நண்பர்களே மீண்டும் தமிழில் ஒரு பதிவு.இது தலைப்பில் குறிப்பிடப்பட்டதைப் போல கவிஞர் வாலி பற்றிய கட்டுரை தான்.இவரைப் பற்றி தெரியாதவர்கள் , இன்று தமிழகத்தில் , மிக குறைவு என்று தான் சொல்ல வேண்டும். இவர் தமிழ் சினிமாவில் பத்தாயிரம் பாடல்களைக் கடந்து இன்றும் என் போன்ற பல ரசிகர்களை தன் பாடல்களால் மகிழ்வித்துக் கொண்டிருக்கும் வாலி அவர்கள் பற்றி பல முறை என் நண்பர்களிடம் புகழ்ந்து பேசி இருக்கிறேன்,சமூக வலயங்களில் கூட பல முறை இவர் பாடல்களின் மீது எனக்குள்ள ஈடுப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறேன். இந்த தளத்தில் இவரைப் பற்றி எழுத வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன்,அதற்கு இப்போது தான் வேளை வந்திருக்கிறது.
வாலி பக்தி,நட்பு,காதல்,தத்துவம் என பலவிதமான பாடல்கள் எழுதி இருக்கிறார்.அவர் எழுதிய அம்மா பாடல்களிலிருந்து கட்டுரையைத் துவக்குகிறேன்.
மேலும் சில பாடல்கள்:
"கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்ன" - இந்த வரிகள் இடம்பெற்றது இதயம் படத்தில் வரும் "பூங்கொடி தான் பூத்ததம்மா" என்ற பாடலில்.
மேலும் சில பாடல்கள்:
ஒரு முறை கவியரங்கமொன்றில் உரையாற்றிவிட்டு வரும் பொழுது ஒருவர் வாலியிடம் இதே கேள்வியினைக் கேட்டார்,அதற்கு கீழ்கண்டவாறு அவர் பதிலளித்தார்,
"இங்கே நான் வண்ணமொழிப் பிள்ளைக்கு தாலாட்டும் தாய்
இன்று உன்னிடம் கையேந்தினேன்..முருகையா..."
இவரின் பாடல்கள் சிலவற்றைக் குறிப்பிட்டு,என் விருப்பத்தையும் குறிப்பிடிகிறேன்,படித்து விட்டு தங்கள் விருப்பத்தையும் இந்தப் பதிவின் கருத்துக்களாகப் பதிவு செய்யுங்கள்.
வாலி பக்தி,நட்பு,காதல்,தத்துவம் என பலவிதமான பாடல்கள் எழுதி இருக்கிறார்.அவர் எழுதிய அம்மா பாடல்களிலிருந்து கட்டுரையைத் துவக்குகிறேன்.
அம்மா பாடல்கள் எழுதுவதில் இவருக்கு நிகர் இவரே.
"அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே"
இந்த இரண்டு வரிகளே போதும் தாயில்லாமல் இந்த உலகமே இல்லை என்பதை எடுத்துக்காட்ட.இது மன்னன் படத்திற்காக கவிஞர் எழுதிய பாடல் தான்.
இன்னும் பல பாடல்கள் தாயின் பெருமையை பறைசாற்றுவது போலவே எழுதி இருக்கிறார்.
"தாயில்லாமல் நானில்லை" - அடிமைப்பெண்
"அம்மா அம்மா எந்தன் ஆருயிரே" - உழைப்பாளி
"நானாக நானில்லை தாயே " - தூங்காதே தம்பி தூங்காதே
"சின்னத்தாயவள் தந்த ராசாவே " -தளபதி
இந்தப் பாடலின் தனிச்சிறப்பு என்னவென்றால் சின்னத்தாய் என்பவர்கள் பெருமதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜாவின் தாயார்.இந்தப் பாடலுக்கு இசையமைத்ததும் இசைஞானி தான்.அவரை மனதில் வைத்துத் தான் இந்த வரிகள் எழுதப்பட்டது..
"ஆசைப் பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா" - வியாபாரி
"காலையில் தினமும் கண் விழித்தால் " - நியூ
இந்தப் பாடலில் தாயைப் பற்றியும் எழுதி இருப்பார்('அன்பென்றாலே அம்மா') தாய்மையைப் பற்றியும்('நிறை மாத நிலவே வாவா நடைபோடு மெதுவா மெதுவா,அழகே உன் பாடு அறிவேனம்மா) மிக அழகாகவே எழுதி இருக்கிறார்.
அரசியல் நெடி வீசும் பல பாடல்களுக்கும் சொந்தக்காரர் தான் இந்த வாலி.
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் " - என் கடமை. அது எம்.ஜி.ஆர் அவர்கள் திமுக வில் இருந்த காலம். அந்த மூன்றேழுத்தைத் தான் குறிப்பிடுகிறார்.
"நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்" - எங்க வீட்டு பிள்ளை படத்திற்காக அவர் எழுதிய பாடல்.எம்.ஜி.ஆர் பற்றி நினைத்தாலே இந்தப் பாடல் தான் பல பேரின் நினைவுக்கும் வரும் என்பதில் சந்தேகமே இல்லை.இந்தப் பாடலின் இத்தனை பெரிய வெற்றிக்கு இவர் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது, இசையமைப்பாளர்,பாடகர் மற்றும் பாடல் காட்சியில் தோன்றி வாயசைத்த எம்.ஜி.ஆர் என அனைத்து விஷயங்களும் சேர்ந்து தான் இந்தப் பாடலை பிரும்மாண்டமான வெற்றிப் பாடலாக்கியது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை, இருந்தும் இந்தப் பாடல் வரிகளுக்கென தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு சிறப்பிடம் உண்டென்பதையும் மறுப்பதற்கில்லை.
"கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்... " இந்த வரிகள் இடம் பெற்ற பாடல் விவசாயி திரைப்படத்தில் இடம்பெற்ற "விவசாயி விவசாயி" பாடல் தான்.அரசியல் நெடிக்கொரு சிறந்த உதாரணமாக இதைக் கூறலாம்.
அன்பே வா திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியது வாலி அவர்கள் தான்.மிகப் பிரபலமான "புதிய வானம் புதிய பூமி" என்ற பாடலை யாரால் தான் மறக்க இயலும்.
இவர் எழுதிய பக்திப் பாடல்கள், கேட்பவர் மனதில், ஒரு வித உன்னதமான உணர்வை ஏற்படுத்தும்.இவர் எழுதிய இந்தப் பாடல் தான் இவருக்கு திரையுலகில் பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றுத் தர பெரிதும் உதவியது:
"கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும் -
கந்தனே! உன்னை மறவேன்!"
மேலும் சில பாடல்கள்:
"ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்!- துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும்"
இந்த இரண்டு பாடல்களும் திரைப்படத்தில் இடம்பெறவில்லை என்று தான் நினைக்கிறேன்,ஆனால் இன்றளவும் பல முருகன் கோவில்களில் காலை வேளைகளில் இந்தப் பாடல்கள் ஒலிக்கத் தான் செய்கின்றன.
ரஜினி அவர்கள் நடித்த ஸ்ரீ ராகவேந்திரர் திரைப்படத்தின் பாடல்களும் இவர் தான் எழுதினார்.
"ராம நாமம் ஒரு வேதமே" என்ற பாடலில் ராமாயணத்தைப் பற்றி மிக அருமையாக எழுதி இருப்பார்,
இவருடைய நாவிலும் எழுத்துக்களிலும் கலைமகள் குடியிருக்கிறாள் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
இந்த வாலி ஏதோ தத்துவப் பாடலும்,பக்திப் பாடல்களும் மட்டும் எழுதும் கவிஞர் என்று எண்ணி விடாதிர்கள்.
"காதல் வெப்சைட் ஒன்று கண்டேன் கண்டேன் நானும் கண்கள் ரெண்டில் இன்று
காதல் வைரஸ் வந்து கம்ப்யூட்டர் போல் நானும் கன்பியுஸ்(confuse) ஆனேன் இன்று" - இந்தப் பாடலைக் கேட்டால் எழுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் எழுதினார் என்று எவரும் சொல்ல மாட்டார்கள்.
"பிரிட்ஜினில்(fridge) உள்ள பிரீசரைப்(freezer) போல குளிர் தர ஒரு துணையுண்டு வா" - இந்த வரிகள் அந்தப் பாடலில் தான் இடம்பெற்றது.
"கட்டழகுக்கோர் பட்டியலிட்டு காட்டுது என் கணக்கு
மனச விட்டு மௌச தட்டி மாட்டிடும் பதினெட்டு" - காதலர் தினம் படத்தில் இடம் பெற்ற "ஓ மாரியா" பாடலில் தான் இந்த வரிகள்.
"வைகாசி நிலவே வைகாசி நிலவே" - உன்னாலே உன்னாலே,இதுவும் இவர் எழுதியக் காதல் பாடல் தான்.
"கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்ன" - இந்த வரிகள் இடம்பெற்றது இதயம் படத்தில் வரும் "பூங்கொடி தான் பூத்ததம்மா" என்ற பாடலில்.
"அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ" - தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் இது.இந்தப் பாடலில் கதாநாயகி ஒரு இஸ்லாமியப் பெண் போல வேடமணிந்து முகத்தை மூடி இருப்பார்.இந்த சூழலுக்கேற்ப இவர் எழுதிய வரிகளை பாருங்கள்:
"போட்டிருக்கும் கோஷா வேஷம் பேஷா பொருந்துதே
வெண்ணிலவின் தேகம் மூடும் மேகம் விலகுமா
வண்ண உடல் யாவும் காணும் யோகம் வாய்க்குமா"
மேலும் சில பாடல்கள்:
"நிலாவே வா" - மௌன ராகம்
"சுந்தரி கண்ணால் ஒரு சேதி" - தளபதி
"முன்பே வா என் அன்பே வா " - ஜில்லுனு ஒரு காதல்
"என்ன விலை அழகே" - காதலர் தினம்
"ஹே அழகியே தீயே " - மின்னலே
"மருதாணி " - சக்கரகட்டி
"தத்தை தத்தை தத்தை பல அத்தை பெத்த
தத்தை இந்த தத்தைக்கெல்லாம் தைத்து வைப்பேன்
பூ மெத்தை" - மன்மதன் படத்திற்காக எழுதப்பட்ட பாடல்.
சிவாஜி திரைப்படத்தில் இடம்பெற்ற பல்லேலக்கா என்ற பாடலில் பாடலாசிரியர் முத்துக்குமார் அவர்கள் முதலில் பில்லாவுக்கா ரங்காவுக்கா என்று தான் எழுதி இயக்குனர் ஷங்கரிடம் கொடுத்தாராம்.ஆனால் ஷங்கர் வார்த்தைகளை மாற்றும்படி கேட்டுக்கொண்டார்,ஏனென்றால் இதே வரிகளை ஏற்கனவே வாலி அதிரடிக்காரன் என்ற பாடலுக்காக எழுதி விட்டார் என்று.இது எதைக்காட்டுகிறதென்றால் வாலி அவர்கள் தலையில் நரை கூடினாலும் திரையில் அவர் பாடல்களுக்கு நரை கூடவில்லை என்பதைத்தான்.இன்றைய காலக்கட்டத்திற்கேற்ப தன்னைத்தானே தயார் செய்து கொள்ளும் இந்த தன்மை தான் இன்றளவும் இவரை மற்ற பாடலாசிரியர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது.
காட்சிக்கேற்ப பாடல் எழுதுவதிலும் இவரை வெல்ல எவரும் இலர் என்றே சொல்லலாம்.இரு கோடுகள் திரைப்படத்தில் இடம்பெற்ற "புன்னகை மன்னன் பூ விழி கண்ணன்" என்ற ஒரே பாடல் போதுமே இவரின் சிறப்பை விளக்க.இரண்டு மனைவியர் தங்களது கணவனை(இருவருக்கும் ஒரே கணவன்) சொந்தம் கொண்டாடுவது போல் அமைந்திருக்கும்.
"தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான்
பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்" - என்று படகோட்டி படத்தில் மீனவர்கள் வாழ்வைப் பற்றி இவர் எழுதிய பாடல் இன்றளவும் உண்மையாகவே விளங்குவது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.இயற்கையின் சீற்றங்களை மனதில் கொண்டு எழுதப்பட்டது தான் இந்த பாடல்,ஆனால் இரக்கமற்ற கொடிய மனிதர்கள்
"ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்" - என்ற இவரது வரிகளை மெய்ப்பித்துக் காட்ட துடிப்பது எத்தனைக் கேவலமான செயல்.இந்த இரத்த வெறி பிடித்தவர்கள் வாலியின் இந்த வரிகளையும் மனதில் கொள்ள வேண்டும் "பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் பொறுத்ததில்லை"
இப்படி சிறப்பான தமிழில்,அர்த்தமுள்ள பாடல்கள் எழுதிய வாலியா "சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது" , "மார்கண்டேயா நீ வருவாயா","ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்" போன்ற முகம் சுளிக்க வைக்கும் பாடல்களை எழுதினார், என்ற கேள்வி அனைவர் மனத்திலும் எழுவது சகஜம் தான்.இந்த கேளிவிக்கு அவரே சிறப்பான பதிலையும் அளித்து விட்டார்.
ஒரு முறை கவியரங்கமொன்றில் உரையாற்றிவிட்டு வரும் பொழுது ஒருவர் வாலியிடம் இதே கேள்வியினைக் கேட்டார்,அதற்கு கீழ்கண்டவாறு அவர் பதிலளித்தார்,
"இங்கே நான் வண்ணமொழிப் பிள்ளைக்கு தாலாட்டும் தாய்
அங்கே நான் விட்டெறியும் எலும்புக்கு வாலாட்டும் நாய்"
இத்தனை ஆபாசமான சிந்தனையுள்ள பாடல்களயெல்லாம் இயற்றியதனால் இவர் மீது பலவாறான விமர்சனங்கள் எழுந்த போது,இவர் அளித்த பதில் இது தான்,"நல்ல பாத்திரம் நல்ல பாடலைப் பாடுகிறது,கெட்ட பாத்திரம் கெட்டப் பாடலைப் பாடுகிறது,இதில் எனக்கொரு பாத்திரமும் இல்லை".இதை விட வெளிப்படையாக எவரும் பதிலளிக்க முடியும் என தோன்றவில்லை.
திரைப்படங்களில் வராத இவரது ஒரு சில கவிதைகளையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். எனக்கு மிக பிடித்த பாடல் இது தான் :
"ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்"
இது நமக்கும் பொருந்தும்,நம்முடன் இருக்கும் ந(ண்)பர்களின் திறமைகளையும்,கற்பனைகளையும் சரியான வகையில் விமர்சனம் செய்ய வேண்டும்,நமது தவறான - கடுமையான விமர்சனங்கள் எவர் ஒருவரின் வளர்ச்சியையும் தடுத்து விடக் கூடாது.மற்றொரு கவிதையையும் பாருங்கள்:
"இரண்டு மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டன
இந்த மனிதர்கள் நம்மைக் கொண்டு எத்தனைச் சிலுவைகளை
செய்கிறார்கள் - அனால் நம்மால் இவர்களுள் ஒரு ஏசுவைக் கூட
காண முடியவில்லையே"
அரசியல் சார்ந்த மற்றொரு கவிதை -
"மனிதர்களை எங்களால்
மந்திரிகளாக்க முடிகிறது;
மந்திரிகளைத்தான் மீண்டும்
மனிதர்களாக்க முடிவதில்லை"
கண்ணதாசன் இறந்த பிறகு அவர் நினைவாக நடத்தப்பட்டக் கவியரங்கத்திற்க்குத் தலைமையேற்றவரும் வாலி அவர்களே,அப்போது கண்ணதாசன் பற்றி இவ்வாறு கூறினார் :
"எழுதப் படிக்கத் தெரியாத
எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன்.
ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்"
எம்.ஜீ.ஆர் அவர்களின் உடல்நிலைக் கவலைக்கிடமாக இருந்த போது ஒளிவிளக்கு திரைப்படத்தில் இவர் எழுதியப் பாடலைத்தான் தமிழகமே பாடிப் பிரார்த்தனை செய்தது என்பது வரலாறு கூறும் செய்தி.
"ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்..முருகையா..."
இது தான் அந்தப் பாடல்.பிறகு எம்.ஜீ.ஆர் உடல்நலம் தேறி மீண்டு வந்தார்.
தன்னம்பிக்கையூட்டும் பல பாடல்களை எழுதி உள்ளார்.கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான வெள்ளி விழா என்ற படத்தில் "உனக்கென்ன குறைச்சல்" என்ற பாடலை எழுதி இருப்பார்.ஒரு முதியவர் தன்னுடைய தனிமையை நினைத்துப் பாடுவது போன்ற ஒரு சூழ்நிலைக்கேற்ப இந்தப் பாடல் அமைந்திருக்கும்.இதோ சில வரிகள்:
"உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
தனக்குத் தானே துணையென நினைத்தால்
உலகத்தில் ஏது தனிமை"
கண்ணதாசன்,பட்டுக்கோட்டையார் போன்றவர்கள் புகழின் உச்சியில் இருந்த காலகட்டத்தில் சினிமாவில் பாட்டெழுத வந்தவர் தான் இந்த வாலி.நம்பிக்கையோடு போராடியதை இப்படிக் குறிப்பிட்டிருப்பார்:
"நான் ஒருவன் மட்டுமே கப்பல்களுக்கு நடுவே கட்டுமரத்துடன் கடலில் இறங்கினேன்" - நானும் இந்த நூற்றாண்டும் என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
நட்பு,நண்பன் பற்றி இவர் எழுதிய பாடல்கள் ஏராளம்.
"முஸ்தபா முஸ்தபா" - காதல் தேசம்
"காட்டுக்குயிலு மனசுக்குள்ளே" - தளபதி
மேலே சொன்ன பாடல்கள் அளவற்ற நட்பினை வெளிப்படத்தும் விதமாக எழுதப்பட்டவை.
"ஒரு நண்பனின் கதை இது" - சட்டம் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் உயிருக்குயிரான இரண்டு நண்பர்களுக்கிடையில் ஏற்படும் மனக்கசப்பினை வெளிப்படுத்தும் விதமாக எழுதப்பட்ட பாடல். காட்சிக்குப் பொருத்தமாக பாடல் எழுதுவதில் இவருக்கு நிகர் இவரே என்பதை இந்தப் பாடலிலும் உணரலாம்.
"தென்றல் போன்ற நண்பன் தான்
தீயைப் போல மாறினான்
சொன்ன வார்த்தை மீறினான்
ஒரு தாயின் பிள்ளை போல உறவாடினோம்
தோழனே துரோகியாய் மாறியே
வஞ்சம் தீர்த்த
ஒரு நண்பனின் கதையிது "
கங்கை அமரனின் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இந்தப் பாடலை மிகச் சிறப்பாக பாடியிருப்பார்.
"மூழ்காதே ஷிப்பே பிரெண்ட்ஷிப் தான் ...
..வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே"
இப்படி எழுதிய அதே வாலி நட்பைப் பற்றி மற்றொரு பாடலிலும் எழுதி இருக்கிறார்.
"உனது கை கால்களே உதவும் நண்பர்களே" - பாபா படத்தில் இடம்பெற்ற மாயா மாயா பாடலில் வரும் வரிகள் தான் இவை.
இது போன்ற சிறப்பான பாடல்களுக்கிடையில் கேவலமான வார்த்தைகளுடன் கொச்சையான தமிழில் சில பாடல்கள் வரத் தான் செய்கின்றன.கொடுமை என்னவென்றால் அந்தப் பாடலை இயற்றிவர்கள் என்னவோ கண்ணதாசனையே மிஞ்சி விட்டதைப் போல மார்தட்டிக் கொள்கிறார்கள்.இது போன்ற பாடல்களுக்கும் ரசிகர்கள் இருப்பது வருந்தத்தக்க விஷயம்.
"எவன்டீ உன்ன பெத்தான்" - என்று சமீபத்தில் வெளியான பாடலொன்று ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதே தமிழனின் ரசனை எத்தனை தரம் தாழ்ந்து விட்டது என்பதற்கு சரியான சான்று.அந்தப் பாடலை எழுதியவர் சிலம்பரசன் என்று நினைக்கிறேன்.இது என்னவோ நான் சிலம்பரசனை வசை பாடுவதற்காக குறிப்பிடுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.வாலியே சொல்வதைப்போல ஒன்றை உயர்த்த ஒன்றை தாழ்த்துவது என்பது மாபெரும் தவறு.இது போன்ற பாடல்களுக்கு மக்களிடையே வரவேற்பிருப்பதால் தான் தரமான பாடல்கள் குறைந்து விட்டன.மக்கள் ரசனை மாறினால் பாடலாசிரியர்களின் படைப்புகளும் தரமானதாக மட்டுமே இருக்கும்.
நா.முத்துக்குமார்,தாமரை போன்ற பாடலாசிரியர்கள் இன்றைய தலைமுறையில் மிகச் சிறப்பான பாடல்களைத் தருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
வாலி சில படங்களுக்கு கதை வசனம் எழுதி இருக்கிறார்,சில படங்களில் நடித்திருக்கிறார்.இவர் "கிருஷ்ண விஜயம்,அவதார புருஷன்,பாண்டவர் பூமி,ராமானுஜர் காவியம்,கிருஷ்ண பக்தன்" போன்ற சிறப்பான இலக்கியப் படைப்புகளைப் படைத்திருக்கிறார்.புதிய பார்வையில் இவர் எழுதிய நானும் இந்த நூற்றாண்டும் என்ற தொடர் கூட புத்தகமாக வெளியிடப் பட்டிருக்கிறது.
அடுத்த மாதம் வெளியாக இருக்கும் "எங்கேயும் காதல்" என்ற திரைப்படத்தில் இரண்டு பாடல்களை வாலி எழுதி உள்ளார்.இதில் என்ன சிறப்பம்சமென்றால் வைரமுத்து அவர்களின் மகன் கார்க்கியும் இதே படத்தில் பாடல் எழுதி உள்ளார்.ஒரு ரசிகர் குறிப்பிட்டதைப் போலே இவர் எழுதுகோலில் 'இள'-மை-யைத் தான் ஊற்றி எழுதுகிறார் போல.
"தீ இல்லை" மற்றும் "நங்கை" பாடல்கள் தான் வாலி எழுதிய அந்த இரண்டு பாடல்கள்.
வாலியைப் பற்றி எழுத ஆரம்பித்தால் முடிப்பது மிகக் கடினம்.பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி இருக்கிறார்,அத்தனையும் இங்கு குறிப்பிட வேண்டுமானால் ஒரு நெடுந்தொடர் தான் எழுத வேண்டும். இன்னும் பல செய்திகளைச் சொல்ல எனக்கு விருப்பம் தான்,அனால் இத்தனை நெடிய பதிவை ஒரு சிலரேனும் முழுவதும் படிப்பீர்களா என்பதே கேள்விக்குறி தான்.இருந்தும் இதை என் மனத்திருப்திக்காக எழுதினேன் என்று கூறி முடித்துக் கொள்கிறேன்.