Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Saturday, October 15, 2016

வட்டியும் முதலும் - உணர்வுகளோடு ஒரு இனிய பயணம்


ராஜு முருகனின் வட்டியும் முதலும் படித்து முடித்து விட்டேன். 504 பக்கங்கள் தான் என்றாலும், இந்தப் புத்தகத்தை சுமார் மூன்று மாதங்கள் படித்தேன். காரணம்,ஒவ்வொரு தொடரையும் படித்து முடித்த பின்பு, மனத்திரையில் சில காட்சிகள் ஓடின. Time Machine என்று சொல்லப்படும் கால இயந்திரம் என்றாவது ஒரு நாள் நிஜமாகிவிடாதா என்ற ஏக்கம் எனக்கு எப்போதுமே உண்டு. பள்ளி நாட்களிலிருந்தே எனக்கு இந்த ஆசை இருந்தது.  எனக்கு வரலாறு, இதிகாசம் போன்றவற்றில் நிறைய ஈடுபாடு உண்டு. ராமாயணம், மகாபாரதம், முகலாய படையெடுப்பு, இந்திய சுதந்திர போராட்டம் போன்றவை நடைபெற்ற காலத்துக்கு ஒரு முறையேனும் சென்று விட வேண்டும் என்று பள்ளி நாட்களில் நினைத்ததுண்டு. சிவகாமியின் சபதமோ, பொன்னியின் செல்வனோ உடையரோ படிக்கும் போது, பல்லவர்களையும் சோழர்களையும் ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம். ஆனால் வட்டியும் முதலும் படிக்கும் பொழுது கால இயந்திரம் நிஜமாகி விட்டது போல ஒரு உணர்வு. கடந்த காலத்திற்கு பயணம் செய்த ஒரு திருப்தி.

ராஜு முருகன் குக்கூ மற்றும் ஜோக்கர் படங்களை இயக்கியவர்,அதனால்  இப்போது மிகப் பிரபலம். நான் இந்த புத்தகத்தை வாசிக்கத் தொடங்கும் முன் அவர் திரைப்படங்களை இயக்கிய விபரம் எனக்குத் தெரியாது. சுமார் 200 பக்கங்கள் படித்தப் பிறகு தான் ஜோக்கர் படத்தின் இயக்குனர் இவர் என்று தெரிந்து கொண்டேன். படம் வெளியாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் தெரிந்து கொண்டேன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, நோட்டுப் புத்தகத்தில் தமிழ் எழுதினேன். வட்டியும் முதலும் பற்றி சிறு குறிப்புகள் எடுத்துக் கொண்டேன். ஒரு அளவுக்கு மேல் குறிப்புகள் எடுக்க முடியவில்லை, காரணம் இந்தப் புத்தகம் அத்தனை அனுபவங்களைக் கொண்டது. நான் இதில் ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிக்கும் போதும் எண்ணி எண்ணி வியந்தது இது தான் - எப்படி இத்தனை மனிதர்களை பற்றி இவரால் நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறது?

ஒவ்வொரு காட்சியும் நமக்கு ஒவ்வொரு உணர்வை ஏற்படுத்தும். அதை எல்லோரும் வார்த்தைகளால் விவரித்து முடியாது. ராஜு முருகன் போன்ற ஒரு சிலரால் தான் முடியும். உதாரணத்திற்கு சாலையில் tube light உடைத்துக் கொள்ளும் பெரியவரையும் அவர் பேரனையும் தினமும் கடந்து செல்கிறோம். நம்மில் எத்தனை பேர் அவர்களை பார்த்துப் பரிதாபப் பட்டிருக்கிறோம். ஒரு வேளை அவர்களைப் பற்றி சிந்தித்தோமே ஆனால் கூட, அந்த வேதனையை விவரித்து விட முடியுமா என்ன? ராஜு முருகன் விவரிக்கிறார்.

இந்தப் புத்தகத்தில், நகைச்சுவைக்குக் குறை இல்லை. தேர்தலைப் போட்டு அரசியலை வாங்குவோம் என்ற அத்தியாயத்தில் தன்னுடைய தாத்தா, திமுகவின் பிரபல தலைமைக் கழக பேச்சாளர்,  நன்னிலம் நடராஜன் பற்றி குறிப்பிடுகிறார். ஒவ்வொரு முறையும் தாத்தா புல்லெட்டில் வரும் போது, ஓர் அலுமினிய வாளியை ஆத்தாவிடம் கொடுக்கச் சொல்லி கொடுப்பாராம். "வாலியைத் திறந்து பார்த்த போது பாலிதீன் கவர்,அல்வா,வாழை இலை மல்லிப்பூ பண்டல். அத்தனை ஆண்டுகாலத் திராவிடக் கட்சிகளின் அரசியலை எவ்வளவு சூசகமாக அந்த வாளிக்குள் அடக்கிவிட்டார் தாத்தா. அரிசி..மல்லிப்பூ..அல்வா!"(பக்கம் 75 ).

 இதில் ராஜு முருகன் பெண்களைப் பற்றி சில அத்தியாயங்களில் விவரிக்கிறார், ஆங்காங்கே அரசியல்(இடது சாரி சிந்தனையாளர் அல்லவா), கடவுள் பக்தி(இவர் கடவுள் பக்தியுள்ள இடது சாரி சிந்தனையாளர் :-) ), நகைச்சுவை எனப் பல விஷயங்களைப் பற்றி எழுதினாலும், சில கட்டுரைகளைப் படிக்கும் பொழுது மனம் சொல்ல முடியாத வேதனைக்கு ஆளாகிறது.

உதாரணமாக ஒரு நல்ல படைப்புக்கான வாசிப்பு, வீதிக்கு வராத முகங்கள், பெண்களுக்கு கணம் கணமும் ரணம் போன்ற கட்டுரைகளைச் சொல்லலாம். இல்லை இல்லை, பல கட்டுரைகளிலும் சில சம்பவங்களையும் மனிதர்களை பற்றியும் படிக்கும் பொழுது கண் கலங்குவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஈழ எழுத்தாளர் எஸ்.பொ.அய்யா, தன் சுயசரிதையை சொல்லச் சொல்ல படி எடுத்துரைக்கிறார் திரு.யுகபாரதி அவர்களும் நமது ராஜு முருகனும். வீட்டில் இருந்த உறவுகளை ராணுவம் கொன்றதைப் பற்றிச் சொன்னபோது கூட கண் கலங்காத எஸ்.பொ.அய்யாவின் கண்களில், யாழ் நூலகம் எரிக்கப்பட்டதைப் பற்றி சொல்லும் போது கண்ணீர் பெருகி வழிந்தது. 'கண் முன்னாள் எங்கள் வரலாறு எரிக்கப்பட்டதைப் பார்த்தவர்கள் நாங்கள்' என்றாராம். நம் வரலாறு நம் கண்முன்னே அழிவதைக் காட்டிலும் உலகில் ஒரு கொடுமை உண்டோ?

அவருடைய நண்பர் அருளானந்தம் திடீரென ஒரு நாள் இறந்து போனாராம். அவர் இறந்த போது, வீடு முழுக்க வெறும் புத்தகங்கள் தான் நிறைந்து கடந்தனவாம்.இறுதிச் செலவிற்கே இவர்கள் தான் பணம் திரட்டித் தந்தார்களாம். உறவுகள் அத்தனை பேரும் திட்டித் தீர்த்திருக்கிறார்கள். வாசிக்கும் பழக்கம் கொண்டவர்களைப் பைத்தியக்காரன் என்று பட்டம் கட்டும் ஒரு தலைமுறை இன்று உருவாகிவிட்டது.

மயிலாப்பூரில் புத்தகங்கள் விற்கும் ஆழ்வார் சொன்ன வார்த்தைகள் "இத்தனை வருஷமா இந்த புத்தகங்களோடு வாழ்ந்துட்டேன். எனக்கு ஒண்ணுமே கிடைக்கலைங்கறதை நினைச்சி நான் கவலைப்படலை. எனக்குப் பிறகு இதெல்லாம் இன்னொரு தலைமுறைக்குப் போய்ச் சேரணும்.. அதை யார் செய்வாங்கங்கிறதுதான் என் கவலை". இந்த இணையம், சமூக வலைத்தளங்கள் தோன்றுவதற்கு முன்பு, புத்தகங்களுக்கு இருந்த முக்கியத்துவம் இப்போது குறைந்து வருவதாகத் தான் தோன்றுகிறது. வாசிக்கும் பழக்கம் ஒன்று தான், பண்பட்ட தலைமுறையை உருவாக்கும்.

பெண்களை பற்றி மிக உயர்வாக எழுதியதற்காகவே ராஜு முருகனுக்கு ரசிகனாக மாறி விடலாம். அதிலும் 'சதயம்' படத்தைப் பற்றி எழுதும் போது, அவர் குறிப்பிடும் மோகன்லால் பேசும் வசனம் 'ஒவ்வொரு ஆணிடமும் ஒரு விஷக் கொடுக்கு ஒளிஞ்சிருக்கு!", படிக்கும் போதே,ராஜு முருகன் குறிப்பிடுவது போல,மனம் ஏதோ ஒரு தொந்தரவுக்கு உள்ளாக்குகிறது. இன்று திரையரங்குகளில் 'பசங்க படர கஷ்டத்துக்குக் காரணமே பொண்ணுங்க தான்' என்ற வசனத்துக்குக் கிடைக்கும் கை தட்டல்கள் தான் அவர் குறிப்பிடும் விஷக் கொடுக்குப் போல.

நடனமாடும் பெண் நித்யாவைப் பற்றி இந்த புத்தகத்தில் படித்துவிட்டு பல இரவுகள் உறக்கமின்றி தவித்தேன். அந்தப் பெண் டைட் ஜீன்சும் டாப்ஸுமாக ஸ்கூட்டியில் போவாள். நைட்டியில் தண்ணி எடுக்க வருவாள். வேறு வேறு பையன்களை ஸ்கூட்டி பின்னால் வைத்துக் கொண்டு போயிருக்கிறாள். பால்கனியில் சத்தமாகப் பேசிக் சிரித்திருக்கிறாள். இவளைப் பற்றி அக்கம் பக்கத்தினர் அனைவரும் சொன்ன ஒரே கருத்து "அது ஒரு மாரி பாரட்டிப்பா".

நித்யாவிற்கு ஒரு அண்ணன்,இரண்டு தங்கச்சிகள் மற்றும் அம்மா. அண்ணன் டைவர்ஸ் ஆனவன், இவர்களோடே தங்கி விட்டான்.இவள் தான் குடும்பத்தையேப் பார்த்துக் கொள்கிறாள்.

இதே நித்யாவை நம் ராஜு முருகன் ஏழெட்டு வருடங்கள் கழித்துச் சந்திக்கிறார். "எக்கச்சக்கமாகக் குண்டடித்து ஆளே உருமாறி அடையாளமே தெரியவில்லை" - என்கிறார். தன்னை சரியாகக் கவனித்துக் கொள்ள தவறியதால் தைராயிடு பிரச்சனை ஏற்பட்டுவிட்டதாகக் கூறி இருக்கிறாள். இரண்டு தங்கைகளுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விட்டாள். "நீ கல்யாணம் பண்ணிக்கலயா?" என்று கேட்டதற்கு 'கரகரவென' அழுகை, பிறகு "கண்ணீரைக் கூட துடைத்துக் கொள்ளாமல் சிரிக்கிறாள், சரி வர்றேண்ணே" என்று கிளம்பி விடுகிறாள். 

உண்மை தெரியாமல், இப்படி எத்தனை நித்யாக்களைப் பற்றி நாம் கேவலமாகப் பேசுகிறோம்? ஒரு பெண் வெட்டிக் கொல்லப்பட்டால் கூட, அந்தப் பெண் மீது தான் தவறு என்று அருகிலிருந்து பார்த்ததைப் போல பேசுபவர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள். சமூக வலைத்தளம் இவர்களுக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. இப்படிப் பெண்களைப் பற்றி கேவலமாகப் பேசுவதைத் தவறு என்று சொல்பவனையும் சேர்த்துத் தான் திட்டுகிறார்கள்.

அதே போல ஆண் பெண் சிநேகிதத்தைப் பற்றிய கட்டுரையைப் பற்றியும் எழுதியாக வேண்டும். "காலமும் வயதும் பக்குவமும் மீட்டெடுக்கும்போதுதான் ஆண்-பெண் சிநேகிதத்தின் அற்புதங்கள் புரிய ஆரம்பிக்கும். அலுவலகத்தில் ஓர் ஆணும் பெண்ணும் தொடர்ந்து தேநீர் குடிக்கப் போனாலே,தவறாகப் பேச வைக்கிறது. 'தோழமை' என்ற வார்த்தையை சட்டென்றும் யாராலும் கொச்சைப்படுத்த முடிகிறது". அந்தக் கட்டுரையின் மிக முக்கியமான வரிகளை அப்படியே எழுதிவிட்டேன். 

இந்த ஆண் பெண் தோழமைப் பற்றி எழுதும் போது ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி எழுத வேண்டும். 

ஒரு பெண்ணைத் தோழி என்று சொல்லிக்கொண்டே,அவளோடு பழகிக் கொண்டே, அதே பெண்ணைப் பற்றி,அவள் இல்லாத நேரத்தில் தவறாகப் பேசுபவர்கள் எவ்வளவு அருவருப்பான பிறவிகள்? அதற்காகப் பழகாதப் பெண்ணைப் பற்றித் தவறாகப் பேசுவதை நியாயப்படுத்தவில்லை. அது அய்யோக்கியத்தனம் என்றால் இது பச்சைத் துரோகம் தானே? இவன் நம் நண்பன், நம் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பான் என்று நம்பித் தானே பழகுகிறார்கள், தங்களின் செல்போன் எண்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், facebook நட்பாகவும் இணைத்துக் கொள்கிறார்கள்? அந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன் படுத்துவதைக் காட்டிலும் ஒரு கேவலமான செயல் உண்டா?

என்றாவது, ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறாகப் பேசி இருந்தாலும் அதை மறந்து, திருந்தி, அத்தவறை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பது தானே நல்லவனுக்கு அழகு? சமீபத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ஆனால் அதை விடக் கொடூரமாக, பல முறை, சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் அதே பெண் மீண்டும் மீண்டும் கொல்லப்பட்டாள். யார் யாரோக் கூறித் திருந்தாதவர்கள், இந்தப் புத்தகம் பற்றி எழுதும் போது, நான் சொல்வதைக் கேட்டாத் திருந்தப் போகிறார்கள்? இருந்தாலும் இதை எழுத வேண்டுமென நினைத்தேன், எழுதினேன்.

வட்டியும் முதலும் பல அத்தியாயங்களில் என்னைப் பால்ய பருவத்துக்கே அழைத்துச் சென்று விட்டது. கோடை விடுமுறைக் கொண்டாட்டங்கள், நாம் அனுபவித்ததை இந்தத் தலைமுறை அனுபவிக்குமா என்றால் சந்தேகமே. 'பால்யம்' என்ற பேராற்றின் கரையில் என்ற கட்டுரையில் அவர் குறிப்பிடும் கிட்டிப் புள், பம்பரம், ஓடிப்புடிச்சி என அனைத்தும் நாங்களும் ஆடியதுண்டு. தோற்றவர்களை, கும்பல் கும்பலாக பின் தொடர்ந்து, அவர் குறிப்பிடும் அதே 'எங்க வீட்டு நாயி எதையோ திங்கப் போச்சு' பாடி வெறுப்பேற்றியிருக்கிறோம். அடியேனும் ஒரு முறை இந்தக் கேலிக்கு ஆளாகியிருக்கிறேன். அன்று என் காலில் காயம் பட்டிருந்தது, அதுவும் இவர்களுக்குச் சாதகமாகி விட்டது. 'எங்க வீட்டு நாயி எதையோ திங்கப் போச்சு, கல்லால அடிச்சி காலுடைஞ்சி போச்சி'  என்று பாடிப் பாடி அழ வைத்து விட்டார்கள். அதில் பெரும் பங்கு வகித்தவர் என் நண்பன் சுரேந்தர் தான். இன்றும் தொடர்பில் இருக்கிறோம். அவனோடும் சரி, நண்பன் அருண் குமாரோடும் சரி, தொலைபேசியில் உரையாடும் போது இது போன்ற நினைவுகள் தான் உரையாடலின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருக்கும். வட்டியும் முதலும் படிக்கும் போது என் பால்யம் தான் என் மனத்திரையில் ஓடியது.

ராஜு முருகன் தன்னுடைய காதல் அனுபவங்களைக் 'காதலால் காதல் செய்வீர்' என்ற அத்தியாயத்தில் எழுதி இருக்கிறார். அருமையான கட்டுரை. ஒன்றுக்கும் மேற்பட்ட அன்புவங்களை எழுதி இருக்கிறார், அத்தனைக் காதலிகளுக்கும் 'கீர்த்தனா' என்ற பொதுப் பெயரை வைத்திருக்கிறார். "இரவு 8 மணிக்கு பஸ் ஸ்டாண்டில் கே.எஸ்.ஆர் லாட்டரிக் கடைக்கு பக்கத்தில் போய் நின்று கொள்வேன்.சரியாக அந்த நேரத்துக்கு கீர்த்தனா வருவாள். பஸ் கிளம்புகிற வரைக்கும் பார்த்துவிட்டு வந்துவிடுவேன். திடீரென்று கீர்த்தனாவைக் காணவில்லை. பஸ் ஸ்டாண்டே பிளாக் அண்ட் ஒயிட்டில் வெறுமையாகக் கிடந்தது. ஒரு நாள் ஜெராஸ் கடையில் நெற்றி வகிடு நிறையக் குங்குமம் அப்பிக் கொண்டு அங்கே ஜெராஸ் எடுத்துக் கொண்டு இருந்தாள். எந்தச் சலனமும் இல்லாமல் என்னைப் பார்த்தாள். காசு கொடுத்ததும் வாங்கிப் போட்டுக்கொண்டே மெல்லிய குரலில் அவள் என்னிடம் கேட்டதை ஆயுசுக்கும் மறக்க மாட்டேன் - "இன்னமும் அந்த லாட்டரிக் கடை பக்கத்துலேயே தான் நிக்கிறீங்களா..?" .

இந்த அத்தியாயத்தைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். தனிப்பட்ட முறையில் இது எனக்கு மிகவும் பிடித்த அத்தியாயம். "மிருகங்களுக்கு ஆத்மா கிடையாதாம்..நான்சென்ஸ்! ". மற்ற அத்தியாயங்களைக் காட்டிலும் என் மனதில் இதற்கு தனி இடம் உண்டு. இதில் ஆசிரியர் அவருடைய அப்பாவைப் பற்றி எழுதி இருக்கிறார். அதிலென்ன சிறப்பு? அவருடைய அப்பா ஒரு கால்நடை மருத்துவர்.  "பின்னிரவுகளில் யாராவது வந்து அப்பாவை அடிக்கடி எழுப்புவார்கள்.செனமாடு முக்கிட்டே கெடக்கு..கண்ணு வரலைங்க..சத்தமா சத்தம் போடுது.. என இருட்டில் நிற்பார்கள். படக்கென்று எழுந்து மருந்து பையை எடுத்துக் கொண்டு என்னையோ குருவையோ எழுப்பி டி.வீ.எஸ்-50 யை எடுக்க வைப்பார். இருட்டில் நாலைந்து பேர் கவலையாக நிற்பார்கள். 'ம்ம்ம்ம்ம்ஏஏஏ..' என அலை பாய்ந்து கொண்டிருக்கும் தாய்ப்பசு. கைலியை வரிந்து கட்டிக் கொண்டு மாட்டை பொத்தெரென்று அடிப்பார். 'ந்தாறு..ந்தாறு..ச்சூ..ச்சூ.." எனப் பேசி அதை விழ வைப்பார். 'எண்ணெய் விடுவாங்க..' என வாங்கித் தடவிக் கொண்டு, மாட்டுக்குப் பின்னால் கையைவிட்டுத் துழாவி, நேக்காக கன்னுக்குட்டிக் காலை பிடித்துவிடும்போது கண்கள் பிரகாசிக்கும்.பொசுக்கென்று குட்டிக் கால் குளம்புகள் வெளி நீட்டும். இன்னும் வெளிவர சிரமப்பட்டால்,ரத்தமும் கோழையும் கலந்து வடிய, கன்னுக்குட்டி காலில் கயிறு கட்டி, நைசாக வெளியே இழுப்பார். அந்த வீட்டுக்காரம்மா கொலசாமியைக் கும்பிட்டுக்கொண்டே பதறி நிற்கும். ஆளும் பேருமாய் இழுக்க.. அது உயிர் வலிப் போராட்டம். 

கொஞ்ச நேரத்தில் சொத்தென்று மண்ணில் விரித்த கோணியில் வந்து விழும் கன்னுகுட்டி. பக்கத்தில் உட்கார்ந்து இரண்டு கைகளாலும் அதன் முகத்தின் ஈரத்தையெல்லாம் வழித்துவிட்டு. அப்படியே அள்ளி காதிலும் மூக்கிலும் உயிர்க்காற்று ஊதுவார். கொஞ்ச நேரத்தில் கன்னுக்குட்டி காது மடல் அசைய, உடல் துள்ளும். வீட்டுக்காரம்மா ஓடிவந்து காளக் கன்னா, பசுவா எனப் பார்க்கும். மாடு தழைந்து தழைந்து வந்து கன்றை நக்கிவிடும்போது, பொலபொலவென விடியும் அந்த நாள்"(பக்கம் 89,90). Why this is so special? Because, my father is a Veterinary Doctor :-) . 

இரவு நேரங்களில், என் அப்பா, கன்னுக்குட்டியை இழுத்துப் போட்ட நிகழ்வுகள் ஏராளம். முறையாக மருத்துவரை அழைக்காமல், மக்களே, கயிறு கட்டி இழுப்பது, கை விட்டு இழுப்பது போன்ற பல அசுர முயற்சிகளைச் செய்துவிடுவார்கள். எதுவும் பலிக்காமல் போன பிறகே மருத்துவரை அழைப்பார்கள். என் அப்பா, கன்னுக்குட்டியை இழுத்துப் போட்டப் பிறகு, அங்கு சுற்றி இருப்பவர்கள் அசடு வழிந்து கொண்டே சொல்வார்கள் 'எல்லாம் முயற்சி பண்ணிட்டேன் சார், இந்த மாதிரி மட்டும் தான் இழுக்கல', அப்பா சற்று கோபமாகவே பதிலளிப்பார், 'அதனால தான் நான் டாக்டர்' என்று.

பாண்டிச்சேரியில் இருக்கும் போது, அருகே ஆரோவில்லில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் நாய்களுக்கு, அப்பா வைத்தியம் பார்த்து வந்தார். அப்போது தன்னிடம் ஏராளமான நாய்கள் இருப்பதாகவும், மேலும் நாய்களை வளர்க்க முடியாதென்றும் கூறி, ஒரு நாய் குட்டியை(சுமார் 5-10 நாட்கள் குட்டி) அப்பாவிடம் கொடுத்து கருணைக் கொலை செய்யுமாறு அந்த farmஇல் இருந்த ஒருவர் கேட்டார்.  'உன்னால் வளர்க்க முடியாதென்றால் போ, அதைக் கொல்ல வேண்டுமென்று சொல்ல உனக்கு உரிமை இல்லை' என்று கூறி நாய் குட்டியை எங்கள் வீட்டுக்கேக் கொண்டு வந்து விட்டார். அதற்கு ஜிம்மி என்று பெயரிட்டோம். 2004ஆம்  ஆண்டு முதல் எங்கள் செல்லப் பிராணி ஆனது ஜிம்மி. நாங்கள் சாப்பிடும் போது அதற்கும் தர வேண்டும், இல்லை என்றால் அடம் பிடிக்கும். சப்பாத்தி என்றால் ஜிம்மிற்கு கொள்ளைப் பிரியம். சப்பாத்தி, பூரி,ஐஸ் கிரீம், சாக்லேட், சிந்தெடிக் போனே, பெடிக்ரீ இவை தான் ஜிம்மியின் favorite. சோறு வைத்தால் லேசில் சாப்பிடாது. அதிலும் நாங்கள் சப்பாத்தி சாப்பிட்டு ஜிம்மிக்கு சோறு வைத்தால் முகர்ந்து பார்த்து விட்டு போய் படுத்துவிடும். கோபத்தின் வெளிப்பாடு. அம்மா ஐஸ் கிரீம் கப்பை கையில் பிடித்துக் கொள்ள ஜிம்மி முழுவதையும் நக்கித் தின்று விட்டு வாலாட்டும். குழந்தைகளோடு சகஜமாக விளையாடும். அபார்ட்மென்ட்டில் ஜிம்மியோட விளையாடாத ஆளே கிடையாது. ஆனால் மற்ற விலங்குகளை அனுமதிக்கவே அனுமதிக்காது. வைத்தியத்திற்கு நாய்களைக் கொண்டு வரும்போது ஜிம்மியை சமாளிப்பதே பெரும் தலைவலியாக இருக்கும். மாட்டுக்குப் பழம் கொடுத்ததால் கோபமடைந்த ஜிம்மி வீட்டிலேயே சிறுநீர் கழித்து விட்டது, பிறகு அமைதியாக எங்களிடம் தர்ம அடியும் வாங்கிக் கொண்டது. 

ஜிம்மி எங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தான் வளர்ந்தது. இறுதியாக 2012ஆம்  ஆண்டு இறந்து போனது. இறந்து போன போது சிறுநீர் கழித்தது. மேலே குறிப்பிட்ட இரண்டு தருணங்களைத் தவிர ஒரு நாள் கூட வீட்டில் சிறுநீர் கழித்ததில்லை. காலை ஒரு முறை மாலை ஒரு முறை என பழக்கப் படுத்தியதால் சரியாகக் கூச்சலிட்டு, வெளியே அழைத்துச் செல்ல வைத்து விடும். இவ்வளவுப் பாசமான நாய் இறந்த போது ஏற்பட்ட வேதனையை  வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதனாலேயே அதற்கு பிறகு செல்லப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்து விட்டோம்.

வட்டியும் முதலும் படிக்கும் போது இது போல எண்ணற்ற நினைவுகள் மனத்திரையில் ஓடியது. அதனாலே தான் 504 பக்கங்கள் படிக்க மூன்று மாதங்கள் தேவைப்பட்டது. இது வரை நான் எழுதியது எல்லாமே வெறும் ட்ரைலர் தான். இந்தப் புத்தகத்தில் ரசித்து ரசித்துப் படிக்க வேண்டிய பக்கங்கள் ஏராளம், ஏன் அனைத்துப் பக்கங்களும் ரசித்துப் படிக்கப்பட வேண்டியவை தான். 'சின்னப் புறா ஒன்று பாடும் ரங்கய்யா, பள்ளிக் குழந்தைகளுக்குத் தீனி விற்கும் வேனியாத்தாள், பிச்சைக்கார பூவா, அரசியல் செய்கிறான் பேர்வழி என்று 'பிம்ப்'ஆக மாறிய நண்பர், தெருக்களில் பொம்மைகள் விற்கும் ஒருவன் என இவர் விவரித்ததில் பல மனிதர்களை நானும் சந்தித்திருக்கிறேன். நீங்களும் சந்தித்திருப்பீர்கள்.

"தர்மனாகவும் துரியோதனனாகவும் சாவதைவிட அபிமன்யுவாகச் சாவது தான் பெரிய விஷயம்" - இது ராஜு முருகன் பஞ்ச் ('நாம எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் தான், பக்கம் 340)

இது புத்தக விமர்சனம் அல்ல. கடந்த சில மாதங்களில் என்னைப் பரவசப் படுத்திய ஒரே விஷயம் வட்டியும் முதலும் தான். இது ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்தது. விகடன் வாங்குவதில்லை என்ற கொள்கையோடு வாழ்வதால், ராஜு முருகன் இந்தத் தொடரை எழுதிய போது படிக்க முடியவில்லை. நண்பர்களின் சிபாரிசின் பேரில் தான் இந்தப் புத்தகத்தைப் பற்றி இணையத்தில் தேடித் பார்த்தேன். புத்தகக் கண் காட்சியில் எப்படியாவது இதை வாங்கிவிட வேண்டுமென்று பெரும்பாலான ஸ்டால்களிலும்  கேட்டு அலைந்தேன். கிடைக்கவே இல்லை. ஏமாற்றமே மிஞ்சியது. அமேசான் கை கொடுத்தது. பெரும்பாலானவர்கள் வட்டியும் முதலும் படித்திருப்பார்கள் என நம்புகிறேன், அப்படி இது வரைப் படிக்கவில்லை என்றால், தயவு செய்து வாங்கிப் படியுங்கள்.

 புத்தகங்கள் நம் நண்பர்களைப் போல என்று யாரோ சொன்னதாக சுஜாதா கற்றதும் பெற்றதும் புத்தகத்தில் எழுதி இருப்பார். அது எவ்வளவு உண்மை என்பதை ஒவ்வொரு முறை நல்லப் புத்தகங்கள் படிக்கும் போதும் உணர்ந்திருக்கிறேன். 

லைப் இஸ் பியூட்டிபுல் என்று இந்தத் தொடரை முடிக்கிறார் ராஜு முருகன். இந்தத் தொடரை எழுதியதற்காக, நமக்கு கொடுத்ததற்காக அவரிடம் இதைச் சொல்லியே ஆக வேண்டும் 'Thank you Mr.Raju Murugan'.

உணர்வுகளை எழுத்துக்களால் விவரித்தவர் ராஜு முருகன் என்றால், அந்த கட்டுரைகளுக்கெல்லாம் நெஞ்சில் நிற்கும்படி அழகான ஓவியங்களைத் தந்தவர் திரு.ஹாசிப் கான். இன்றும் விகடனில் இவரது கார்ட்டூன்களுக்குத் தனி ரசிகர் கூட்டம் உண்டு.  Thank you Hasif Khan.

குறிப்பு: நீல நிற எழுத்துக்கள் என் சொந்தக் கருத்து/அனுபவம்.


Sunday, May 3, 2015

Ratham Ore Niram



Sujatha's Ratham Ore Niram - a novel based on First Indian war of Independence (1857). One of the best historical novels.It doesn't blindly demonize the British.McKinsey - a cruel British captain,has no respect for women or no sentiments at all.Muthukumaran,a local guy defeats Mc Kinsey in a fight(Silambam - martial arts) and an angry Mc Kinsey kills Muthukumaran's father in confusion.Now Muthukumaran wants to take revenge against Mc Kinsey.He is on a mission.
Captain Ashley, total contrast to Mc Kinsey.He follows ethics,doesn't accept killing women and innocent people.He writes poems to express his love to Emily while Mc Kinsey directly touches her 'romantically' to get her and Emily marries Mc Kinsey while she still sympathizes Ashley.Later she realizes how cruel Mc Kinsey is and finds out some kids in a locality resembling Mc Kinsey.If am not wrong, Sujatha's Karuppu Sivappu Veluppu was stopped because of this episode.

Though this is a historical novel and based on first war of Independence,it doesn't fail to entertain us.Characters like Pooncholai and Bairagi are added mainly for entertainment.Through Ashley's character,Sujatha means,not all the Britishers were cruel and there good people like Ashley too. One need not doubt this,yes there were good people in British side too and a best example would be Lord Ripon.So Ashley's character is very much believable.The novel moves at a brisk pace and scenes like Ashley helping Muthukumaran to escape twice, Muthukumaran rescuing Sivagami(Pooncholai's younger sister) from British custody etc are typical Sujatha touch :-) . The following conversation between Ashley and Edward Mc Kinsey shows how the 1857 revolt started.When you read this novel completely,you will understand 'what caused the revolt and how it ended up'.

"இந்தச் சின்ன கொழுப்பு விஷயத்துக்காகப் பெரிய கலகம் விளையுமா?"

"இல்லை எட்வர்ட்.காரணம் இது மட்டும் இல்லை. இது கலகம் வெடிக்க ஏற்படக் கடைசிக் காரணம். முக்கியமான காரணம் வேறு." - ஆஷ்லி 

"என்ன அது?"

"நாம் இந்தியர்களை நடத்தும் விதம்."

"ஹ! அதில் என்ன குறை? கறுப்பர்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் வைத்திருக்கிறோம்"

"இப்போது நீ 'கறுப்பர்கள்' என்று சொல்கிறாயே அதில் இருக்கும் வெறுப்பும் ஆணவமும்தான் இன்று கலகம் துவங்கியிருப்பதற்குக் காரணம்."

What makes this novel unique is the 'balance' which Sujatha maintains in describing the atrocities of British and also the Indian rebels.While Sujatha describes the cruel nature of British through scenes like Mc Kinsey enjoying an Indian widow getting burnt alive,British army ruthlessly killing 2 children because they were wearing a rebel like dress etc etc. The narration of Bibighar massacre was so hard-hitting that even being an Indian,I sympathized for the British.120 British women and children captured by the Sepoy forces were slaughtered mercilessly and their remains were thrown into a nearby well to hide the evidence.After reading this book,some questions came to my mind - 'should we take it as all is fair in war? should we oppose wars/fights at any cost?'. On a killing spree one may kill any number of people,but that will haunt him throughout his life.
Infact, there is an important character called 'Bairaagi' (kind of monk, though not exactly..this monk is an expert in martial arts and also cracks adult jokes at times) and this Bairaagi justifies all these war cruelties and he says 'even rape is right in war'.On the other hand,he also describes about British people trapped in Kanpur.They were on losing side and they were even sure of their death in the war.Amiliya,an innocent girl once says to Emily, 'before our troupes reach Kanpur,we all will be raped' and she laughs at an old lady.And she goes on,'after we come out,first thing I would do is to buy a dress as yours'..While offered to leave by the Indians, these trapped people still carried some valuables with them and Amiliya says 'whatever happens,desires of people remains the same'..the death of the 120 people including Amiliya will move anyone to tears.
There are emotional scenes like Muthukumaran saving Emily from an Indian soldier,who tried to rape her.While Muthukumaran takes Emily with him, she emotionally thanks God for sending Muthu to save her.Finally Ashley comes searching Emily and finds her.What happens then is the climax.

I read this book only last year.Once in a while,'Ratham Ore Niram' comes to my mind and also the horror suffered by innocent people(both Indians and British). Sujatha Sujatha thaan 
smile emoticon not sure,if he was honored with any award in the field of literature,but his books will be loved by future generations too compared to some 'award winning books/novels'.  I have said this so many times 'Writer Sujatha is immortal smile emoticon '.

Friday, December 27, 2013

படித்ததில் பிடித்தது - கறுப்புக் குதிரை



இதன் ஆசிரியர் திரு.சுஜாதா அவர்கள்.இந்தப் பகுதியில் இதற்கு முன் அவரது 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' பற்றி எழுதியிருந்தேன்.இது இங்கே சுஜாதா புத்தகத்தைப் பற்றிய இரண்டாவது பதிவு.'கறுப்புக் குதிரை' - இதுவும் சிறுகதைகளின் தொகுப்புத் தான்.இதனை 'மீண்டும் தூண்டில் கதைகள்' என்ற தலைப்பில் 'ஆனந்த விகடன்' பத்திரிக்கையில் எழுதினார். இவரது இந்த படைப்பைப் பற்றிய பதிவு தான் இது.

இதில் 12 கதைகள் உள்ளன.அதில் என்னை மிகவும் பாதித்த கதை என்றால், 'ஒரு சிபிஐ அதிகாரியின் நினைவலைகள்', 'ஆயிரத்தோராவது பொய்','கார்ப்பெட்டில் ரத்தம்..முகத்தில் புன்னகை'.மற்ற கதைகளும் சுவாரசியமானவையே என்றாலும் இந்த மூன்று கதைகள் படித்த பின்பு பல நாட்கள் இவற்றைப் பற்றிய சிந்தனையே என் மனதில் இருந்தது.

கறுப்புக் குதிரை

இது ஒரு சுவாரஸ்யமான கதை. நகைச்சுவையாகவே இருக்கும் ஆனால் இதில் வரும் நகைச்சுவை நிஜமாகிப் போனது ஆச்சரியம் தான்.தமிழகத்திலிருந்து சர்வதேச போட்டிகளுக்கு நடுவராகும்(umpire) ஒருவர் தான் இந்தக் கதையின் நாயகன். இவர் மனைவிக்கோ கிரிக்கெட் என்றாலே பிடிக்காது. அதுவும் கல்யாண தினத்திலிருந்து தான்.'முதலிரவின் போது நடுவே நிறுத்திவிட்டு ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் மாட்சைப் பார்த்து விட்டு வந்தது தப்பு தான்' - சுஜாதா குறும்பு என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த வரி தான். இந்தக் கதைகள் 95 ஆம் ஆண்டு வெளிவந்தன.இந்தக் கதையில் வரும் கிரிக்கெட் கிச்சா(கே.சுவாமி) என்ற நடுவர் கதாபாத்திரம் நடுவர் வெங்கட்ராகவனை மனதில் வைத்து அமைக்க்பட்டதோ என்று தோன்றுகிறது.

ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் மனைவி,கிரிக்கெட்டை காதலிக்கும் நேர்மையான நடுவராக நம் கதையின் நாயகன்.இந்நிலையில் புகழ்பெற்ற பன்னாட்டு குளிர்பான நிறுவனம் ஒன்று பல உலக நாடுகள் பங்குபெறும் ஒரு கிரிக்கெட் தொடர் நடத்துகிறது. அதில் நடுவராக பங்கேற்கும் வாய்ப்பு நமது கே.சுவாமிக்கு கிடைக்கிறது.ஜெர்மனி நாடும் அதில் முதன்முறையாக பங்கேற்கிறது.ஜெர்மனி பல நாடுகளையும் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்து வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவிருக்கும் நிலையில் ஒரு புக்கி நமது நடுவரை அணுகுகிறான்.

ஜெர்மனி அணியில் இரண்டு வீரர்களே திறமையானவர்கள்,அவர்களில் ஒருவருக்கு தவறான தீர்ப்பின் மூலம் அவுட் கொடுத்து விட்டால் போதும்,வெஸ்ட் இண்டீஸ் வென்று விடும் என்றும்,தான் வெஸ்ட் இண்டீஸ் மீது பெரும் பணம் கட்டியிருப்பதாகவும் சொல்கிறான்.சுவாமிக்கும் பெரும்பங்கு அளிப்பதாகக் கூறுகிறான்.ஆனால் சுவாமி இதை ஏற்க மறுக்கிறார். கிரிக்கெட் தனக்குக் கடவுள் போல என்று கூறி, வந்தவனை அனுப்பிவிடுகிறார்.ஆனால், அவர் எதிர்பார்த்தபடி ஜெர்மனி தோற்கிறது, வெஸ்ட் இண்டீஸ் வென்று விடுகிறது.கதையின் இறுதியில் தான் ஜெர்மனி அணியின் முக்கிய வீரரான க்ரயூபை விலைக்கு வாங்கிய விபரம் தெரிய வருகிறது.இந்தக் கதையை படிக்கும் போது தான் ஸ்ரீசாந்த்,சண்டிலா போன்றவர்கள் சூதாட்ட புகாரில் கைதானார்கள்.சுஜாதா ஒரு தீர்க்கதரிசி.

எல்லாமே இப்பொழுதே :

இது ஒரு விதமான காதல் கதை.பணம்,சொத்து மற்றும் அன்பு இவற்றுக்கு நடுவே தான் கதை செல்கிறது.கதையின் நாயகி நிருபமா.செல்வா என்கிற இளைஞனுடன் நட்பு ஏற்படுகிறது.ஆண் பெண் உறவு நட்பில் தொடங்கி காதலில் முடிவது தானே காதல் கதைகளில் வழக்கம்.காதல் மட்டுமே இருந்தால் ஏது சுவாரஸ்யம்?அதனால் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. செல்வாவின் முதலாளி பிரேம்சாகர் மாபெரும் பணக்காரன்.  நினைத்ததை ஒரு நொடியில் சாதிக்கும் பணபலமும் அதிகாரமும் கொண்டவன்.நிருபமாவைக் கண்டதும் பிடித்துப் போய்விடுகிறது.செல்வா மீது கொண்ட காதலால் நிருபமா ப்ரேம்சாகரின் காதலை ஏற்க மறுக்கிறாள். பிரேம்சாகர் செல்வாவை அழைத்துப் பேசுகிறான்.பிறகு செல்வா நிருபமாவை சம்மதிக்க வைக்கிறான்.இதற்கு பிறகு வரும் சம்பவங்களே இந்தக் கதைக்கு சுவாரஸ்யமூட்டுகிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு காதலனை கை விட்டாளா நிருபமா? அல்லது செல்வா விலை போய் விட்டானா? ஒரு வேளை பிரேம்சாகர் செல்வாவை விலைக்கு வாங்கி விட்டானென்றெ வைத்துக் கொண்டாலும்,என்ன விலை கொடுத்திருப்பான்? இந்த கேள்விகளின் பதிலே இந்தக் கதையின் முடிவு.

கி.பி.2887ல் சில விலாசங்கள் :

இது ஒரு 'adults only' வகைக் கதை.கதை நடக்கும் காலக்கட்டம் கி.பி.2887.மகேன் என்பவன் தான் இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரம்.கதை நடக்கும் காலக்கட்டத்தில் விபச்சாரம் முழுதாக தடை செய்யப்பட்டு விட்டது.தகாத உறவில் ஈடுபடுபவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்படும்.இருந்தும் வாலிப வயது இது போன்ற வீர விளையாட்டுகளில் ஈடுபட தூண்டுகிறது.மகேனின் நண்பன் ராகுல் என்பவன் ஒரு மகேனை ஒரு விலாசத்திற்கு அனுப்புகிறான்.விலாசத்தை நேரடியாக கண்டறிய முடியாது.கடும் சிரமத்திற்குப் பிறகு சம்மந்தப்பட்ட பார்ட்டியை கண்டுகொள்கிறான்.சம்பிரதாய உரையாடல்களுக்குப் பின் கூடல் தொடங்குகிறது. இருவரும் உல்லாசமாக இருக்கிறார்கள்.திடீரென எழுந்த மகேன் 'பணம் கொடுக்க வேண்டாமா?நான் புறப்பட வேண்டும்' என்று கூறுகிறான்.தேவயானியோ(பார்ட்டி) 'பணமா முக்கியம்? இன்பம் தானே முக்கியம்' என்று கூற,மகேன் சற்று  கோபமாக  'இங்கே யாரும் இலவசக்காட்சிக்கு வரவில்லை. பணம் கொடுக்க போகிறாயா இல்லையா?' என்று கேட்கும் பொழுது தான் இதில் விபச்சாரம் செய்வது பெண் அல்ல ஆண் என்று புரிகிறது.

ஒரு சி.பி.ஐ அதிகாரியின் நினைவலைகள் :

'Mistrust the obvious' என்ற வாக்கியத்துடன் தொடங்குகிறது இந்தக் கதை.ராமபத்திரன் ஒரு CBI அதிகாரி.இவருக்குத் திருமணம் தள்ளிக்கொண்டே போயிற்று.ஆபத்தான உத்தியோகம் என்பதால் எளிதில் பெண் கொடுக்க எவரும் முன்வரவில்லை. இவரும் அத்தனை ஆர்வமாக அதற்கு முயற்சி செய்யவில்லை. இந்நிலையில் இவருடைய உறவுக்காரப் பெண் வர்ஷா சென்னை மாலைக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும் அவளை பார்த்து வருமாறும் ராமபத்ரனின் தாயார் கூற நமது நாயகன் வர்ஷாவை சந்திக்கிறான்.வர்ஷா துறுதுறு குணம் கொண்ட ஒரு இளம்பெண்.இருவரும் சென்னையில் சில இடங்களைச் சுற்றி பார்க்கிறார்கள்.ராமபத்திரன் வர்ஷாவை நேசிக்கத் தொடங்கிவிடுகிறான். "நாம ரெண்டு பெரும் உறவு இல்லையா?" என வர்ஷா கேட்க,உற்சாகமாக "ஒ எஸ்" - என்கிற ஒரு வசனமே போதும்,ராமபத்ரனின் மனதை புரிந்து கொள்ள. இப்படிச் செல்லும் கதையில் ஒரு CBI விசாரணை.அகர்சந்த் என்பவன் மீது அந்நிய செலவாணி மோசடி செய்வதாக புகார் எழுகிறது.

ராம் ரெயிடு செய்வதைப் பார்க்க விரும்பிய வர்ஷாவை,உடன் அழைத்துச் செல்கிறான் ராம்.அப்போது அகர்சந்த் ஒரு சிட்னி ஷெல்டன் புத்தகத்தை வர்ஷாவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறான்.மீண்டும் அவனை ரெயிடு செய்யும்போது ஒரு புத்தகத்தை வர்ஷா பிறந்தநாள் பரிசாக கொடுக்க எடுத்துச் செல்கிறான்.அந்த இரண்டும் ஒரே புத்தகத்தின் வெவ்வேறு பிரதிகள் என்பதை உணரந்ததும் அகர்ச்சந்தின் மோசடியை கண்டுபிடித்து விடுகிறான் ராமபத்ரன்.இதற்கிடையில் வர்ஷா பிறந்த நாள் என்பதால் அந்த ஹோட்டலில் வாசித்துக் கொண்டிருந்த வாத்திய கோஷ்டியை 'ஹாப்பி பர்த்டே வர்ஷா' பாட வைக்கிறான். வர்ஷா நெகிழ்ந்து போகிறாள். இந்த நேரத்தில் தான் ஒரு புதுமுகம் கதையில் அறிமுகாகிறது. "சாரி! எம் ஐ லேட்?" - என்று நுழைகிறான்.ராம் சற்று குழப்பமடைய,வர்ஷா, அவன் பெயர் ஷேக்கர் சீனிவாஸ் என்றும்,அவனை அவள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறுகிறாள். ராம் ஏமாற்றமடைகிறான்.

"நீ இவரைக் கல்யாணம் பண்ணிக்க ஒரு ப்ரோபோசல் இருந்ததா சொன்னியே?"

வர்ஷா,"அம்மா அப்பாவும் சொன்னா,வயசு வித்தியாசம் ஜாஸ்தின்னு..பதினொரு வருஷம்"

"பத்து வருஷம் என்றேன் ஹீனமாக" - ராம்.

"சரி ராம் அங்கிள்! நாளைக்குப் பார்க்கலாமா?" என்றாள். பாரில் இருந்த கண்ணாடியில் தெரிந்தேன்,வழுக்கையின் ஆரம்பங்கள் தலையில்.ஒரு பெண்ணின் வெளிப்படையான வெகுளித்தனத்தை காதல் என்று நினைத்து ஏமாந்து போவது தான் கதையின் 'one liner'.இதைத் தான் ஆரம்பத்திலேயே 'Mistrust the obvious' என்று சொல்கிறார்.

எய்தவன் :

இது ஒரு சமூக பொறுப்புள்ள வக்கீலுக்கும் தவறான,ஊழல் மிகுந்த,ஒரு அரசியல்வாதிக்கும் இடையில் நடக்கும் கதை. சுந்தரலிங்கம் என்பவர் ஒரு நேர்மையான வக்கீல்,அவர் மணிமோகன் என்கிற மந்திரிக்கெதிராக வழக்கு தொடர்கிறார். அடியாள் மூலம் பலமாக தாக்கப்படுகிறார்.உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப் படுகிறது.சுந்தரலிங்கம் குணமாகி வீடு திரும்புகிறார்.ஆனால் பலமாக தாக்கப்பட்டதால் அவர் ஒரு கண்ணை இழக்க நேரிடுகிறது.இந்த விசாரணை மீதெல்லாம் அவருக்கு நம்பிக்கை இல்லை.ஆனால் தன்னைத் தாக்கியவனை அடையாளம் கண்டு கொள்கிறார். ஆனால் போலீசில் அடையாளம் காட்டாமல் இருந்து விடுகிறார். மாறாக அவனுடன் தனிமையில் பேசி,தன்னை தாக்குவதற்காக அவனுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தை விட அதிகம் தருவதாகக் கூறி மணிமோகனையே தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுவது போல முடிகிறது இந்தக் கதை.

ஆயிரத்தோராவது பொய் :

அழகான தோற்றமில்லாத பெண் ஒருத்திக்குத் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது.எந்த வரனும் அமையாததால் விரக்தியில் பத்மாவதி திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தையே விட்டுவிடுகிறாள்.அந்த நேரத்தில் தான் ஒரு பையன் இவளைப் பெண் பார்க்க வருகிறான்.பத்மாவோ வந்தவனை வா என்று கூட சொல்லாமல் அனுப்பி விடுகிறாள்.ஆனால் வந்தவனோ வீட்டு வேலைக்காரியுடன் நிறைய பேசிவிட்டுச் செல்கிறான்.இந்த வரனும் தவறிவிட்டதே என பத்மாவின் பெற்றோர் வருந்தும் வேளையில் தான் வந்தவன் பத்மாவைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்து விட்டான் என்கிற தகவல் வருகிறது.அனைவருக்கும் ஆச்சரியம், இறைவன் இந்தக் கல்யாணத்தை நடத்த நிச்சயித்து விட்டான் என்று தோன்றுகிறது.

ஆனால் வந்தவன் பெண்ணைப் பார்க்காமல் வேலைக்காரியைப் பார்த்து சம்மதம் சொன்னது சற்று நெருடலாகவே இருக்க,ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்வார்கள்,இது ஆயிரத்தோராவது பொய்யாக இருக்கட்டும் என்று பத்மாவின் மாமா அவள் தந்தைக்கு தைரியம் கொடுக்கிறார்.இறுதியில் தான் தெரிகிறது இந்த உண்மை.வந்தவன் பார்த்தது கல்யாணப் பெண்ணையும் அல்ல,பார்க்க வந்தவனும் மாப்பிள்ளை அல்ல என்று. வந்தவன் மாப்பிள்ளையின் நண்பன் என்று மாப்பிள்ளை சிவராமன் பத்மாவின் தந்தையிடம் கூற,பத்மாவின் தந்தையும் மாமாவும் கை குலுக்கிக் கொண்டார்கள், அதன் காரணம் என்னவோ மாப்பிள்ளைப் பையனுக்கு விளங்கவில்லை.

பெரியவங்க உலகம் :

இது 'extra marital relationship' என்று சொல்லப் படுகிற திருமணமான ஒரு பெண்ணின் தகாத உறவைப் பற்றியும் ஒரு மாணவனின் மன மாற்றத்தையும் சொல்லும் கதை இது. ஒரு நல்ல ஆசிரியரின் மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை மாணிக்கம் என்ற மாணவன் கண்டுபிடித்து விடுகிறான். இதைப் பற்றி ஆசிரியரிடம் அவர் தனிமையில் இருக்கையில் புகார் சொல்கிறான்.அவரோ இது தனக்கு முன்பே தெரியுமென்றும் இதனை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது என்றும் கூறி அனுப்புகிறார். மாணிக்கத்துக்கோ தமயந்தி என்ற பெண் மீது ஒரு ஆசை.இறுதியில் அந்தப் பெண் தானாக முன் வந்து மாணிக்கத்திடம் அவளின் ஆசையை தெரிவிக்கும் பொது, 'வேண்டாம் தமயந்தி எனக்குப் படிக்கணம்' என்று அவனை அறியாமல் சொல்கிறான். இந்தப் பெரியவங்க உலகத்தை அவனால் புரிந்து கொள்ள முடியாமல் இந்த வயதில் தனக்கு ஏற்பட்டிருக்கும் ஆசையும் தவறு என்று உணர்ந்து மனதை மாற்றிக்கொள்கிறான்.

பை நிறைய பணம் :

இது ஒரு வங்கிக் கொள்ளை மையமாகக் கொண்ட கதை. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இறுதியில் பேங்க் மானேஜருக்கும் இன்ஸ்பெக்டருக்கும் இடையில் நடக்கும் உரையாடல் தான்.இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி கொள்ளையர்களைக் கண்டு பிடித்து விடுகிறார். ஆனால் அதன் விபரங்களை வெளியுலகத்திற்கு தெரிவிப்பதற்கு முன் பேங்க் மானேஜரிடம் தான் கண்டுபிடித்த விபரங்களை மறைத்து விடுவதாகவும் தாங்கள் இருவரும் தலா 50 லட்சம் வரை பணம் பண்ணலாம் என்றும் யோசனை தெரிவிக்கிறார். தெரிவிப்பதற்கு முன் தானும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி,கோபால்சாமியும் ஒரு நேர்மையான வங்கி அதிகாரி. இது வரை பெரிதாக பணம் பண்ணியதில்லை என்றும் கூறுகிறார். ஆனால் கோபல்சாமியோ '"வேண்டாம்ங்க நம்ம மாதிரி ஒண்ணு ரெண்டு அதிகாரிங்க மிச்சம் இருந்தாதான் இந்தச் சபிக்கப்பட்ட நாட்டுக்கு கொஞ்ச நஞ்சமாவது நம்பிக்கை இருக்குது." - என்று கூறுகிறார்.எத்தனைப் பணத்தைப் பார்த்தாலும் கோபால்சாமியின் நேர்மை குறைந்து விடவில்லை.நேர்மையாளர்கள் எல்லாம் இந்த நாட்டில் 'நாம் என்ன சுகத்தைக் கண்டோம்' என்று நொந்து கொள்ளாமல் நாட்டில் நேர்மையை நிலைநாட்டத் தாங்களாவது இருக்கிறார்களே என்று நினைத்துப் பெருமைப்பட வேண்டும் என்பது போல அமைகிறது இந்த முடிவு.


லூயிஸ் குப்பத்தில் ஒரு புரட்சி :

குப்பத்தில் வாழும் பெண்களின் நிலையை மிக யதார்த்தமாக விளக்கும் கதை இது.தன் வீட்டு வேலைக்காரியின் மகள் திருமணத்தில் கதை தொடங்குகிறது.மாப்பிள்ளையை பார்த்தவுடன் அவன் சரியானவன் அல்ல என்பதை முதலாளியம்மா உணர்கிறாள்.அவள் நினைப்பே சரி என்பதைப் போல தினமும் குடித்து விட்டு மனைவியை துன்புறுத்துகிறான் கார்மேகம். வேலைக்காரியின் மகளையும் தன் மகள் போலவே நினைத்த முதலாளியம்மா அவளை தன் வீட்டிலேயே தங்க வைக்கிறாள்.சட்ட ரீதியான பாதுகாப்பும் கொடுத்து,இந்தப் பெண்ணுக்கு மறுமணம் செய்யும் முயற்சியில் இறங்குகிறாள்.இந்த நேரத்தில் தான் பெண்ணின் கணவன் தான் திருந்தி விட்டதாகவும் மனைவி இல்லாமல் தன்னால் வாழ இயலாது என்றும் மலர்விழியை தன்னுடன் அனுப்பிவிடுமாரும் கெஞ்சி கேட்கிறான். மலர்விழியை அழைத்துச் செல்கிறான்.பிறகு இருவரும் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.சில நேரங்களில் வந்து முதலாளியம்மாவையும் சந்திக்கிறார்கள்.இத்துடன் இந்தக் கதை முடிந்திருந்தால் புரட்சி மலர்ந்து தான் விட்டதென்று நிம்மதியாக இருந்திருக்கலாம்.ஆனால் யதார்த்தம் அதுவல்லவே.நீண்ட நாட்களுக்குப் பிறகு கணவனும் மனைவியுமாக இந்த முதலாளியம்மாவின் வீட்டிற்கு வருகிறார்கள்.மலர்விழி கர்பமாக இருந்தாள்.கார்மேகம் குடித்து விட்டு மலர்விழியை பின்னாலிருந்து உந்தித் தள்ள அவள் முதலாளியம்மாவின் காலருகில் வந்து விழுந்தாள். இது தான் லூயிஸ் குப்பத்தில் நடந்த புரட்சி.


பொய் :

இதுவும் கூட ஒரு 'adults only' வகைக் கதை என்றே கூறலாம். முடிவு அப்படி.ராஜாராமன் நீண்ட நாட்களாக பணிபுரியும் ஊழியர்.அவருடைய மானஜெரைவிடவும் அனுபவம் ஜாஸ்தி.அசிஸ்டென்ட் மானஜெர் பதவி ராஜராமனுக்குக் கொடுக்க நினைக்கிறார் ரகுநாத்(மானஜெர்).அலுவலகத்தின் அனைத்து விஷயத்திலும் ராஜாராமனுக்கு இருக்கும் அறிவும் அனுபவமும் இந்த புதிய ரகுநாத்தைத் திகைக்க வைத்தது.ஆனால் ஒரு சீருடை விஷயத்தில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுவிடுகிறது.புதிய சீருடை ஒன்றை அறிமுகபடுத்தி அதனை அணிந்து வரவேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கிறார் ரகுநாத்.ஆனால் 20 ஆண்டுகளாக இல்லாமல் இப்போது என்ன என்று ராஜாராமன் சீருடை அணிய மறுக்கிறார்.இதனால் கோபமடைந்த ரகுநாத் அந்த அசிஸ்டென்ட் மானேஜர் பதவியை கேத்தன் என்ற இளைஞருக்குக் கொடுத்து விடுகிறார்.கேத்தன் ராஜராமனைவிட அனுபவம் குறைந்தவர். அதன் பிறகும் மோதல் போக்கையே ராஜாராமனும் ரகுநாத்தும் கேத்தணும் கடைபிடிக்கிறார்கள். ராஜாராமனை விருப்ப ஓய்வில் செல்ல கட்டாயப்படுத்துகிறார்கள் கேத்தணும் மானேஜரும்.வேறு வழி இல்லாமல் விருப்பமில்லாமல்  விருப்ப ஓய்வில் செல்ல சம்மதிக்கிறார் ராஜாராமன். ராஜாராமன் இவர்களைப் பற்றி பல பொய்கள் சொல்கிறார். கேத்தன் கடும் ஆத்திரம் கொள்கிறான்.இறுதியில் ரகுநாத்துக்கும் கேத்தனுக்கும் 'தாம்பத்ய உறவு' இருப்பதாக வதந்தி பரவுகிறது.

இதையடுத்து முதலாளி தற்காலிகமாக கேத்தனை இடமாற்றம் செய்கிறார்.கேத்தனோ இதை ஏற்க மறுக்கிறான். தான் ராஜினாமா செய்யப் போவதாகக் கூறுகிறான்.ஆனால் எதிர்பாராத விதமாக ரகுநாத் தன் பணியை ராஜினாமா செய்கிறார்.முதலாளி எவ்வளவோ வற்புறுத்தியும் ராஜினாமாவை திரும்பப்பெற மறுக்கிறார் ரகுநாத். முதலாளி கேட்கிறார்,

'ஏன்..ஏன் ஒரு வதந்திக்குப் பயந்துட்டியா?'

அது வதந்தி இல்லை உண்மை என்று எப்படி அவரிடம் சொல்ல முடியும் என்று ரகுநாத் நினைப்பது போல கதை முடிகிறது.

கார்ப்பெட்டில் ரத்தம்...முகத்தில் புன்னகை :

இதுவும் கூட ஒரு 'extra marital relationship'பை மையமாகக் கொண்ட கதை தான்.ஆனால் இது நகைச்சுவையான கதை அல்ல.விறுவிறுப்பான த்ரில்லெர் வகைக் கதை என்று நினைத்துத் தான் படிக்கத் துவங்கினேன்.இந்தக் கதையின் முடிவு என்னை மிகவும் பாதித்து விட்டது.இந்தக் கதை படித்து 6 மாதங்களுக்கு மேல் ஆகின்றன.இன்று வரையிலும் கூட இந்தக் கதையின் பாதிப்பு என் மனதில் இருந்து நீங்கிவிடவில்லை. ஒரு மரணத்தில் கதை துவங்குகிறது.ரவிசேகர் என்கிற பெரும் பணக்காரன் இறந்து கிடக்கிறான்.இவரைக் கொன்றது யார் என்ற ரீதியில் கதை தொடங்குகிறது.இவர் மனைவி ஸ்வேதாவுக்கும் இவருக்கும் சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு கடும் சண்டை.போலீஸ் விசாரணை தொடங்குகிறது.துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்திருக்கிறார் ரவிசேகர்.விஷயத்தைக் கேள்விபட்டதும் ஸ்வேதாவைத் தேடி வருகிறான் சுரேஷ்.சுரேஷுக்கும் ஸ்வேதாவுக்கும் தான் தகாத உறவு.

இந்த சம்பவத்தை விசாரிக்க வரும் எஸ்.பி. பழனிவேலு என்பவர் சுரேஷுக்கும் ரவிசேகருக்கும் எந்த அளவு நட்பு என்பதை விசாரிக்கிறார்.ஒரு சமயம் சுரேஷுக்கும் ஸ்வேதாவுக்கும் கள்ளத் தொடர்பா என்றும் கேட்கிறார், இவர்களும் 'ஆம்' என்று உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள்.விசாரணை இவர்கள் இருவரில் ஒருவர் தான் கொலையாளி என்கிற ரீதியில் கூட சில சமயம் செல்கிறது.இருவரையும் சற்று கேவலமாகவே நடத்துகிறார் எஸ்.பி. பிறகு துப்பாக்கி கிடைத்தவுடன், 'ஜன்னல் வழியாக யாரோ சுட்டுக் கொன்று விட்டு  ஓடி இருக்க வேண்டும்' என்று தெரிகிறது.

தீவிர விசாரணைக்குப் பிறகு தான் அந்த உண்மையை போலீஸ் கண்டுபிடிக்கிறது.அந்த உண்மை என்னவென்றால், ரவிசேகர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்திருக்கிறார். அதாவது இது கொலை அல்ல தற்கொலை. அவர் சமீபத்தில் தொடங்கிய மோட்டார் பைனான்ஸ் கம்பெனியால் பலத்த நஷ்டம் அடைந்திருக்கிறார். கடனை திரும்ப செலுத்த வழி இல்லாமல் இறந்திருக்கிறார் என்று முடிகிறது வழக்கு.ஆனால் ஒரு கேள்வி எழுகிறது. தற்கொலை செய்து கொண்டவர் ஏன் அதை கொலை போல தெரியவைக்க முயற்சி செய்தார் என்பது தான் அந்தக் கேள்வி.இதற்கும் பழநிவே லுவே விளக்கம் தருகிறார். தற்கொலை என்றால் ஒரு வித அவமானம்..அதனால் தான் இது கொலை போலத் தெரிய வேண்டும் என நினைத்திருக்கிறார்.இதற்கு பிறகு ஸ்வேதா ஒரு பதில் சொல்கிறாள்.இந்த மொத்தக் கதையும் அந்த ஒரு வரியில் புரிந்து விடுகிறது.

"இல்லைங்க" என்றால் ஸ்வேதா.அவள் கண்களில் நீர் இயல்பாக வடிந்தது.

"பின்ன எதனாலங்கறீங்க?"

"தற்கொலைன்னா இன்ஷூரன்ஸ் பணம் எனக்கு வராது" என்றாள்.இந்தக் கதை படித்தவுடன் 'ஜீனியஸ் சார் நீங்க' என்று சுஜாதாவைப் பற்றி நினைத்துக் கொண்டேன். 'இறப்பதற்கு முன்பு ஏதோ சொல்ல நினைத்திருக்கிறான். கதவைத் தட்டி இருக்கிறான்','ஐ லவ் யு ஸ்வேதா என்றார்' போன்ற வசனங்கள் கதையின் ஆரம்பத்தில் இடம் பெறுகின்றன.இறுதியில் ஸ்வேதா கூறும் அந்த ஒரு வாக்கியம் ரவிசேகர் அவளை எந்தளவு நேசித்திருக்கிறான் என்பதை உணர்த்துகிறது.தன்னுடைய அன்பை வெளிப்படுத்தத் தெரியாமல் வாழ்ந்திருக்கிறான். ஸ்வேதாவோ அவனைப் புரிந்து கொள்ள முயற்சி கூட செய்யாமல் சுரேஷோடு உறவு வைத்துக் கொண்டாள். வியாபாரத்தில் பலத்த நஷ்டம்,மனைவியின் துரோகம், புரிந்து கொள்ள ஒருவரும் இல்லாதது என அனைத்தும் கவலைகளும் ஒன்று சேர்ந்து ரவிசேகரை மனதளவில் எப்போதோ கொன்று விட்டது.தன உயிர் பிரிவதற்கு முன்பாவது ஸ்வேதா மீது தான் வைத்திருக்கும் அன்பை உணர்த்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காகத் தான் தன் தற்கொலையை கொலை போலத் தெரியவைக்க முயற்சி செய்திருக்கிறான்.இதை உணர்ந்து குற்ற உணர்ச்சி வாட்டியெடுக்க வாய்விட்டு அழுகிறாள் ஸ்வேதா. இந்தக் கதைக்கு மட்டும் ஏன் இத்தனை பெரிய விமர்சனம் என்று இதைப் படிப்பவர்கள் நினைக்கலாம்.இதை இப்படி எழுதினால் மட்டுமே என் மனதில் இருக்கும் பாரம் சற்று குறையும். ஏனென்றால் இந்தக் கதையை பேச்சுவாக்கில் சொன்னால் முழுசாகக் கேட்கும் பொறுமை பலருக்கும் இல்லை.என் போன்றவர்கள் பேசுவதையே கேட்கும் பொறுமை பலருக்கும் இருப்பதில்லை.அதனால் தான் இங்கே என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்து விட்டேன்.

நான் மல்லிகாவோட மகன் :

இது சற்று பழக்கப்பட்ட கதை தான்.தனது தாய் மல்லிகாவை  திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிய ஒருவனைப் பழி வாங்கும் கதை தான் இது.இந்தக் கதையிலும் கிளைமாக்ஸ் காட்சியே சிறப்பம்சம்.செல்வம் மல்லிகாவின் மகன்.தன் தந்தையான பரந்தாமனைக் கொல்ல சென்னைக்கு வருகிறான்.அவரைக் கூட்டத்தில் சந்தித்துத் தான் தான் மல்லிகாவின் மகன் என்கிற விபரத்தைச் சொல்கிறான். வீட்டிற்கு அழைத்துத் தனிமையில் பேச்சு வார்த்தை நடத்துகிறார் பரந்தாமன்.செல்வம் என்றோ ஒரு நாள் வருவான் என்கிற எதிர்பார்ப்புடன் இருந்தவர் போல பேசுகிறார்.மல்லிகா எப்படி இறந்து போனாள் என்றாள், 'பசி,ஏழ்மை,சிபிலிஸ்' என்கிறான் செல்வம்.முக்கியமாகக் கவனிக்க வேண்டிய வார்த்தை 'சிபிலிஸ்'.சிபிலிஸ் என்பது தகாத உடலுறவினால் ஏற்படக்கூடிய ஒரு வியாதி.

பரந்தாமன் செல்வத்தை சமாதானப் படுத்த எவ்வளவோ முயற்சிக்கிறார்.மல்லிகா ஒரு நடத்தை கெட்டவள் என்றும் பலருடன் தொடர்புடைய வேசி என்றும் கூட சொல்லிப்பார்க்கிறார்.செல்வமோ,மல்லிகா அப்படி ஆனதற்கே பரந்தாமன் காரணம் என்கிறான்.பரந்தாமன் ஏதோ ஒரு முக்கியமான விஷயம் சொல்ல நினைக்கிறார், அதற்குள் செல்வம் தன் கையில் இருந்த கையிற்றால் அவர் கழுத்தை இறுக்குகிறான்.பேச்சு மூச்சில்லாமல் பரந்தாமனின் உடல் கீழே விழுகிறது.வந்த காரியம் முடிந்ததென்று செல்வம் மீண்டும் திருச்சிக்கேச் சென்று விடுகிறான்.

பிறகு ஒரு நாள் பரந்தாமனின் வக்கீலின் ஆட்கள் செல்வத்தைத் தேடி வருகிறார்கள்.அவனுடன் சற்று பேச வேண்டும் என்கிறார்கள்.

"எதுக்கு" என செல்வம் கேட்க,

"பரந்தாமன் தன் அத்தனை சொத்தையும் உங்க பேர்ல எழுதி வெச்சிருக்காரு"

(புதிய தூண்டில் கதைகள் நிறைவு பெறுகிறது).

அனைத்துக் கதைகளிலுமே சுஜாதாவின் இறுதி கட்ட வசனங்கள் 'Top Notch'.

Friday, May 24, 2013

படித்ததில் பிடித்தது - வானம் வசப்படும்



நீண்ட இடைவெளிக்குப்  பிறகு இந்தத் தலைப்பில் ஒரு பதிவிட நேரம் கிடைத்திருக்கிறது.தமிழில் வரலாற்றுப் புதினங்கள் என்றாலே, பொன்னியின் செல்வனும் சிவகாமியின் சபதமும் தான் நம் நினைவுக்கு வரும்.சற்று வாசிக்கும்பழக்கம் அதிகமுள்ளவர்களுக்கு உடையார்,பார்த்திபன் கனவு, நந்திபுரத்து நாயகி,வேங்கையின் மைந்தன்,காந்தளூர் வசந்தகுமாரன் கதை ஏன் சமீபத்திய காவல் கோட்டமும் கூட நினைவுக்கு வரும்.ஆனால் இந்த நாவலைப் பற்றி நம் தலைமுறையினர் அதிகம் பேசி கேட்டதில்லை. இது புதுச்சேரி வரலாற்றைக் கூறும் கதை.புதுச்சேரி எப்படி உருவானது எங்கிருந்து உருவானது போன்ற தகவல்களைத் தேட வேண்டாம்.இக்கதையின் நிகழ்காலம் 1740-50 என்று வைத்துக்கொள்ளுங்கள் என்று ஆசிரியர் முன்னுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறார்.யார் அந்த ஆசிரியர்?இங்கு குறிப்பிடப்படும் நாவல் எது? வானம் வசப்படும் - சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல் , ஆசிரியர் - திரு.பிரபஞ்சன்.

இந்த நாவலை ஏறத்தாழ இரண்டு மாதங்கள் படித்தேன்.656 பக்கங்கள் தான் என்றாலும் கூட நாவலின் சுவையும், நேரமின்மையும் ஒன்று சேர இந்த நாவலின் கடைசிப் பக்கத்தைப் படிக்க இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.முன்பே குறிப்பிட்டது போல இது புதுச்சேரியைப் பற்றிய கதை.துய்ப்ளெக்ஸ் என்கிற குவர்னர்(கவர்னர் - புத்தகத்தில் குவர்னர் என்றே குறிப்பிடுகிறார்கள்) மற்றும் அவருடைய துபாஷ் ஆனந்தரங்கப்பிள்ளை தான் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்.இந்த ஆனந்தரங்கப்பிள்ளை அவர்களின் தனிச்சிறப்பு என்னவென்றால் தம் கால அரசியல்,சமூக நிகழ்ச்சிகளை 'டயரியாக'ச் சுமார் 25 ஆண்டு காலத்துக்கு எழுதி வைத்துச் சென்றதே.இதை ஆசிரியரே முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.அந்த டயரிக் குறிப்புக்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது தான் இந்த 'வானம் வசப்படும்'.

மற்றொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் பெறுகிறது - அது தான் துய்ப்ளெக்ஸின் மனைவி ழான்(Jeanne).ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்துவதற்கு முன்பே நம் மொத்த நாட்டையும் பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர முயன்றவன் தான் இந்த துய்ப்ளெக்ஸ். தன்னுடைய இந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்று விட்டான். ஆனால் துய்ப்ளெக்ஸின் இந்த வெற்றிகளில் பெரும்பங்கு வகித்தவர் ஆனந்தரங்கப்பிள்ளை தான்.இப்படி குறிப்பிடுவதால் தேச பக்தர்கள் உடனடியாக பிள்ளை மீது வெறுப்பு கொள்ள வேண்டாம்.புதுச்சேரியை நிர்வகித்தக் குவர்னர்களுள் துய்ப்ளெக்சுடன் தான் ஆனந்தரங்கருக்கு நல்ல பழக்கம்.ஆகையால் குவர்னர் துய்ப்ளெக்ஸ் என்றாலும் கூட,ஆட்சிபுரிந்தவர் என்னவோ ஆனந்தரங்கர் என்னும் அளவுக்கு இருந்தது ஊருக்குள் அவருடைய  செல்வாக்கு.

வறுமையில் வாடிய பல தமிழ்ப்புலவர்களுக்கு ஏன் புலவர்களுக்கு என்றே கூறலாம்(ஏனெனில் ஒரு தெலுங்குக் கவிஞரைப்பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது),வள்ளல் போல வாரி வழங்கியவர். சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தது போல,ஆனந்தரங்கர், ராமகவிராயர்,கஸ்துரி ரங்கையன் என பலருக்கும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.ராமகவிராயர் பற்றிய நிகழ்ச்சியைப் படிக்கும்போது மனம் நெகிழ்ந்துத் தான் போனது.இல்லாமை நோயால் சுரம் வந்து படுத்துக் கிடக்கும் மனைவி,அடுத்த வேளைக்குச் சாப்பிட நல்ல சாப்பாடு இல்லை.ஆனந்தரங்கர் உதவுவார் என்கிற  எதிர்பார்ப்புடன் கிளம்புகிறார்.பிள்ளை வீட்டில் இல்லை என அறிந்ததும் அவரிருக்கும் பாக்குமண்டிக்கே உடனே புறப்படுகிறார்.சாப்பாட்டு நேரத்தில் வந்த விருந்தாளிக்கு போஜனம் பண்ணுவிக்காமல் அனுப்புவது மகாபாவமென பிள்ளை சொல்லுவார் என அவர் காரியஸ்தர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் பாக்குமண்டிக்குச் சென்று விடுகிறார்.அங்கு பிள்ளையைப் பற்றிக் கவிபாடி தான் வந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். அவருடைய நிலையறிந்த பிள்ளை அவர்கள் வேஷ்டி,சால்வைகள்,ஆயிரம் வராகன் காசு,மோதிரம் என அனைத்தும் கொடுத்து சகல மரியாதையுடன் அனுப்பி வைக்கிறார்.

இப்படிப் பல நிகழ்ச்சிகள்,சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.பானுகிரகி என்கிற நாட்டியக்காரி(தேவரடியாள்) கதாபாத்திரத்திற்கும் கணிசமான அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.ஒரு பக்கம் இலக்கியம்,நாட்டியம், ஓரளவு அரசியல் என்றே செல்கிற கதையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவது என்னவோ ழான் அவர்களின் கதாபாத்திரம் தான்.துய்ப்ளெக்ஸ் ஓரளவு நியாயவானகத்தான் இருக்கிறார்.சற்று பணத்துக்கு விலை போய்விடக்கூடிய மனிதர் தான் என்றாலும் கூட,அவர் மனைவியைக் காட்டிலும் எவ்வளவோ மேலானவர் என்றே சொல்ல வைக்கிறது ழான் அவர்களின் கதாபாத்திரம்.

குவர்னருக்கோ ரங்கப்பர்(ஆனந்தரங்கர்) என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் ழானுக்கோ ரங்கப்பர் மீது எப்போதும் வெறுப்பு.காரணம் ரங்கப்பர் ஒரு தமிழர்(இந்து).

ழான் பல இடங்களில் ரங்கப்பரையும் இந்துக்களையும் காபிரிகள் என்றே குறிப்பிடுகிறார். காபிரிகள் என்பது ஒரு விதமான இழிசொல்.அதனாலேயே அவள் ஆனந்தரங்கருக்கு முன்பு துபாஷாக இருந்த பெத்ரோ கனகராய முதலியாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாள்.பெத்ரோ கனகராய முதலியார் ஒரு கிறிஸ்துவர்.ஆனந்தரங்கருக்கு முன்பே துபாஷ் பதவி வகித்தவர்.அவர் இறந்த பிறகே பிள்ளை துபாஷாக்கப்பட்டார்.துபாஷ் என்பது கவர்னருக்கு அடுத்தபடியான பதவி.கனகராய முதலியார் கிறிஸ்துவர் ஆனாலும் கூட,அவர் பெயரிலுள்ள முதலியார் மறையவில்லை.மதமாற்றம் தீண்டாமையையே ஒழிப்பதில்லை என்னும்போது ஜாதியை எங்கே ஒழிக்கப் போகிறது.ரங்கப்பருக்கு எதிராகப் பல போலி புகார்களும் குவர்னரிடம் கொடுக்கிறாள்.நமது குவர்னருக்கு ஆயிரம் தான் ரங்கப்பர் மீது பிரியமிருந்தாலும் அவர் ஒரு பொண்டாட்டித் தாசன்.மனைவியின் பேச்சைக் கேட்டு பல முறை ரங்கப்பரிடம் கோபப்பட்டுள்ளார்,ஆனால் ரங்கப்பரோ மிகவும் சாமார்த்தியசாலி.மிகத்திறமையான சமாதனங்களைச் சொல்லி குவர்னருக்கு உண்மையைப் புரிய வைத்துவிடுவார்.

ழான் பற்றி ஒரு குறிப்பு - ழானுக்கு துப்ளெக்ஸ் இரண்டாம் கணவர் தான். அவள் ஏற்கனவே வேன்சான் என்பவனை மணந்து பதினொரு குழந்தைகள்  பெற்றவள்.வேன்சான் இறந்த பிறகு ழானை துப்ளெக்ஸ் மணக்கிறார். வேன்சான் இறப்பதற்கு முன்பிருந்தே இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள்.இறந்த பிறகு மணக்கிறார்கள்.இது பிரான்ஸ் நாட்டில் சாதாரணம்.

ழான் ஒரு மதவெறி பிடித்தவள்.அவளின் முக்கிய நோக்கம் புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலை இடித்துத் தள்ளுவதும் இயன்ற அளவு இந்துக்களைக் கிறிஸ்துவர்களாக மாற்றுவதும் தான்.ரங்கப்பர் குவர்னர் துறைக்கு மிக நெருக்கமாக இருப்பதால் அவளால் நினைத்த அளவிற்கு காய் நகர்த்த முடியவில்லை.

இந்த நாவலில் மிக முக்கியமான சில சம்பவங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். சம்பாக் கோவிலில்(Church) ஒரு தடுப்புச் சுவர் கட்டப்பட்டிருந்தது.சுவற்றுக்கு ஒரு புறம் தாழ்த்தப்பட்டவர்கள்,மறுபுறம் மற்ற சாதி கிறிஸ்துவர்கள் உட்கார்ந்து பூஜை கேட்க வேண்டும்.ஒரு முறை தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் சம்பாக் கோயிலின் பெரிய பாதிரியாரிடம் இது குறித்து புகார் சொல்கிறார்கள். 'எங்களை ஏன் தனிமைப்படுத்துகிரீர்கள்' என கேட்கிறார்கள்.இதையடுத்து பெரிய பாதிரியார் அந்தத் தடுப்புச் சுவரை இடித்து விடுகிறார்.மறுநாள் முதல் சாதி வேறுபாடின்றி அனைவரும் ஒருசேர அமர்ந்து பூஜை கேட்க வேண்டிவருகிறது..இதனால் மற்ற சாதி கிறிஸ்துவர்கள் கடுங்கோபம் அடைகிறார்கள். இதில் ஞானராசு முதலியார் என்பவருக்கும் பெரிய பாதிரியாருக்கும் நடக்கும் வாக்குவாதம்,மதம் மாறினாலும் சாதி மாறாது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

உதாரணத்திற்கு,

"எம்மைப் பறையர் உடன் உட்காரப் பண்ணிவிட்டீரே!எம்மைக் கேவலம் பண்ணிப் போட்டீரே, எம்மைப் பூமிக்குக் கீழே எம் மரியாதைகளைப் புதைத்துப் போட்டீரே.." - என்கிறான் முதலி.

பெரிய பாதிரியாரின் இந்தச் செய்கைக்குப் பின் மேல் சாதி கிறிஸ்துவர்கள் என சொல்லப்படுபவர்கள் தேவாலயத்திற்குள் நுழைய மறுக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சமமாகத் தாங்கள் நடத்தப்படுவதை கேவலமாக எண்ணுகிறார்கள்.

மற்றொரு சம்பவமும் குறிப்பிடப்பட்டுள்ளது.சம்பாக் கோயில் பாதிரியார் கடுதே என்பவன் அருகாமையிலிருக்கும் வேதபுரீஸ்வரர் கோயிலுக்குள் நரகலை போட்டு விடுகிறான்.இது குறித்து வேதபுரீஸ்வரர் கோயில் குருக்களும் மற்ற இந்துக்களும் குவர்னரிடம் புகார் செய்கிறார்கள். இதை விசாரிக்க குவர்னர் ஒரு படையை அனுப்புகிறார்.அந்தப் படையில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பராதி என்பவன்,கிறிஸ்துவ மத வெறியன், பாதிரியாருக்கு ஆதரவாக வழக்கை முடித்துவிடலாம் எனக் கூற,படையில் இருந்த முசே மேர் என்பவர் இதை ஏற்க மறுத்து,குவர்னர் நியாயமான விசாரணை மேற்கொள்ளவே தம்மை அனுப்பினார் எனக் கூறி பாதிரியாரின் குற்றத்தைக் குவர்னருக்கு விளக்குகிறார்.

மீண்டும் ஒரு முறை இதே கடுதே,ஒரு இந்துவின் மீது தவறான தகவல்களுடன் புகார் செய்கிறார்.குவர்னருக்கு பெத்திசியோம்(பெட்டிஷன்) எழுதுகிறார்.இதை விசாரித்தக் குவர்னர் துப்ளெக்ஸ், இந்தப் பாதிரி மீது கடுங்கோபம் கொள்கிறார்.இவரைப் பற்றி பிரான்ஸ் ராஜாவுக்கும்,மன்னர் நீடூழி வாழ்க(ஒவ்வொரு முறை பிரான்ஸ் மன்னரைப் பற்றி குறிப்பிடும்போதும் மன்னர் நீடூழி வாழ்க என்று அனைத்துக் கதாபாத்திரங்களும் சொல்கின்றன), இவருக்கு மேலே இருக்கப்பட்ட சாமியாருக்கும் புகார் எழுதப் போவதாகச் சொல்கிறார் துய்ப்ளெக்ஸ்.

துய்ப்ளெக்சைப் பொறுத்த வரை வியாபாரத்தையும் மதத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவே மாட்டார்.அவர் தெளிவான சிந்தனையுடவர்.முதலில் தாங்கள் இங்கே வந்தது வியாபாரத்திற்காகத் தானே தவிர மதம் மாற்றம் செய்ய அல்ல என்பதை வலியுறுத்துகிறார்.இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே மதச்சண்டை வந்தால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்திருந்தார் துய்ப்ளெக்ஸ்.ஆனால் அவரும் இந்துக்களை அஞ்ஞானிகள் என்றே கருதுகிறார்,அவர்களை ஞான மார்க்கத்துக்கு(கிறிஸ்துவ மதத்துக்கு) அழைத்து வர வேண்டும் என்பது அவர்களின் கடமை என்றும் கருதுகிறார்.இது கிறிஸ்துவ மிஷினரிகளுக்கே உண்டான மனோபாவம்.

இவர் இப்படி இருக்க,இவரின் மனைவி ழான் வந்து காரியத்தைக் கெடுக்கிறார். பாதிரிக்கு வக்காலத்து வாங்கி அவர் பக்கம் பேசத் தொடங்குகிறார்.ழான் எப்போது இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்தாளோ அப்போதே துய்ப்ளெக்ஸ் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகிறார். மனைவிக்கு எதிராக எதுவும் செய்யும் திராணி அவருக்கு இல்லை.ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல அவர் ஒரு பொண்டாட்டித் தாசன்.

இந்தக் கதையில் அனைவரின் வெறுப்பையும் சம்பாதிக்கும் கதாபாத்திரம் என்றால் அது ழான் தான்.துபாஷ் பதவி தருவதற்காக அன்னபூரண ஐயன் என்பவனிடம் லஞ்சம் பெற்றுக் கொள்வது,செல்வந்தர் வீடுகளுக்கு அடியாட்களை அனுப்பி அநியாயமாகப் பெரும் தொகை வசூலிக்கச் செய்வது , இந்துக்களையும் அவர்களது வழிபாட்டு முறையையும் கேலி பேசுவது, மதமாற்றம் செய்வது,ஆனந்தரங்கப்பிள்ளை மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்துவது என இவள் செய்யும் அனைத்துமே ஆத்திரமூட்டும் காரியங்கள் தான்.

அதிகாலையில் எழுந்திருக்கும் சேஷு பண்டிதன்,உடம்பில் பூணூல்  இல்லையே என்று பதறுகிறான்.பிறகு தான்,தான் ஞானாதிக்கப் பண்டிதனானது நினைவுக்கு வருகிறது.பணத்திற்கு ஆசைப்பட்டு மதம் மாறிய பண்டிதர் கிறிஸ்தவ மதத்தில் சந்தி(சந்தியாவந்தனம்) பண்ண வேண்டுமா என சந்தேகம் கேட்க,அதெல்லாம் இங்கே அவசியமில்லை என விளக்கம் தருகிறார் ஜீவப்பிரகாசமாக மாறிய சிவப்பிரகாச ஐயர்.இந்த மத மாற்றங்கள் ழான் முன்னிலையில் நடக்கின்றன.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைகிறது மற்றொரு சம்பவம்.

குவர்னர் சற்று அசந்த நேரம் பார்த்து அவரிடம் தந்திரமாகப் பேசி, மூளைச்சலவை செய்து, வேதபுரீஸ்வரர் கோயிலை இடிக்க உத்தரவு பிறப்பிக்க வைத்துவிடுகிறாள்.ஈவு இரக்கமின்றி இந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் வேதபுரீஸ்வரர் கோயில் இடிக்கப்படுகிறது. தமிழர்களின்(இந்துக்கள்) தலைவர் போல திகழ்ந்த ஆனந்தரங்கரிடம் இந்துக்கள் முறையிடுகிறார்கள்.

"நாட்டார்களிலே எல்லோரும் ஒரே குரலாய் எதிர்க்கிற போது,குவர்னர் துரை எப்படிக் கோயிலை இடிக்கிறது?" - என்றார் ஒருவர்.ஆனால் உண்மை என்னவெனில் இவர்கள் ஒரே குரலாய் சொல்லவில்லை.இவர்களில் சிலர் பணத்துக்கும் பதவிக்கும் விலைபோய்விட்டார்கள்.அன்னபூர்ண ஐயனுக்குத் துபாஷ் பதவி கொடுக்கும்பட்சத்தில் கோயிலை இடிக்கச் சம்மதம் என்று சிலர் தெரிவித்துவிடுகிரார்கள்.இந்துக்களின் இது போன்ற ஒற்றுமையின்மையே அயல்நாட்டு துஷ்ட சக்திகளுக்கு துணிச்சலைத் தருகிறது.இங்கு இந்துக்களுக்கு மத்தியிலிருக்கும் வேற்றுமைகளைப் பயன்படுத்தி இந்த அயல்நாட்டு சக்திகள் பல விஷயங்களை சாதித்து விட்டன.

இப்போதைய கூடங்குளம் போராட்டம் கூட கிறிஸ்தவ மிஷினரிகளின் தூண்டுதலின் பேரில் தான் நடக்கிறது என்கிற குற்றச்சாட்டு இல்லாமல் இல்லை.

வேதபுரீஸ்வரர் கோயிலை இடிக்கும்பொழுது அருகே இருக்கும் ஒரு மசூதியையும் இடித்துவிடுமாறு துய்ப்ளெக்ஸ் உத்தரவு பிறப்பிக்கிறார்.அப்போது துலுக்கர் படைத் தலைவன் அப்துல் ரகுமான் குவர்னரைச் சந்தித்து மசூதியை இடிக்கும் உத்தரவை திரும்பப்பெறாவிட்டால் அவர்களிடம் இருக்கும் கடைசித் துலுக்கன் உயிரோடு இருக்கும் வரைக்கும், மசூதியின் ஒரு செங்கல் விழுவதையும் அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறான்.அப்துல் ரகுமானின் மன உறுதியும் நெஞ்சுரமும் குவர்னர் துரையை அச்சமூட்டவே, உத்தரவைத் திரும்பப் பெறுகிறார்.

இந்துக்களிடையே நிலவும் ஒற்றுமையின்மையை இந்தக் காட்சிகள் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஒரு முறை குவர்னர் ஆனந்தரங்கரிடம் கேட்கிறார்,(இந்த உரையாடல் கோயில் இடிப்பின் போது நிகழ்ந்தது அல்ல)

"இந்தத் தேசத்தை மிகச் சுலபமாக வெற்றிகொண்டு விடலாம் என்று சொல்லும்"

அதற்கு ஆனந்தரங்கர் இவ்வாறு பதிலுரைக்கிறார்,

"இந்தத் தேசமென்ன பிரபுவே, ஒற்றுமையோ,இனத்தான் என்கிற பாசமோ, பழகியவன் என்கிற சிநேகிதாமோ இல்லாத மக்களை ஆயுதம் கொண்டல்ல, ஒற்றை விரலால் அடக்கி விடலாமே"

இது போல இந்த நாவலில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. ஆனந்தரங்கரும் அவருடைய நண்பர் நாகாபரணப் பண்டிதரும் நாட்டு நடப்பை அலசும் விதம் யதார்த்தம்.ஆனந்தரங்கரின் மகள் பாப்பாள் திருமணத்திற்குப் பின் இறந்து போவது நெஞ்சை உருக்குவதாகத் தான் இருந்தது.ழான் தன் மகளின் கள்ளக்காதலுக்கு உதவுவது சற்று நகைச்சுவையாக இருந்தாலும், அயல்நாட்டவர்கள் கலாச்சாரம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்துகிறது.

நாவலின் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் ராபர்ட் கிளைவ்.கிளைவ் பற்றி மிகச்சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.இந்தக் கிளைவ் என்பவனும் துய்ப்ளெக்ஸ் என்பவனும் நம் நாட்டை அடிமைப் படுத்த வந்த அய்யோக்கியர்கள் என்ற நினைப்பை சற்று ஓரம் கட்டிவிட்டு பார்த்தால், இவர்களின் கதாபாத்திரங்களை ரசிக்கலாம். துய்ப்ளெக்ஸ் கவர்னராக இருக்கலாம்,ஆனால் கதையில் கதாநாயகன்(ஹீரோ) அந்தஸ்து என்னவோ ஆனந்தரங்கருக்குத் தான்.25 ஆண்டுகால அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை டயரியில் எழுதி நம் வரலாற்றை நாம் அறியும் வண்ணம் செய்த ஆனந்தரங்கருக்கு ஹீரோ அந்தஸ்து கொடுக்கப்படத்தான் வேண்டும்.

'துரோகிகளே,துரோகிகளை விரும்பார்' போன்ற வசனங்களைக் கொண்ட இந்த நாவலுக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்ததில் எனக்கு ஒரு ஆச்சரியமும் இல்லை.அந்த காலத்துத் தமிழை நாவலில்  அப்படியே கொண்டுவந்திருக்கிறார் ஆசிரியர் பிரபஞ்சன். சாகித்ய அகாதமி கொடுக்கப்பட்டதற்கு அதுவும் ஒரு முக்கியக்காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இஸ்லாமியர்களைப் பிள்ளை, துலுக்கர்கள் என்றே குறிப்பிடுகிறார்.இந்த நாவலைப் பற்றி எழுதுவதால் அதில் குறிப்பிட்டுள்ளது போலவே சில சொற்களை நானும் பயன்படுத்தியிருக்கிறேன்.உதாரணத்திற்கு - குவர்னர்,துலுக்கர் போன்ற சொற்கள்.மற்றொரு குறிப்பு - நமது ஆனந்தரங்கரின் பெயரில் புதுச்சேரியில் ஒரு வீதி உள்ளது. ரங்கப்பிள்ளை தெரு - இது புதுச்சேரி நேரு வீதிக்கு அடுத்த வீதி.தேவனாம்பட்டினம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.கடலூர் கடற்கரையை(சில்வர் பீச்)த் தான் தேவனாம்பட்டினம் குறிக்கிறது.இப்போதும் கூட இந்தப் பெயர் உள்ளது . தனிப்பட்ட முறையில்,எனக்கு,புதுச்சேரியிலும் கடலூரிலும் வாழ்ந்த அனுபவம் உண்டு.ஆகையால் இந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்களை மிக எளிதாகக் கற்பனை செய்து பார்க்க முடிந்தது.

இந்தப் பதிவு சற்று நீளமானப் பதிவுத் தான்.656 பக்க நாவலைப் பற்றி எழுத வேண்டுமென்றால் சற்று நீளமாகத் தான் எழுத வேண்டியுள்ளது.அரை மணி நேரம் இந்தப் பதிவை படிப்பதற்காக ஒதுக்குங்கள்.முழுவதும் படித்தப் பிறகு வானம் வசப்படும் படிக்க வேண்டுமென்கிற ஆசை எழலாம்.ஒருவேளை அப்படி எழவில்லையென்றால் கூட, ஒரு சிறப்பான நாவலைப் பற்றியத் தகவல்கள் அறிந்து கொண்டோம் என்கிற திருப்தி ஏற்படலாம்.
 

Monday, February 25, 2013

படித்ததில் பிடித்தது - விடியலைத் தேடி



இந்த படித்ததில் பிடித்தது பகுதியில் வாரமொருமுறை பதிய வேண்டுமென நினைத்திருந்தேன்.ஆனால் நேரம் ஒதுக்க இயலவில்லை.இந்தப் பதிவில் நான் அலச இருக்கும் புத்தகம் 'விடியலைத் தேடி'.இது எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்கள் எழுதிய நாவல்.

படிப்பதற்கு முன், பெண் எழுத்தாளர் என்பதால் பெண்களைப் பற்றிய 'புரட்சிகரமான' கருத்துக்கள் ஏதேனும் கூறுவாரோ என்று பயந்தேன்.ஆனால் இவர் வேறு விதமான எழுத்தாளர்.ஆங்கிலத்தில் சொன்னால் இவர் ஒரு 'optimistic writer'.இப்போது விடியலைத் தேடி புறப்படுவோம்.

கதை அனுபமா என்கிற பெண்ணைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான்.அனுபமா தான் இந்த கதையின் கதாநாயகி.சிறு வயதிலேயே ஒரு விபத்தில் தாய் தந்தையரை இழந்து தவித்த அனுபமாவை வளர்த்த பெருமை அவளுடைய சித்தி தனபாக்கியத்தையும் சித்தப்பாவையுமேச் சேரும்.இந்த தனபாக்கியம் ஒரு தன பைத்தியம்.இவள் அனுபமாவை வளர்க்க முன் வந்ததே கூட அவளுடைய அப்பாவின் ஆயுள் காப்பீட்டுப் பணத்துக்காகத் தான்.இவர்கள் அனுபமாவை ஒரு அடிமை போல நடத்துகிறார்கள்.அனைத்து வேலைகளையும் அனுபமா தான் செய்ய வேண்டும்.செய்யத் தவறினால் அடி,உதை ஏன் சூடு வைக்கவும் கூட சித்தி தயங்க மாட்டாள்.இதையும் சித்தப்பன் கேட்க வக்கில்லாதவன்.அவன் ஒரு பொண்டாட்டி தாசன்.

ஆனால் அனுபமாவோ சாந்தஸ்வரூபி.அனைவரையும் அனுசரித்து செல்லும் குணம் கொண்டவள்.தனபாக்கியமும் அவள் கணவனும் செய்த ஒரே உருப்படியான காரியம் அனுபமாவை படிக்க வைத்தது தான்.இப்படித் தொடங்கும் கதையை வைத்து இதுவும் தொலைகாட்சிகளில் வரும் மெகா தொடர் ரகம் என்று ஒதுக்கிவிடுவீர்களேயானால் நீங்கள் ஒரு சிறப்பான நாவலை ஒதுக்குகிறீர்கள் என்றே அர்த்தம்.சித்தி தன்னை ஒரு மாபெரும் பணக்காரருக்கு இரண்டாந்தாரமாய் மணமுடித்துத் தர முடிவு செய்துவிடுகிறாள்.அனுபமா மறுத்தால் சூடு போட்டுவிடுவேன் என மிரட்டி அடக்கி விடுகிறாள்.நரக வேதனையை சமாளிக்க முடியாமல்,தன்னையே ஒரு ஆறு மாத காலமாய் சுற்றி வந்த ரகுபதி என்பவனோடு,அனுபமா, இரவோடு இரவாக வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள்.இந்த இருளிலிருந்து விடுபட ரகுபதியுடன் ஒரு புதிய விடியலைத் தேடி புறப்படும் அனுபமா ஏகப்பட்ட திருப்பங்களைச் சந்திக்கிறாள்.அந்தத் திருப்பங்களை ஒருவித படபடப்போடும், விறுவிறுப்பாகவும் சற்று திகிலாகவும் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

அவள் சந்திக்கும் திருப்பங்களில் முக்கியமானது ரகுபதி பெண்களை விற்கும் ஒரு புரோக்கர் என்பது.இந்த ரகுபதிக்கு அந்த மணவாளப் பெருமாளே(சித்தி பார்த்து வைத்த கிழட்டு மாப்பிள்ளை) தேவலையோ என்று நினைக்கும் அளவிற்கு நொந்து போகும் அனுபமா,ஒடிந்து போய் உட்கார்ந்து விடவில்லை. ரகுபதி மற்றும் அவன் கூட்டாளிகளிடமிருந்து அதே லாட்ஜில் தங்கி இருக்கும் ஒருவனின் உதவியால் தப்பி விடுகிறாள்.அவளுக்கு உதவுபவனின் பெயர் தான் வித்யாதரன்.இந்த வித்யாதரன் தான் இந்தக் கதையின் நாயகன். ஆசிரியை வித்தியாதரனின் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே அமைத்திருக்கிறார்.

இந்த வித்யாதரன் அனுபமாவிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்ளும் சம்பவங்களை மிக யதார்த்தமாக வடிவமைத்திருக்கிறார்.ஒரு சில நேரங்களில் 'சே என்ன மனிதன் இவன்.அனுபமா போன்ற ஒரு அப்பாவிப் பெண்ணிடம் இத்தனை கடுமை காட்டுகிறானே' என்று கூட தோன்றியது. ஆனால் அப்பாவிப் பெண்களில் கூட சுயநலவாதிகளும் ஆபத்தானவர்களும்   உண்டு என்பது வித்தியாதரனின் கருத்து.அதில் தவறு காண நமக்கு உரிமை இல்லை.வித்யாதரன் அனுபமாவை அவளுடைய சித்தி சித்தப்பாவிடமிருந்தும் கூட காப்பாற்றுகிறான்.அத்தனையும் ஒரு காரியமாகத்தான்.

இது தான் கதையின் மிக சுவாரஸ்யமான கட்டம்.அனுபமாவை தன காதலியாக நடிக்க வைக்கிறான்.அதற்கு பெரும் பணம் வழங்குவதாகவும் உறுதியளிக்கிறான். இது வெறும் நடிப்பு தான், இப்போது வித்யாதரன் முதலாளி அனுபமா அவனிடம் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவள். பார்க்கப்போவதோ காதலி வேலை.இவை அனைத்தும் மரணப்படுக்கையில் கிடக்கும் வித்தியாதரனின் தாயாரை மகிழ்விக்கவே. வித்யாதரனும் கூட வெளிநாட்டிலிருந்த பொது அனுராகா என்ற பெண்ணை காதலித்து ஏமாந்து போகிறான்.தன தாயாரின் உடல் நிலையை கவனிப்பதற்காக இந்திய வருமாறு அழைத்த போது,தனக்கு ஆயா வேலை செய்ய விருப்பமில்லை என்று அனுராகா மறுத்துவிடுகிறாள். இதனாலேயே வித்யாதரனுக்கு பெண் வர்கத்தின் மீதே வெறுப்பு.அவனைப் பொறுத்த வரையில் உலகிலேயே ஒரு பெண் தான் போற்றுதளுக்குரியவள். அது அவனுடைய தாயார் சிவகாமி அம்மாள் மட்டுமே. இப்போது அந்த அனுராகாவாகத் தான் நம் அனுபமா நடிக்கப் போகிறாள்.

கதையின் முக்கிய கதாபாத்திரமே இந்த சிவகாமி அம்மாள் தான்.அவர் மிகுந்த புத்தி கூர்மை உடையவர்.எழுந்து உட்காரக் கூட சிரமப்படும் நிலையில் இருக்கும் சிவகாமி அம்மாளைப் பார்க்க வித்யாதரனுக்கு ரொம்பவே சங்கடமாக இருந்தது.சிறு வயதிலிருந்தே தாய் தந்தையரை இழந்த அனுபமாவிற்கோ சிவகாமி அம்மாளை ரொம்பவும் பிடித்து விடுகிறது. தான் சம்பளத்திற்கு நடிக்கிறோம் என்பதை மறந்து அனுபமா சிவகாமி அம்மாளை நேசிக்கத் தொடங்கிவிடுகிறாள்.மற்றபடி வித்யாதரனுக்கும் அனுபமாவிற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.ஒருவரையொருவர் மட்டம் தட்டி கொள்ளாத நிமிடங்கள் மிகக் குறைவு,அரிதானவை என்று கூட சொல்லலாம்.

கதை இப்படிச் செல்ல,சிவகாமி அம்மாள் பிடிவாதமாக அனுபமாவை வித்யாதரனுக்குத் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.இதுவும் தற்காலீகமே  என்று நினைத்த அனுபமாவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி சிவகாமி உடல் நிலை பூரண குணமடைந்து விடுகிறது.உண்மையைச் சொல்லிவிடலாம் என்றால் அவர் அதிர்ச்சி எதையும் தாங்க மாட்டார் என்று டாக்டர் எச்சரித்தது நினைவிற்கு வந்தது.இதனிடையில் அனுபமா தன்னையும் அறியாமல் வித்யாதறனைக் காதலிக்கத் தொடங்கி விடுகிறாள்.

அனுபமா உல் மனதில் வித்தியாதரனின் மீது ஒரு வித ஈர்ப்பு இருப்பதை இந்த நாடகத்திற்கு அவள் ஒப்புக்கொள்வதற்கு முன்னரே நமக்கு புரிய வைத்துவிடுகிறார் ஆசிரியை.

"உழைப்பில் எந்தவிதக் கேவலமும் இல்லை என்று நினைத்தது மறந்து, இவன் ரசிக்கும் விதமாய்ப் பெருமையுடன் காட்ட அவளது கைகளில் மென்மையோ தூய்மையான வழுவழுப்போ இல்லையே என்று ஏக்கம் பிறந்தது." - இது போன்றதொரு மனநிலையை நான் சில பெண்களிடம் கவனித்திருக்கிறேன். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்,கதையில் அத்தனை யதார்த்தம் என்று விளக்கத்தான்.

கதையில் மற்றொரு பகீர் திருப்பம்.அனுபமா வித்யாதரன் மேல் கொண்ட காதலை உணர்ந்து நாணும் வேளையில்  தான்,அவள் யாராக நடிக்க வந்தாளோ  அவளே அங்கு வந்து சேர்ந்து விடுகிறாள்.அனுராகாவின் வருகை அனுபமாவை நிலைகுலையச் செய்கிறது.அனுபமாவை அனுராக பாடாய் படுத்துகிறாள்,வீட்டை விட்டு துரத்தவும் முடிவு செய்கிறாள்.இடையில் காணமல் போன இந்தக் கதையின் கெடுமதியாளன்(villain),ரகுபதி மீண்டும் வருகிறான்.அவனும் அனுபமாவிற்கு தொல்லை கொடுக்கிறான்.இதை எல்லாம் சமாளிக்க வேண்டிய வித்யாதரன் எங்கோ காணமல் போக, சிவகாமி அம்மாள் எப்படி இவற்றைச் சமாளிக்கிறார்?அனுபமா என்ன ஆனாள்? அனுராகா என்பவள் உண்மையில் யார்?அவளுடைய பின்புலம் என்ன? ரகுபதி என்ன ஆகிறான் - இவை அனைத்தும் கதையின் இறுதி அத்தியாயங்களில் சுவாரஸ்யமாகக் கூறப்பட்டிருக்கிறது.

அனுபமா அனுராகாவாக மாறி மீண்டும் அனுராகாவாகவே அனுபமாவாகும் காட்சிகளை ஆசிரியை தனக்கே உரிய பாணியில் நகர்த்தியிருக்கிறார்.இந்தக் கதைக்கு ஒரு 'drama touch' இருந்தாலும் கூட,விறுவிறுப்பாக நகர்கிறது.சில வசனங்கள் சுளீரென்று விழுகிறது.

' உன் சித்தி என்றால் உன்னை விட இரு மடங்கு வயது அதிகமிருக்க வேண்டும்.அவளை எதிர்க்க உன் உடம்பில் பலம் இல்லாமல் போவானேன்?திட்டுவாள் கத்துவாள் என்றால் உன்னாலும் அது முடியும் தானே?சுருக்கமாகச் சொல்லப்போனால் நீயும் முதுகெலும்புள்ள மனுஷி தானே?நிமிர்ந்து நிற்பதற்கென்ன?

உன் சித்தியின் சூடுகோலுக்குப் பயந்தா இந்த ரகுபதியுடன் வெளியேறினாய்? ஒன்று இரண்டு சூடு போட்டால் தான் என்ன?அதற்காக இந்த நரகத்திலா விழுவாய்?"  - வித்யாதரன் அனுபமாவிடம் பேசும் வசனங்கள். நாம் அனைவருமே முதுகெலும்பு உள்ளவர்கள் தானே. பிரச்சனைகளைக் கண்டு ஒடுவானேன்?நின்று சமாளிப்பது தானே முறையாகும்.பிரச்சனைகளைக் கண்டு ஓடுவது ஒரு தீர்வாகாது என்பது தான் இந்த வசனத்தின் உள்ளர்த்தம்.

என்னையும் அறியாமல் அனுபமா மீது ஒரு அனுதாபம் ஏற்பட்டது என்பதை மறுக்க இயலாது.வித்யாதரன் மீது சில நேரங்களில் வெறுப்புத் தோன்றினாலும் கூட இந்த வித்தியாதரனின் மனநிலையிலும் நம்மில் பெரும்பாலானோர் சில நாட்களாவது இருந்திருப்போம்.இந்த மனநிலையைக் கடக்காமல் வாழ்வது மிகக் கடினம்.

அனுபமா சித்தியின் கொடுமை தாங்காமல் ஏதோ ஒரு விடியலைத் தேடி ரகுபதி போன்ற காலிப்பையலின் சுயரூபம் தெரியாமல் வீட்டை விட்டு ஓடி விடுகிறாள். ஆனால் இன்று நாட்டில் பல அனுபமாக்கள் கண்ணின் மணியாகக் காக்கும் பெற்றோரை இருளென நினைத்து அரைவேக்காட்டு ரகுபதிகளுடன் பொய்யான விடியலைத் தேடி அலைந்து காலத்தின் ஓட்டத்தில் தொலைந்தே போகிறார்கள்.தங்களுடைய அறியாமையால், தவறான பாதையில் செல்லும் அனுபமாக்களில் சிலரேனும்  இந்தக் கதையைப் படித்து திருந்த வாய்ப்புண்டு.எல்லாப் பெண்களுமே அனுராகாப் போலத்தான் என எண்ணிப் பெண் வர்கத்தை வெறுக்கும் வித்யாதரன்களுக்கு   அனுபமாக்களும் இருக்கிறார்கள் என்பதையும், ரகுபதி போன்ற ஆண் அரக்கர்களும் இருக்கிறார்கள் என்பதையும் இந்தக் கதை  உணர வைக்கும்.

இது போல இந்தக் கதையில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. நான் மேலே விவரித்தது ஒரு சிறு பகுதியைத் தான்.'Feel Good' வகைக் கதைகளின் பிரியர் நீங்களென்றால்,விடியலைத் தேடி உங்களுக்கான நாவல் என்றே சொல்லலாம்.

Tuesday, January 22, 2013

படித்ததில் பிடித்தது - ஸ்ரீரங்கத்து தேவதைகள்




இந்தத் தலைப்பின் முதல் பதிவு சற்று மங்களகரமாகவே இருக்கட்டுமே என்று தான் தேவதைகளுடன் துவங்குகிறேன்.ஸ்ரீரங்கத்து தேவதைகள் என் மதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது.இது கணையாழியில் வாரமொருமுறை என வெளிவந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்(இது செவிவழிச் செய்தி தான்).நீங்கள் இந்தப்  புத்தகத்தைப் படிக்காதவரானால்  தலைப்பைக் கண்டதும் ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஏனென்றால் இந்தப் புத்தகத்தின் பெயரை ஒவ்வொரு முறை நண்பர்களிடம் சொல்லும்போதும் ஒவ்வொரு விதமான பதிலைச் சொன்னார்கள். ஆனால் ஒருவர் கூட இது என்ன மாதிரியான புத்தகம் என்று சரியாகச் சொல்லவில்லை.தலைப்பில் தேவதைகள் இருப்பதால் தான் இத்தனை குழப்பம்.சிலர் இது ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அழகான பெண்களைப் பற்றிய புத்தகம் என்றார்கள்,சிலர் இது ஏதோ பக்திப் புத்தகம் என்றார்கள்.மேலும் சிலர் இது ஒரு விதமான 'பலானா' புத்தகமா என்று கூட கேட்டார்கள்.

சுஜாதா ஸ்ரீரங்கத்தில் படித்து வளர்ந்தவர்.அங்கு தன் வாழ்வில் நடந்த சில சுவையான சம்பவங்களை கற்பனை கலந்து ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்கிற தலைப்பில் எழுதினார்.இந்த புத்தகத்தில் 14 சிறுகதைகள் உள்ளன.ஒவ்வொன்றும் தன் வாழ்வில் நடந்த சம்பவம் போலத்தான் விவரித்துள்ளார்.கற்பனையும் கலந்தே எழுதியுள்ளதாகக்  குறிப்பிட்டுள்ளார். தன் வாழ்வில் தான் சந்தித்த சில மனிதர்களைத் தான் இந்தப் புத்தகத்தில் தேவதைகள் எனக் குறிப்பிடுகிறார் .

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கதை.அனைத்திலும் பொதுவான கதாபாத்திரம் ரங்கராஜன்(சுஜாதா அவர்களின் இயற்பெயர்).கதைகள் அனைத்தும் தான் விவரிப்பது போல எழுதி இருக்கிறார்.இது ஒரு குட்டி சுயசரிதை என்றே கூட சொல்லலாம்.ரங்கராஜனைத் தவிர மற்றொரு கதாபாத்திரமும் பெரும்பாலான கதைகளில் இடம்பெற்றுள்ளது.அது தான் ஆசிரியர் அவர்கள் தன் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் ரங்கு கடை.ரங்கன் இந்தக் கடைவைத்ததே தன் மனைவியின் தொல்லையிலிருந்து தப்பிக்கத்தானாம்.மேலோட்டமாக பார்த்தால் இந்தக் கதாபாத்திரத்திற்கு பெரும் முக்கியத்துவம் ஏதும் இருப்பதாகத் தெரியாது.ஆனால் இந்த புத்தகத்தைப் படிக்கும் பொழுது நானும் கூட ரங்கு கடையில் அரட்டை அடித்ததைப் போலவே உணர்ந்தேன்.

சுஜாதாவின் எழுத்துக்களில் எனக்கு மிகப்பிடித்த அம்சம் என்றால் யதார்த்தம். இந்தப் புத்தகத்திலேயே கூட ராவிரா(ஆர்.விஜயராகவன்), திண்ணா(திருநாராயணன்), வரதன்,கேவி,ரங்கு,கிருஷ்ணமூர்த்தி போன்ற கதாபாத்திரங்களை யதார்த்ததிற்குச் சிறந்த உதாரணமாகக் கூறலாம். இது போன்ற கதாபாத்திரங்களை நானே கூட சந்தித்ததுண்டு. ராவிரா என்பவர் கெமிஸ்ட்ரி வாத்தியார்.ரங்கு கடையில் பேசும் ஒரு 'intellectual'.மாபெரும் அறிவாளியான அவர், மனைவியின் துரோகத்தால் மரணமடைவது போல அந்தக் கதையின் முடிவு அமைந்திருக்கும்.வரதன் மத்திம வயதினன். வரதனிடம் சிறுவர்களுக்கும்,சிறுவர்களிடம் வரதனுக்கும் ஒரு கவர்ச்சி உண்டு என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.இப்படி சிலரை நானும் கூட திண்டிவனத்தில் இருந்த போது சந்தித்திருக்கிறேன்.இது போன்ற கதைகளில் கதாபாத்திரங்கள் வாசகர்களின் அருகிலேயே இருப்பது போல உணரவைப்பதே ஒரு கதாசிரியரின் மாபெரும் வெற்றி.

இதில் என்னை மிகவும் பாதித்தக் கதைகள் என்றால், ஏறக்குறைய ஜீனியஸ், பேப்பரில் பேர்,திண்ணா,ராவிரா,காதல் கடிதம்,மறு.இந்தப் புத்தகத்தின் அனைத்துக் கதைகளிலும் முடிவு அத்தனை சிறப்பாக இருக்கும். உதாரணத்திற்கு திண்ணா என்கிற கதை.திண்ணா சிறுவயதில்  பிரபந்தங்களைக் கற்று ராம கிருஷ்ணா மடத்தில் உபன்யாசமெல்லாம் செய்யும் அளவிற்கு வளர்ந்து விடுகிறான்.அவனை எதிர்கால சின்மயானந்தா என்கிற அளவிற்கு வர்ணிக்கிறார்.ஆனால் கதையின் முடிவில் திண்ணா ஒரு புரடக்ஷன மேனேஜராகிறான்."ஜீன்ஸ் அணிந்த பெண்ணுடன் அன்யோன்யமாக ஜோக் அடித்துக்கொண்டிருந்த திண்ணாவின் சாதனையை 'வீழ்ச்சி' என்று என்னால் சொல்ல முடியவில்லை" என முடித்திருப்பார்.

ஏறக்குறைய ஜீனியஸ் தலைப்பு முதற்கொண்டு அனைத்துமே அற்புதம். 'புல்ஸுட் மாப்பிள்ளை' துரைசாமி என்பவர் காற்றில் கடிகாரம் ஓடும் என்றார். சைக்கிள் சக்கரத்தில் ரேடியோ பாடும் என நம்பினார்.இந்த நம்பிக்கையில் ஊரைச் சுற்றி கடனும் வாங்கி நஷ்டமடைகிறார்.அவர் ஏமாற்று வித்தைக்காரர் அல்ல.ஆனால் அவருடைய கண்டுபிடிப்புகள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.விளைவு வீட்டை விற்று விட்டு வெளியூர் சென்று விடுகிறார்.அவர் கண்டுபிடிக்கும் பொருட்களை ஊரில் விற்பனை செய்யும் சேல்ஸ் எக்சிக்யுட்டிவாக அவரிடம் ஆசிரியர் பணியாற்றியதாகக்  குறிப்பிடுகிறார்.கதை நகைச்சுவையாகத் துவங்கினாலும் முடிவு சற்று உருக்கமானதாகவே உணர்கிறேன்.இறுதியில் வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம்  அள்ளிப் போட்டுக்கொண்டுச் செல்ல லால்குடி மாமா என்பவர் வருகிறார்.அப்போது டெல்லியிலிருந்து திரும்பிய ஆசிரியர் புல்ஸுட் துரைசாமியின் உடல்நிலை சரியில்லை என்பதை அறிகிறார். பிறகு பெட்டி போலக்  கீழே கிடந்த ஒரு பொருளை எடுத்துச்  சாவி கொடுத்துப் பார்க்கிறார்.அது அற்புதமாக டிங் டிங் என்று 'எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே' பாடியது.
"
'ஜீனியஸ் சார்' - என்றேன்

'அல்மோஸ்ட் எ ஜீனியஸ்' என்றார் லால்குடி மாமா.

வியப்புடன் மறுபடி சாவி கொடுக்க விரக் என்று அதனுள் இருந்த பாகங்கள் தெறித்து விழுந்தன." - இது தான் ஏறக்குறைய ஜீனியஸ்.

தஞ்சாவூர் அணியுடன் ஆடிய ஒரு கிரிக்கெட் மேட்ச் பற்றி விவரித்திருப்பார். கேவி தான் அந்தக் கதையின் ஹீரோ.93 ரன்கள் எடுத்து தஞ்சாவூர் அணியை வீழ்த்த முக்கியக் காரணமாக இருந்தவர்.சின்னப் பிள்ளைகளுடன் தோற்றதால் தஞ்சாவூர் அணியினர் மறு மேட்சுக்கு அழைத்தார்கள்.

"அந்த மறு மேட்ச் நடக்கவில்லை.எல்லோரும் அதன் பின் சிதறி விட்டோம். சிலர் மணந்து கொண்டோம்.சிலர் இறந்து விட்டோம்.இருபத்தைந்து வருடங்கள் கழித்து சமீபத்தில் ஸ்ரீரங்கம் போயிருந்த போது கேவியைப் பார்த்தேன்.என்னதான் நரைத்த தலையாக இருந்தாலும் கண்களில் பிரகாசம் போகவில்லை.'என்ன இன்னொரு மேட்ச் ஏற்பாடு பண்ணட்டுமா?' என்றான்". நம் வாழ்விலும் இது போன்ற சில கேவிக்களை சந்திக்கத்தான் செய்கிறோம்.இதைப் படிக்கையில் பள்ளி நாட்களில் ஆடிய கிரிக்கெட் மாட்சுகள் தான் என் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன.

ஆசிரியர் மற்றும் ரங்குவைத்  தவிரவும் இரண்டு கதாபாத்திரங்கள் பெரும்பாலான கதைகளில் இடம்பெற்றுள்ளன.ஒன்று அவரின் தங்கை வத்சலா,மற்றொன்று அவரின் பாட்டி.வத்சலாவை விடவும் பாட்டி மனதில் நின்று விடுகிறார்.ஆசிரியரை இத்தனை சிறப்பானவராக வளர்த்ததில் பெரும் பங்கு பாட்டிக்கு உண்டென்றால் மிகையாகாது.காதல் கடிதம் என்கிற கதையில் பாட்டியைப் பற்றி ஆசிரியர் குறிப்பிட்ட விதம் அவருக்கு என் மனதில் நீங்காத இடத்தை கொடுத்து விட்டது.கோபாலன் என்கிற ஆசிரியரின்  நண்பன் ஒருவன் மல்லிகா என்ற பெண்ணுக்கு எழுதிய காதல் கடிதத்தைத் தந்திரமாக ஆசிரியர் மூலமாகவே அவளுக்குக் கொடுத்து விடுகிறான்.

அந்தப் பெண் அதைப் படித்து விட்டு ஆசிரியர் தான் எழுதினார் என நினைத்து அவள் தந்தையிடம் சொல்லிவிடுகிறாள்.அந்தப் பெண்ணின் தந்தை ஆசிரியரைப் பற்றிப் புகார் சொல்ல அவரது வீட்டிற்கு வருகிறார். அப்போதுக் கடிதத்தை வாங்கிப் பார்க்கும் பாட்டி வத்சலாவிடம் கேட்டு இது அவர் கையெழுத்து இல்லையெனக் கூறி வந்தவரை அனுப்பிவிடுகிறார். இந்தப் புகாரை நம்பி எங்கே பாட்டி தம் படிப்பையே நிறுத்திவிடுவாளோ என்றுப் பயந்த ஆசிரியர் நிம்மதியடைகிறார்.

"பல வருஷங்கள் கழித்துப் பாட்டி பாபநாசத்தில் இறந்து போவதற்கு முன் பதினைந்து நாள் கோமாவில் படுத்திருந்தபோது இவளைவிட ஒரு நீதிபதி ஒரு மனோதத்துவக்காரி இருக்க முடியுமா என்று அவள் மேல் கண்ணீர் சிந்தினேன்"

அந்த மல்லிகா என்ன ஆனாள் என்றால்,கோபாலனைக் கல்யாணம் செய்து கொண்டு அதே வீட்டில் வசிக்கிறாள்.

இப்படி ஒவ்வொருக் கதையும் ஒவ்வொரு விதம்.இங்கு நானே சில கதைகளின் முடிவை எழுதிவிட்டேன்.நாமும் நம் வாழ்வில் பல தேவதைகளை சந்திக்கிறோம்.பல ரங்கு கடைகளில் அரட்டை அடிக்கிறோம்.சில மல்லிகாக்களிடம் மாட்டிக் கொள்கிறோம்.நம்மில் கூட சிலர் ஏறக்குறைய ஜீனியஸ் தான்.இந்தப் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்.உங்கள் வாழ்வில் இருக்கும் தேவதைகளை உணரவும் வாய்ப்புக்கள் உண்டு.

படித்ததில் பிடித்தது




நன்றி : விகடன் 



தினமும் பல செய்திகள் நம் கண்ணில் படுகின்றன.நம்மையே அறியாமல் நாம் பல செய்திகளைப்  படித்து விடுவதுண்டு.சிலருக்கு படிப்பதில் பேரார்வம. புத்தகங்களை வாங்கி மலைபோல குவித்து, இரவு பகல் பாராமல் அவற்றைப்  படிப்பதிலேயே முழுக் கவனம் செலுத்துவார்கள்.இவர்கள் ஒரு ரகம்  என்றால்,புத்தகங்களைக் கண்டாலே சில மைல் தூரம் ஓட்டம் பிடிப்பவர்கள் மற்றொரு ரகம்.ஆனால் இந்த இரண்டு பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் செய்திகளை அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளுக்குள் இருக்கத் தான் செய்யும்.புத்தகங்களைக் கண்டால் ஓட்டம் பிடிப்பவர்கள் கூறும் பொதுவான ஒரு காரணம்,'பொறுமையின்மை'.ஒரு நூறு பக்க நாவல் படிக்க வேண்டுமென்றால் குறைந்தது ஒரு மணி நேரமாவது செலவிட வேண்டும்.அப்படியே கடும் முயற்சியால் புத்தகத்தைக் கையில் எடுத்து விட்டாலும்,நமது கவனத்தைச் சிதைப்பதற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட facebook,ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்து விடுகின்றன .

ப்ளாக்(blog) போன்ற சமூக தளங்களைவிடவும் facebookகை உபயோகிப்பவர்களே அதிகம். இதற்கு முக்கிய காரணம், ட்விட்டெரிலொ, facebookகிலோ கருத்துக்கள் சுருக்கமாக பதியப்படுவதே. பல நல்ல தகவல்கள் facebook மூலமாக நம்மை வந்தடைகின்றன.ஆனால் சில தினங்களில் அவை மறைந்து போகின்றன.ப்ளாக்கில்(blog) அப்படி இல்லை. இங்குப்  பதிவுகளைத்  தலைப்புவாரியாகப்  பிரித்து  வைக்கும் வசதி உண்டு. ஆகவே நாம் எப்போதாவது படிக்கும் நல்ல செய்திகளை,சுவையான தகவல்களை  படித்ததுடன் மறந்து விடாமல்,மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் உபயோகமாக இருக்குமெனத் தோன்றியது. உடனே இந்தப் பதிவை எழுதுகிறேன்.

புத்தகங்களிலோ,செய்தித்தாள்களிலோ,அல்லது இணையதளத்திலோ படித்த செய்திகள், தகவல்களைப் பற்றிய  அடியேனின் கருத்துக்களை இந்தப் பகுதியில் பதிவு செய்வதே, என் நோக்கம்.படித்த கதைகளையோ, கட்டுரைகளையோ அல்லது செய்தியையோ அப்படியே பதிவு செய்வதில் எனக்கு ஆர்வமில்லை.படித்தத் தகவலைப் பற்றியக் கருத்துக்களைப் பதிவு செய்தலென்பது,"Copy+Paste"  செய்வதைக் காட்டிலும் சுவையானதாக இருக்குமென்பது என் நம்பிக்கை.

இங்கு பதிந்து விடுவதால் மட்டும் அனைவரும் படித்துவிடுவார்களா என்ன என்ற கேள்வி இந்தப் பதிவை படிக்கும் ஒன்றிரண்டு வாசகர்கள் மனதில் எழுவது புரிந்துகொள்ளக்கூடியதே.மேலும் இந்தப் பகுதியினை தொடர்ந்து புதுப்பிக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துத் தான் பார்க்க வேண்டும். இருப்பினும் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் கூறுவதைப் போல, 'விடா முயற்சி விஸ்வரூப வெற்றி' என்ற நினைப்புடன் இந்தப் பதிவைத் துவங்குகிறேன்.

இந்தப் பகுதியில் வெளியாகும் அத்தனைப் பதிவுகளும் முறையாக ஆங்கிலத்திலும் வெளியிடப்படும்.நமது இந்த தளத்தை பார்வையிடுவது என்னவோ வெகு 'சிலரே'.அதில் பலருக்குத் தமிழ்ப் படிப்பதில் சிரமம். தமிழரல்லாத நண்பர்கள் படித்து பயன்பெற இந்த ஆங்கிலப்பகுதி உதவும்.தமிழைத் தாய்மொழியாகக்கொண்டு தமிழ்ப் படிப்பதே கேவலமென நினைக்கும் துரோகிகளுக்கும் அது உதவுமென்பது சற்று வருந்தத்தக்க விஷயம் தான்.