஸ்ரீதர்

" There will be an inspiration behind every imagination. அந்த inspiration எதுவா வேணும்னாலும் இருக்கலாம்.ஒருத்தர் வாழ்க்கைல நடந்த சம்பவமோ,இல்லை நாம படிச்ச புஸ்தகமோ இல்லை நாம பார்க்கிற ஏதோ ஒரு விஷயமோ..இப்படி எதுவா வேணும்னாலும் இருக்கலாம்..ஒத்துக்குறியா ஸ்ரீதர்?"


ஸ்ரீதர், ஆமோதிப்பது போல் தலையசைத்தான்.

"அதே தான் இதுவும்.So எல்லாமே ஒரு வித inspiration தானே ஸ்ரீதர்" - இப்படி பேசி ஸ்ரீதரின் வாயை அடைத்து விட்டார் சுகுந்தன்.

இத்தனை விஷயங்களை பார்த்ததாலோ என்னவோ சினிமாவைப் பற்றி முழுவதும் புரிந்து கொண்டு விட்டதாக எண்ணினான் ஸ்ரீதர்.அவனுடைய வாய்ப்பு வேட்டை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் ஒரு எதிர்பாராத செய்தி அவனுக்காக காத்திருந்தது.

ஸ்ரீதரின் Cellphone ஒலித்தது.அறிமுகமில்லாத நபரிடமிருந்து அழைப்பு.ஒரு வேளை Kotak Mahindra வங்கியின் சேமிப்பு திட்டத்தை பற்றி பேச, வரும் வழக்கமான இம்சையோ என நினைத்து அழைப்பை துண்டிக்க நினைத்தான்.ஆனால் அப்படிச் செய்யாமல் அழைப்பை ஏற்று பேசினான்.

பேசி முடித்த சில நிமிடங்கள் ஸ்ரீதர் ஆகாயத்தில் பறப்பதை போலவே உணர்ந்தான்.இது நிஜம் தானா? இல்லை இன்னும் உறக்கத்தில் தான் இருக்கிறோமா என கூட தன்னை கிள்ளி சோதித்து கொண்டான்.பெற்ற இன்ப அதிர்ச்சியால் சிறிது நேரம் செய்வதறியாமல் தவித்த ஸ்ரீதர் பிறகு சுதாரித்து கொண்டு சுகுந்தன் வீட்டில் இருக்கிறாரா என தெரிந்துகொண்டு,உடனே அவர் வீட்டுக்கு புறப்பட்டான்.

"என்னய்யா ஸ்ரீதர் இப்படி திடீர்ன்னு வந்து நிக்கிற? என்ன சமாச்சாரம்?" - சுகுந்தன்

"சார் ஒரு முக்கியமான விஷயம்.ரொம்ப சந்தோஷமான விஷயம் சார்.கண்ணப்பன் சார் எனக்கு phone பண்ணார்.."

"சீக்கிரம் சொல்லுப்பா என்ன விஷயம்..நல்ல விஷயம்னு வேற சொல்ற..கேட்கிறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கேன்"

"நான் எழுதி வைச்சிருந்த ஒரு கதைய கொஞ்ச நாளைக்கு முன்னாடி கண்ணப்பன் சார் கிட்டே narrate பண்ணியிருந்தேன்...அது விஷயமாத்தான் phone பண்ணாரு"

என்ன பேசியிருப்பார்கள் என ஒருவாறு ஊகித்துவிட்டார் சுகுந்தன்.ஆனாலும் ஸ்ரீதர் பேசி முடிக்கும் வரை அமைதி காத்தார்..ஸ்ரீதர் தொடர்ந்தான்..

"அவர் அடுத்து தயாரிக்கிற படத்துக்கு என்னையே டைரக்டரா போடறதா முடிவு பண்ணிட்டாங்களாம் சார்.. இத்தனைக்கும் என்ன recommend பண்ணது 'Silver Star' வாசு தானாம்..கூடிய சீக்கிரம் ஷூட்டிங் ஆரம்பிக்க போறாங்களாம்..என்னை நாளைக்கு அவரோட officeல வந்து பார்க்க சொல்லியிருக்காரு.."

"தனியா படம் டைரக்ட் பண்ண போறியா?" - சுகுந்தன் உண்மைலேயே அதிர்ச்சி அடைந்துத் தான் போனார்.

"ஆமாம் சார்..திடீர்னு இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சதும் எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை..எனக்கு சினிமாவிலே நுழையறதுக்கு pass வாங்கிக்கொடுத்தவரு நான் பெருசா மதிக்கிற காதர் பாய்..ஆனா சினிமான்னா என்னன்னு கத்து கொடுத்த குரு நீங்க தான் சார்..அதான் உங்க கிட்டே ஆசீர்வாதம் வாங்கிட்டு போலாம்னு வந்தேன்"

"உனக்கு சினிமா பத்தி என்ன தெரியும்?ஒரு படம் தனியா டைரக்ட் பண்றதுக்கு தேவையான அனுபவம் உனக்கு  இல்லை..நீ இன்னும் நிறைய கத்துக்கணம்..அதுவும் கண்ணப்பன் தயாரிக்கிற படத்துலயா டைரக்டரா அறிமுகமாகுற?இது நல்லதுக்கே இல்லை" - இப்படித் தான் சொல்ல நினைத்தார் சுகுந்தன். ஆனால் தான் இதைச் சொன்னால் ஸ்ரீதர்,கிடைத்த வாய்ப்பை தான் கெடுப்பதாகவும்,ஸ்ரீதரின் முன்னேற்றத்தை தடுப்பதாகவும் தான் எண்ணிக்கொள்வான்.அதனால்,

"ரொம்ப சந்தோஷம் தம்பி.நீ நிச்சயம் பெரியாளா வருவா..உனக்கு என்னோட ஆசீர்வாதம் எப்போவும் உண்டு..வாழ்த்துக்கள்"

ஸ்ரீதர்,சுகுந்தனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.தட்டி கொடுத்து எழுப்பினார் சுகுந்தன்.விடை பெற்று சென்ற ஸ்ரீதர் வாசலை அடைந்த போது,திடீரென சுகுந்தன்,

"ஸ்ரீதர்,இந்த படத்துக்கு உன்னை யாரு recommend பண்ணதா சொன்னே?"

"'சில்வர் ஸ்டார்' வாசு சார்..இந்த படத்துக்கு ஹீரோவும் அவர் தான்"

                                                     ***************************

குடித்து விட்டு படுக்கையறையில் விரக்தியாக விழுந்து கிடந்தான் சரண்.இப்போது அவனிடம் மிச்சமிருப்பது இந்த வீடும் தன்னுடைய காரும் மாட்டும் தான்.அரசியல் ஒரு மனிதனின் வாழ்க்கையை பல விதத்தில் திசை திருப்பும் வல்லமை கொண்டது.அதுவும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரென்றால் கேட்கவே வேண்டாம்.அரசியலுக்கு வந்தாலும் குற்றம் வராவிட்டாலும் குற்றம்.அரசியல்வாதி ஆதரித்தாலும் சரி, எதிர்த்தாலும் சரி,ஒரு வித ஆபத்து நம்மை நெருங்குகிறது என்றே பொருள்.கடும் புயல் ஏராளமான நாச காரியங்களை செய்த பிறகு நிலவும் ஒரு வித அசவுகரியமான நிலை தான் இங்கும் நிலவுகிறது.தர்மராஜ் தனது தந்தைக்காக பிரச்சாரத்திற்காக அழைத்த போது அதை மறுத்து விட்டான் சரண்.ஆனால் தர்மராஜோ விடாமல் வற்புறுத்த தொடர்ந்து சரண் மறுக்க,வாக்குவாதம் எல்லை மீறி சென்று விட்டது.இருவருக்கும் இடையில் நடந்த இந்த சொற்போரால் கடும் பாதிப்புக்கு உள்ளானதென்னவோ சரண் தான்.

தன்னுடைய 'பன்னீர் செல்வன்' படம் தர்மராஜ் தரப்பால் கிடப்பில் போடப்பட்டது.சோழ ராஜாவாக தான் நடிக்க இருந்த 'அதிசய கனவு' படமும் பகல் கனவாகிவிட்டது.படம் தற்காலிகமாக தான் நிறுத்தப்பட்டுள்ளது என்று பரவலாக பேசி கொண்டாலும்,இனி அந்த படம் தொடர்வதற்கு எந்த ஒரு சாத்தியக்கூறும் இல்லை.தர்மராஜோ அரசியல்வாதி,தனது புத்தியை காட்டி விட்டான்.

அது மட்டுமில்லை ஒரு வேளை வேற படம் ஒத்துக்கிட்டாலோ இல்லை இந்த படத்திலே நடிக்க மறுத்தாலோ படத்துக்காக ஆன மொத்த செலவும் வட்டியோட திருப்பி கொடுக்கனம்


இப்படி எழுதியிருந்த ஒப்பந்தத்தில் சரண் கையெழுத்து இட்டதால் அவனிடமிருந்து பல கோடி ருபாய் பிடுங்கி விட்டது தர்மராஜ் தரப்பு.மேற்கொண்டு சரனை வைத்து எந்த ஒரு தயாரிப்பாளரும் படமெடுக்க முன்வராத அளவிற்கு தர்மராஜ் தரப்பு வேலை பார்த்து விட்டது.தற்செயலாக சரணின் மற்ற சில வியாபாரங்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்தன.தன்னுடைய சொத்துக்கள் பலவற்றை விற்றுத் தான் அவற்றிற்கு ஈடு கட்ட வேண்டியிருந்தது.சுருக்கமாகச் சொன்னால் இன்று சரண் ஒரு 'மாடி வீட்டு ஏழை'.


இது போதாதென்று சரணுக்கு பிரபாவதி என்ற நடிகையுடன் இருந்த தொடர்பையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டான் தர்மராஜ்.அந்த பிரபாவதியை தனது பக்கம் சேர்த்து கொள்ள சில லட்சங்கள் செலவழித்த தர்மராஜ், அவளை வைத்தே சரணுக்கு இருந்த மதிப்பை முழுவதுமாக சீர்குலைத்தான் .இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் சில படங்களை, 'மூன்றாவது கண்' பத்திரிக்கையின் மூலம் வெளியிட செய்தான் தர்மராஜ்.இது போன்ற படங்களை வெளியிடுவதையே தொழிலாக கொண்ட அந்த பத்திரிகை,இந்த புகைப்படங்களை வைத்து இவர்களுக்குள் இருந்த உறவை எத்தனை ஆபாசாமாக சித்தரிக்க முடியுமோ அத்தனை ஆபாசாமாக சித்தரித்து ஒரு சில கட்டுரைகளை வெளியிட்டது.இது சரண் தான் செய்தான் எனவும்,தான் மிகவும் நம்பிய சரண் தன்னை ஏமாற்றி விட்டான் எனவும் பத்திரிக்கைகளில் கண்ணீர் மல்க பேட்டியளித்தாள் பிரபாவதி.இந்த பேட்டிக்கு பின்னணியில் இருந்ததும் தர்மராஜ் தான்.


பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இழந்து,மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தையும் இழந்து,அடுத்து எந்த பட வாய்ப்புகளுமின்றி ஒரு ஜடம் போலத்தான் இருந்தான் சரண்.வெந்த புண்ணில் வேல் பாய்ந்ததைப் போல,பிரபாவதியுடன் தனக்கிருந்த தொடர்பு வெளிப்பட்டதால், மீதமிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய் விட்டது. இன்று சரண் ஒரு தனிமரம்.அவனுக்கு இப்போது இரண்டே இரண்டு நண்பர்கள் தான்.ஒன்று மது மற்றொன்று விவேக், ஆனால் இவர்கள் இருவரில் சரண் தனக்கு மிக ஆறுதலாக கருதுவது மதுவைத்தான்.உண்மையில் சரணுக்கு நன்மை செய்வதென்னவோ விவேக் ஒருவன் தான்.அனைத்தையும் சரண் இழந்து விட்டபோதிலும் இன்று சரணிடம் இருப்பது தன் வீடு ஒன்று தான்.அதை காப்பாற்றிய புண்ணியம் விவேக்கைத் தான் சேரும்.இப்போதும் கூட தன்னால் இயன்ற வரை சரணுக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.நாய்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் நன்றி உணர்வு உண்டென்று விவேக்கைப் பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

"பாஸ் பாஸ்..எழுந்திறீங்க..இங்க பார்த்தீங்களா?இந்த நியுச?" - அரக்க பறக்க ஓடி வந்தான் விவேக்.சற்றும் அலட்டி கொள்ளாமல் எழுந்தான் சரண்.'தண்ணீரில் மிதப்பது' என்று கூறுவார்களே,அது சரணுக்குத்தான் பொருந்தும்.முழு மப்பில் எழுந்து உட்காந்தான்.

"என்னடா நியுசு..ஏன் இப்படி பறக்கிற,நிம்மதியா தூங்கக்கூட விடாதிங்க.." - ஏதோ எரிச்சலுடன் பேசினான் சரண்.

"பாஸ் உங்க அதிசய கனவு படத்த drop பண்ணிட்டாங்க.." - என தொடங்கிய விவேக்கை இடைமறித்து

"அது தான் எப்போவோ தெரியுமே..என்னவோ புது விஷயம் மாதிரி பேசற..இத சொல்லவா என் தூக்கத்தை கெடுத்த.."

"இல்லை பாஸ்..முழுசா கேளுங்க..உங்க படத்தை drop பண்ணிட்டு இப்போ திரும்ப தர்மராஜ் கம்பனிக்கு நீலகண்டன் ஒரு படம் டைரக்ட் பண்றாராம்.."

"அவன் எக்கேடு கேட்டு நாசமா போகட்டும்..இப்போ அதுக்கென்ன"

"அதுல அந்த தர்மராஜே ஹீரோவா நடிக்கிறானாம்..என்ன அநியாயம் பாஸ் இது"

"பரதேசி நாய்..அவன் மூஞ்ச பாரேன் விவேக்..எப்படி இருக்குன்னு" - ஆத்திரமும் விரக்தியும் கலந்த ஒரு சிரிப்புடன் சரண் தொடர்ந்தான்,

"எரிஞ்சிட்டிருக்கிற பொணத்தை(பிணத்தை), எழுப்பி அதுக்கு powder அடிச்சு விட்டா எப்படி தெரியுமா இருக்கும், இல்லை எப்படி இருக்கும் தெரியுமா? இதோ பேப்பர்ல சிரிசிகிட்டே pose கொடுத்திருக்கான் பாரு இந்த எச்சக்கலை பையன் இவன மாறித்தான் இருக்கும்..ஏன்டா இவனுங்க எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே பட மாட்டானுங்கள டா..கையில காசு,ஆட்சி, அதிகாரம் எல்லாம் இருக்குன்னு கண்ட கழிசாட பசங்களும் ஹீரோ ஆயிடறாங்க.."

"பாஸ் ரிலாக்ஸ்.." - சரனை சமாதானப்படுத்த முயன்றான் விவேக்,பலனில்லை..மீண்டும் மது அருந்திவிட்டு தொடர்ந்தான் சரண்,

"இந்த புறம்போக்கு நாயிக்கு நடிப்புன்னா என்னன்னு தெரியுமா விவேக்?இவனையும் வைச்சு படமெடுக்க ஒத்துகிட்டானே அவன சொல்லனம்..இல்லை பாவம் அவன் என்ன செய்வான்..இந்த கம்மனாட்டி பைய மிரட்டியிருப்பான்..ஒரே வார்த்தைல சொல்லட்டுமா? இந்த தர்மராஜ் ஒரு 'genuine bastard'..தா..." - வெறுப்பின் உச்சத்துக்கே போன சரணை,விவேக் இடைமறித்து,

"பாஸ் cool down பாஸ்..நீங்க தர்மராஜை இப்படி திட்டுவீங்கன்ற காரணத்துக்காக இதை நான் உங்க கிட்ட சொல்லலை..நீங்க நடந்ததையே நினைச்சி இப்படி வீட்டுக்குள்ளயே கிடந்தீங்கன்னா அதனால உங்களுக்கு ஒரு நல்லதும் நடக்க போறதில்லை"

"இல்லைன்னா மட்டும்..அட போயா"

"பாஸ் நீங்க கொஞ்சமாச்சு வெளி உலகத்தை பார்க்கணம்னு சொல்றேன்..உங்களுக்கு அட்வைஸ் பண்றதுக்கு எந்த தகுதியும் இல்லாதவன் தான் நான்..ஒத்துக்கிறேன்...ஆனா உங்க நண்பனா சொல்றேன்,தயவு செய்து நாலு இடத்துக்கு போயிட்டு வாங்க..எவ்வளவு பிஸி schedule இருந்தாலும் கூட நீங்க இளையராஜாவோட திருவாசகம் சிம்போனிய கேட்காம ஒரு நாள் கூட  இருந்ததில்லை..திரும்பவும் இதிலே எல்லாம் கவனம் செலுத்தனம்.. இது என்னோட request" - அடக்கமாக பேசி முடித்தான் விவேக்..

மீண்டும் மது அருந்தத் தொடங்கினான் சரண்.


(தொடரும்...)



Friday, December 30, 2011

மாஸ் மீடியா - 6

மாஸ் மீடியா -6
                                                            Start Camera Action


முந்தைய பாகங்களைப் படிக்க இங்கே செல்லவும்(click here)

 'திசய கனவு' படத்தில் விக்ரம சோழன் கதாபாத்திரத்தில் கம்பீரமாய் தோன்ற வேண்டுமென்பதற்காக கடும் உடற்பயிற்சி மேற்கொண்டான்.ஒரு சில காதல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டிருந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடித்துக்கொள்ளப்பட்டது.இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கவில்லை. இதற்கிடையில் தீபாவளிக்கு வெளிவரவிருந்த தனது மாஸ் படமான 'பன்னீர் செல்வன்' படத்தை தர்மராஜே வாங்கிவிட்டார். படம் திட்டமட்டபடி தீபாவளிக்கு வெளியாகவில்லை. "படத்துக்கு promotion போதாது சரண்..நம்ம பேனர்ல மார்க்கெட் பண்ணா சப்ப படம் கூட சுப்பர் ஹிட்டாகும்.. அதனால படத்த அடுத்த மாசம் ரிலீஸ் பண்ணிடலாம்..அதுக்குள்ள நல்லா மார்க்கெட் பண்ணிடலாம்...." - என்று கூறி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தார் தர்மராஜ். இதில் சரணுக்கு சற்றும் உடன்பாடில்லை தான்.ஆனாலும் வேறு வழியில்லை ஏனெனில்,நல்ல விலை என்றதும் அந்த படத்தின் தயாரிப்பாளர், தர்மராஜுக்கு விற்றுவிட்டார்.

விவேக்கை கடுமையாக திட்டியதை எண்ணி வருந்தினான்.ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்பொழுது நடந்த வாக்குவாதம்:

"பாஸ் இந்த படத்த ஒத்துக்காதிங்க..ஆக்ரீமென்ட்ட நான் முழுசா படிச்சிட்டேன்.."  - விவேக்

"அப்போ நான் படிக்கலன்னு சொல்லுறியா?" - சரண்

"பாஸ் argue பண்றதுக்கு இது நேரமில்லை..இந்த படம் முடிக்கிறவரைக்கும் வேற எந்த படமும் commit  ஆகக்கூடாதுன்னு போட்டிருக்கு..அது மட்டுமில்லை ஒரு வேளை வேற படம் ஒத்துக்கிட்டாலோ இல்லை இந்த படத்திலே நடிக்க மறுத்தாலோ படத்துக்காக ஆன மொத்த செலவும் வட்டியோட திருப்பி கொடுக்கனம்னு போட்டிருக்கு..இது நல்லதுக்கே இல்லை.."

"விவேக்,இந்த படத்தோட பட்ஜெட் அதிகம்..அதனால ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும்..இதையெல்லாம் சகிச்சிகிட்டா தான் அடுத்த leagueல enter  ஆக முடியும்" - சற்று கடுமையாகவே சொன்னான் சரண்.

"அதுக்கு சொல்லல பாஸ்..நீங்க நான் சொல்றத புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க.."  - என தொடர்ந்த விவேக்கை கோபமாக பார்த்த சரண்,

"எனக்கென்ன சினிமானா ஒண்ணுமே தெரியாதுன்னு முடிவு பண்ணிட்டியா விவேக்?You are a smart  PA.Agreed!!! பட் நீ என்கிட்டே வேலை பார்க்கிற அதை மறந்திடாதே..நீ இந்த 4  வருஷமாத்தான் எனக்கு PA.ஆனா அதுக்கெல்லாம் முன்னாடியே நான் சினிமாவிலே நிறைய பார்த்தவன்.இன்னைய தேதிக்கு சரண் படம்னா ஒரு மார்க்கெட் இருக்கு.. நீ எனக்கு புத்தி சொல்றத விட்டுட்டு உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு.." - படபடவென பேசி பின் அமைதியானான்..விவேக்கும் மறுத்து பேசவில்லை..கடும் புயல் மழைக்கு பின் நிலவும் அமைதியைப் போல், அந்த அறையில் ஒரு வித அமைதி நிலவியது.பிறகு சுதாரித்து கொண்ட விவேக்,

"Sorry  பாஸ்..இனிமேல் இப்படி நடக்காது" - என்று பணிவாகவே பதிலளித்து விட்டு நகர்ந்தான்.

இப்படி பேசியதற்காக பல முறை வருத்தப்பட்டான் சரண்.தற்சமயம் படப்பிடிப்பும் இல்லை,வெளியாக வேண்டிய தனது படமும் வெளியாகவில்லை.இவை எல்லாம் சரணுக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது.இது ஒருபுறமிருக்க தயாரிப்பாளர் தர்மராஜ் தனது தந்தைக்காக தேர்தல் பணிகளை கவனிப்பதிலேயே மும்முரமாக இருந்தார். சரணுக்கும் அரசியலில் சற்று ஆர்வம் உண்டென்றாலும் அதைப்பற்றி சிந்திக்க இது நேரமில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தான்.இப்படியே தனது தேதியை வீணடிக்க கூடாதென்று நினைத்தான், தர்மராஜிடம் படப்பிடிப்பை துரிதபடுத்தும்படி கேட்க வேண்டுமென்று முடிவெடுத்தான்.தர்மராஜை அழைக்க தனது கைப்பேசியை எடுத்தான்,ஆனால் அது உடனே ஒலிக்க தொடங்கிவிட்டது.அழைத்தது சாக்ஷாத் தர்மராஜே தான்.உடனே சரணை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.

உடனே புறப்பட்ட சரண்,தர்மராஜின் அலுவலகத்தை அடைந்தான்.

"சரண் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனம்" - ஒரு வித்தியாசமான தொனியில் பேசினார் தர்மராஜ். எதுவும் புரியாமல் விழித்தான் நமது ஹீரோ சரண்.

"நம்ம தொகுதியிலே இடைத்தேர்தல் வருது.இந்த முறை அப்பா இங்க MP  போஸ்ட்டுக்கு நிற்கிறாரு.."

"சரி,அதுக்கு?" - ஒன்று புரியாத சரண்

"Opposition candidate கொஞ்சம் ஸ்ட்ராங்கான ஆளு தான்.அதனால நீங்க ஒரு உதவி செய்யணம்"

"நான் என்ன உதவி செய்ய முடியும் தர்மராஜ் சார்?எனக்கும் அரசியலுக்கும் ஏழாம் பொருத்தம்" - தெளிவாகவே சொன்னான் சரண்.

"சரண்,அரசியல்ல ரொம்ப முக்கியமான விஷயம் கூட்டம் சேர்க்கிறது தான்..என்னதான் காசு கொடுத்தும், பிரியாணி வாங்கி கொடுத்தும் கூட்டம் சேர்த்தாலும்,அது எல்லா கட்சிக்காரனும் செய்யறது தான்.நாம எப்போவுமே கொஞ்சம் differentன்னு உங்களுக்கு தெரியுமே"

"அதுக்கு என்னை என்ன செய்ய சொல்றீங்க Mr.தர்மராஜ்?" - என்று கேட்டான் சரண்.சரணுக்கு தர்மராஜின் நோக்கம் ஓரளவுக்கு புரிய ஆரம்பித்தது.

"நீங்க மக்கள் கிட்ட கொஞ்சம் பாப்புலரான ஆளு..நம்ம கூட படம் வேற பண்றீங்க..உங்களுக்குன்னு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு..நீங்க மட்டும் அப்பாவுக்காக இங்க பிரச்சாரம் பண்ணா வரலாறு காணாத வோட்டு வித்தியாசத்துல அப்பா ஜெய்ச்சிடுவார்"

                                                     ***************************


தவி இயக்குனராக நன்றாக தேர்ச்சி பெற்றிருந்தான் ஸ்ரீதர்.ஊரிலிர்ந்து கிளம்பும்போது இயக்குனராகியே தீர வேண்டுமென்கிற லட்சியத்தில் தான் கிளம்பினான்.ஒரு திரைப்படத்தை இயக்குவது என்றால் ஏதோ மேடை நாடகத்தை இயக்குவது போலத்தான் என்றெண்ணி கிளம்பி வந்த ஸ்ரீதருக்கு, டைரக்ஷனில் எத்தனை இருக்கிறதென்பது உதவி இயக்குனராக பணிபுரியும்போது தான் புரிந்தது. இரவும் பகலும் ஓயாமல் உழைத்தாலும் சரி,கதாநாயகனின் காலணிக்கு பாலிஷ் போடுவதென்றாலும் சரி, கதாநாயகியின் நாயை கவனித்துக் கொள்வதென்றாலும் சரி சற்றும் கலக்கமடைந்துவிடவில்லை.இயக்குனராகியே தீரவேண்டுமென்கிற தனது லட்சியத்தை அடையும் நாள் நெருங்கிவிட்டதென்றே நினைத்தான்.

அப்போது இசையமைப்பாளருடன் சுகுந்தன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.படத்தின் முழுக்கதையையும் விவரித்துக் கொண்டிருந்தார்,நீண்ட நேரம் உரையாடிய பிறகு வந்தார், ஸ்ரீதருக்கு இது மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.

"ஸ்ரீதர் சொன்ன மாதிரி நூறு பொம்மை கழுதையை கொண்டு வந்துட்டியா?" - சுகுந்தன்

"எல்லாம் ரெடி சார்.நாளைக்கு ஷாட் எடுக்கறப்போ எல்லாத்தையும் வெளியில கொண்டு வந்துடலாம்." -  ஸ்ரீதர்

"Good good!!!சரி வா இப்போ கிளம்பலாம்..காலையில சீக்கிரம் வர வேண்டியிருக்கும்" - இருவரும் காரில் அமர்ந்தார்கள்.

"சார் எனக்கொன்னு மட்டும்  சுத்தமா புரியவே இல்லை" - ஸ்ரீதர்

"என்ன பா..என்ன புரியல?" - சுகுந்தன்

"மியுசிக் டைரக்டர் கிட்ட பாட்டு வர்ற situation மட்டும் explain  பண்ணா போதாதா?எதுக்கு மொத்த ஸ்க்ரிப்ட்டும் விளக்கணம்?" - ஸ்ரீதர்

"என்னப்பா இப்படி கேட்டுட்டே?நீ நினைக்கிற மாதிரி மியுசிக்னா சும்மா ஏதோ ரெண்டு டூயட்,ஒரு கில்மா பாட்டு,ஒரு டப்பாங்குத்து போட்டுட்டு போறதில்லை.. Music is lot more than தட்" - சுகுந்தன்

"என்ன சார்,2.30 மணி நேர சினிமாவிலே ஒரு அரைமணி நேரம் தான் பாட்டு..அதுக்கு இவ்வளவு importance அவசியமா?" - ஸ்ரீதர்

"ஸ்ரீதர்,இது ரொம்ப தப்பான ஒரு approach ..First  நீ சில விஷயத்த புரிஞ்சிக்கோ..ஒரு சூழ்நிலைக்கேற்ப பாட்டு போடறது ஒரு கலை..இந்த ஆர்டிஸ்ட்டுக்கு இந்த singer  பாடினா நல்லா இருக்குமென்கிற அளவுக்கு ஒரு இசையமைப்பாளர் யோசிக்கணம்.அதோட முக்கியம் சிச்சுவேஷனோட கரெக்டா பொருந்தனம். உதாரணத்துக்கு நீ வெள்ளி விழா படத்துல வர்ற "காதோடு தான் நான் பாடுவேன்"(click here to watch the song) பாட்ட எடுத்துக்கோ.. அந்த பாட்டு கேட்டிருக்கல்ல?"

"கேட்டிருக்கேன் சார்..நம்ம L R ஈசுவரி மேடம் பாடினது"

"Yes ..மியுசிக் டைரக்டர் யாருன்னு தெரியுமா?"

"என்ன சார் இது தெரியாதா..V Kumar தானே!!"

"கரெக்ட்..எங்க MSVன்னு சொல்லிடுவியோன்னு பயந்தேன்..அந்த பாட்டு எவ்வளவு melodiousஆ இருக்கும்.. அந்த பாட்டுக்கு,குமார் நினைச்சிருந்தா சுசீலா மேடமை பாட வைச்சிருக்கலாம்..ஆனா அவர் கொஞ்சம் வேகமான பாட்டெல்லாம் பாடுற ஈஸ்வரி மேடைமத் தான் select  பண்ணார்..அதான் ஒரு இசையமைப்பாளரோட sense of  observation..சுசீலா குரலோட ஈஸ்வரி மேடம் குரல் தான் அந்த பாட்டுக்கு பொருத்தமா இருக்கும்னு நான் சொல்றேன்..நீ என்ன சொல்ற?"

"இது வரைக்கும் நான் இப்படி யோசிச்சதில்லை..ஆனா L R ஈஸ்வரி மேடம் பாடினதோட நல்லா யாராலையும் அந்த பாட்ட பாடிட முடியாது"

"அந்த படத்தை டைரக்ட் பண்ண பாலச்சந்தர் சாருக்கு எப்போவுமே ஒரு நல்ல இசைஞானம் உண்டு"

"ஆமாம் சார்..அவரோட சிந்து பைரவி படத்திலே டிரைவரா வர்ற கவிதாலயா கிருஷ்ணன் கூட சங்கீத ஞானம் இருக்கிறவரா காட்டியிருப்பாரு.. அந்த scene(click here to watch the scene) பிரமாதமா இருக்கும் சார்..He is a real genius!!!..அதனால தான் MSV யோ இளையரஜவோ இல்ல மரகத மணியோ இல்ல நம்ம ரகுமானோ,யாரு மியுசிக் போட்டாலும் ஒரு class  இருக்கும்"

"Yes ..அப்படி பட்ட பாலச்சந்தர் சார் ஒரு மியுசிக் டைரக்டரோட முழுத்திறமையையும் பயன் படுத்துவார்..ஒரு பாடலாசிரியர் கிட்டயோ ஒரு மியுசிக் டைரக்டர் கிட்டயோ ஸ்க்ரிப்டை முழுசா விளக்குவாரு..அவர் மட்டுமில்லை இன்னும் சில டைரக்டர்சும் இப்படி செய்யறதுண்டு"

சுகுந்தன் பேசுவதை ஆர்வமாய் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீதர்,அப்படியா என்பது போல் பார்த்தான்.

"நீ பாட்டைப் பத்தி மட்டுமே பேசறியே BGM பத்தி உனக்கு கொஞ்சம் கூட யோசனையே வரலையா என்ன?பின்னணி இசை ஒரு படத்துக்கு எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சிக்கோ..இப்போ எல்லாம் நிறைய மியுசிக் டைரக்டர்ஸ் பாட்டுல வாய்ச(voice) cut பண்ணிட்டு டியூன பின்னாடி ஓட விடறதுக்கு பேரு தான் BGMன்னு நினைச்சிட்டிருக்காங்க.. ஒவ்வொரு மூட்கும் எத்த மாதிரி இருக்கணம் மியுசிக்..action scenes வர்றப்போ கொஞ்சம் பரபரப்பா இருக்கணம், emotional scenes வர்றப்போ மனச உருக வைக்கிற மாதிரி இருக்கணம்,detective மாதிரியோ இல்ல suspense சீன்லையோ,audience அமைதியா உணர்ற மாதிரி இருக்கணம் ஆனா அதே சமயம் ஒரு haunting BGM இருக்கணம்,சத்தம் அதிகமா இருக்க கூடாது,ஒரு sensual - love making situation பொறுத்த வரைக்கும்,ஒரு போதை ஏத்திற மாதிரி BGM இருக்கணம்..இந்த மாதிரி சீன்ல சிணுங்கல் சத்தத்துல அதிகமா கவனம் செலுதிட்டா,அழகா ரீச் ஆக வேண்டிய காமம்,ஆபாசமா மாறிடும்,அது சில நேரத்திலே அருவருப்பாவும் போயிடும்..  " என்று ஒரு குட்டி சொற்பொழிவே நடத்தி முடித்தார் சுகுந்தன்.

இத்தனை விஷயங்களையும் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீதருக்கு மெய்சிலிர்த்து போனது.சுகுந்தன் சொன்ன அத்தனை விஷயங்களையும் கற்பனை செய்து பார்த்தான்.சிறிது நேரம் பேச்சே வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. பிறகு சுய நினைவு வந்தவனாய் பேசத்தொடங்கினான்,

"சார்,ஆனா Background musicன்னு சொன்னதுமே இளையராஜா தான் சார் என் நினைப்புக்கு வர்றார்"

"அவர் தமிழ் சினிமாவுக்கு கிடைச்ச ஒரு பொக்கிஷம்!!!கடவுள் நமக்கு கொடுத்த ஒரு வரம்ன்னு கூட அவரைச் சொல்லலாம்..உனக்கு பின்னணி இசைன்னா அவர் ஞாபகத்துக்கு வர்றார்,நிறைய பேருக்கு இசைனாலே அவர் தான் ஞாபகத்துக்கு வருவார்,நான் உட்பட"

பிறகு இருவரும் அமைதியானார்கள்,மிதமான வேகத்தில் கார் நகர்ந்து கொண்டிருந்தது.


                                                     ***************************


னது சமீபத்திய படங்கள் பெரும் வெற்றி அடைந்ததால் மிகுந்த உற்சாகத்தில் இருந்தான் வாசு.இந்த உற்சாகமிகுதி  மெல்ல மெல்ல தலைக்கனமாக மாறியது. தயாரிப்பாளர் கண்ணப்பனின் அடுத்த படத்தில் வாசு தான் ஹீரோ. கண்ணப்பனும் வாசுவும் விரைவிலேயே நண்பர்களாகி விட்டார்கள். ஏனென்றால் இருவருக்கும் அத்தனை நல்ல பழக்கங்களும் உண்டு.இருவரும் தோட்டத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர்.

"வாசுன்னா வெற்றி வெற்றின்னா வாசு" - வாசு

"ஆமாம் தம்பி உங்க சமீபத்திய படமெல்லாம் சூப்பர் ஹிட்.சில்வர் ஸ்டார் வாசு தொட்டதெல்லாம் Gold ஆகிற நேரமிது" - கண்ணப்பன்

"இப்போ மட்டுமில்ல, இனிமே நான் தான் நிரந்தரமான டாப் ஹீரோ,எனக்கு ஈடு கொடுத்துட்டிருந்த ஒரே ஹீரோ சரண் தான்..இப்போ அவனும் field out...I am an incomparable Star..Silver Star" - வெறி பிடித்தவனை போல் கூச்சலிட்டான் வாசு.கண்ணப்பன் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. இப்படி பல சில்வர் ஸ்டார்களை பார்த்தவர் தான் இந்த கண்ணப்பன்.சில ஸ்டார்களுக்கு மது கூட ஊற்றி கொடுத்துத் தான் இன்றைக்கு தயாரிப்பாளர் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.

"Mr.கண்ணப்பன் நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்" - வாசு

"என்ன?" - கண்ணப்பன்

"நானே ஒரு படம் டைரக்ட் பண்ண போறேன்..தமிழ் சினிமால...ம்ஹும்ம் இந்திய சினிமா சரித்திரத்திலேயே இப்படி ஒரு படம் வந்ததில்லைன்னு சொல்ற அளவுக்கு இருக்கும் அந்த படம்"

"தம்பி உங்களுக்கு ஜாஸ்தி ஆயடிச்சுன்னு நினைக்கிறேன்..நான் கிளம்பறேன்..நாளைக்கி காலைல பார்க்கலாம்" - வாசு போதையில் உளறுகிறான் என்றெண்ணி கிளம்ப நினைத்தார் கண்ணப்பன்.

"கண்ணப்பன் சார்,என்ன மப்புல பேசறன்னு பார்க்கிறீங்களா?நான் எப்போவும் steady.. இன்னைக்கி நேத்து இல்லை நானும் ரொம்ப நாளாவே ஒரு படம் எடுக்கனம்னு யோசிச்சிட்டிருக்கேன்..எனக்கிருக்கிற டேலண்ட கரெக்டா யூஸ்  பண்ற அளவுக்கு எந்த டைரக்டருக்கும் சரக்கில்லை சார்"

"தம்பி நீங்க டைரக்ட் பண்ணியே தீரனமா?தெளிவாத்தான் பேசறிங்களா?" - கண்ணப்பன் சற்று தெளிவாகவே கேட்டார்

"Yes ofcourse!!!நீங்க தயாரிக்கப் போற படத்தை நான் தான் இயக்கப் போறேன்..அப்போ தான் இந்த வாசு தமிழ் சினிமாவுக்குக் கிடைச்ச ஒரு மாபெரும் கலைஞன்னு தெரியும்"

இதை சற்றும் எதிர்பாராத கண்ணப்பன் திக்குமுக்காடிப் போனார்..இவரை வைத்து படம் பண்ணும் எண்ணத்தையே மாற்றி கொள்வது தான் நல்லதோ என்று கூட சிந்திக்க தொடங்கி விட்டார்..ஆனால் படம் பூஜை கூட போடவில்லை..வெறுமனே இவரை வைத்து படம் தயாரிக்கிறோம் என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டதற்கே படத்தை பல கோடி கொடுத்து வாங்க விநியோகஸ்தர்கள்(distributors) நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு வந்தது இவர் நினைவுக்கு வந்தது..அப்போது அங்கே அமர்ந்திருந்த வாசுவின் காரியதரிசி நரேஷ்,

"வாசு சார் நீங்க டைரக்ட் பண்ணலாம்,ஆனா ரிஸ்க்கும் எடுக்க தேவை இல்லை..அதுக்கொரு ஐடியா இருக்கு.."



                                                                                                                                   (தொடரும்...)