Sunday, January 29, 2012

மாஸ் மீடியா - 8


மாஸ் மீடியா -8
Start Camera Action


முந்தைய பாகங்களைப் படிக்க இங்கே செல்லவும்(click here)


ரணுக்கு மதுவிலேயே சில மாதங்கள் கடந்தன.ஏறத்தாழ ஒரு மன நோயாளி போல் ஆகிவிட்டான் என்றால் மிகையல்ல.தொடர்ந்து குடிப்பதும் சாப்பிடுவதும் உறங்குவதுமாய் காலங்கழித்ததால் சரண் மிகவும் குண்டாகி விட்டான்.கண்கள் சிவந்திருந்தது.முகத்தில் பல நாட்களாக சவரம் செய்யாத தாடி.தொப்பையும் தொந்தியும் தாடியுமாக பரிதாமகவே காணப்பட்டான் சரண்.வெறுப்பின் உச்சத்துக்கே போனான்.மீண்டும் மது அருந்த பாட்டிலை எடுத்தான்.வாய் வரை பாட்டிலை கொண்டு சென்றவன் வெறி பிடித்தவனை போல் பாட்டிலை தூக்கி வீசினான். சுவற்றில் பட்டு அது சுக்குநூறாகி போனது.என்ன நினைத்தானோ என்னவோ திடீரென வீட்டை விட்டு வெளியேறினான்.தாடி முகத்தை மறைத்திருந்ததாலும் பழைய அழுக்கான உடுப்புகளை உடுத்தி இருந்ததாலும் சரணை மக்கள் எவரும் அடையாளம் காணவில்லை.

பைத்தியக்காரன் போல சென்னை முழுக்க சுற்றினான்.சென்னை அரசு பேருந்தில் ஏறினான்.50 ருபாய் டிக்கெட் வாங்கியவன் அன்று முழுவதும் பல பேருந்துகளில் ஏறினான்.சென்னையின் பல பகுதிகளை சுற்றி சுற்றி வந்தான். தர்மராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய பட போஸ்டர்கள் பல ஒட்டப்பட்டிருந்தன.ஆத்திரத்தில் சிலவற்றை கிழித்தெறிந்தான்.சுற்றி சுற்றி வந்த சரணுக்கு இதுவும் கண்ணில் பட்டது.தி நகர் அருகே உள்ள ஸ்ரீனிவாசா திரயரங்கரத்தின் வாசலில் நின்றிருந்தான்.அங்கே தான் நடித்த 'அத்தை மகள் ஆனந்தி' படம் re-release செய்யப்பட்டிருந்தது. சரண் மனதில் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்ச்சி ஏற்பட்டது.திரையரங்கினுள் சென்றான்.டிக்கெட் வாங்கிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தவனுக்கு பெரும் அதிர்ச்சி.வாயடைத்து நின்றான். அவ்வளவு கூட்டம்.அரங்கம் நிறைந்திருந்தது.

"யோவ் உக்காருய்யா படம் மறைக்குது" - என பின்னாலிருந்து குரல் வர சரண் அமர்ந்தான்.சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த படம் சரணின் கேரீயரிலேயே மிக பிரம்மாண்டமான வெற்றிப் படம்.சரணின் நடிப்புக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.இந்த படத்தின் மாபெரும் வெற்றி சரணுக்கு பட்டி தொட்டி எங்கும் ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகரித்தது.A,B,C என அனைத்து சென்டர்களிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இது.இன்றளவும் இந்த படத்திற்கு ஒரு மரியாதை இருப்பதை இந்த கூட்டத்தை பார்த்த சரண் உணர்ந்தான். நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு சுய நினைவு திரும்பியவனை போல் சிந்திக்க தொடங்கினான்.படத்தை பார்ப்பதில் தனது கவனம் இப்போது செல்லவில்லை.தான் நடித்த இந்த படத்தை தானே நூறு முறை பார்த்திருப்பான் சரண்.அவன் கவனம் முழுவதும் வேறு விஷயத்தில் இருந்தது.எந்தெந்த வசனங்கள்.காட்சிகள்,பாடல்கள் கைதட்டல்கள் பெறுகின்றன? எந்த காட்சியில் பார்வையாளர்கள் அரங்கை விட்டு வெளியே செல்கிறார்கள்?என்ன விதமான 'கமெண்ட்' அடிக்கிறார்கள் என ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்க தொடங்கினான்.

படம் முடிந்து,அரங்கிலிருந்து வெளியே செல்பவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என காது கொடுத்து கேட்க தொடங்கினான்.

"ஏன்னா படம் டா..இது re-releaseன்னு நம்பவே முடியல இல்ல?"

"ஆமாம் டா எப்பா..ஏன்னா கூட்டம்..இவ்வளவு திறமைய வச்சிக்கிட்டு இந்தாளு எங்க டா போனான்..படமே இல்ல.."

"இந்த மாதிரி படம் நடிக்க சொன்னா மாஸ் மண்ணாங்கட்டின்னு போயி கடுபெதிட்டான் யா.."

"ஆனா ஒன்னு மட்டும் சொல்றன்,இந்த சரண்,மாஸ் படம் அது இதுன்னு போகாம இந்த மாதிரி படம் நடிச்சான்னு மட்டும் வை,அவன் தாண்டா டாப்பு.."

"திரும்ப வருவார் டா எங்க ஹீரோ..கெத்து காட்ட தான் போறாரு நீயும் பாக்க தான் போற"

இது போன்ற கருத்து தான் பலரிடமும் நிலவியது.இவற்றை கேட்க கேட்க சரண் உணர்ச்சிவசபட்டான்.தன்னை அறியாமலேயே கண் கலங்கி விட்டான்.

"இவன் திரும்ப வந்துட்டாலும்..போடா..பிரபாவதி ரூபாவதின்னு  எவ கூட என்ன பண்ணிட்டிருக்கானோ.. அவன் டைம் எல்லாம் முடிஞ்சி போச்சு"

இப்படி சிலர் ஏளனம் பேசவும் தவறவில்லை.இவை அனைத்தையும் கவனித்து விட்டு சரண் மீண்டும் பேருந்தில் ஏறினான்.மெரினா கடற்கரையில் தனியே நடக்க தொடங்கினான்.அன்று மக்கள் நடமாட்டம் அதிகமில்லை. திடீரென மணலில் அமர்ந்து கடலையே உற்று நோக்க தொடங்கினான். அலைகளையே கவனமாக பார்த்து கொண்டிருந்தான். அவன் பார்வையில் ஏதோ ஒரு அர்த்தம் இருந்தது.ஏதோ ஒரு 'pattern'ஐ கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான். அலைகள் உயர எழும்பின பின்னர் விழுந்தன.மீண்டும் உயர எழும்பின மீண்டும் விழுந்தன.மீண்டும் எழுந்தன மீண்டும் விழுந்தன..

சரண் எழுந்தான்.தன்னை தானே ஒரு முறை நோட்டம் விட்டு கொண்டான்.வீட்டைச் சென்றடைந்த பின் நிம்மதியாக உறங்கினான்.

மறு நாள் காலை வழக்கம் போல சரணை எழுப்ப வந்த விவேக் அதிர்ச்சி அடைந்தான்.படுக்கையில் சரணை காணவில்லை.அலமாரியில் இருந்த மது பாட்டில்கள் மொத்தமும் மாயமாய் மறைந்திருந்ததை கண்டு வியப்படைந்தான்.நேற்று ஆத்திரத்தில் சரண்,  மது பாட்டில்களை உடைத்தது நினைவிற்கு வர விவேக்கிற்கு உள்ளூர ஒரு பயம் பற்றி கொண்டது.ஒரு வேளை சரண் ஏதேனும் விபரீதமான முடிவை மேற்கொண்டு விட்டானோ என. ஆனால் விவேக்கிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

முகத்தை முழுச் சவரம் செய்திருந்த சரண் வந்து சேர்ந்தான்.ஜிம்மிற்கு சென்று கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளான் என்பதை விவேக் உணர்ந்தான்.இது உண்மையில் விவேக்கிற்கு அதிர்ச்சி தான். ஆனால் இன்ப அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.

"பாஸ் You are just awesome today..Full shave, இவ்வளவு காலையில exercise,பாட்டில் எதுவும் காணோம்.. பார்க்கிறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு" - விவேக்

"விவேக் இது தான் என்னோட பிளான்..இன்னும் ஒரு மாசத்துல இந்த தொப்பைய முழுசா குறைக்கணம். உடம்புக்கு full fitness கொண்டு வரணம்.அப்புறம் ஆரம்பிக்கலாம் நம்மளோட செகண்ட் இன்னிங்க்ச"

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி தெளிவாக பேசிய சரணை கண்டதில் ஏக மகிழ்ச்சி அடைந்தான் விவேக். 'நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது' என குடுகுடுப்பைக்காரன் பேசும் வசனம் தொலைகாட்சியில் தற்செயலாக ஒளிபரப்பாக,விவேக்,பக்குவமாக புன்னகைத்து விட்டு நகர்ந்தான்.


                                                       ***************************



ண்ணப்பன் தயாரிக்கும் படத்தை இயக்க போவது ஸ்ரீதர் தான் என்பது உறுதியாகி விட்டது.படத்திற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டாகி விட்டது.படத்திற்கு பிரம்மாண்டமான பூஜையும் போடப்பட்டு விட்டது. தான் இன்று ஒரு இயக்குனராக பெரிதும் உதவிய காதர் பாய்,நடிகை ஜோயித்தா மற்றும் ஸ்ரீதரின் குருநாதர் சுகுந்தன் என அனைவரும் பூஜையில் கலந்துகொண்டனர்.இந்த ஜோயித்தாவை பார்த்த வாசுவிற்கு வேதாளம் மீண்டும் முருங்க மரம் ஏறிய கதையாக மனதிற்குள் ஆபாச எண்ணங்கள் ஓட தொடங்கின."பேசாம படத்துக்கு இவளை ஹீரோயனா select பண்ண்யிருக்கலாம்..ஆயிரம் சொல்லு செம்ம கட்டை டா இவ..சரி பரவாயில்லை இப்போ select பண்ணியிருக்கிற ஹீரோயினும் அதுக்கு பொருத்தமாத் தான் இருப்பா" - மனதிற்குள் நினைத்து கொண்ட வாசு ஜோயித்தாவை பார்த்து பெருமூச்சு விட்டான்.ஜோயித்தாவோ வாசுவை கண்டுகொள்ளாமல் ஸ்ரீதருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்பினாள்.

படத்தின் கதை கண்ணப்பனுக்கு பிடித்து விட்டது. வாசுவுக்கும் இந்த கதையை விளக்கி விட்டான் ஸ்ரீதர்.ஆனால் வாசுவோ ஸ்ரீதர் சொன்ன கதையையோ அல்லது கதையை சொன்ன ஸ்ரீதரை வெகுவாக ரசிக்கவில்லை.இதை ஸ்ரீதரும் கவனிக்கத் தவறவில்லை.இவற்றை விட ஸ்ரீதருக்கு எரிச்சலூட்டிய விஷயம் என்னவென்றால் தான் சொன்ன கதையை கேட்டு அந்த கதையில் வாசு சொன்ன மாற்றங்கள் தான். கதைக்கு சற்றும் சம்மந்தமே இல்லாமல் கதாநாயகியுடன் முத்த காட்சிகள்,படுக்கையறை காட்சிகள்,கதாநாயகியுடன் ஒரு மிக நெருக்கமான மசாலா பாடல் என அனைத்தையும் சேர்க்க வேண்டுமென வற்புறுத்தியது ஸ்ரீதருக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது.தான் சொல்லும் பெண்ணைத்தான் கதாநாயகியாக்க வேண்டுமென திட்டவட்டமாக கூறி விட்டான் வாசு.கண்ணப்பனும் அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை.இவர்கள் இருவரின் 'எதிர்பார்ப்புகளை' அனைத்து விதத்திலும் 'பூர்த்தி' செய்திருந்த அந்த கதாநாயகியை மாற்ற வேண்டுமென ஸ்ரீதர் சொன்னால் உடனடியாக மாற்றி விடுவார்கள்.கதாநாயகியை அல்ல,படத்தின் டைரக்டரை. மிகுந்த ஆர்வத்துடன் கதை சொல்ல வந்த ஸ்ரீதர் ஏமாற்றத்துடன் தான் திரும்பி வந்தான்.

சுவாரஸ்யமாக ஏதோ புத்தகங்களை புரட்டி கொண்டிருந்த காதர் பாயிடம் நடந்தவற்றை எல்லாம் மிகுந்த வேதனையோடு சொல்லி முடித்தான் ஸ்ரீதர்.

"தம்பி இவ்வளவு நாள் சந்திச்சது சோதனை இல்லை..இது தான் ஆரம்பம்..இன்னும் நீ நிறைய பார்க்க வேண்டி இருக்கும்"

"பாய்,இந்த ஹீரோ கம்மினாட்டி தன்னோட ஆசையை எல்லாம் தீர்த்துக்கனம்னு என் கதையை கண்ணா பின்னான்னு மாத்த சொல்றான் பாய்..இவன் சொல்றபடி செஞ்சா என் கதை 10% தான் இருக்கும், பாக்கி 90% கதை அந்த வாசுவோட கதையா தான் இருக்கும்.."

"நீ ஒன்னும் prove பண்ண டைரக்டர் இல்லையேப்பா.."

"அதுக்காக?"

"அதுக்காக நீ சில compromises பண்ண வேண்டி இருக்கும்..என்னை பத்தி உனக்கு தெரியாத ஒரு விஷயத்தை சொல்றன் கேளு..உன்னை மாதிரி தான் நானும் இங்க வந்தேன்..டைரக்டராகனோம்,சாதிக்கனம்னு தான் கிளம்பி வந்தேன்..இப்படி ஒரு ஹீரோ கேட்டதுக்கு ஒத்துழைக்க மாட்டேன்னு சொன்னதோட விளைவு தான் இன்னைக்கு வெறும் துணை நடிகர்கள் ஏஜண்டாவே இருக்கேன்..வாய்ப்பு வர்றப்போ பயன்படுத்திக்கோ"

"ஆனா பாய் அந்தாளு சொல்றதெல்லாம் எப்படி...?" - என இழுத்த ஸ்ரீதருக்கு அறிவுரை சொல்ல தொடங்கினார் காதர்.

"அவன் சொல்றதெல்லாம் சேர்த்தா என்ன?உன் கதை வெறும் 10% தான் வருதுன்னு சொன்னியே..அதுல கவனம் செலுத்து..பெரிய ஹீரோ படம்..நல்ல பப்ளிசிட்டி இருக்கும்..ஒரு ஹிட் கொடுத்துட்டா போதும்..நாளைக்கி நீ தான் டாப்..இல்லைன்னு அடம் பிடிச்சா நேத்து எப்படி ஒரு காதரோ இன்னைக்கி அப்படி ஒரு ஸ்ரீதர்னு கதை முடிஞ்சிடும்" - என காதர் பாய் சொன்ன அறிவுரையை கேட்ட ஸ்ரீதர்,ஓரளவு convince ஆனான்.


                                                       ***************************


 ன் படத்தில் ஒரு விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நடிகை தேடிக்கொண்டிருந்தான் ஸ்ரீதர்.ஸ்ரீதரின் எதிர்பார்ப்பு என்னவென்றால் வெறும் சிவந்த தோல் பெண்ணாக இருந்தால் போதாது.சற்று குண்டாக, அதே சமயம் சற்று அழகாகவும் வயது குறைவாகவும் இருக்க வேண்டும்.முக்கியமாக இதுவரை படங்களில் அறியப்படாத  நடிகையாக இருக்க வேண்டும் ஏனெனில் ஸ்ரீதரின் கதையில் இந்த கதாபாத்திரத்துக்கு ஒரு தனி முக்கியத்துவமுண்டு. நடிக்க சான்ஸ் கேட்டு விண்ணப்பம் அனுப்பியிருந்த ஒரு சில பெண்களின் ஸ்டில்ஸை(stills) பார்த்தான்.தன் எதிர்பார்ப்புக்கேற்ற பெண் கிடைக்கவில்லை. ப்ரொடக்ஷன் மேனேஜர் உதவியுடன் சான்ஸ் கேட்டு காத்திருக்கும் பெண்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்றான் ஸ்ரீதர்.

அங்கே சிவப்பு நிற சேலையை அறையும் குறையுமாக உடுத்தி இருந்த ஒரு பெண்ணை கண்டான்.சென்னை தமிழின் பொன்னான வார்த்தைகளில் அர்ச்சனை செய்து கொண்டிருந்தால் அந்த பெண்.

"அய்யே கசுமாலம் எப்டி பொது பாத்தியா..பையில மொத்தமா பத்து ரூவா இல்ல,இது மொகறைக்கெல்லாம் பொம்பள சுகம் கேக்குது..ஈத்தர நாயிங்க கண்டவன் காசுல குச்சிட்டு எவ கிடைப்பான்னு கொயுத்து போயி அலையறானுங்க.. துத்தேறி நாரப்பய மொவன்..."

"இந்த பொண்ண நடிக்க வைச்சா வசனம் எழுதிற வேலை கூட மிச்சம் போலே" - என எண்ணிய ஸ்ரீதர் மனதில் ஏதோ ஒரு குழப்பம் தோன்றியது.அந்த பெண்ணை அருகில் நெருங்க நெருங்க ஸ்ரீதருக்கு குழப்பம் அதிகமானது..முந்தானை விலகி முழங்கால் தெரியுமளவு புடவையை தூக்கி கட்டியிருந்த அந்த பெண் தலைவிரி கோலமாக நின்றதை கண்டு ஸ்ரீதர் திகைத்து போய் நின்றான்.

"அட..யார்பா நீ...அப்டி பாக்குற..சட்ட பேண்டு கூலிங் க்ளாசு எல்லாம் போட்டுகினு ஷோக்கா கீறியே..ஈரோவா நடிக்க போறியா" - என கேட்ட அந்த பெண் பாக்கு போட்டு துப்பினாள்.

"நீ..நீங்க?" - என இழுத்தான் ஸ்ரீதர்

"அட இன்னாயா வேணும்..சொல்லி தோழா அத்த வுட்டு இப்டி இஸ்துனுக்கீறியே"

"உன்னை நான் பார்த்திருக்கன்..'அத்தை மகள் ஆனந்தி' பட ஷூட்டிங் ஸ்பாட்ல பார்த்திருக்கேன்..நீ நீ  நடிக்க சான்ஸ் கேட்டு வந்த ராணி தானே?"

இதை கேட்ட அந்த பெண் சற்று நிலைகுலைந்து போனாள்.பிறகு பதிலளிக்க தொடங்கினாள்.

"அது அப்போ நைனா..இப்போ நான் ராத்திரில மட்டும் தான் ராணி.."

"நீ எப்படி இப்படி ஆனே ராணி?உன்னோட ஆல்பத்தை நீ அன்னைக்கு தவற விட்டுட்டு போய்ட்ட..உன்னோட அந்த அப்பாவித்தனமான முகமும் முழியும் இன்னும் கண்ணிலேயே இருக்கு எனக்கு..நான் துணை நடிகனா இருந்தப்போ உன்னை பத்தி ஒரு ரெண்டு மூணு தடவை விசாரிச்சிருக்கேன்..but கண்டுபிடிக்க முடியல..ஏன் இப்படி ஆய்ட்ட?" - திடீரென ராணியை இந்த கோலத்தில் கண்ட ஸ்ரீதர் ஏதோ ஒரு குழப்பத்திலேயே கேள்வி கேட்டான்.

இந்த நான்கு வருடங்களில் தன்னிடம் இந்த கேள்வியை ஒருவர் கூட கேட்டதில்லை.ஸ்ரீதர் உண்மையான அக்கறையுடன்  இப்படி கேட்கவே தன்னையறியாமல் கண் கலங்கி விட்டாள் ராணி.நடந்ததெல்லாம் ஒரு சில நிமிடங்கள் ராணியின் மனத்திரையில் ஓடின.சினிமா ஆசையில் அப்பாவின் பேச்சை மீறி யாரோ ஒரு மாமா பையலின் பேச்சை கேட்டு வீட்டை விட்டு வெளியேறிய அன்று பிடித்தது இந்த தரித்திரம். ஸ்க்ரீன் டெஸ்ட் என்கிற பெயரில் அன்று கண்ணப்பன் செய்த அட்டூழியங்கள் ராணியின் நினைவிற்கு வந்தன.

"அதாவது குட்டி..உன் பேரென்ன சொன்ன,அஆன் ராணி..நீ அழகா இருக்க ஆனா நீ ஹீரோயின் ஆகனமுன்னா இன்னும் நிறைய கத்துக்கணம்"  - என கூறி இடையில் கை வைத்த அன்றே கண்ணப்பன் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை கொடுத்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்குமா? "நீ என்னை கவனிச்சிகிட்டன்னு வை உன்னை நான் கவனிச்சுக்குவன்" - என தன்னையும் அணைத்து விளக்கையும் அணைத்த அன்றே தன் வாழ்க்கையும் இருட்டாகிவிட்டதை எண்ணிய போது இப்போதும் கூட ராணியின் உள்ளம் பதறியது.இவை அனைத்தையும் ஸ்ரீதரிடம் சொல்லி முடித்தாள்.

"இவ்வளவு ஆனதுக்கப்புறமும் அவன் உனக்கு சான்ஸ் தரலையா?நீ போய் பாத்தியா அந்தாளை?"

"பாக்காம என்ன..போனதுக்குத்தான் அந்த கெழவன்,'நீ செஞ்ச வேலைக்கி நேத்திக்கே உனக்கு சம்பளம் குடுத்துட்டனே இன்னும் என்னன்னு' நக்கலா பேசி அனுப்சிட்டான்..

"போலீஸ்ல  complain பண்ண வேண்டியது தானே?"

"போலீசா..அட இன்னாபா நீ இம்மாம் பெர்சா வளந்துக்கிற..கொயந்தயாட்டும் பேசறியே..இங்க முக்காவாசி போலீஸ்காரனுங்க நம்ம customer தான்"

இதை கேட்ட ஸ்ரீதருக்கு ஆத்திரம் பொங்கியது..அதை கவனித்த ராணி,

"நீ எதுக்குய்யா டென்ஷன் ஆயினுக்கீர..எல்லாம் விதி..ஒழுங்கா அப்பா பேச்ச கேட்டு காலேஜ்ல படிச்சிருந்தா இந்நேரம் B.Ed படிச்சிருப்பேன்..இப்போ என் பொயப்பு இப்படி ஆய்போச்சி.."

"நீ ஏன் திரும்ப வீட்டுக்கு போல?"

"போவாம என்ன..அதுக்குள்ள எவனோ ஒரு ஊடுகொளுத்தி 'உன் பொண்ணு அந்த மாமா பைய சலீமோட ஓடி போயிட்டா'ன்னு எங்கப்பனாண்ட வத்தி வச்சிட்டான்..அந்தாளு ஒரே பேச்சா சொல்லிட்டான்,சினிமா படத்துல வர்ற மாதிரி.. "உன்ன நாங்க தல முழுகி ஒரு வாரம் ஆச்சு"ன்னு சொல்லிட்டான்..எங்க சித்தி மூதேவி ஒன்னு போதுமே,
"இந்த வீட்ல இன்னொரு படிக்கிற பொண்ணு இருக்கா.. அவ வாழ்க்கையையும் கெடுத்திராதே..இனிமே இந்த வீட்டு பக்கம் வந்துடாதே"ன்னு ஒரே போடா போட்டாளே பாக்கலாம்.."

"சரி ஒரு தபா நடந்துர்ச்சு,இனிமே என்ன நடந்தாலும் சரி,எவனாச்சு புடிச்சு எப்டியாச்சு ஹீரோயினி ஆய்டலாம்னு பார்த்தேன்..ஏன் ஆட்டமெல்லாம் பலிக்காம போச்சு..அதுக்கெல்லாம் ராசி வேணும்யா..அழகா இருந்தா மட்டும் பத்தாது.." - என சற்று உணர்ச்சி வசப்பட்டு கலங்கிய ராணி,திடீரென சுதாரித்து கொண்டு பேசலானாள்,

"என்ன பெத்தவன் கூட இம்புட்டு அக்கறையா பேசினதில்ல..நீ ஒருத்தன் தான் பேசியிருக்க..ஆமா நீ யாரு,இன்னா matteru எங்க வந்துக்கீற?"

"இல்லை என் படத்திலே ஒரு characterல  நடிக்க ஒரு பொண்ணு வேணும்..இங்க சான்ஸ் கேட்டு வர்ற பொண்ணுங்க தங்கியிருக்கிறதா ப்ரொடக்ஷன் மேனேஜர் சொன்னார்..அதான் வந்தேன்.."

"ஹ்ம்ம்..நீயாச்சு நடிக்க வைய்யா..ஸ்க்ரீன் டெஸ்ட் எடுக்கிறேன்னு இன்னொரு பொண்ணு வாழ்க்கைய நாசமாக்கிராத.."

"ராணி இப்போவும் படத்திலே நடிக்கிற ஆசையிருக்கா உனக்கு?"

வெறியோடு தேடிய போது கிடைக்காத சந்தர்ப்பம்,வாழ்க்கையே திசை மாறி போன பின் கிடைத்தென்ன பயன் என நினைத்து கொண்டால் ராணி.ஆனாலும் நடிகையாகி விடடால் ஒரு சில வசதிகள் உண்டென்பதை உணர்ந்திராமல் இல்லை ராணி.அவள் உல் மனத்திலும் நடிகையாக வேண்டுமென்ற ஆசையும் அடியோடு அழிந்து விடவில்லை..

"இன்னாய்யா டமாஸ் பண்றியா"

"இல்லை நிச்சயம் உனக்கு என் படத்திலே நான் வாய்ப்பு தர்றேன்..ஆனா.."

"ஆனா இன்னாய்யா?"

"ஆனா 2 கண்டிஷன்..உனக்கு என்னோட அடுத்த படத்திலே தான் வாய்ப்பு தருவேன்..அதுக்குள்ள நீ இந்த தொழிலை நிறுத்தனம்"

"அப்போ சோத்துக்கு நா இன்னா செய்றதாம்..சோகா சொல்றியே தொயில நிறுத்துன்னு"

"ஏன் ஊருலகத்திலே வேற பொழப்பே இல்லையா என்ன?நீ இதுக்கு சம்மதிச்சா என்னோட அடுத்த படத்திலே உனக்கு நிச்சயம் ஒரு part உண்டு"

"சரி வாத்தியாரே..try பண்றேன்..இதெல்லாம் அம்மாம் சீக்கிரம் உட முடியாது..ஆனா கஷ்ட பட்டா சாதிச்சிடலாம்னு வச்சிக்கோ..ஒரு கேள்வி.."

"என்ன?"

"இந்த படத்திலே ஏன்னா வேசத்துக்குயா ஆள் தேடினிக்கீற?"

"Prostitute"

தேடி வந்த கதாபாத்திரம் கூட விலை மாது கதாபாத்திரமாகத் தான் வந்ததை எண்ணி சற்றே நொந்து கொண்டாலும், அவளுக்கு ஸ்ரீதரின் வார்த்தை நம்பிக்கயூட்டும்படியாக இருந்தது.

(தொடரும்...)  

No comments: