வாலியைப் பற்றி எழுதுவதே சுகம் தான்.அவர் படைப்புகள் அத்தனை சிறப்பானவை. இதே வலைதளத்தில் வாலி அவர்களைப் பற்றி சில செய்திகளை திரட்டி ஒரு பதிவிட்டிருந்தேன்.இரண்டாண்டுகளுக்கு முன்னால் எழுதிய பதிவு அது. இரண்டாண்டுகளில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிலை தோன்றுமென எதிர்பார்க்கவில்லை.
நான் சிலரை விமர்சிக்கும்போது என் நண்பர்கள் என்னை அதட்டுவார்கள்.உன் தகுதிக்கு இவர்களை விமர்சனம் செய்வது சரியில்லை என்று.ஆனால் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று ஒருவரும் கிடையாது என்ற கருத்துடையவன் நான்.மூன்றாண்டுகளுக்கு முன்பு தான் வாலி அவர்களின் 'நானும்.. இந்த நூற்றாண்டும்..' என்ற புத்தகத்தை படித்தேன்.அதை படித்த பின்பு என் கருத்தை மாற்றிக்கொண்டேன்.வாலி அவர்களை அதற்கு முன்பும் நான் விமர்சித்ததில்லை.புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் அப்போது தான் எனக்குள் சற்று துளிர் விட்டிருந்தது. மனதிற்கு பிடித்த 'வாலி' அவர்களின் புத்தகத்தையே முதலில் படித்தேன். மிகச்சுவையான சுய சரிதம் அது.
ஏதோ திரைப்படங்களில் 'முக்காலா முக்காபலா','சின்ன ராசாவே சிற்றெரும்பு என்ன கடிக்குது' போன்ற 'பலானா' பாடல்கள் எழுதும் சாதாரண கவிஞர் அல்ல இவர். 'கொடுத்ததெல்லாம் கொடுத்தார்','தரைமேல் பிறக்க வைத்தான்' என தத்துவப் பாடல் மட்டுமே எழுதும் கவிஞரும் அல்ல.'ஜனனி ஜனனி' என பக்திப் பாடல்கள் மட்டுமே எழுதுபவர் என்றும் சொல்லிவிட முடியாது.அதாவது இவர் ஒரு குறிப்பிட்ட வகை பாடலாசிரியர் இல்லை இவர் ஒரு சகாப்தம்.
ஒரு சூழ்நிலையைக் கூறி,இது தான் மெட்டு,இதற்குத் தான் பாடல் வரிகள் வேண்டுமென்றால்,நிச்சயம் கிடைக்குமென இசையமைப்பாளர்கள் மெச்சும் கவிஞர் இவர்.ஒரு முறை இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள் படத்தின் ஒரு காட்சியை விளக்கினார்.இது தான் அந்த காட்சி.கதாநாயகனுக்கு இரண்டு மனைவிகள்.இருவரும் கணவனை சொந்தம் கொண்டாடுவது போல பாடல் வரிகள் அமைய வேண்டும்.எவ்வளவோ எழுதியும் இயக்குனருக்கும் திருப்தி இல்லை,வாலிக்கும் இந்த காட்சியில் ஏதோ ஒன்று குறைவது போன்ற ஒரு உணர்வு. பிறகு வாலி அவர்கள்,ஒரு கொலு விழாவில் இரண்டு நாயகிகளும் சந்தித்துக் கொள்வது போல காட்சி அமைத்தால் சிறப்பாக இருக்கும் என கூற,பாலச்சந்தர் அவர்களும் அவ்வாறே செய்தார்.அந்தப் பாடல் இன்றும் சாகாவரம் பெற்று உயர்ந்து நிற்கின்றது.
"புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக" - என்ற பாடல் தான் அது.
இதே போல மேஜர் சந்திரகாந்த் என்றொரு திரைப்படம்.அதில் கல்யாண சாப்பாடு போடவா என்றொரு பாடல்.தங்கைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட சந்தோஷத்தில் அண்ணன் பாடுகிறான். ஆனால் அடுத்த சில காட்சிகளில் அவன் தங்கை இறந்துவிடுவாள். இதற்கு கவிஞர் எப்படி வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார் என்று பாருங்கள்.
"வீதியெல்லாம் பூப்பந்தல் போடனம்
பச்சை வாழை மரம் தோரணங்கள் ஆடனம்
காரு வைச்சி அழைக்கணம் கச்சேரி விக்கனம்
ஊர் பேசும் பேச்சாய் இருக்கணம்"
இந்த வரிகள் இரண்டு சூழ்நிலைக்கும் பொருந்துவது போல எழுதி விட்டார்.
உயர்ந்த மனிதன் படத்தில் வரும் "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" என்ற பாடல் ஏழை-பணக்காரன் என்கிற வித்தியாசமில்லாத இரண்டு நண்பர்களுக்கிடையில் நிகழும் உரையாடல் போல அமைந்திருக்கும்.
இயந்திரமயமாகி விட்ட இந்த உலகத்தில் பணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது.சக்கரம் என்ற படத்தில் வரும் காசே தான் கடவுளப்பா என்ற பாடல் அத்தனை யதார்த்தம்.
"காசேதான் கடவுளப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்கு கை மாறும் பணமே
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே
நீ தேடும்போது வருவதுண்டோ
விட்டுப் போகும்போது சொல்வதுண்டோ
தாயைத் தவிர தந்தையைத் தவிர
காசால் எதையும் வாங்கிடலாம்
கல்லறை கூட சில்லறை இருந்தால்
வாய் திறந்தே மொழி பேசுமடா
இல்லாதவன் சொல் சபை ஏறாமல்
ஏளனமாகப் போகுமடா
களவுக்கு போகும் பொருளை எடுத்து
வறுமைக்குத் தந்தால் தருமமடா
பூட்டுக்கு மேல பூட்டை போட்டு
பூட்டி வைத்தால் அது கருமமடா "
இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள்.உண்மையை பளார் என்று அறைவது போலவே உணர்வீர்கள்.
பாலச்சந்தர்-வாலி கூட்டணியில் உருவான பாடல்கள் எல்லாமே தனித்துவத்தோடு விளங்கும்.
"வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல்" - என்று நாகேஷ் நடித்த எதிர்நீச்சல்(1968இல் வெளிவந்தது) படத்தில் எழுதினார். இது போல காட்சிகளின் ஆழத்தையும் கதாபாத்திரங்களின் தன்மையையும் புரிந்து கொண்டு எழுதியதாலேயே வாலி அவர்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த எதிர்நீச்சலிலும் பாடல் எழுதினார்.இது மீண்டும் ஒருவருக்கு சாத்தியமா என்று தெரியவில்லை.45 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பெயரில் வந்த திரைப்படத்தில் வாலியின் பாடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. காட்சிகளுக்கேற்ப வரிகளை எழுதுவதில் தான் வல்லவர் என்பதை 2013இல் வந்த எதிர்நீச்சலிலும் நிரூபித்து விட்டார்.
"நாளை என்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே
என்றால் கூட போராடு நண்பா
என்றைக்கும் தோற்காது உண்மைகளே
உசைன் போல்ட்டைப் போல் நில்லாமல் ஓடு
கோல்டு தேடி வரும்
உந்தன் வாழ்வும் ஓர் ஒலிம்பிக்கைப் போலே
வேர்வை வெற்றி தரும்"
இதே படத்தில்,கடுமையான மின் பற்றாக்குறை நிலவும் இன்றைய நிலைமையை மிக அழகாக ஒரு காதல் பாட்டில் குறிப்பிட்டு நய்யாண்டி செய்திருக்கிறார்.
"மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்சப் பூவே வா"
காட்சியின் தன்மை கெடாமல் எத்தனை அழகாக மின்வெட்டு விஷயத்தை நுழைத்து விட்டார்!!.
இறைவனருளால் ஒரே ஒரு முறை இவரை நேரில் காண முடிந்தது.அது ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி கவியரங்கத்தில் தான்.ராமரைப் பற்றிய ஏதோ தலைப்பு.புத்தகக் கண்காட்சியைப் பற்றி முதலில் ஒரு அறிமுகம் கொடுத்தவர் கவியரங்கத் தலைவர் வாலி.
"வாசிக்கும் வழக்கமும் வாசகர் வட்டமும்
நாளுக்கு நாள் நாளுக்கு நாள் அருகி வராது
பெருகி வருகிறது என்பதற்கு கண் கண்ட சாட்சி
புத்தகக் கண்காட்சி
வருகிறது - இது வருடாவருடம்
உண்டோ வந்து நம் நெஞ்சை இது
வருடா வருடம்?"
இப்படி புத்தகக் கண்காட்சியைப் பற்றி சில வரிகள் பேசினாலும், காவிரி பிரச்சனை பற்றியும், டெல்லி கற்பழிப்பு சம்பவத்தைப் பற்றியும் இதில் நுழைத்து விட தவறவில்லை.
"நூல் உணர்வு உள்ளவனுக்கும் பால் உணர்வு
உண்டெனினும் அதிலும் அவன் காப்பான் நெறி
காட்ட மாட்டான் வெறி
நூல் இடையில் புழங்கதாவன்
நூலிடையில் புழங்குகையில் வெறியேறி நிற்பான்
வேறென்ன கற்பான்
அவனெல்லாமா ஓர் ஆடவன்?
அகப்பட்டதை மேயும் ஆடு அவன்
மும்பையில் மூர்க்கம் காட்டிய கசாப்பை
அனுப்பியது போல் கசாப்புக்கு அனுப்ப வேண்டும்
இந்தளவு இழிந்த ஆடுகளையும்
அனுப்பினால் தான் இந்த அவலங்களை
நாடு களையும்
பாரதத்தை பெருமையுடன் பார்க்க வைக்கும்
பல நாடுகளையும்"
காவிரி பிரச்சனையை எப்படி குறிப்பிடுகிறார் பாருங்கள் :
"மண்ணுக்கு வராத நீர்
உழவன் கண்ணனுக்கு வருகிறது
வயலை உழாத ஏர்
அவன் வயிற்றை உழுகிறது
உடனே உதவுக என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட
காவேரி நீரின்றி காய்கிறது டெல்டா
கர்நாடகம் ஒரு துர்நாடகம் நடத்தி
அந்தத் தீர்ப்பை ஆக்குகிறது உல்டா!!"
வார்த்தைகளை கவிஞர்கள் தேடிச் செல்வதுண்டு,ஆனால் கவிஞர் வாலி என்றால்,வார்த்தைகள் அவரைத் தேடி வந்து விடும் போல..டெல்டா-உல்டா,கர்நாடகம்-துர்நாடகம் என எதுகை மோனையில் அடிக்கிறாரே.மற்றொரு உதாரணத்தையும் பாருங்கள், இசைஞானி இளையராஜா அவர்களின் திருவாசகம் சிம்பொனி வெளியீட்டு விழாவில் பேசுகையில்,
"அவருடைய ஒவ்வொரு வேர்வைக்கும்,
வெற்றி வேர் வைக்கும்" - என்றார்.
கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து எழுதினாலும் கூட கதாநாயகனுக்கு ரசிகர்கள் மத்தியிலிருக்கும் செல்வாக்கையும் மனதில் வைத்து இவர் சில வரிகளை எழுதுவதுண்டு.
"உதயசூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே" - அன்பே வா படத்தில் வரும் புதியவானம் என்ற பாடலில் எழுதியது.எம்.ஜி.ஆர் அவர்களின் திமுக சார்பு நிலையை குறிப்பிட்டு எழுதிய வரி இது.தணிக்கைக் குழுவினர் இந்த வரியை அனுமதிக்கவில்லை,உடனே "புதிய சூரியனின் பார்வையிலே" என மாற்றி விட்டார்.அதுவும் எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமாகத் தான் இருந்தது.
"ஊருக்கெல்லாம் வெளிச்சம் போடா கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவர்
தம் மக்கள் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்" - இது 'நேற்று இன்று நாளை' என்ற படத்தில் எம்.ஜி.ஆர் பாடுவது போல அமைந்திருக்கும் பாடல்.மக்களுக்காக அரசியல் செய்யும் தலைவரை நய்யாண்டி செய்யவே இந்த பாடல்.பின்னாளில் அந்தத் தலைவருடன் பல மேடைகளில் தோன்றி அவரை இவர் புகழ்ந்துத் தள்ளியது எல்லாம் தனிக் கதை.
எம்.ஜி.ஆருக்காக இப்படி பல பாடல்கள் எழுதி இருக்கிறார். குண்டடி பட்டு மீண்ட பிறகு 'நான் செத்துப் பொழச்சவன் டா யமன பாத்து சிரிச்சவன் டா" ,'நினைத்தேன் வந்தாய் நூறு வயது'.அவர் அரசியல் நிலையை மனதில் வைத்து 'நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்','வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்' போன்ற பல பாடல்கள் எம்.ஜி.ஆர் என்ற தனி மனிதரை மனதில் வைத்தே எழுதப்பட்டது. கதாபாத்திரத்துக்கும் காட்சிக்கும் கூட பொருந்தும் வகையில் அவை அமைந்திருக்கும்.அது தான் வாலியின் தனிச்சிறப்பு.
இளையராஜாவைப் புகழ்ந்து பல பாடல்கள் எழுதியுள்ளார்.
"ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா" - அக்னி நட்சத்திரம்
"ராஜா கைய வைச்சா அது ராங்கா போனதில்ல" - அபூர்வ சகோதரர்கள்
"புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்" - நிழல்கள் படத்தில் வரும் மடை திறந்து பாடல்வரிகள்.
"சின்னத் தாயவள் தந்த ராசாவே" - தளபதி படத்தில் எழுதியது. இளையராஜா அவர்களின் தாயார் பெயர் சின்னத்தாய்.
ரகுமானைப் பற்றி இப்படி இன்னொருவர் கவிபாட முடியாது
'இவன் இயற்றுகிறான் அன்றாடம்
அஞ்சி வேளை தொழுகை
அது போக்கும் இனி புற்றுநோயாளியின்
அழுகை'
ஏ.ஆர்.ரகுமானை மனதில் வைத்து எழுதப்பட்ட வரிகள் தான் இவை,
"நாம் இருவரும் சேரும் சமயம்
நம் கைகளிலே வரும் இமயம்
நாம் தொட்டது எதுவும் அமையும்
இது அன்பால் இணைந்த இதயம்" - எஸ்.ஜே.சூர்யா நடித்த அன்பே ஆருயிரே பட ஆரம்பப்பாடலில் வரும் வரிகள் இவை.
"ராஜலக்ஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன் தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்"
- இது தசாவதாரத்தில் கமலுக்காக எழுதப்பட்டது. வைஷ்ணவன் ஒருவனைப் பற்றிய பாடல் இது. ராஜலக்ஷ்மி என்பது நடிகர் கமல் அவர்களின் தாயார் பெயர்,ஸ்ரீனிவாசன் என்பது அவர் தந்தையின் பெயர்.அந்த விஷ்ணுதாசன் தான் ரங்கராஜன் நம்பி(கமல்).
"கலைஞர் பெருமானே
அறிவாலயத்தில் காட்சி தரும் பகவானே
கூலிங் கிளாஸ் அணிந்த குறுந்தொகையே " - இப்படி எல்லாம் கலைஞரை புகழ்ந்திருக்கிறார்.
சமீபத்தில் கூட தமிழக முதல்வரை புகழ்ந்து ரங்கநாயகி என்ற கவிதை எழுதினார்.
அவர் கலைஞரைப் பற்றி இன்னும் நிறைய பேசி இருக்கிறார், நான் கலைஞரின் அரசியலை கடுமையாக விமர்சித்து வந்துள்ளேன்,ஆனாலும் வாலியின் வார்த்தைகள் கலைஞரைப் புகழும் போது, இனிமையாகத் தான் இருக்கின்றது.
கடவுள் மறுப்பு மற்றும் பார்ப்பன எதிர்ப்பு கொள்கைகளை கொண்டவர்கள் நாங்கள் என சொல்லிக் கொள்ளும் திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்ற கழகமும் தீவிர முருக பக்தரும் பார்ப்பனருமான இவரிடம் நெருங்கிய நட்புடன் பழகின.
ஒரு முறை திராவிட இயக்கங்களால் இவர் மேலும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.திராவிட அரசியலில் வந்த எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாட்டெழுதுபவரும் நெருங்கிய நண்பருமான வாலி எப்போதும் நெற்றி நிறைய விபூதி இட்டு வருவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டன.ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த எம்.ஜி.ஆர், "நீங்க அந்த விபூதியைத் தான் வைக்காம வாங்களேன்" - என்று கூறி விட்டார்.சற்றும் யோசிக்காமல், "அண்ணே நாம நண்பர்களா இருப்போம்,படத்துக்கு பாட்டெழுதலைன்னா கூட பரவாயில்ல" - என்று சொல்லி விட்டார்.இந்த பதிலைக் கேட்டு சற்று அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர்.பிறகு 'மனசிலே பட்டதை அப்படியே பேசும் உங்களை நம்பலாம்.உங்க நம்பிக்கைக்கு எந்த இடையூறும் வராது.நீங்க விபூதி வைத்துக் கொண்டே வரலாம்" - என்று கூறி விட்டார் எம்.ஜி.ஆர்.
எம் எஸ் விஸ்வநாதன் முதல் இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் ஜி வி பிரகாஷ், அனிருத் வரை பணியாற்றி விட்டார்.இவரை எல்லோருக்கும் பிடிக்கும். ஏனென்றால் இவர் எவரையும் தாழ்த்திப் பேசியதில்லை மாறாக வாழ்த்தி மட்டுமே பேசியிருக்கிறார். 'நான் பாட்டெழுத வந்ததில் கண்ணதாசனுக்கும் கவலையில்லை வாலிக்கும் வருத்தமில்லை' என்று வைரமுத்து குறிப்பிட்டார் என்றால் காரணமில்லாமல் இல்லை.
ஒரு மேடையில் வைரமுத்து வாலிக்கு 'மோதிரம்' அணிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போதும் வாலியின் நகைச்சுவை உணர்வை பாருங்கள்,
"நாங்க ரெண்டு பெரும் மோதறோம்
மோதறோம்னு எல்லாரும் நினைக்கிறாங்க
ஆனா வைரமுத்துவோ எனக்கு மோதிரமே
கொடுத்துட்டார்"
வசனக் கவிதை எழுதுவதில் வாலியை மிஞ்ச யாருமில்லை. கடைசியாக அவர் கலந்து கொண்ட 'ஸ்ரீமத் அழகிய சிங்கர்' நூல் வெளியீட்டு விழாவில் அவர் கவிதையில் இருந்து ஒரு சில வரிகளை ஒருவர் குறிப்பிட்டார்.
"அரங்கநாயகியின் அகமுடையான்
அழுக்காறு அவா வெகுளியற்ற அகமுடையான்
நலிவு வந்து வருத்திய போதும்
இவன் அகமுடையான்"
இங்கே அகமுடையான் என்ற ஒரு சொல்லை எப்படி பயன்படுத்தி இருக்கிறார் என்பதை அவர் சிறப்பாகவே விளக்கினார். நரசிம்மாச்சாரியார் அரங்கநாயகியின் அகமுடையான் - இங்கே அகமுடையான் என்றால் கணவன் என்று பொருள் வருகிறது.இரண்டவாது அகமுடையான் (அழுக்காது அவா வெகுளியற்ற அகமுடையான்) - இங்கே அகமுடையான் என்றால் மனதை குறிப்பிடுகிறார். "நலிவு வந்து வருத்திய போதும் இவன் அகம் உடையான்" - இங்கே மனம் உடைந்து போக மாட்டான் என்று பொருள் வரும்படி எழுதியிருக்கிறார் கவிஞர். இன்னும் இந்த புத்தகத்தை படிக்கவில்லை.விரைவில் வாங்கி படிக்க வேண்டும். இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ள 'youtube' தளத்தில் அந்த நூல் வெளியீட்டு விழாவின் முழு ஒளிபரப்பையும் பார்க்கலாம்.
ஸ்ரீமத் அழகிய சிங்கராகட்டும் அல்லது ராமானுஜ காவியமாகட்டும் அதனை பாமரனும் புரிந்து ரசிக்கும் வண்ணமே எழுதியிருக்கிறார்.
இறைமறுப்பாளர்களுடன் நெருங்கிப் பழகிய போதும்,தன் இறைநம்பிக்கையை ஒரு போதும் அவர் கை விட்டதில்லை இவர்களை திருப்தி படுத்த வேண்டுமென பொய் நாத்திகமும் பேசியதில்லை.அதனால் தான் இவர் இறந்து போனாலும் கூட லட்சகணக்கான ரசிகர்களின் மனத்திலும் வார்த்தைகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
வாலி என்பவர் நான் முன்பே குறிப்பிட்டது போல வெறும் பணத்துக்கு பாட்டெழுதும் சாதாரண புலவர் அல்ல.தன் கவிதைகளாலும் எழுத்துக்களாலும் பல பேர்களின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார்.என்னுடைய அன்றாட வாழ்க்கையில் வாலியைப் பற்றி தினமும் ஒரு மணி நேரமாவது நினைக்காமல் இருக்க முடியவில்லை.ஒரு முறை சொந்த விஷயமாக திருவல்லிக்கேணிக்கு என் தந்தையுடன் சென்றிருந்தேன். இது சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்வு தான்.என் மாமாவும் அங்கே வந்திருந்தார்.நான் சிறு வயதில் இங்கு தான் வளர்ந்தேன் என குறிப்பிட்டவர் இங்கே தான் வாலி மற்றும் பல பிரபலங்கள் தங்கியிருந்தனர் என்று தெருப் பெயர்களை குறிப்பிட்டார்.
இது என்ன டா வேலை,எவ்வளவு நாட்கள் தான் இப்படி என்று நினைக்கும்போதெல்லாம், 'வேலை வர வேண்டுமென்றால் வேளை வர வேண்டும்' என்று வாலி எழுதியதே நினைவிற்கு வருகிறது.வாழ்வில் தடைகளைத் தாண்டி சாதிக்கவேண்டுமென்றால் எதிர்நீச்சல் அடிக்கத் தானே வேண்டும். கண்ணதாசனும் பட்டுகோட்டையாரும் திரையுலகில் பிரபலாமாக இருந்த நாட்களில் பாட்டெழுத வந்தால் வெற்றி பெற முடியாது என பல கவிஞர்களும் பாட்டெழுதும் எண்ணத்தை கைவிட்ட போதிலும், அவ்வாறு நினைக்காமல் நம்பிக்கையோடு போராடிய வாலி வெற்றி பெற்றார். "நான் ஒருவன் மட்டும் கப்பல்களுக்கு நடுவே கட்டுமரத்தோடு கடலில் இறங்கினேன்" - என்று எழுதியிருக்கிறார். எதிர்ப்பு,போட்டி இவற்றைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் இந்த வாசகம் தான் நினைவிற்கு வருகிறது.இது போல வாலி என் வாழ்வோடு கலந்து விட்டார்.
புகழின் உச்சியிலிருக்கும் போதே சிலர் இறந்து போன சம்பவங்கள் உண்டு.இவர் இறக்கும் வரை,உயிருடன் இருக்கும் வரை,புகழின் உச்சியிலே இருந்தார்.ஆனால் காலன் தன் பாசக்கயிற்றை வீசி, இவ்வுலகில் உன் காலம் முடிந்து விட்டது என கூறி கொண்டு செல்லும் வரை புகழின் உச்சியிலேயே இருந்தவர் வாலி.மருத்துவமனையில் தன் கடைசி அறுவை சிகிச்சைக்கு முன்பு கூட அவர் எப்படி பேசி/எழுதி இருக்கிறார் பாருங்கள் :
"என் சுவாசம் மிக மோசம்
நரசிம்மனே பயப்படுகிறார்
என் உயிரைக் காப்பாற்ற "
நரசிம்மன் என்பது மருத்துவரின் பெயர்.
"ஆசையாய் வளர்த்த தாடி போனால் என்ன
உயிர் நாடி தானே முக்கியம்"
மரணப்படுக்கையில் கூட மனிதர் வார்த்தைஜாலம் காட்டியிருக்கிறார்.இப்படியெல்லாம் இன்னொருவர் தோன்றுவார் என்று எனக்கு தோன்றவில்லை.
இவர் காவியத்தலைவன் என்கிற படத்தில் பாடல் எழுதி இருக்கிறார்.தெருக்கூத்து என்றொரு படத்தில் கூட எழுதி இருக்கிறார்.இன்னும் எத்தனைப் படங்களில் எழுதி இருக்கிறார் என்று தெரியவில்லை,அவை அனைத்தும் இன்னும் வெளியாகாத படங்கள்.மறைந்த ஒரு பாடலாசிரியர் எழுதிய பாடல் வெளியாக இருக்கும் புதுப்படங்களில் இடம்பெற்றிருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை என நினைக்கிறேன்.
நானறிந்த ஸ்ரீரங்கத்து தேவதைகள் இரண்டு பேர்.இரண்டு பேருக்கும் ஒரே பேர்.ஆனால் இரண்டு பேருமே வேறு வேறு பேர்களில் எழுத்துத் துறையில் வெவ்வேறு விதமாக சாதித்தவர்கள்.இன்று அந்த இரண்டு பேருமே இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.அவர்களில் ஒருவர் ரங்கராஜன் என்கிற வாலி,இன்னொருவர் ரங்கராஜன் என்கிற சுஜாதா.
"இந்தியாவிலேயே நானறிந்து ஒரு சினிமா இசையமைப்பாளரின் மறைவுக்கு 'டைம்ஸ் ஆப் இந்தியா' தலையங்கம் எழுதியது ஆர்.டி.பர்மன் அவர்களுக்கு மட்டுமே.
சிலர் - இருக்கும் போதே
இறந்தவர்களாக இருக்கின்றார்கள்
சிலர் -
இறந்த பிறகும்
இருப்பவர்களாக இருக்கிறார்கள்.
நண்பர் பர்மன் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்."
- இது வாலி ஆர்.டி.பர்மன் அவர்களைப் பற்றி எழுதிய குறிப்பு. வாலியும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவரே. இதைச் சொல்வது இந்த வாலி ரசிகன்.
வாலி அவர்கள் மறைவுக்குப் பின் நீண்ட நாட்களாக அவரைப் பற்றி ஒரு பதிவு இங்கே எழுத வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன்.ஏனோ மனம் ஈடுபடவில்லை. வாலியின் மறைவைப் பற்றி நினைத்தால் ஒரு பெரும் சோகம் எழுத வேண்டுமென்கிற என் வேகத்தை பொசுக்கி விடுகிறது.ஆனால் வாலியின் பிறந்த நாளன்று எப்படியும் இதை எழுதி விடவேண்டுமென்ற தீர்மானத்தோடு தொடங்கினேன்.இப்போது முடித்து விட்டேன்.என் மனதிலிருந்த பெரும் பாரம் இப்போது தான் குறைந்ததாக உணர்கிறேன்.
"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்" - வாலி.