ராஜு முருகனின் வட்டியும் முதலும் படித்து முடித்து விட்டேன். 504 பக்கங்கள் தான் என்றாலும், இந்தப் புத்தகத்தை சுமார் மூன்று மாதங்கள் படித்தேன். காரணம்,ஒவ்வொரு தொடரையும் படித்து முடித்த பின்பு, மனத்திரையில் சில காட்சிகள் ஓடின. Time Machine என்று சொல்லப்படும் கால இயந்திரம் என்றாவது ஒரு நாள் நிஜமாகிவிடாதா என்ற ஏக்கம் எனக்கு எப்போதுமே உண்டு. பள்ளி நாட்களிலிருந்தே எனக்கு இந்த ஆசை இருந்தது. எனக்கு வரலாறு, இதிகாசம் போன்றவற்றில் நிறைய ஈடுபாடு உண்டு. ராமாயணம், மகாபாரதம், முகலாய படையெடுப்பு, இந்திய சுதந்திர போராட்டம் போன்றவை நடைபெற்ற காலத்துக்கு ஒரு முறையேனும் சென்று விட வேண்டும் என்று பள்ளி நாட்களில் நினைத்ததுண்டு. சிவகாமியின் சபதமோ, பொன்னியின் செல்வனோ உடையரோ படிக்கும் போது, பல்லவர்களையும் சோழர்களையும் ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம். ஆனால் வட்டியும் முதலும் படிக்கும் பொழுது கால இயந்திரம் நிஜமாகி விட்டது போல ஒரு உணர்வு. கடந்த காலத்திற்கு பயணம் செய்த ஒரு திருப்தி.
ராஜு முருகன் குக்கூ மற்றும் ஜோக்கர் படங்களை இயக்கியவர்,அதனால் இப்போது மிகப் பிரபலம். நான் இந்த புத்தகத்தை வாசிக்கத் தொடங்கும் முன் அவர் திரைப்படங்களை இயக்கிய விபரம் எனக்குத் தெரியாது. சுமார் 200 பக்கங்கள் படித்தப் பிறகு தான் ஜோக்கர் படத்தின் இயக்குனர் இவர் என்று தெரிந்து கொண்டேன். படம் வெளியாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் தெரிந்து கொண்டேன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, நோட்டுப் புத்தகத்தில் தமிழ் எழுதினேன். வட்டியும் முதலும் பற்றி சிறு குறிப்புகள் எடுத்துக் கொண்டேன். ஒரு அளவுக்கு மேல் குறிப்புகள் எடுக்க முடியவில்லை, காரணம் இந்தப் புத்தகம் அத்தனை அனுபவங்களைக் கொண்டது. நான் இதில் ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிக்கும் போதும் எண்ணி எண்ணி வியந்தது இது தான் - எப்படி இத்தனை மனிதர்களை பற்றி இவரால் நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறது?
ஒவ்வொரு காட்சியும் நமக்கு ஒவ்வொரு உணர்வை ஏற்படுத்தும். அதை எல்லோரும் வார்த்தைகளால் விவரித்து முடியாது. ராஜு முருகன் போன்ற ஒரு சிலரால் தான் முடியும். உதாரணத்திற்கு சாலையில் tube light உடைத்துக் கொள்ளும் பெரியவரையும் அவர் பேரனையும் தினமும் கடந்து செல்கிறோம். நம்மில் எத்தனை பேர் அவர்களை பார்த்துப் பரிதாபப் பட்டிருக்கிறோம். ஒரு வேளை அவர்களைப் பற்றி சிந்தித்தோமே ஆனால் கூட, அந்த வேதனையை விவரித்து விட முடியுமா என்ன? ராஜு முருகன் விவரிக்கிறார்.
இந்தப் புத்தகத்தில், நகைச்சுவைக்குக் குறை இல்லை. தேர்தலைப் போட்டு அரசியலை வாங்குவோம் என்ற அத்தியாயத்தில் தன்னுடைய தாத்தா, திமுகவின் பிரபல தலைமைக் கழக பேச்சாளர், நன்னிலம் நடராஜன் பற்றி குறிப்பிடுகிறார். ஒவ்வொரு முறையும் தாத்தா புல்லெட்டில் வரும் போது, ஓர் அலுமினிய வாளியை ஆத்தாவிடம் கொடுக்கச் சொல்லி கொடுப்பாராம். "வாலியைத் திறந்து பார்த்த போது பாலிதீன் கவர்,அல்வா,வாழை இலை மல்லிப்பூ பண்டல். அத்தனை ஆண்டுகாலத் திராவிடக் கட்சிகளின் அரசியலை எவ்வளவு சூசகமாக அந்த வாளிக்குள் அடக்கிவிட்டார் தாத்தா. அரிசி..மல்லிப்பூ..அல்வா!"(பக்கம் 75 ).
இதில் ராஜு முருகன் பெண்களைப் பற்றி சில அத்தியாயங்களில் விவரிக்கிறார், ஆங்காங்கே அரசியல்(இடது சாரி சிந்தனையாளர் அல்லவா), கடவுள் பக்தி(இவர் கடவுள் பக்தியுள்ள இடது சாரி சிந்தனையாளர் :-) ), நகைச்சுவை எனப் பல விஷயங்களைப் பற்றி எழுதினாலும், சில கட்டுரைகளைப் படிக்கும் பொழுது மனம் சொல்ல முடியாத வேதனைக்கு ஆளாகிறது.
உதாரணமாக ஒரு நல்ல படைப்புக்கான வாசிப்பு, வீதிக்கு வராத முகங்கள், பெண்களுக்கு கணம் கணமும் ரணம் போன்ற கட்டுரைகளைச் சொல்லலாம். இல்லை இல்லை, பல கட்டுரைகளிலும் சில சம்பவங்களையும் மனிதர்களை பற்றியும் படிக்கும் பொழுது கண் கலங்குவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஈழ எழுத்தாளர் எஸ்.பொ.அய்யா, தன் சுயசரிதையை சொல்லச் சொல்ல படி எடுத்துரைக்கிறார் திரு.யுகபாரதி அவர்களும் நமது ராஜு முருகனும். வீட்டில் இருந்த உறவுகளை ராணுவம் கொன்றதைப் பற்றிச் சொன்னபோது கூட கண் கலங்காத எஸ்.பொ.அய்யாவின் கண்களில், யாழ் நூலகம் எரிக்கப்பட்டதைப் பற்றி சொல்லும் போது கண்ணீர் பெருகி வழிந்தது. 'கண் முன்னாள் எங்கள் வரலாறு எரிக்கப்பட்டதைப் பார்த்தவர்கள் நாங்கள்' என்றாராம். நம் வரலாறு நம் கண்முன்னே அழிவதைக் காட்டிலும் உலகில் ஒரு கொடுமை உண்டோ?
அவருடைய நண்பர் அருளானந்தம் திடீரென ஒரு நாள் இறந்து போனாராம். அவர் இறந்த போது, வீடு முழுக்க வெறும் புத்தகங்கள் தான் நிறைந்து கடந்தனவாம்.இறுதிச் செலவிற்கே இவர்கள் தான் பணம் திரட்டித் தந்தார்களாம். உறவுகள் அத்தனை பேரும் திட்டித் தீர்த்திருக்கிறார்கள். வாசிக்கும் பழக்கம் கொண்டவர்களைப் பைத்தியக்காரன் என்று பட்டம் கட்டும் ஒரு தலைமுறை இன்று உருவாகிவிட்டது.
மயிலாப்பூரில் புத்தகங்கள் விற்கும் ஆழ்வார் சொன்ன வார்த்தைகள் "இத்தனை வருஷமா இந்த புத்தகங்களோடு வாழ்ந்துட்டேன். எனக்கு ஒண்ணுமே கிடைக்கலைங்கறதை நினைச்சி நான் கவலைப்படலை. எனக்குப் பிறகு இதெல்லாம் இன்னொரு தலைமுறைக்குப் போய்ச் சேரணும்.. அதை யார் செய்வாங்கங்கிறதுதான் என் கவலை". இந்த இணையம், சமூக வலைத்தளங்கள் தோன்றுவதற்கு முன்பு, புத்தகங்களுக்கு இருந்த முக்கியத்துவம் இப்போது குறைந்து வருவதாகத் தான் தோன்றுகிறது. வாசிக்கும் பழக்கம் ஒன்று தான், பண்பட்ட தலைமுறையை உருவாக்கும்.
பெண்களை பற்றி மிக உயர்வாக எழுதியதற்காகவே ராஜு முருகனுக்கு ரசிகனாக மாறி விடலாம். அதிலும் 'சதயம்' படத்தைப் பற்றி எழுதும் போது, அவர் குறிப்பிடும் மோகன்லால் பேசும் வசனம் 'ஒவ்வொரு ஆணிடமும் ஒரு விஷக் கொடுக்கு ஒளிஞ்சிருக்கு!", படிக்கும் போதே,ராஜு முருகன் குறிப்பிடுவது போல,மனம் ஏதோ ஒரு தொந்தரவுக்கு உள்ளாக்குகிறது. இன்று திரையரங்குகளில் 'பசங்க படர கஷ்டத்துக்குக் காரணமே பொண்ணுங்க தான்' என்ற வசனத்துக்குக் கிடைக்கும் கை தட்டல்கள் தான் அவர் குறிப்பிடும் விஷக் கொடுக்குப் போல.
நடனமாடும் பெண் நித்யாவைப் பற்றி இந்த புத்தகத்தில் படித்துவிட்டு பல இரவுகள் உறக்கமின்றி தவித்தேன். அந்தப் பெண் டைட் ஜீன்சும் டாப்ஸுமாக ஸ்கூட்டியில் போவாள். நைட்டியில் தண்ணி எடுக்க வருவாள். வேறு வேறு பையன்களை ஸ்கூட்டி பின்னால் வைத்துக் கொண்டு போயிருக்கிறாள். பால்கனியில் சத்தமாகப் பேசிக் சிரித்திருக்கிறாள். இவளைப் பற்றி அக்கம் பக்கத்தினர் அனைவரும் சொன்ன ஒரே கருத்து "அது ஒரு மாரி பாரட்டிப்பா".
நித்யாவிற்கு ஒரு அண்ணன்,இரண்டு தங்கச்சிகள் மற்றும் அம்மா. அண்ணன் டைவர்ஸ் ஆனவன், இவர்களோடே தங்கி விட்டான்.இவள் தான் குடும்பத்தையேப் பார்த்துக் கொள்கிறாள்.
இதே நித்யாவை நம் ராஜு முருகன் ஏழெட்டு வருடங்கள் கழித்துச் சந்திக்கிறார். "எக்கச்சக்கமாகக் குண்டடித்து ஆளே உருமாறி அடையாளமே தெரியவில்லை" - என்கிறார். தன்னை சரியாகக் கவனித்துக் கொள்ள தவறியதால் தைராயிடு பிரச்சனை ஏற்பட்டுவிட்டதாகக் கூறி இருக்கிறாள். இரண்டு தங்கைகளுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விட்டாள். "நீ கல்யாணம் பண்ணிக்கலயா?" என்று கேட்டதற்கு 'கரகரவென' அழுகை, பிறகு "கண்ணீரைக் கூட துடைத்துக் கொள்ளாமல் சிரிக்கிறாள், சரி வர்றேண்ணே" என்று கிளம்பி விடுகிறாள்.
உண்மை தெரியாமல், இப்படி எத்தனை நித்யாக்களைப் பற்றி நாம் கேவலமாகப் பேசுகிறோம்? ஒரு பெண் வெட்டிக் கொல்லப்பட்டால் கூட, அந்தப் பெண் மீது தான் தவறு என்று அருகிலிருந்து பார்த்ததைப் போல பேசுபவர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள். சமூக வலைத்தளம் இவர்களுக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. இப்படிப் பெண்களைப் பற்றி கேவலமாகப் பேசுவதைத் தவறு என்று சொல்பவனையும் சேர்த்துத் தான் திட்டுகிறார்கள்.
அதே போல ஆண் பெண் சிநேகிதத்தைப் பற்றிய கட்டுரையைப் பற்றியும் எழுதியாக வேண்டும். "காலமும் வயதும் பக்குவமும் மீட்டெடுக்கும்போதுதான் ஆண்-பெண் சிநேகிதத்தின் அற்புதங்கள் புரிய ஆரம்பிக்கும். அலுவலகத்தில் ஓர் ஆணும் பெண்ணும் தொடர்ந்து தேநீர் குடிக்கப் போனாலே,தவறாகப் பேச வைக்கிறது. 'தோழமை' என்ற வார்த்தையை சட்டென்றும் யாராலும் கொச்சைப்படுத்த முடிகிறது". அந்தக் கட்டுரையின் மிக முக்கியமான வரிகளை அப்படியே எழுதிவிட்டேன்.
இந்த ஆண் பெண் தோழமைப் பற்றி எழுதும் போது ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி எழுத வேண்டும்.
ஒரு பெண்ணைத் தோழி என்று சொல்லிக்கொண்டே,அவளோடு பழகிக் கொண்டே, அதே பெண்ணைப் பற்றி,அவள் இல்லாத நேரத்தில் தவறாகப் பேசுபவர்கள் எவ்வளவு அருவருப்பான பிறவிகள்? அதற்காகப் பழகாதப் பெண்ணைப் பற்றித் தவறாகப் பேசுவதை நியாயப்படுத்தவில்லை. அது அய்யோக்கியத்தனம் என்றால் இது பச்சைத் துரோகம் தானே? இவன் நம் நண்பன், நம் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பான் என்று நம்பித் தானே பழகுகிறார்கள், தங்களின் செல்போன் எண்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், facebook நட்பாகவும் இணைத்துக் கொள்கிறார்கள்? அந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன் படுத்துவதைக் காட்டிலும் ஒரு கேவலமான செயல் உண்டா?
என்றாவது, ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறாகப் பேசி இருந்தாலும் அதை மறந்து, திருந்தி, அத்தவறை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பது தானே நல்லவனுக்கு அழகு? சமீபத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ஆனால் அதை விடக் கொடூரமாக, பல முறை, சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் அதே பெண் மீண்டும் மீண்டும் கொல்லப்பட்டாள். யார் யாரோக் கூறித் திருந்தாதவர்கள், இந்தப் புத்தகம் பற்றி எழுதும் போது, நான் சொல்வதைக் கேட்டாத் திருந்தப் போகிறார்கள்? இருந்தாலும் இதை எழுத வேண்டுமென நினைத்தேன், எழுதினேன்.
வட்டியும் முதலும் பல அத்தியாயங்களில் என்னைப் பால்ய பருவத்துக்கே அழைத்துச் சென்று விட்டது. கோடை விடுமுறைக் கொண்டாட்டங்கள், நாம் அனுபவித்ததை இந்தத் தலைமுறை அனுபவிக்குமா என்றால் சந்தேகமே. 'பால்யம்' என்ற பேராற்றின் கரையில் என்ற கட்டுரையில் அவர் குறிப்பிடும் கிட்டிப் புள், பம்பரம், ஓடிப்புடிச்சி என அனைத்தும் நாங்களும் ஆடியதுண்டு. தோற்றவர்களை, கும்பல் கும்பலாக பின் தொடர்ந்து, அவர் குறிப்பிடும் அதே 'எங்க வீட்டு நாயி எதையோ திங்கப் போச்சு' பாடி வெறுப்பேற்றியிருக்கிறோம். அடியேனும் ஒரு முறை இந்தக் கேலிக்கு ஆளாகியிருக்கிறேன். அன்று என் காலில் காயம் பட்டிருந்தது, அதுவும் இவர்களுக்குச் சாதகமாகி விட்டது. 'எங்க வீட்டு நாயி எதையோ திங்கப் போச்சு, கல்லால அடிச்சி காலுடைஞ்சி போச்சி' என்று பாடிப் பாடி அழ வைத்து விட்டார்கள். அதில் பெரும் பங்கு வகித்தவர் என் நண்பன் சுரேந்தர் தான். இன்றும் தொடர்பில் இருக்கிறோம். அவனோடும் சரி, நண்பன் அருண் குமாரோடும் சரி, தொலைபேசியில் உரையாடும் போது இது போன்ற நினைவுகள் தான் உரையாடலின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருக்கும். வட்டியும் முதலும் படிக்கும் போது என் பால்யம் தான் என் மனத்திரையில் ஓடியது.
ராஜு முருகன் தன்னுடைய காதல் அனுபவங்களைக் 'காதலால் காதல் செய்வீர்' என்ற அத்தியாயத்தில் எழுதி இருக்கிறார். அருமையான கட்டுரை. ஒன்றுக்கும் மேற்பட்ட அன்புவங்களை எழுதி இருக்கிறார், அத்தனைக் காதலிகளுக்கும் 'கீர்த்தனா' என்ற பொதுப் பெயரை வைத்திருக்கிறார். "இரவு 8 மணிக்கு பஸ் ஸ்டாண்டில் கே.எஸ்.ஆர் லாட்டரிக் கடைக்கு பக்கத்தில் போய் நின்று கொள்வேன்.சரியாக அந்த நேரத்துக்கு கீர்த்தனா வருவாள். பஸ் கிளம்புகிற வரைக்கும் பார்த்துவிட்டு வந்துவிடுவேன். திடீரென்று கீர்த்தனாவைக் காணவில்லை. பஸ் ஸ்டாண்டே பிளாக் அண்ட் ஒயிட்டில் வெறுமையாகக் கிடந்தது. ஒரு நாள் ஜெராஸ் கடையில் நெற்றி வகிடு நிறையக் குங்குமம் அப்பிக் கொண்டு அங்கே ஜெராஸ் எடுத்துக் கொண்டு இருந்தாள். எந்தச் சலனமும் இல்லாமல் என்னைப் பார்த்தாள். காசு கொடுத்ததும் வாங்கிப் போட்டுக்கொண்டே மெல்லிய குரலில் அவள் என்னிடம் கேட்டதை ஆயுசுக்கும் மறக்க மாட்டேன் - "இன்னமும் அந்த லாட்டரிக் கடை பக்கத்துலேயே தான் நிக்கிறீங்களா..?" .
இந்த அத்தியாயத்தைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். தனிப்பட்ட முறையில் இது எனக்கு மிகவும் பிடித்த அத்தியாயம். "மிருகங்களுக்கு ஆத்மா கிடையாதாம்..நான்சென்ஸ்! ". மற்ற அத்தியாயங்களைக் காட்டிலும் என் மனதில் இதற்கு தனி இடம் உண்டு. இதில் ஆசிரியர் அவருடைய அப்பாவைப் பற்றி எழுதி இருக்கிறார். அதிலென்ன சிறப்பு? அவருடைய அப்பா ஒரு கால்நடை மருத்துவர். "பின்னிரவுகளில் யாராவது வந்து அப்பாவை அடிக்கடி எழுப்புவார்கள்.செனமாடு முக்கிட்டே கெடக்கு..கண்ணு வரலைங்க..சத்தமா சத்தம் போடுது.. என இருட்டில் நிற்பார்கள். படக்கென்று எழுந்து மருந்து பையை எடுத்துக் கொண்டு என்னையோ குருவையோ எழுப்பி டி.வீ.எஸ்-50 யை எடுக்க வைப்பார். இருட்டில் நாலைந்து பேர் கவலையாக நிற்பார்கள். 'ம்ம்ம்ம்ம்ஏஏஏ..' என அலை பாய்ந்து கொண்டிருக்கும் தாய்ப்பசு. கைலியை வரிந்து கட்டிக் கொண்டு மாட்டை பொத்தெரென்று அடிப்பார். 'ந்தாறு..ந்தாறு..ச்சூ..ச்சூ.." எனப் பேசி அதை விழ வைப்பார். 'எண்ணெய் விடுவாங்க..' என வாங்கித் தடவிக் கொண்டு, மாட்டுக்குப் பின்னால் கையைவிட்டுத் துழாவி, நேக்காக கன்னுக்குட்டிக் காலை பிடித்துவிடும்போது கண்கள் பிரகாசிக்கும்.பொசுக்கென்று குட்டிக் கால் குளம்புகள் வெளி நீட்டும். இன்னும் வெளிவர சிரமப்பட்டால்,ரத்தமும் கோழையும் கலந்து வடிய, கன்னுக்குட்டி காலில் கயிறு கட்டி, நைசாக வெளியே இழுப்பார். அந்த வீட்டுக்காரம்மா கொலசாமியைக் கும்பிட்டுக்கொண்டே பதறி நிற்கும். ஆளும் பேருமாய் இழுக்க.. அது உயிர் வலிப் போராட்டம்.
கொஞ்ச நேரத்தில் சொத்தென்று மண்ணில் விரித்த கோணியில் வந்து விழும் கன்னுகுட்டி. பக்கத்தில் உட்கார்ந்து இரண்டு கைகளாலும் அதன் முகத்தின் ஈரத்தையெல்லாம் வழித்துவிட்டு. அப்படியே அள்ளி காதிலும் மூக்கிலும் உயிர்க்காற்று ஊதுவார். கொஞ்ச நேரத்தில் கன்னுக்குட்டி காது மடல் அசைய, உடல் துள்ளும். வீட்டுக்காரம்மா ஓடிவந்து காளக் கன்னா, பசுவா எனப் பார்க்கும். மாடு தழைந்து தழைந்து வந்து கன்றை நக்கிவிடும்போது, பொலபொலவென விடியும் அந்த நாள்"(பக்கம் 89,90). Why this is so special? Because, my father is a Veterinary Doctor :-) .
இரவு நேரங்களில், என் அப்பா, கன்னுக்குட்டியை இழுத்துப் போட்ட நிகழ்வுகள் ஏராளம். முறையாக மருத்துவரை அழைக்காமல், மக்களே, கயிறு கட்டி இழுப்பது, கை விட்டு இழுப்பது போன்ற பல அசுர முயற்சிகளைச் செய்துவிடுவார்கள். எதுவும் பலிக்காமல் போன பிறகே மருத்துவரை அழைப்பார்கள். என் அப்பா, கன்னுக்குட்டியை இழுத்துப் போட்டப் பிறகு, அங்கு சுற்றி இருப்பவர்கள் அசடு வழிந்து கொண்டே சொல்வார்கள் 'எல்லாம் முயற்சி பண்ணிட்டேன் சார், இந்த மாதிரி மட்டும் தான் இழுக்கல', அப்பா சற்று கோபமாகவே பதிலளிப்பார், 'அதனால தான் நான் டாக்டர்' என்று.
பாண்டிச்சேரியில் இருக்கும் போது, அருகே ஆரோவில்லில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் நாய்களுக்கு, அப்பா வைத்தியம் பார்த்து வந்தார். அப்போது தன்னிடம் ஏராளமான நாய்கள் இருப்பதாகவும், மேலும் நாய்களை வளர்க்க முடியாதென்றும் கூறி, ஒரு நாய் குட்டியை(சுமார் 5-10 நாட்கள் குட்டி) அப்பாவிடம் கொடுத்து கருணைக் கொலை செய்யுமாறு அந்த farmஇல் இருந்த ஒருவர் கேட்டார். 'உன்னால் வளர்க்க முடியாதென்றால் போ, அதைக் கொல்ல வேண்டுமென்று சொல்ல உனக்கு உரிமை இல்லை' என்று கூறி நாய் குட்டியை எங்கள் வீட்டுக்கேக் கொண்டு வந்து விட்டார். அதற்கு ஜிம்மி என்று பெயரிட்டோம். 2004ஆம் ஆண்டு முதல் எங்கள் செல்லப் பிராணி ஆனது ஜிம்மி. நாங்கள் சாப்பிடும் போது அதற்கும் தர வேண்டும், இல்லை என்றால் அடம் பிடிக்கும். சப்பாத்தி என்றால் ஜிம்மிற்கு கொள்ளைப் பிரியம். சப்பாத்தி, பூரி,ஐஸ் கிரீம், சாக்லேட், சிந்தெடிக் போனே, பெடிக்ரீ இவை தான் ஜிம்மியின் favorite. சோறு வைத்தால் லேசில் சாப்பிடாது. அதிலும் நாங்கள் சப்பாத்தி சாப்பிட்டு ஜிம்மிக்கு சோறு வைத்தால் முகர்ந்து பார்த்து விட்டு போய் படுத்துவிடும். கோபத்தின் வெளிப்பாடு. அம்மா ஐஸ் கிரீம் கப்பை கையில் பிடித்துக் கொள்ள ஜிம்மி முழுவதையும் நக்கித் தின்று விட்டு வாலாட்டும். குழந்தைகளோடு சகஜமாக விளையாடும். அபார்ட்மென்ட்டில் ஜிம்மியோட விளையாடாத ஆளே கிடையாது. ஆனால் மற்ற விலங்குகளை அனுமதிக்கவே அனுமதிக்காது. வைத்தியத்திற்கு நாய்களைக் கொண்டு வரும்போது ஜிம்மியை சமாளிப்பதே பெரும் தலைவலியாக இருக்கும். மாட்டுக்குப் பழம் கொடுத்ததால் கோபமடைந்த ஜிம்மி வீட்டிலேயே சிறுநீர் கழித்து விட்டது, பிறகு அமைதியாக எங்களிடம் தர்ம அடியும் வாங்கிக் கொண்டது.
ஜிம்மி எங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தான் வளர்ந்தது. இறுதியாக 2012ஆம் ஆண்டு இறந்து போனது. இறந்து போன போது சிறுநீர் கழித்தது. மேலே குறிப்பிட்ட இரண்டு தருணங்களைத் தவிர ஒரு நாள் கூட வீட்டில் சிறுநீர் கழித்ததில்லை. காலை ஒரு முறை மாலை ஒரு முறை என பழக்கப் படுத்தியதால் சரியாகக் கூச்சலிட்டு, வெளியே அழைத்துச் செல்ல வைத்து விடும். இவ்வளவுப் பாசமான நாய் இறந்த போது ஏற்பட்ட வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதனாலேயே அதற்கு பிறகு செல்லப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்து விட்டோம்.
வட்டியும் முதலும் படிக்கும் போது இது போல எண்ணற்ற நினைவுகள் மனத்திரையில் ஓடியது. அதனாலே தான் 504 பக்கங்கள் படிக்க மூன்று மாதங்கள் தேவைப்பட்டது. இது வரை நான் எழுதியது எல்லாமே வெறும் ட்ரைலர் தான். இந்தப் புத்தகத்தில் ரசித்து ரசித்துப் படிக்க வேண்டிய பக்கங்கள் ஏராளம், ஏன் அனைத்துப் பக்கங்களும் ரசித்துப் படிக்கப்பட வேண்டியவை தான். 'சின்னப் புறா ஒன்று பாடும் ரங்கய்யா, பள்ளிக் குழந்தைகளுக்குத் தீனி விற்கும் வேனியாத்தாள், பிச்சைக்கார பூவா, அரசியல் செய்கிறான் பேர்வழி என்று 'பிம்ப்'ஆக மாறிய நண்பர், தெருக்களில் பொம்மைகள் விற்கும் ஒருவன் என இவர் விவரித்ததில் பல மனிதர்களை நானும் சந்தித்திருக்கிறேன். நீங்களும் சந்தித்திருப்பீர்கள்.
"தர்மனாகவும் துரியோதனனாகவும் சாவதைவிட அபிமன்யுவாகச் சாவது தான் பெரிய விஷயம்" - இது ராஜு முருகன் பஞ்ச் ('நாம எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் தான், பக்கம் 340)
இது புத்தக விமர்சனம் அல்ல. கடந்த சில மாதங்களில் என்னைப் பரவசப் படுத்திய ஒரே விஷயம் வட்டியும் முதலும் தான். இது ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்தது. விகடன் வாங்குவதில்லை என்ற கொள்கையோடு வாழ்வதால், ராஜு முருகன் இந்தத் தொடரை எழுதிய போது படிக்க முடியவில்லை. நண்பர்களின் சிபாரிசின் பேரில் தான் இந்தப் புத்தகத்தைப் பற்றி இணையத்தில் தேடித் பார்த்தேன். புத்தகக் கண் காட்சியில் எப்படியாவது இதை வாங்கிவிட வேண்டுமென்று பெரும்பாலான ஸ்டால்களிலும் கேட்டு அலைந்தேன். கிடைக்கவே இல்லை. ஏமாற்றமே மிஞ்சியது. அமேசான் கை கொடுத்தது. பெரும்பாலானவர்கள் வட்டியும் முதலும் படித்திருப்பார்கள் என நம்புகிறேன், அப்படி இது வரைப் படிக்கவில்லை என்றால், தயவு செய்து வாங்கிப் படியுங்கள்.
புத்தகங்கள் நம் நண்பர்களைப் போல என்று யாரோ சொன்னதாக சுஜாதா கற்றதும் பெற்றதும் புத்தகத்தில் எழுதி இருப்பார். அது எவ்வளவு உண்மை என்பதை ஒவ்வொரு முறை நல்லப் புத்தகங்கள் படிக்கும் போதும் உணர்ந்திருக்கிறேன்.
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்று இந்தத் தொடரை முடிக்கிறார் ராஜு முருகன். இந்தத் தொடரை எழுதியதற்காக, நமக்கு கொடுத்ததற்காக அவரிடம் இதைச் சொல்லியே ஆக வேண்டும் 'Thank you Mr.Raju Murugan'.
உணர்வுகளை எழுத்துக்களால் விவரித்தவர் ராஜு முருகன் என்றால், அந்த கட்டுரைகளுக்கெல்லாம் நெஞ்சில் நிற்கும்படி அழகான ஓவியங்களைத் தந்தவர் திரு.ஹாசிப் கான். இன்றும் விகடனில் இவரது கார்ட்டூன்களுக்குத் தனி ரசிகர் கூட்டம் உண்டு. Thank you Hasif Khan.
உணர்வுகளை எழுத்துக்களால் விவரித்தவர் ராஜு முருகன் என்றால், அந்த கட்டுரைகளுக்கெல்லாம் நெஞ்சில் நிற்கும்படி அழகான ஓவியங்களைத் தந்தவர் திரு.ஹாசிப் கான். இன்றும் விகடனில் இவரது கார்ட்டூன்களுக்குத் தனி ரசிகர் கூட்டம் உண்டு. Thank you Hasif Khan.